மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

திங்கள், 14 மார்ச், 2011

ராகுல் காந்திக்கு ஒரு திறந்த மடல்...


கில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி அவர்களுக்கு... வணக்​கம். வளர்க நலம்!
 மூத்து முதிர்ந்து தளர்ந்த நிலையில் தள்ளாடும் காங்கிரஸுக்கு இளைய ரத்தம் பாய்ச்சத் துடிக்கும் உங்களுக்கு, நான் கடிதம் வரைவதற்கு ஒரு காரணம் உண்டு!
ஏனெனில், உள்ளாட்சித் தேர்தலில் ஒர் உறுப்பினரைக்கூடச் சுயமாகத் தேர்வு செய்து அறிவிக்க முடியாத உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களுக்கு எழுதுவதால் எந்தப் பயனும் நேராது. '2016-ல் தமிழ்நாட்டை காங்கிரஸ் ஆள வேண்டும் என்பதுதான் என் கனவு’ என்று ஆர்வத்தின் உந்துதலில் அறிவித்தவர் நீங்கள். ஒரு வித்தியாசமான அரசியல் தலைவராகத் தன்னை வடிவமைத்துக்கொள்ள விரும்பும் உங்கள் மீது இளைஞர்களுக்குக் கொஞ்சம் நம்பிக்கை கனிந்திருப்பதும் உண்மை!
உங்கள் அரசியல் பிரவேசம் 2004-ல் நிகழ்ந்தது. உங்கள் தந்தையின் அமேதி தொகுதியில் நின்று ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தீர்கள். 2007 செப்டம்பரில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செய​லாளராகப் பொறுப்பேற்றீர்கள். 2009-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தழுவியதில் உங்களது வளர்ச்சி வெளிப்பட்டது.
'நான் பிரதமராவதைவிட, ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் உள்ள இடை​வெளியைக் குறைப்பதையே முதன்மைப் பணியாகக் கருதுகிறேன்’ என்று நீங்கள் அறிவித்தபோது, பலருடைய விழிகள் வியப்பால் விரிந்தன. 'ஏழையின் குடிசைக்​குள் நுழையும்போதும் செருப்பைக் கழற்றி​வைத்துச் செல்லும் ஒரே அரசியல்வாதி’ என்று உங்களுக்குப் பத்திரிகைகள் புகழா​ரம் சூட்டுகின்றன. அரியானாவில் உள்ள மிர்ச்பூர் கிராமத்தில் தலித்கள் உயிரோடு எரிக்கப்​பட்டபோது, எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், நேரில் சென்று நீங்கள் ஆறுதல் வழங்கியதும், உறவினர்​களின் கண்ணீரில் கரைந்துபோனதும் என்னை நெகிழச்​செய்தது!
'வேற்று மாநிலத்தவர் மும்பையில் இருந்து வெளியேற வேண்டும்’ என்று சிவசேனாவின் பால் தாக்கரே சீறியபோது, 'இந்தியாவில் உள்ள யாரும் எங்கு வேண்டுமானாலும் சென்று உழைத்துப் பிழைக்​கலாம். அதற்கு யார் தடை விதித்தாலும், நான் பார்வையாளனாகப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டேன்!’ என்று நீங்கள் மும்பைக்கு நேரில் சென்று முழங்கியதை யாரும் மறக்க முடியாது.
'டான்’ பத்திரிகை 2009-ம் ஆண்டுக்கான 'இந்தியாவின் சிறந்த மனிதர்’ என்று உங்களைத் தேர்ந்தெடுத்து மகிழ்ந்​தது. சச்சின் பைலட், தீபேந்தர் சிங், கனிஷ்கா சிங், அசோக் தன்வர் போன்ற இளைஞர்களின் கூட்டுறவில் காங்கிரஸுக்கு நீங்கள் புதிய வண்ணம் தீட்டப் புறப்பட்டு இருப்பது புரிகிறது. ஆனால், உங்கள் முயற்சி விழலுக்கு இறைத்த நீராகப்போவது நிச்சயம்!
டெல்லியில் நடந்து முடிந்த காங்கிரஸ் மாநாட்டில் ஊழலுக்கு எதிராக நீங்களும், உங்கள் அன்னையும் போர்ப் பிரகடனம் செய்ததைப் படித்தபோது, கலை​ஞரின் ஏமாற்று அரசியல் பாதையில் இருவரும் இணைந்து நடப்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. 'சாதாரண மக்களின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஊழல் தட்டிப் பறித்துவிடுவதால், ஊழல்வாதிகளுக்கு மிகக் கடுமையாகத் தண்டனை தர வேண்டும்’ என்று நீங்கள் உணர்ச்சிமயமாக உரை நிகழ்த்தினீர்கள். உங்கள் அன்னையோ, ஊழல் ஒழிப்புக்கு 5 அம்சங்களைப் பின்பற்ற வேண்டுமென்ற பாடம் போதித்தார். சாத்தான் வேதம் ஓதினால், யார்தான் செவி கொடுத்துக் கேட்க முடியும்?
இந்திரா காந்தியின் நகர்வாலா ஊழல், ராஜீவின் ஃபோபர்ஸ் ஊழல், நரசிம்மராவின் ஹர்ஷத் மேத்தா - பங்குப் பத்திர ஊழல், மன்மோகன் சிங் ஆட்சியின் ஸ்பெக்ட்ரம், காமன் வெல்த், ஆதர்ஷ் ஊழல்கள் எதுவும் உங்கள் அன்னைக்கும், உங்களுக்கும் நினைவில் நிழலாடவில்லையா?
மராட்டிய மாநில முதல்வராக இருந்தபோது, ஒரு கந்துவட்டிக்காரருக்காக அதிகார அத்துமீறல் நடத்திய விலாஸ்ராவ் தேஷ்முக் மீது உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த பின்னும், அவர் மத்திய அமைச்சராக நீடிப்பது தார்மீக நியாயமா? ஊழல் வழக்கில் இமாச்சலப் பிரதேச நீதிமன்றம் குற்றப் பட்டியல் வாசித்த பின்பும் வீர்பத்ரசிங் மத்திய அமைச்சரவையில் தொடர்வது எந்த வகையில் ஏற்புடையது? 2ஜி அலைக்கற்றை முறைகேடுகள் உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு வராமல் பதுங்கியிருந்தால், 'கூட்டணி தர்மம்’ ஆ.ராசாவைத் திகார் சிறைக்கு அனுப்பியிருக்குமா? ஆ.ராசாவின் முறையற்ற செயல்களால் நாட்டுக்கு 1.76 லட்சம் கோடி நட்டம் ஏற்பட்டுவிட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கை தந்த பின்பும், 'இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது?’ என்று உரத்த குரலில் உச்ச நீதிமன்றம் தன் வேதனையை வெளிப்படுத்திய பிறகும், உங்கள் மத்திய அமைச்சர் கபில்சிபல் 'ஒரு பைசாகூட இழப்பு இல்லை’ என்று அரிச்சந்திரன் வாரிசாய் சத்தியம் செய்தபோதும்... நீங்கள் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்?
ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து இன்று வரை உதடு திறந்து ஒரு வார்த்தை நீங்கள் உரைத்தது உண்டா ராகுல்? உங்கள் அன்னை சோனியாவிடம் இருந்து ஒரு சொல் வந்ததுண்டா? காங்கிரஸ் கைகளில் படிந்து இருக்கும் ஊழல் கறைகளை, உலகின் எந்தப் புண்ணிய நதியில் கழுவிக் கரைப்பீர்கள்?
ஆ.ராசாவின் ஊழல் நடவடிக்கைகளால் 50 ஆயிரம் கோடி நாட்டுக்கு நட்டம் என்று சி.பி.ஐ.... நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழுவிடம் வாக்குமூலம் வழங்கியது. மத்திய அமலாக்கப் பிரிவும் புலனாய்வுத் துறையும், ஆ.ராசா 3000 கோடி லஞ்சம் பெற்றிருப்பதாகக் கண்டுபிடித்தன. தேசம் முழுவதும் ஸ்பெக்ட்ரம் ஊழலின் ஆழம் கண்டு அதிர்ந்துபோனது. ஆனால், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மதுரையில் நடந்த மு.க.அழகிரியின் மகன் மண விழா​வில் பங்கேற்றுப் பேசியபோது, 'இந்தியாவின் மூத்த அரசியல்​வ​£தியாக தி.மு.க. தலைவர் கருணா​நிதி திகழ்கிறார். நாட்​டின் அரசியல் மற்றும் சமூக மாற்றங்களில் அவருடைய பங்களிப்பு பாராட்​டத்​தக்கது. எங்கள் அனைவரையும் வழிநடத்திச் செல்லும் கருணாநிதியை நான் மிகவும் மதிக்கிறேன். அவருக்கு என் பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்’ என்று புகழ் பூத்த மொழியில் பூ மாரிப் பொழிந்தது உங்களுக்கு உடன்​பாடானதா?
இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் கங்குலி​யும் சிங்வியும் நீதியின் மாண்பை உயர்த்திப் பிடித்திருப்பது​போல், 1975-ல் இந்திரா காந்தி தேர்தல் வழக்கில் நீதி தேவதையின் பெருமையைக் காத்தவர் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜக்மோகன்லால் சின்ஹா. தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதற்காக இந்திராவின் வெற்றி செல்லாது என்று அறிவித்ததுடன், 6 ஆண்டுகள் அவர் தேர்தலில் நிற்கத் தடை விதித்தார் ஜக்மோகன். தன்னுடைய சொந்த நலன் பாதிக்கப்பட்டதும், நாட்டு நலன் பாதிக்கப்பட்டதாகப் பொய்யுரைத்து, தன்னால் நியமிக்கப்பட்ட குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவின் கையப்பத்துடன் நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார் நேருவின் மகள். அப்போது ஜனநாயகம் எப்படி புதைக்கப்பட்டது என்று கலைஞரிடம் கேளுங்கள்... கண்ணீர்க் கதைகள் கரை புரண்டு ஓடி வரும்!
நெருக்கடி நிலைக் கொடுமைகள் 19 மாதங்கள் நீடித்தன. மக்கள் வெறுப்புக்கு அஞ்சிய உங்கள் பாட்டி, தேர்தல் நடத்த விரும்பினார். ஆனால், உங்கள் சிறிய தந்தை சஞ்சய், காலாகாலமும் நேரு குடும்பமே இந்த மண்ணை அரசக் குடும்பம் போன்று ஆள வேண்டும் என்று திட்டமிட்டார். ஸ்வரன்சிங் தலைமையில் 12 பேர்கொண்ட குழுவை அமைத்து புதிய அரசியல் சட்டத்தை உருவாக்க, இந்திராவின் இசைவையும் பெற்றார். வாழ்காலம் முழுவதும் இந்தி​யாவின் குடியரசுத் தலைவராக இந்திரா இருக்க விதி உருவாக்கப்பட்டது. புதிய அரசியல் சட்டத்தை வரவேற்று அரியானா, மேற்கு வங்கம், பஞ்சாப் சட்ட​மன்றங்களில் தீர்மானம் நிறைவேறச் செய்தார் சஞ்சய். இறுதியில் இந்திரா, மகனை மீறித் தேர்தல் நடத்தித் தோல்வியைத் தழுவினார். இந்த விவரங்களை நீங்கள் விரிவாக அறிந்துகொள்ள விரும்பினால்... இந்திரா காந்தியின் முதன்மைச் செயலராக இருந்த பி.என்.தர் எழுதிய 'இந்திரா காந்தி, தி எமர்ஜென்சி அண்ட் இண்டியன் டெமாக்ரசி’ புத்தகத்தைப் படியுங்கள்!
ராஜீவ் மரணத்துக்குப் பின்பு காங்கிரஸ் வாக்கு வங்கி சரிந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் 200 இடங்​களைப் பெறுவதே அரிதாகிவிட்டது. 1996-ல் 28.80, 1998-ல் 25.82, 1999-ல் 28.30, 2004-ல் 26.53, 2009-ல் 28.55 விழுக்காடு வாக்குகளைத்தான் காங்கிரஸ் தேசிய அளவில் பெற்றுள்ளது. அப்படியானால், 72 விழுக்காடு வாக்காளர்கள் காங்கிரஸை ஆதரிக்கவில்லை என்பது புரிகிறதா ராகுல்? இந்திய வாக்கு வங்கியில் 13.5 விழுக்காடு வாக்காளர்கள் முஸ்லிம்கள். அவர்கள் காங்கிரஸைக் கை கழுவி நீண்ட காலம் ஆயிற்று. சிறுபான்மை மக்களும், தலித்களும் இனி காங்கிரஸை நம்புவதாக இல்லை. இதற்குக் காரணம் என்ன? 'வறுமையே வெளியேறு’ என்று வாய் ஜாலம் காட்டினார் இந்திரா. அவர் வெளியேறச் சொன்ன வறுமை 40 ஆண்டுகளுக்குப் பின்பும் அசைந்து கொடுக்கவில்லை. இன்றும் 437 மில்லியன் மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடி நிற்கின்றனர். உங்கள் ஆட்சியில் உண்மையில் பயன் பெற்றவர்கள் யார்?
இந்தியாவின் ஏற்றுமதி 1988 முதல் 2008 வரை 15 மடங்கு உயர்ந்துள்ளது. இறக்குமதி 13 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், இரண்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில்தான் நாட்டின் மொத்த உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு குவிந்துகிடக்கிறது. இது போன்ற இழிநிலை உலகின் எந்த நாட்டிலும் இல்லை. 'ஏழைகளுக்கு ஒரு ரூபாயை அரசு ஒதுக்கினால், அதில் 10 பைசாதான் அந்த ஏழையைச் சென்றடைகிறது. இது என் தந்தை சொன்னது. இந்த நிலை மாற வேண்டும். உண்மையில் உழைப்பவர் நிலை உயரவேண்டும்’ என்று சொன்னீர்களே... சமத்துவ சமுதாயத்தைச் சமைக்க உங்களிடம் இருக்கும் மந்திரக்கோலை எப்போதுதான் பயன்படுத்துவீர்கள்? தமிழகத்தில் நீங்கள் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு இந்த ஜென்மத்தில் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு உங்கள் காங்கிரஸ் செய்த துரோகம், எங்கள் வருங்காலத் தலைமுறையாலும் மறக்க முடியாது. இனவுணர்வு மிக்க இளைஞர்களின் எண்ணிக்கை இன்று பல்கிப் பெருகி வருகிறது. அவர்கள் ஒரு நாளும் காங்கிரஸுக்கு வாக்களிக்கப்போவதே இல்லை. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தலைவர்களைப்பற்றி இங்கு யாரும் கவலைப்படுவதும் இல்லை. தாங்கள் பிறந்த மண்ணிலேயே தனித்துக் களம் கண்டு வெல்லக்கூடிய வல்லமை இவர்களுக்கு இல்லை என்பதை முதலில் நீங்கள் அறிந்துகொள்வது அவசியம். இவர்கள் அனைவரும் அடுத்தவர் தோள்களில் ஆரோகணித்து அமர்ந்தபடி, சொந்தக் கால்களில் நடப்பதாய் கற்பனை செய்து நாட்டாமை நடத்துவதில் வல்லவர்கள். இரு திராவிடக் கட்சிகளும் கடந்த 40 ஆண்டுகளாய் மாறி மாறித் தோள் கொடுப்பதைத் தவிர்த்து இருந்தால், இந்த மனிதர்களின் முகங்களை எம் மக்கள் என்றோ மறந்திருப்பர். காமராஜர் கண் மூடிய பின்பு கால நடையில் காங்கிரஸே காணாமல் போயிருக்கும்.
காங்கிரஸ் இங்கு கட்டெறும்பாய்த் தேய்ந்ததற்கு உங்கள் குடும்பம்தான் முதல் காரணம். டெல்லி தலைமைக்குக் காவடி தூக்குவதைத் தவிர இங்குள்ள காங்கிரஸ் தலைமைக்கு வேறு எந்த அதிகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது? கட்சிக்குள் தேர்தல் நடந்து 40 ஆண்டுகள் கடந்துவிட்டன. நியமனத் தலைவர்கள், தொண்டர்களை மதிப்பதே இல்லை. நீங்கள் மாவட்ட, மாநில அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தாமல், இளைஞர் காங்கிரஸுக்கு மட்டும் தேர்தல் நடத்தியதே தவறு. அழுகிப்போன வேர்களை விட்டுவிட்டுக் கிளைகளைக் காப்பாற்ற முடியுமா? நீங்கள் பெருமைப்படும் இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வேட்பாளர்கள் செலவழித்த பணம் எவ்வளவு என்று தெரிந்தால், உங்களுக்கே மயக்கம் வரும். இவர்களா காமராஜ் ஆட்சியை அமைக்கப்போகின்றனர்?
