மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 10 மார்ச், 2011

ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!

.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்.
உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும்
இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்த திரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை’ படத்தில் முதன் முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில் கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்! தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும் வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும் முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை. எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்த திரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள்கொண்ட அந்தக் கலையுலகச் சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத் திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை. ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம் முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்​பாமல், எம்.ஜி.ஆர். ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களை சகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ் கொண்டுவந்தீர்களே... அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!
உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை, அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப்போல் உங்கள் கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள் வளர்த்துக்கொண்ட பலமான பாது​காப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கை தூக்கிவிட்டதனால்​தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பது பிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்க முனைந்து இருந்​தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர் அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.
எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்​படுவது இயல்பு. உங்கள் பலங்களுக்கு சமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? 'பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்றார் சாக்ரடீஸ். நீங்கள் பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபட விரும்பாததுதான் வேதனைக்கு உரியது.
காமராஜரைப்போலவோ, கலைஞரைப்​போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர் இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாள​ராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக பணியாற்றினீர்கள். 1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றீர்கள்.  நிதி நிலை அறிக்கையை முதல்வ​ராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர் சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக் காட்சிகளின் விளைவாக, மக்களின் அனு​தாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில் முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.
யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது. எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப்படுவது இல்லை. வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்து ஆண்டி​யைப்போல் கூத்தாடிப் போட்டு​டைத்தீர்கள். மக்களால் தேர்ந்​தெடுக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம் நடந்திருந்தால்... கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது. அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடி​யாய்ப் பணத்தைக் குவிக்கும் சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்​குத்தான் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.
'அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர்’ என்று சர்க்காரியா சொன்னதை உரத்த குரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியை வழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு, ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்​களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல், பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால், உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்​தது. 'ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள் விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில் ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது. தி.மு.க. வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணி புரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லா​வற்றுக்கும் சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமர மக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது. உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில் விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான் பரிதாபத்துக்கு உரியது.
முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்து நீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால் 1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும் தோற்கடிக்கப்பட்டனர். நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம் தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாக முடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது 40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு விரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்ட கனவு நனவானது. நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். 'டான்சி’ வழக்கு உங்கள் உறக்கத்தைக் கலைத்தது. சொத்துக் குவிப்பு வழக்கு 'விடாது கருப்பு’ என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’, நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்று வரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.
ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்... ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல் தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாக முற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வு அஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். 'ஒழிந்தார் ஜெயலலிதா; அழிந்தது அ.தி.மு.க.’ என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.
'ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்’ என்பது நிஜம் அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம். உங்கள் தவறுகளைத் தமிழகத்து மக்கள் மிகவும் பெருந்​தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச் செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று, தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள். உங்களோடு கூட்டணி சேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பர மணவிழா, 'சகோதரி’ சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்ற குறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196 எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்... நல்லாட்சி! அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக 'அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.
சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சி​யைக் கைப்பற்றியதும் நீங்கள் முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டு​களுக்குக் குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம். ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல் தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முதல்வரும் நீங்களே. கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை. அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்து விலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எது கிடைக்கும் என்று யார்தான் அறிவார்? வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில் யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்கு மாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால் இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!
ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம் தக்கவைத்துக்​கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன? உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்து நள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும் திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்!
உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர் கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். 'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய்ய நினைத்தாய்?’ என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி.
உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில் வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படி நடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம். ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களை ஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடி மக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகு வளைந்து 'அம்மா’ என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான் தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல் உங்களுக்கும் உண்டு. 'இந்து’ நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள் குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றது சரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீது வழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானது இல்லையா?
அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம் செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும், சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம் அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது 'அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டும்; அன்பால் சாதிக்க வேண்டும்’ என்று உங்களுக்கு அருளுரை வழங்கிய கலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில் கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!
திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான், உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பை அறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறி உங்கள் தொண்டர்கள் செயல்பட்டபோது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள். சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நிர்வாக எந்திரத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினீர்கள். வாக்காளர்களுக்கு 'அன்பளிப்பு' தரும் 'ஜனநாயகக் கடமை’யை நீங்களும் செய்தீர்கள். கலைஞரின் குடும்பம் குறித்துப் பேசும்போதெல்லாம், சசிகலா குடும்பம் உங்கள் நினைவில் நிற்பதில்லை. திரைப்பட உலகில் தேவைக்கு மேல் நீங்கள் சொத்து சேர்த்தாயிற்று. உங்களுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லை. 'தத்துவஞானிகள் ஆளவேண்டும். அவர்களுக்குக் குடும்பம் கூடாது’ என்றார் பிளேட்டோ. அந்த வரம் உங்களுக்கு இயல்​பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மை தவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழக மக்களுக்குத் தந்திருக்க முடியும். சசிகலா குடும்பம் உங்கள் கால்களை நேர் வழியில் நடக்கவிடாமல் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலி என்று நீங்கள் இப்போதேனும் உணர்ந்தீர்களா?
போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை, பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்த நற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்திய துணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழை நீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன், தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்திய சமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம். உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல் நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!
சகோதரி... நீங்கள் மூன்றாவது முறை முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். வலிமையான கூட்டணி உங்களுக்கு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது. வாக்காளர்களுக்கு வேறு வழி இல்லை. ஜனநாயகத்தில் நன்மை தீமைக்கு நடுவே போட்டி நடந்தால், மக்கள் நன்மையின் பக்கமே நிற்க விரும்புவார்கள். அதற்கான சூழல் இன்னும் கனியாதபோது, பெரிய தீமையைப் புறந்தள்ளிவிட்டு, சிறிய தீமையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலும். சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளது. தேர்தல் களத்தின் ஆதரவுக் காற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால்...ஈழத் தமிழர் நலன் காக்க உண்மையான உள்ளுணர்வுடன் நீங்கள் செயற்பட வேண்டும். தமிழகத்தின் ஒரு மீனவரும் கடலில் சாவை சந்திக்காத நிலை வர வேண்டும். இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழை மக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும். டாஸ்மாக்கை அரசுடமையாக்கிய பாவத்தைச் செய்த நீங்கள் பூரண மதுவிலக்கை வழங்க முடியாமற்போனாலும், வீதியெங்கும் பரவியிருக்கும் கடைகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற ஆட்சியைத் தந்து நீங்கள் உயர வேண்டும். சசிகலா சாம்ராஜ்யம் மீண்டும் எழுவதற்கு எந்த நிலையிலும் நீங்கள் இடம் அளித்துவிடலாகாது. இந்த முறை நீங்கள் தவறு இழைத்தால்... இனி வாழ்வின் இறுதி வரை ஆட்சி நாற்காலியில் அமர முடியாது என்றே உணர்ந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றம் வெறும் காட்சி மாற்றமாக முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை.
'உழுகலப்பையைப் போல் தாழ்ச்சிகொண்டவன் நான்’ என்றார் இயேசுபிரான். பணிவே நீங்கள் அணியும் மிக உயர்ந்த அலங்காரம் என்பதை மறவாதீர்கள்!
இப்படிக்கு,
நீங்கள் நிச்சயம் மாறியிருப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்,
தமிழருவி மணியன்
 
unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக