மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 29 ஜூன், 2011

நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு!

ப.திருமாவேலன்
படங்கள்: என்.விவேக்

ற்றைக் கொலைக்காக ஊரையே எரித்து, நீதிக்காக உயிர்விட்ட கண்ணகி சிலைக்கு முன்னால்... ஒரு லட்சம் பேரின் கொலைகளுக்காக மெழுகுத் தீ ஏந்தி மெரினா கடற்கரையில் கூடி நின்றார்கள் தமிழர்கள்!
ஒரே முழக்கம், ''இந்தியாவே... ஐ.நா-வில் ராஜபக்ஷேவின் போர்க் குற்றத்தை மறைக்காதே!'' என்பதுதான்!
''கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது தெரியுமா தம்பி! கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்!'' என்று சொன்ன அண்ணா சமாதி அருகில் இருக்க... ''விடுதலைப் புலிகள் அமைப்பை ஆரம்பித்ததே எம்ஜி.ஆர்-தான்'' என்று ஜெயவர்த்தனாவால் 'பெருமிதம்’ செய்யப்பட்ட எம்.ஜி.ஆர். நினைவகம் பக்கத்தில் இருக்க... உலகத்துக்கு அறம் பாடிய திருவள்ளுவன் முதல் ஏகாதிபத்தியங்களை நோக்கிப் படை நடத்திய நேதாஜி வரைக்கும் சிலைகளாக நிற்க... கடந்த 26-ம் தேதி மாலை மெரினாவில் ஏந்திய மெழுகுவத்தி நினைவேந்தல் நிகழ்ச்சி, தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் வித்தியாசமானது.
கட்சிக்காகவோ, சாதிக்காகவோ, மதத்தின் பேராலோ கூடுவதுதான் தமிழகத்தின் வேதனையான வாடிக்கையாக இருந்தது. ஆனால், தலைவர்கள் அறிவிக்காமல்... தமிழர்கள் வந்தார்கள். கட்சிகள் சார்பில் அறிவிப்பு இல்லாமல்... கனத்த இதயங்களுடன் கூடினார்கள். ''சாதி, மத, கட்சி வேறுபாடு இல்லாமல் இந்த நினைவேந்தல் நிகழ்வதால், கட்சி, சங்கக் கொடிகளுடன் வருவதைத் தவிர்க்கவும். தனி நபர் முழக்கங்களைத் தவிர்க்கவும்'' என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வரையறையை மீறாமல், 'தமிழர்களுக்கு நிரந்தரத் தீர்வு தமிழ் ஈழத் தாயகம் மட்டுமே’ என்று ஒரே கோஷம் உயர்ந்தது.
'மே 17 இயக்கம்’ என்ற அமைப்பை திருமுருகன் என்ற இளைஞர் தனது நண்பர்களோடு சேர்ந்து ஆரம்பித்தார். ஈழத்தில் நடந்த கொடுமைகளை,  தமிழர்கள் அனைவர் மனதிலும் விதைப்பதன் மூலமாக உலக சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதுதான் நோக்கம். இந்த சிறு அமைப்பினர்தான் மெரினா கடற்கரையில் கூடி நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்கள். எஸ்.எம்.எஸ், இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் என்று தகவல் அலைகளைப் பரப்பினார்கள்.
கண்ணகி சிலைக்கு முன்னால் இப்படி ஒரு நிகழ்வை நடத்தப்போகிறோம் என்றதுமே போலீஸ் முதலில் தலையை ஆட்டி மறுத்தது. ''மும்பையில், டெல்லியில், இதுமாதிரியான இரங்கல் நிகழ்ச்சிக்கு அனுமதி தருகிறார்களே?'' என்று இந்த அமைப்பினர் கேட்டதும், ''தமிழ்நாட்டில் அனுமதி கிடையாது'' என்று போலீஸ் பதில் தந்தது. 'ஜூன் 26 ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ள, சித்ரவதைகளுக்கு எதிரான தினம். அதை அனுசரிக்க அனுமதி இல்லையா? சம்மதம் இல்லை என்றால், அதை எழுத்துபூர்வமாகக் கொடுங்கள்’ என்று இந்த அமைப்பினர் சொல்ல... அப்போதுதான் இறங்கி வந்தது போலீஸ். ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படி சித்ரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினம் ஆண்டு தோறும் ஜூன் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அந்த நாளை 'மே 17’ இயக்கத்தினர் ஈழத்துக்கானதாக மாற்றிக்கொண்டனர்.
ஈழத்தில் நடந்ததை வெறும் சித்ரவதை என்றா சொல்ல முடியும்? ஓர் இனத்தையே சிதைத்த வதை அது!
''ஈழத்தில் நடந்ததைப் போர்க் குற்றம், மனித உரிமை மீறல் என்ற வார்த்தைகளோடு அடக்க விரும்பவில்லை. அங்கு நடந்தது விடுதலைப் போராட்டம் என்பதை உலகம் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் ஈழத்தில் நடந்ததை போர்க் குற்றம் என்பதோடு குறுக்கிவிடக் கூடாது'' என்று சொல்லும் திருமுருகன், ''இந்த நிகழ்வு குறித்து ஐ.நா. அமைப்புக்கும் சென்னையில் உள்ள அனைத்து நாடுகளின் தூதரகங்களுக்கும் செய்தி கொடுத்தோம். 'இலங்கை சம்பந்தமாக நடக்கும் எந்த நிகழ்வுக்கும் நீங்கள் செல்லக் கூடாது’ என்று மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளதாக ஐ.நா. அலுவலர் ஒருவர் எங்களிடம் சொன்னார். அஞ்சலி செலுத்துவதற்குக்கூட தமிழன் அருகதை இல்லாமல் போய்விட்டானா?'' என்று கேட்கிறார்.
தமிழ் மண்ணில் ஈரம் பட்டுப்போய்விடவில்லை என்பதையும், உண்மையான முழக்கமாக இருக்குமானால் அடையாளம் தெரியாதவர் அழைத்தால்கூட வருவோம் என்பதையும் ஜூன் 26 சொல்கிறது. அதைவிட முக்கியமானது, ஞாயிற்றுக் கிழமை மாலை வேளையில் காற்று வாங்க வந்த மற்றவர்களும்கூட, தத்தம் நெஞ்சில் கொஞ்சம் நெருப்பு வாங்கிப் போனதுதான்!
                                                                                                                  நன்றி              

ஞாயிறு, 26 ஜூன், 2011

நீங்களா .வ .உ .சி வழி வந்தவர்கள் ?

வறண்ட மண்ணில் வான் மழை கொட்டியதுபோல், கலங்கிய கண்களுக்கு கைக்குட்டை கிட்டியதுபோல் தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்டிருக்கிறது ஒரு தீர்மானம். "எங்களின் துயரத்துக்கு நீதி கேட்க நாதி இல்லையா?" என தொண்டை நரம்புகள் துடிக்கக் கத்தினோமே... காணச் சகிக்காத காணொளி ஆதாரங்களைக் கண்டு, உலகமே உன் மனசாட்சி எங்கே! என ஓலமிட்டோமே...
அதற்கெல்லாம் முதல் ஆறுதலாக பட்டுப் போன கேழ்வரகுக்கு சொட்டாகச் சுரந்த மழையாக சிங்கள அரசின் போர்க் குற்றங்களுக்கு எதிராக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் தீர்மானம் இயற்றி இருக்கிறார்.
தமிழ்க் குடையின் கீழ் தத்தளித்து நிற்கும் உறவுகளே... இது வெறும் தீர்மானம் அல்ல; நாம் விரும்பிய தீர்மானம். துடித்தவர்களுக்காகவும் கண்ணீர் வடித்தவர்களுக்காகவும் முதன்முறையாக நாம் எழுப்பி இருக்கும் அதிகாரபூர்வ போர்க்குரல்.


இனப்படுகொலைகளை நிகழ்த்தியவனுக்கு எதிராக நாம் தொடுத்திருக்கும் முதல் சுருக்கு... கொக்கரித்துச் சிரித்தவர்களின் தலையில் விழுந்த முதல் குட்டு.... கதியிழந்து தவிப்பவர்களுக்கான முதல் நம்பிக்கைக்கயிறு!
வில்லங்கத்தால் வீழ்த்தப்பட்டவர்களுக்கும் வஞ்சனையால் வளைக்கப்பட்டவர்களுக்கும் முதல் ஆறுதலாக நீண்டிருக்கும் நிவாரணமே இந்தத் தீர்மானம்! தீர்க்கமாகச் சொல் வதானால் தமிழர் வாழ்வின் வரலாற்றுத் திருப்புமுனை!
சிங்கள அரசின் கொடூர வெறியைக் கண்டித்து நாம் எல்லோரும் முழங்கினோம். கைகோர்த்துக் கதறினோம். உலகத்தின் ஜனநாயக சக்திகளை எல்லாம் கைகூப்பிக் கெஞ் சினோம். ஆனால், துயரத்தை உணர்ந்தவர்கள் கூட நம் துக்கத்தைத் தீர்க்க முன்வரவில்லை. காரணம், தமிழர்களின் அரசே ஈழக் கொடூரங்களைத் தட்டிக் கேட்காதபோது உலகம் எப்படி நம் கண்ணீருக்காக கைகோர்க்கும்?
எந்தத் தீர்மானத்துக்காக கலைஞர் கருணாநிதியிடம் நாம் ஏங்கி நின்றோமோ... எத்தகைய கிழக்குக்காக நாம் இலக்கு நோக்கிக் காத்திருந்தோமோ... அந்தத் தீர்மானத்தைத் தான் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் சட்டமன்றத்தில் இயற்றி, ராஜபக்ஷேயின் சட்டையைப் பிடித்திருக்கிறார்.
கேட்பதற்கு நாதி இல்லை எனக் கொக்கரித்த வல்லூறுகளின் வாயை அடைக்க தன்மானம் கொண்டவராக இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கச் சொல்லி முழங்கி இருக்கிறார் ஜெயலலிதா.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணன் குணசேகரன் ஈழத் தமிழர்களின் வலி சுமந்த வாரிசாக முழங்க... அண்ணன்கள் பண்ருட்டியார், பாண்டியராஜன், ஜவாஹிருல் லா, சரத்குமார், கிருஷ்ணசாமி, தனியரசு உள்ளிட்டவர்கள் ஒருமித்த உணர்வோடு ஆதரிக்க... தட்டிக் கேட்பவராக போர்க்குற்ற தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறார் முத ல்வர் ஜெயலலிதா அம்மையார்.
பதைத்துக் கிடந்த பத்துக் கோடி தமிழர்களின் இதயங்களை நெகிழ்வில் நனைத்த முதல்வர் வாழ்க. இதற்கிடையிலும் "இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதித்தால், அது அங்கே இருக்கும் தமிழர்களையும் பாதிக்காதா?" எனக் கொதித்தார்கள் சில காங்கிரஸ்காரர்கள்.
ஏனய்யா... போர் நடந்தபோது எம் மக்களுக்கு ஏற்படாத பாதிப்பா பொருளாதாரத் தடையின்போது ஏற்படப் போகிறது? இடி விழுந்தபோது இரு கைகளையும் கட் டிக்கொண்டு வேடிக்கை பார்த்தவர்கள், அடி விழும்போது அலறுகிறீர்களே... இது நியாயமா?
தமிழர்களின் மீது திடீர் அக்கறை பொங்கியவர்களாக வெடிப்பவர்களே... முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் தவறு என முழங்க முடியுமா உங்களால்? காயங்களில் பூசப்பட்ட மருந்தாக மலர்ந்திருக்கும் அந்தத் தீர்மானத்தை கடந்த ஆட்சியிலேயே இயற்ற நீங்கள் ஏனய்யா முயற்சி எடுக்கவில்லை? பாராட்டுப் பத்திரம் வாசிப்பதற்காகவே ஒரு பழுத்த முதியவரை வைத்திருந்தீர்களே... இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரச் சொல்லி ஏனய்யா அவரிடம் பேசவில்லை?
பொருளாதாரத் தடை என்றவுடன் நீங்கள் அலறுவதன் அர்த்தம் எங்களுக்குப் புரியாமலில்லை. இலங்கையின் போர்க் குற்றங்களை ஆதாரப்பூர்வமாக ஆராய்ந்த ஐரோப்பிய யூனியன் சிங்கள அரசின் செவிட்டில் அறையும் விதமாக இலங்கை வர்த்தகத்துக்கு வழங்கிய வணிக வரிச் சலுகைகளை நிறுத்தியது. ஆயத்த ஆடை வணிக த்தில் வளம் கொழித்த இலங்கைக்கு அது சம்மட்டி அடியானது. மூன்று லட்சத்துக்கும் மேலான சிங்களர்களுக்கு வேலை பறிபோனது.
தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்று இந்திய அரசு இலங்கை மீது பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்தால் இதைவிட பல மடங்கு அடியை இலங்கை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்! எங்கோ அடி அடித்தால் பனைமரத்தில் நெறிகட்டும் என்பார்களே... காங்கிரஸ்காரர்களின் பதைப்புக்கு காரணம் புரிகிறதா தமிழர்களே...
இனத்துக்குச் சிக்கல் வந்தபோது எழாத உணர்ச்சி இலங்கைக்கு சிக்கல் என்றதும் பொங்கி எழுகிற மாயமென்ன? 104 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென இங்கிருந்து இலங்கைக்கு கப்பல் பயணத்தைத் தொடங்கி இருக்கிறீர்களே... சுதந்திரத்துக்காக கப்பலோட்டிய எம் மறத் தமிழன் வ.உ.சிதம்பரம் வழி வந்த தமிழர்களாக நீங்கள் இருந்தி ருந்தால், ரணமாகவும் பிணமாகவும் எம் தமிழன் இலங்கையில் தத்தளித்தபோது உங்களின் கப்பலை ஓட்டி இருக்கவேண்டும்; எம் தமிழ் மக்களை மீட்டிருக்கவேண்டும்!
துடித்த தமிழர்களுக்காக கரம் நீட்டாத காங்கிரஸ்காரர்களே... வக்கற்ற இலங்கையின் வணிகச் சிறப்புக்காக இன்றைக்கு கப்பல் விடுகின்றீர்களே... நீங்களா வ.உ.சி.யின் வழி வந்தவர்கள்?
(பொறி பறக்கும்)

 நன்றி செய்தி                

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இராசபக்சே போர்க் குற்றவாளி என ஐ.நா. விசாரணைக் குழு அளித்தப் பரிந்துரையை ஏற்று சர்வதேச நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை நடவடிக்கைகளை எடுக்கவும் இந்திய அரசு முன் வரவேண்டும் என தமிழக சட்டமன்றத் தில் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ள தீர்மானத்தை வரவேற்பதோடு முதல்வர் ஜெயலலிதா அவர்களைப் மனப்பூர்வமாகப் பாராட்டுகிறேன்.
ஆறரைக்கோடி தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ அமைப்பான தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்ததாகும். இராசபக்சேயைப் போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும்

ன்ற கோரிக்கைக்கு வலு சேர்க்கும் தீர்மானம் ஆகும். 

முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு என் மனமார்ந்த  ன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
unarchitamilan

வழக்கறிஞர்களே என்னோடு வாருங்கள் இனத்தை காப்போம். தன்மானத்தோடு வாழ்வோம். திருச்சி மாநாட்டில் வைகோ முழக்கம்.


ஈழத்தின் விடியலுக்காக நாம் தொடர்ந்து போராடுவோம், எத்தனையோ கஷ்டங்களை சந்தித்துவிட்டோம் இனி நமக்கு வசந்தம் வீசும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார் .மதிமுக வழக்கறிஞர் மாநில மாநாடு நேற்று திருச்சியில் பெமினா விடுதியில் நடைபெற்ற போது உரையாற்றுகைலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல்வேறு தலைப்புகளில் மாநிலம் முழுவதும் வந்திருந்த வழக்கறிஞர்கள் பேசினார்கள். அதில் ஈழம் குறித்து அதிகம் பேசப்பட்டது. 21 தலைப்புகளில் 21 வழக்கறிஞர்கள் பேசினார்கள்.
மேலும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உரையாற்றுகையில்:
தனி நாடு கேட்டார் பெரியார், சுய ஆட்சி கேட்டார் அண்ணா, நாங்கள் அப்படி கேட்கவில்லை ஆனால் இந்த நிலை நீடித்தால் நாடு துண்டு துண்டாக போகும் காலம் வந்துவிடும்.
ஈழத்தில் என் இனம் கொத்து கொத்தாக பாஸ்பரஸ் குண்டு போட்டு அழிக்கப்பட்டது. அவுஸ்திரேலியாவில் ஒரு சீக்கிய இளைஞன் தாக்கப்பட்டால் இங்குள்ளவர்கள் குரல் கொடுக்கிறார்கள். என் இனம் அழிக்கப்பட்டபோது பிரிட்டன், இத்தாலி, கனடா போன்ற நாடுகள் குரல் கொடுக்கிறது.
நம் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிர குரல் கொடுக்க வில்லையே. எனக்கு எதற்கு தேசிய ஒருமைப்பாடு என்று கேட்கமாட்டோமா?
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு ஆளானபோது இந்த தமிழனும் துடித்தான். ஆனால் என் தமிழக மீனவன் 543 பேர் கொல்லப்பட்டபோது மகாராஷ்டிர பிரஜைகள் துடித்தார்களா? எங்கே இந்த தேசத்தில் ஒருமைப்பாடு இருக்கிறது.
குஜராத்தில் மத கலவரம் நடந்த போது துடித்த இந்திய அரசு, என் தமிழக மீனவன் இலங்கை அரசால் சுட்டு கொள்ளும் போது எங்கே போனது இந்திய அரசு.
சனல் 4 ல் காட்டப்படும் காட்சிகளை இந்த உலகம் பார்க்கிறது. பல கொடுமைகள் நடத்தப்படும் காட்சிகளை இங்கிலாந்து பாராளுமன்றம் பார்க்கிறது. இத்தனை கொடுமைகளை செய்த இலங்கைத் தலைவரை தண்டனைகளில் இருந்து தப்ப விடலாமா?
இசைப்பிரியாவை கொடூரமாக கொன்றுள்ளார்கள். அந்த பெண் சிங்கத்தை சிதைத்தார்கள் இலங்கை இராணுவத்தினர் ஒட்டு மொத்த இன படுகொலையை செய்தார்கள். இதற்க்கு தீர்வு என்ன? சுதந்திரமான தனி ஈழம் தான். அதை பெரும் வரை எனது குரல் ஓங்கி ஒலிக்கும். என் இன விடுதலைக்காக தொடர்ந்து பேசுவேன்.
உலக நாடுகளே ஜனவரியில் தெற்கு சூடானை வாக்கு எடுத்து உருவாக்கினார்கள். ஈழம் எப்போது. சனல் 4 ஒளிபரப்பிய காட்சிகளை கொண்டு போய் அனைத்து தரப்பு மக்களிடமும் சேருங்கள். நாம் என்ன தவறு செய்தோம் தமிழனாக பிறந்தது ஒரு குற்றமா?
வழக்கறிஞர்கள் என்னோடு வாருங்கள் இனத்தை காப்போம். தன்மானத்தோடு வாழ்வோம் என்றார்.


 unarchitamilan

வியாழன், 23 ஜூன், 2011

இனவெறியைச் சுமக்கும் தழும்புகள்!

இரா.சரவணன்
''18 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்தக் காட்சிகளைப் பார்க்காதீர்கள்!’ - இந்த எச்சரிக்கையுடன்தான் அந்தக் காட்சி ஓடியது. ஆனால், 18 வயதைக் கடந்தவர்கள்கூட அந்தக் காட்சியைப் பார்க்கும் தைரியமற்றுக் கடந்துபோனார்கள். 'இலங்கையில் நடந்தது இனப் படுகொலைதான்!’ என்பதை, 49 நிமிடம் 4 நொடிகள் ஓடிய அந்தக் காட்சியின் மூலமாக உலகத்தின் மடியில் போட்டு உடைத்தது 'சேனல் 4’ தொலைக்காட்சி.
போர் ஆரம்பித்தது தொடங்கி முள்ளி வாய்க்கால் வரை நீண்டு, இறுதிக் களத்தில் ரத்தமும் சதையுமாக முடிந்தது வரையிலான இன அழிப்புக்கு அதி முக்கிய சாட்சி... அந்த ஒளிபரப்பு. புலிகளின் கைகளைக் கட்டி குப்புறத் தள்ளி பின்னந் தலையில் சுடுவதும், அலறக்கூட அவகாசம் இல்லாமல் பொத்தெனச் சரியும் உடல்களைக் கண்டு கை கொட்டிச் சிரிப்பதும் சிங்களர்களின் சீரிய குணமாக உலக அரங்கில் ஒளிபரப்பாகியது. செத்துக்கிடக்கும் பெண் போராளிகளின் உறுப்புகளைக் காட்டி கொக்கரித்துச் சிரிக்கிற சிங்களக் கொடூரம் உலகத்தின் மனசாட்சியையே ஒரு கணம் தலை குனியவைத்தது.
''முழுக்கப் பார்க்கிற அளவுக்கு எனக்கு சக்தி இல்லை. இலங்கையில் நடந்தது அப்பட்டமான இனப் படுகொலை என்பதற்கு இதைவிட சாட்சி தேவை இல்லை!'' என அலறுகிறார் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன். ''எங்களின் அதிர்ச்சியை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. இந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள்போல் தெரிகிறது. இவற்றை நிகழ்த்திய இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது!'' எனப் பதற்றத்தோடு சொல்கிறார் இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அலிஸ்ட்டர் பர்ட்.
''இன அழிப்பு, போர் மரபு மீறல், பெண்கள் மீதான சித்ரவதை என அத்தனை விதமான அட்டூழியங்களையும் சிங்கள ராணுவத்தினர் அரங்கேற்றி இருக்கிறார்கள். மனிதப் பட்டியலில் சிங்களர்கள் இனியும் நீடிக்க வேண்டுமா என்பதை உலகம் யோசிக்க வேண்டும்!'' என மனித உலக உரிமை அமைப்புகள் கொந்தளிக்கின்றன. ஆனால், எதற்கும் சலனமே காட்டாத சிங்கள அரசு, 'சேனல் 4 ஒளிபரப்பிய காட்சி கள் நம்பும்படியாக இல்லை. புலிகளின் வழக்கமான சித்திரிப்பு வேலைதான் இது!’ எனப் பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக அறிவித்தது.
கூடவே, அதி முக்கிய விளக்கமாக, 'சேனல் 4 இசைப்பிரியா என்பவரை ஊடகவியலாளர் என்று மட்டுமே சொல்கிறது. ஆனால், இசைப்பிரியா புலிகள் அமைப்பில் லெப்டி னென்ட் கர்னலாக இருந்தவர்!’ என்கிறது இலங்கை அரசு. இசைப்பிரியா வுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளைப்பற்றி வாய் திறக்கும் வல்லமை இலங்கைக்கு இல்லை. இனப் படுகொலையின் ஆவணப்படத்தைத் தயாரித்தவரான இயக்குநர் கெலம் மெக்ரே, ''போர் நடந்தபோது தமிழர்கள் வாழும் பகுதியில் எடுக்கப்பட்டவை தனியாகவும், தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்கள் தனியாகவும், எங்களுக்குக் கிடைத்தன. நிராயுத பாணியாக இருப்பவர்கள் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளும், சித்ரவதை செய்யப்பட்ட நிர்வாணக் காட்சிகளும் சிங்கள ராணுவத்தினராலேயே எடுக்கப்பட்டவை. அந்தக் காட்சிகள் எந்த வகையான செல்போனில் எடுக்கப்பட்டவை, என்ன தேதியில் எடுக்கப்பட்டவை என்பதைக்கூட எங்களால் உறுதியாகச் சொல்ல முடியும். காயங்களின் தன்மை, துப்பாக்கிச் சூட்டின் தாக்கம் ஆகியவற்றை வல்லுநர்கள் மூலமாக ஆராய்ந்து உண்மை என உறுதிப்படுத்திய பிறகுதான் வெளியிட் டோம். நாங்கள் ஒளிபரப்பிய காட்சிகளை எங்களாலேயே கண்கொண்டு பார்க்க முடிய வில்லை என்பதுதான் உண்மை!'' என்கிறார் வருத்தமாக.
கொக்கரித்துச் சிரிப்பதற்கும் கூடிப் பேசி ரசிப்பதற்கும், போர்க்களத்தில் சிங்கள வீரர் களால் செல்போனில் பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளே, இனப் படுகொலையின் சாட்சியாக உலகை வலம் வருவதுதான் வேதனையான வேடிக்கை.
இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி உலகத் தமிழர் பேரவையின் செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரகுமார், '' 'சேனல் 4’ ஒளிபரப்பியகாட்சி கள் உலகத்தின் கவனத்தை இரக் கத்தோடு திருப்பி இருக்கின்றன. தமிழக முதல்வராகப் பொறுப்பு ஏற்றிருக்கும் ஜெயலலிதா, இலங்கை அரசின் போர்க் குற்றங் களைக் கண்டித்தும் பொருளா தாரத் தடை விதிக்கக் கோரியும் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி இருப்பது உலகளாவிய தமிழர்களுக்கு நம்பிக்கையை உண்டாக்கி இருக்கிறது. 'சேனல் 4’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கொடூரங்கள் குறித்தும் தமிழக முதல்வர் உலக அரங்கில் கேள்வி எழுப்ப வேண்டும். 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சிகளைக் காட்டிலும், இதயம் கனக்கச் செய்யக்கூடிய போர்க் குற்ற ஆதாரங்கள் எங்களிடம் நிறைய இருக்கின்றன. உடல் முழுக்க சிங்கள அரசின் கொடூரங்களைத் தாங்கியபடி தப்பித்து வந்த உயிர் சாட்சியங்கள் பலர் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இனச் சித்ரவதைக்கு ஆதாரமாகக் காயங்களைச் சுமந்திருக்கும் அந்த உயிர் சாட்சிகளை உலக அரங்கில் நிறுத்த நாங்கள் தயாராக இருக் கிறோம். முதுகைப் பிளந்தது, ஆணியால் எழுதியது, ஸ்ரீ என்கிற சிங்கள எழுத்துகளை சிகரெட் நெருப்பால் எழுதியது எனத் தழும்புகளையே சிங்கள வெறியின் சாட்சியங் களாகச் சுமந்து திரிபவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இன வெறிக் கொடூரங்கள் குறித்து அவர்கள் வாய் திறந்தால், இந்த உலகத்தால் தாங்க முடியுமா எனத் தெரியாது. பிரிட்டனில் உள்ள அனைத்துக் கட்சியினரும் இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களை ஒப்புக்கொள் கிறார்கள். 13 நாடுகளில் விரவி இருக்கும் எங்கள் அமைப்பு, அனைத்துக் கட்சிகளையும் ஒருசேர எங்களுக்கான தீர்வுக்காக வலியுறுத்தி வருகிறது. 'சுவாமி ரவிசங்கர்ஜி காட்டிய காணொளிகளைப் பார்த்த பிறகுதான், ஈழத்தில் நடக்கும் கொடூரங்கள் எனக்குத் தெரிந்தன’ என முன்பே சொன்னார் ஜெயலலிதா. உயிர் சாட்சியங்களின் குரல் களைப் பதிவு செய்து அவருக்குக் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழர்களுக்கு என்று இருக்கும் ஓர் அரசு இலங்கை மீதான நடவடிக்கையை வலியுறுத்தினால், அந்த வார்த்தைகளுக்கான வல்லமை வலுவாக இருக்கும்!'' என்கிறார் எதிர்பார்ப்புடன்.
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவேல் அடிகளார், ''ஹிட்லர் காலத்தில் இன அழிப்பு நடந்தபோது, அதனை உரக்கச் சொல்ல ஊடக வசதி இல்லை. ஆனால், இன்றைக்கும் ஜெர்மனியில் இன அழிப்பு சம்பந்தமான புகைப்படங்களை ஆராய்ச்சி செய்து ஆவணமாக்கி வருகிறார் கள். இன வெறிக் கொடூரங்கள் உலக அரங் கில் ஒருபோதும் ஊக்குவிக்கப்படக் கூடாது என்பதை வலியுறுத்தவே அத்தகைய ஆவணங் கள் தேடப்படுகின்றன. ஆனால், இன்றைக்கு கண் முன்னரே நடந்திருக்கும் இன வெறிக் கொடூரத்தை உலகம் மிகுந்த தயக்கத்தோடு ஒப்புக்கொள்ளும் சூழல் உருவாகி இருக்கிறது. காரணம், இலங்கை அரசுக்கு 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஆயுத மற்றும் பண உதவிகளைச் செய்தன. ஆனால், இலங்கை அரசின் இன வெறிப் போக்கை, உதவிசெய்த அந்த நாடுகளால்கூட நியாயப்படுத்த முடியாது. 'சேனல் 4’ ஒளிபரப்பிய காட்சி களைக் கண்டு சர்வதேசமும் பொங்கி வெடிக்கிறது. சிங்கள அரசின் இன வெறிக் கொடூரங்கள் அம்பலமாக்கப்படும் இன்றைய சூழலிலும், அங்கே வதை முகாம்களில், பசி, பட்டினிக்கு தமிழர்கள் ஆளாக்கப்படுவதுதான் பெரும் துயரம்.
இலங்கையின் இன வெறிப் போக்கை மறுக்க முடியாத உலக நாடுகள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வை வலியுறுத்தி னால் மட்டுமே, அங்கே நடந்த - இன்றைக்கும் நடக்கும் கொடூரங்களுக்குத் தீர்வாக இருக்கும்!'' என்கிறார் ஆதங்கமாக.
லண்டனில் வாழும் சுதா என்கிற நிர்வாகி, ''இன வெறிக் கொடூரங்களாக 'சேனல் 4’ காட்டிய காட்சிகளை மனசாட்சிகொண்ட யாராலும் மறுக்க முடியாது. மனித உரிமை அமைப்புகளுடன் பெண் சித்ரவதைகளுக்கு எதிரான அமைப்புகளும் இந்த விவகாரத்தில் கைகோக்க வேண்டும். தாய்த் தமிழீழ உறவுகள் கைகொடுத்திருக்கும் இந்தச் சூழலில் உலகளாவிய மீடியாக்களும் உரக்கக் குரல் எழுப்பி, உலகின் மனசாட்சியை உலுக்க வேண்டும்!'' என்கிறார் ஏக்கத்துடன்.
எகிப்து, லிபியா போன்ற நாடுகளில் நிகழும் புரட்சி, போர் ஆகியவற்றை அதிமுக்கியத்துடன் காட்டிய ஊடகங்கள், 'சேனல் 4’ காட்டிய காட்சிகளை மறந்தும் காண்பிக்கவில்லை. தொப்புள் கொடி உறவாகத் துடித்திருக்க வேண்டிய தமிழக சேனல்களும் மருந்துக்குக்கூட அந்தத் துயரங்களைக் காட்டவில்லை.
தமிழக சேனல்கள் போட்டி போட்டு அந்தக் காட்சிகளை வெளியிட அது ஏதாவது சாமியாரின் படுக்கை அறைப் பதிவா என்ன?
ரஜினிகாந்தை பற்றி ஆர்வமாக புரளியை கிளப்பிடும் ஊடகங்களே, கொஞ்சம் ஈழத்தமிழனின் இழிநிலையை தமிழகத்திற்கு கொண்டு செல்லுங்களேன்... துட்டடிக்க தமிழன் வேண்டும், அவனது துயர் துடைக்க முனைய வேண்டும் என்கிற எண்ணம் வேண்டும்..
ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே ஜெயாவிற்கு கொஞ்சம் இரக்கம் இருக்குமாயின், சேனல் 4 காட்டிய பதிவை அப்படியே ஜெயா டிவியிலும் காட்ட வேண்டும்... இந்த ஒரு சிறிய காரியத்தை செய்தாலே போதும், தமிழக மக்களுக்கு சோனியா, கருணாநிதி செய்த தமிழின துரோகம் தெளிவாக தெரியும்... ஜெயலலிதா மனது வைத்தால், வடக்கத்தி சேனல்களிலும், தெற்கத்தி சேனல்களிலும் இந்த இனவொழிப்பு பதிவை காட்ட முடியும்...


unarchitamilan புதன், 22 ஜூன், 2011

ஈழத்தமிழருக்காக ஒரு நாள்!

மெரினாவில் மெழுகுவத்தி அஞ்சலி
ண்ணுக்கு எட்டிய தூரம் வரையில், ஈழ மக்களின் துயர் நீக்கும் வழி தென்படாத நிலையில், ஈழத்தில் நடந்த படுகொலைகளுக்காக ஈரமனம் கொண்ட இளைஞர்கள் மெரினாவில் அஞ்சலி செலுத்தத் தயாராகி வருகிறார்கள்!
'மே 17 இயக்கத்தின்’ உறுப்பினர்களில் ஒருவரான திருமுருகன் நம்மிடம் பேசினார். ''ஈழத்தில் நடந்த படுகொலைகள், இந்திய அரசின் துணை இல்லாமல் சிங்கள அரசாங்கம் மட்டுமே செய்தது அல்ல. அங்கே 'எத்தனை பேர் செத்தார்கள், எத்தனை பேர் முகாம்களில் இருக்கிறார்கள்’ என்ற விவரங்களை இன்னும் அரசு சொல்லவில்லை. 'சக தமிழனாக, தோழனாக ஈழத்தில் என்ன நடக்கிறது?’ என்கிற கேள்வியை ஒரு குடிமகனாக நான் முன் நின்று கேட்கும்போது, இந்த அரசாங்கம் என்னிடம் நேர்மையற்றதாக நடந்து கொள்கிறது. நான் ஏமாற்றப்பட்டதன் வலியை உணர்ந்து இந்த அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். இது தனிப்பட்ட என்னுடைய கோபம் அல்ல. தமிழ் இனத்தின் கோபம். சுமார் 1,46,000 பேர் ஈழத்தில் கொல்லப்பட்டனர். இந்தப் பேரழிவை இந்திய அரசாங்கம் தட்டிக் கேட்கவே இல்லை. வியட்நாம் போரின்போது, அமெரிக்க மக்கள் எந்த அளவுக்கு வருந்தினார்களோ, அந்த மனிதநேயத்தின் அடிப்படையில்தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.
60 ஆண்டுகாலமாக நடக்கும் போராட்டத் தில், '1976-ம் ஆண்டு ஜனநாயக ரீதியாக தமிழீழம் தனி நாடாக அறிவிக்கப்பட வேண்டும்’ என்ற தீர்மானத்துக்கு நம்மில் எத்தனை பேர் ஆதரவு அளித்தோம்? தமிழீழம் மட்டுமே அல்ல... தமிழர் சார்ந்தும் கேள்விகள் எழுப்பப்படாமல் போனதன் விளைவே இந்தப் படுகொலைகள். டிசம்பர் 10, 2009-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, 'ஈழத்தில் நடந்த இனப் படுகொலை’ என்ற வார்த்தைகளைச் சொன்னார். அந்த வார்த்தையை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்கள். இந்த அடிப்படையில் பார்த்தால், இலங்கை மேற்கொள்ளும் படுகொலைகளை இந்தியா ஊக்குவிக்கிறது என்பது தெரியும்.
14 முதல் 18 வயதுக்குட்பட்ட சுமார் 70,000 பெண்களை மட்டும் சிறைப் பிடித்து இருக்கிறார்கள். அத்தனை பேரையும் பலாத்காரம் செய்து கர்ப்பிணிகள் ஆக்கிவிட்டனர். போருக்குப் பிந்தைய படுகொலைகள், உலகத்தை உலுக்கி வருகின்றன. இப்படிச் சித்ரவதை களுக்கு உள்ளானவர்களின் ஆதரவுக்கான சர்வதேச தினமாக ஜூன் 26-ம் தேதியை அறிவித்து இருக்கிறது ஐ.நா.!
இன்று வரையிலும், 'போர்க் குற்றவாளி’ என்ற ஒரு பக்கத்தில் இருந்து மட்டுமே பேசுகிறோம். அடக்குமுறை களுக்கு உள்ளான, குற்றவாளிகளின் பிடியில் இருக்கும் மக்களை விடுவித்து, என்ன கோரிக்கைக்காக இத்தனை துயர்களை அடைந்தார்களோ, அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருகிற ஜூன் 26-ம் தேதி மெரினா, கண்ணகி சிலை அருகில் மெழுகுவத்தி அஞ்சலி செலுத்த இருக்கிறோம். தங்களைத் தமிழர்களாக உணர்பவர்கள் கலந்துகொள்ளும் முக்கிய நிகழ்வாக இது இருக்கும்!'' என்று ஆவேசப்பட்டார் திருமுருகன்.
அந்த நாளில் உணர்வாளர்கள் அனைவரும் ஓர் இடத்தில் கூடி தங்களது அஞ்சலியையும் கோபத்தையும் பதிவு செய்ய இருக்கிறார்கள்.
மெழுகுவத்தி வெளிச்சத்தில் ஈழத் தமிழர்கள் துயர் தீரட்டும்!
நன்றி - ஜூனியர் விகடன்
                                                                                                       

செவ்வாய், 14 ஜூன், 2011

தஞ்சை மண்ணில் உருவாகிறது முள்ளிவாய்க்கால் நினைவிடம்!


ராஜபக்ஷேவின் கொடூர முகத்தை, ஈழத்து இனப் படுகொலையை நினைவில் அறைந்து சொல்ல, தஞ்சையில் உருவாகிறது, 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!’
தஞ்சாவூரில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் சாலையில் இருக்கிறது விளார் கிராமம். இதற்கு அருகில், 20,000 சதுர அடியில், உலகத் தமிழர் பேரமைப்​பின் தலைவர் பழ.நெடுமாறன் தலைமை​யிலான அறக்கட்டளை, இந்த நினைவிடத்தை எழுப்பி வருகிறது!
''மேற்கு இலங்கையின் மன்னார் கடற்கரையில் இருந்து சிங்கள ராணுவத்தால் குண்டு வீசித் துரத்தப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை, முல்லைத் தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரையில் நிர்கதியாய் நிற்கவைத்து, துடிதுடிக்க இனப் படுகொலை செய்தது, சிங்கள ராணுவம். அந்த துயரத்தைத் தடுக்கக் கேட்டு இன்னுயிர் ஈந்த முத்துக்குமார், ஈழத்தின் முருகதாஸ் போன்றவர்களின் தியாகங்களையும், தமிழர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் எடுத்துச் சொல்லத்தான் இந்த நினைவிடம்!'' என்கிறார்கள், அமைப்புக் குழுவினர்.
தஞ்சை பூச்சந்தையில் இருந்து விளாரை நோக்கிச்செல்லும் சாலையில், பான்செக்கூர் கல்லூரி எதிரில் அமைக்கப்​படுகிறது, முள்ளிவாய்க்கால் நினைவிடம். கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி, சிற்ப வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. இதற்காக மாமல்லபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புளியங்குடி, சங்கரன்கோவில், ஆந்திர மாநிலத்தின் குப்பம் ஆகிய இடங்களில் இருந்து வந்துள்ள 80-க்கும் மேற்பட்ட சிற்பிகள், இரவு பகல் பார்க்காமல், கற்களைச் சிற்பமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இத்துடன், ஈழத்து இனப் படுகொலைக் காட்சியை விவரிக்கும் ஓவியக் கூடம் ஒன்றும் அமைக்கப்படுகிறது. இதற்காகத் தமிழின உணர்வு ஓவியர்களான வீர சந்தானம், சந்துரு போன்ற பிரபல கலைஞர்கள் அங்கேயே முகாமிட்டு ஓவியங்களைத் தீட்டுகின்றனர்.
நினைவிடப் பணிகளைக் கவனித்து வருகிறார் அறக்கட்டளையின் அறங்காவல் குழு தலைவர் இளவழகன். ''இனப் படுகொலை நடத்தப்பட்ட ஈழத்தில் அதன் ஒரு சுவடும் இருந்துவிடக் கூடாது என அழிக்கும் முயற்சியில் ராஜபக்ஷே அரசு இன்னும் இன வெறி தலைக்கேறியபடி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், 'முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூரக்கூடிய உலகளாவிய ஒரு நினைவிடத்தை அமைப்பது’ என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் நெடுமாறன் தீர்மானித்தார். இதற்காக, ஓர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, அதன் கீழ் உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் இருந்தும், தமிழகத்தில் உள்ள இன உணர்வாளர்களிடம் இருந்தும் நன்கொடை மூலம் நிதி திரட்டப்படுகிறது. பணிகளும் மும்முரமாக நடக்கின்றன. சிற்பம் செய்யத் தேவையான கற்களை, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து உணர்வாளர்களின் பெரும் உதவியுடன் கொண்டுவந்தோம். முகப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழ் அன்னையின் சிலை 40 அடி உயரம், 11 அடி அகலம், 3 அடி கனம்கொண்ட ஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ளது. இதே வகைக் கல்லில் இருந்தே, 19 தமிழ் இனத் தியாகிகளின் சிலைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சிலையும் 3 அடி உயரம் இருக்கும். பெரிய கோயிலுக்கு இணையாக இதைக் கட்ட முடியாவிட்டாலும், தமிழர்களின் பழங்காலக் கட்டடக் கலை நுணுக்கங்களுடன் இதை உருவாக்கி வருகிறோம். 1,000 சதுர அடிகள் கொண்ட ஓவியக் கூடம் ஒன்று தனியாக அமைக்கப்படுகிறது. தமிழ் ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றையும், முள்வேலி முகாமில் அடைக்கப்பட்ட தமிழ் மக்களின் துயரங்களையும், நமது ஓவியர்கள் மிகச் சிறப்பாக கண்முன்னே கொண்டுவந்து இருக்கிறார்கள். 1,000 ஆண்டுகளுக்குப் பிந்தைய தமிழனும் ஈழத்து இனப் படுகொலையை நினைவுகூரும் வகையில், அழியாப் புகழுடன் இந்த நினைவு முற்றம் எழுந்து நிற்கப்போகிறது. முஸ்லிம்களுக்கு மெக்காவைப் போல, கிறிஸ்துவர்களுக்கு ஜெருசலேமைப் போல, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வந்துசெல்லும் ஓர் இடமாக இது இருக்கப் போகிறது!'' என்று உறுதியோடு சொன்னார்.
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையின் கோரத்தை நினைவூட்டும் இந்த முற்றத்தில், சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈழத் தமிழ் மக்கள் சிந்திய ரத்தம் தோய்ந்த மண்ணும் வைக்கப்பட இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பித்த ஒருவர் எடுத்து வந்த மண், ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதை நினைவிடத்தில் வைக்கமுடியாதபடி திடீர் பிரச்னைகள் வந்துவிடக் கூடாது என்பதால், அதை ரொம்பவும் சிரத்தை எடுத்துப் பாதுகாத்து வைத்து இருக்கிறார்களாம்!
போராடி மடிந்த ஈழத் தமிழ் மக்களுக்கு, தமிழகத்தின் கண்ணீர் அஞ்சலி!
- இரா. தமிழ்க்கனல்
படங்கள்: கே.குணசீலன்                                                            thanks vikatan