அன்பிற்கினிய ராகுல்... தமிழக மக்கள் காங்கிரஸுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்? ஈழத்தில் எம் இன மக்கள் கொன்று குவிக்கப்பட்டபோது, இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்கள் போர் நிறுத்தம் வேண்டி மத்திய அரசை நிர்ப்பந்தித்தவர்களா? தமிழக மீனவர்கள் அன்றாடம் சிங்களரால் கடலில் சுட்டுக் கொல்லப்பட்டபோது, இலங்கை அரசின் தூதரகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்தித் தங்கள் எதிர்ப்பைக் காங்கிரஸ் தலைமைக்குத் தெரிவித்தவர்களா? ஸ்பெக்ட்ரம் ஊழல் நாயகர்களின் உறவை உதறிவிட்டு, நேர்மை சார்ந்த நல்லரசியலுக்கு அடித்தளம் அமைத்தவர்களா? மணற் கொள்ளையையும், அரிசிக் கடத்தலையும் தடுத்து நிறுத்தப் போராடியவர்களா? 'திருமங்கலம் பாணி’ தேர்தல் முறைகேடுகளுக்கு உடந்தையாக நிற்காமல் ஜனநாயக மரபுகளைக் காக்க முனைப்புடன் முயன்றவர்களா? உயர் நீதிமன்றத்தில் தமிழ் உலா வருவதற்கு மத்திய அரசின் மனதை மாற்றியவர்களா? ஒரு சிறுபான்மை அரசு தன்னிச்சையாகக் கடை விரித்த ஊழல் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து, அதை நெறிப்படுத்தும் வழிவகைகளைக் கண்டெடுத்து, சட்டமன்றத்தில் சங்க நாதம் செய்தவர்களா? இனப் பற்றும், மொழிப் பற்றும், சமூகச் சிந்தனையும் சிறிதும் அற்ற இவர்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்?
'காமராஜர் ஆட்சி அமைப்போம்’ என்று கள்ளக் குரல் கொடுக்கும் இவர்கள் கொஞ்சமும் சமூகக் கூச்சமும் இன்றி 63 தொகுதிகளைப் போராடிப் பெற்று, ஸ்பெக்ட்ரம் நாயகர்களுடன் தேர்தல் களத்தில் கைகோத்து நிற்பது எவ்வளவு பெரிய கொடுமை!  இந்த ஆட்சியைப் பயன்படுத்திப் புதிய கோடீஸ்வரர்களாகிவிட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் காமராஜருக்கும் என்ன சம்பந்தம்? தி.மு.க-வுக்குத் தொண்டூழியம் செய்வதே சமூக சேவை என்று கருதும் சில காங்கிரஸ் தலைவர்களின் சுய லாபத்துக்காக, கொடி பிடிக்கும் தொண்டர்கள் தொடர்ந்து நட்டப்படுவதுதான் பரிதாபகரமானது!
இந்தியாவில் உள்ள 110 கோடி மக்களில் காங்கிரஸின் தலைமையேற்கவும், நாட்டின் விதி எழுதவும் நேரு குடும்பத்தை விட்டால் கதிமோட்சம் இல்லை என்பதைவிட அதிகபட்ச அவமானம் இந்த மண்ணுக்கு வேறு ஏது? மோதிலால் நேரு ஆனந்த பவனத்தை நாட்டுக்குக் கொடுத்தது உண்மைதான். ஆனால், ஒரு வீட்டைக் கொடுத்துவிட்டு, நாட்டையே நேருவின் வாரிசுகள் சொந்தமாக்கிக்கொண்டது எந்த வகையில் நியாயம் ராகுல்?
'நீங்கள் செய்கிற தீர்ப்பின்படியே, நீங்களும் தீர்ப்புப் பெறுவீர்கள். அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்’ என்பது கர்த்தர் இயேசுவின் திருமொழி!
இப்படிக்கு,
காந்தியத்தைப் படித்தும், காமராஜரைப் பார்த்தும்
சில காலம் காங்கிரஸ்காரனாக இருந்த...
தமிழருவி மணியன்
 

unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக