மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

சனி, 19 மார்ச், 2011

விஜயகாந்துக்கு ஒரு மனந்திறந்த மடல்
To, விஜயகாந்த்,

FROM, தமிழருவிமணியன்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு... வணக்கம். வளர்க நலம்!
'மக்களோடும் தெய்வத்தோடும் மட்டும்தான் எனக்குக் கூட்டணி’ என்றவர் நீங்கள். எந்த அரசியல் கட்சியும் தேர்தல் களத்தில் தனித்து நிற்கத் தயங்கியபோது, மாநிலம் தழுவிய மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தனித்து நின்ற உங்கள் துணிச்சல் மனம் திறந்த பாராட்டுக்கு உரியது. கூட்டணி அரசியலில் அனைத்துக் கட்சிகளும் குளிர் காயும்போது, நீங்கள் மட்டும் தனி ஆவர்த்தனம் செய்துகொண்டே இருந்தால், கச்சேரி கேட்கும் ரசிகர் கூட்டம் காலப்போக்கில் குறைந்துவிடும் என்ற அச்சம் உங்களை அலைக்கழித்துவிட்டது. கேப்டன்... எது சாத்தியமோ, அதை ஒழுங்காகச் செய்வதற்குப் பெயர்தான் அரசியல். ‘politics is the art of possible’  என்பதுதான் அரசியல் வகுப்பின் அரிச்சுவடி.
நீங்கள் விரும்பும் நிலையை அடையும் வரை தொடர்ந்து போராடும் இயல்பு உள்ளவர் என்பதற்கு உங்கள் திரையுலக சாதனைகளே சிறந்த எடுத்துக்காட்டு. சிவந்த நிறமும், கவர்ந்து இழுக்கும் முகமும் உள்ளவர்களே திரையுலகில் வெல்ல முடியும் என்ற எழுதப்படாத விதியை மாற்றி அமைத்த பெருமை ரஜினிக்கும், உங்களுக்கும் உண்டு. ஆரம்பத்தில் நீங்கள் நடித்து வெளிவந்த 'இனிக்கும் இளமை,’ 'தூரத்து இடி முழக்கம்,’ 'அகல் விளக்கு’ போன்ற படங்கள் பெரிதாகப் பேசப்படவில்லை. 'சட்டம் ஒரு இருட்டறை’ உங்களைத் திரும்பிப் பார்க்கச் செய்தது. 'கேப்டன் பிரபாகரன்’ உங்களுக்குத் தனிப் புகழைத் தேடித் தந்தது. 'வைதேகி காத்திருந்தாள்,’ 'அம்மன் கோவில் கிழக்காலே’ ஆகிய இரண்டு படங்களும் கிராமப்புற மக்களைக் கிறங்கச்செய்தன. தமிழக சினிமா ரசிகர்களின் இதயங்களில் உங்களுக்கு முக்கிய இடம் கிடைத்ததால், 30 ஆண்டுகள் நாயகனாகவே நடித்து 100 படங்​களுக்கு மேல் முடித்துவிட்டீர்கள். திரையுலக வாழ்க்கை முடியப்போவதை முன்கூட்டியே உணர்ந்துகொண்ட நீங்கள் ரகசியமாக அரசியல் கனவில் ஆழ்ந்துவிட்டீர்கள்.
ஒற்றை மனிதனாய் தீமைகளை எதிர்த்து வெற்றி பெறும் எம்.ஜி.ஆர். ஃபார்முலாவை அப்படியே பின்பற்றத் தொடங்கினீர்கள். அவரைப்போலவே, பாமர மக்களின் பரோபகாரியாகப் பெயர் எடுப்பதற்கு உங்கள் பிறந்த நாள் விழாக்களைப் பயன்படுத்திக்கொண்டீர்கள். ரசிகர் மன்றங்​களிடம் கொடி கொடுத்துப் படை திரட்டும் பணியைப் பக்குவமாய்த் தொடர்ந்தீர்கள். 'கறுப்பு எம்.ஜி.ஆர்.’ என்று உங்களை மற்றவர்கள் அழைக்கச் செய்தீர்கள். உங்கள் ராஜ தந்திரம் வெற்றி பெறும் காலம் கனிந்தது. நிஜத்துக்கும், நிழலுக்கும் வேற்றுமை உணராத வெள்ளை மனிதர்கள் எம் தமிழ் மக்கள். மதுரையில் திரண்ட மக்கள் முன்பு செப்டம்பர் 14, 2005-ல் 'தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்’ என்ற நாம​கரணத்துடன் புதிய கட்சிக்குப் பூபாளம் பாடினீர்கள். அன்று முதல் நீங்கள் ஓர் அரசியல் தலைவர் ஆகிவிட்டீர்கள். நடிகர்கள் தலைவர்களாவது, தமிழகத்தில் மட்டும்தான் எளிது.கடந்த 43 ஆண்டுகளாக இந்த மண்ணை ஆள்பவர்கள் திரைத் துறை சம்பந்தப்பட்டவர்களே என்பது அதிசயமான ஓர் உண்மை. மாற்றாக வந்து நிற்கும் நீங்களும் திரையுலக நாயகரே. உங்கள் கட்சியிலும் 'திராவிட’ வாசம் வீசுகிறது. திராவிடக் கட்சிகள் அனைத்துக்கும் பிதாமகன் பெரியார். ஆனால், அவருக்கு அறவே பிடிக்காத ஒன்று சினிமா. எவ்வளவு பெரிய முரண்!ரஜினியைப்போன்று 'புலி வருகிறது’ என்று 15 ஆண்டுகளாகப் பொய்ப் பாய்ச்சல் காட்டிப் பதுங்கிவிடாமல், கம்பீரமாக அரசியல் களத்தில் வந்து நின்ற மனிதர் நீங்கள். நடிகர் சங்கத்தை மிகச் சிறப்பாக நடத்திய அனுபவம் உங்களுக்கு உண்டு. கடனில் மூழ்கிக்கிடந்த சங்கத்தைக் கரையேற்றிக் காப்பாற்றியவர் நீங்கள் என்பதால், இலவசத் திட்டங்களால் பெரும் கடனாளியாகிவிட்ட தமிழக அரசையும் கடன் சுமையில் இருந்து காப்பாற்றிவிடுவீர்கள் என்று எம் 'அறிவார்ந்த’ தமிழர்கள் நம்பக்கூடும்.நீங்கள் மதுரையில் கட்சி தொடங்கியபோது, அதை ஜெயலலிதாவும், கலைஞரும் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. ஆனால், இன்று போயஸ் தோட்டம் 41 தொகுதிகள் வழங்க உங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறது. கோபாலபுரம் உங்கள் கூட்டணியால் ஆட்சியைப் பறிகொடுத்துவிடுவோமோ என்று பதறித் துடிக்கிறது.நீங்கள் புதிய கட்சிக்கு அச்சாரம் போட்டபோது, ஆட்சி நாற்காலியில் ஜெயலலிதா அமர்ந்திருந்தார். கலைஞரின் தலைமையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில், புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற களிப்பில் மூழ்கிக்கிடந்தது. அப்போது அரசியல் காற்று உங்களுக்கு ஆதரவாக ஒன்றும் வீசவில்லை. ஆனாலும், ஏதோ ஒரு நம்பிக்கை தந்த துணிவில் உங்கள் பயணம் நடந்தது. 2006-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தது. கட்சி தொடங்கிய எட்டே மாதங்களில் நீங்கள் பாரதப் போரில் அபிமன்யு தனியாக நின்றதுபோல் தனித்துக் களத்தில் நின்று, தமிழகம் முழுவதும் வேட்பாளர்களை நிறுத்தி 8 விழுக்காடு வாக்குகளைப் பெற்றீர்கள். அது ஒரு சாதனைதான். ஆனால், உங்கள் சாதனை தமிழகத்துக்கு வேதனையைத்தான் தேடித் தந்தது. நீங்கள் வாக்குகளைப் பிரித்ததால்தான், கலைஞருக்கு ஆளும் வாய்ப்பு கனிந்தது.
அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலிலும் நீங்கள் துணிவுடன் தனித்துக் களம் கண்டீர்கள். உங்கள் 'முரசு’ சின்னம் முடக்கப்பட்டது. தேர்தல் கமிஷன் 'தீபம்’ தந்தபோது நீங்கள் திணறவில்லை. நீங்கள் விரும்பிய வெற்றி வெளிச்சத்தை 'தீபம்’ தராவிடினும், திரி அடங்கிவிடவில்லை. மதுரை மத்திய தொகுதி, மதுரை கிழக்கு ஆகியவற்றில் நடந்த இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. உங்களை முந்துவதில் மூச்சு வாங்கியது. திருமங்கலத்தில் டெபாசிட் பறிபோனதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டியது இல்லை. திருமங்கலம் ஃபார்முலாவை தேர்தல் அரங்கத்தில் அறிமுகம் செய்து, ஜனநாயகத்தின் கழுத்தை நெரித்தவர்கள்தான் வெட்கத்தில் தலை தாழ வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., இடதுசாரிகள் கூட்டணி அமைத்து 37.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்றன. தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் சேர்ந்து 42.5 விழுக்காடு வாக்குகளைச் சேகரித்தன. ஆனால், தனியாக நின்ற நீங்கள் 'விழுவது மீண்டும் எழுவதற்கே’ என்ற விவேகானந்தரின் தன்னம்பிக்கைப் பாதையில் நடந்து 10 விழுக்காடு வாக்குகளைப் பெற்றதுதான் பெருமைக்குரியது. நீங்கள் பெற்ற 31 லட்சம் வாக்குகள் மீண்டும் தி.மு.க. அணியின் வெற்றிக்கே மறைமுகமாக உதவியது.இன்று ஜெயலலிதாவுடன் சமரசம் செய்துகொண்ட நீங்கள், அன்று அவரோடு நின்றிருந்தால், தமிழினத்துக்குத் துரோகம் செய்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி களத்தில் காணாமற் போயிருக்கும். காங்கிரஸ் மேலிடமும் தமிழர் நலனில் நாட்டம் செலுத்தியிருக்கும்.போனது போகட்டும். இது கூட்டணி அரசியல் காலம் என்பதைத் தாமதமாகவாவது நீங்கள் தெரிந்துகொண்டது நல்லது. 'உங்களுக்கு 31 லட்சம் வாக்குகள் எதனால் கிடைத்தது?’ என்று நீங்கள் அறிவீர்களா? உங்களைப் பெரிய அரசியல் ஞானி என்றோ, தத்துவ மேதை என்றோ, சீரிய சமூகச் சிந்தனையாளர் என்றோ மக்கள் வாக்களிக்கவில்லை. இரு திராவிடக் கட்சிகளிடமும் நம்பிக்கை இழந்துவிட்டவர்கள்தான் ஒரு மாற்றம் தேடி, உங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினர். தனித்து நின்று தி.மு.க. கூட்டணியை இரு முறை வாழவைத்த நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?
சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு உங்கள் இருப்பிடம் தேடி வந்து இடதுசாரிகள் மூன்றாவது அணி அமைக்க அழைப்பு விடுத்தபோது, அதை நீங்கள் வரவேற்றிருக்க வேண்டும். திராவிடக் கட்சிகள் இரண்டையும் தவிர்த்து, மற்ற கட்சிகளை ஓர் அணியில் நிறுத்த நீங்கள் முன்முயற்சி மேற்கொண்டு இருக்க வேண்டும். நீங்களோ, இடதுசாரி இயக்கங்களோ, வைகோவோ அதிகாரத்தில் அமர்ந்து ஊழல் செய்தது இல்லை. ஊழல் முத்திரை முகத்தில் விழாத கட்சிகளின் கூட்டுறவில்தான் தமிழகம் மீண்டும் தழைக்க முடியும்.தமிழகத்தில் புதிய அரசியல் படைக்க நீங்கள் புறப்பட்டு இருப்பது உண்மையானால், நீங்கள் நிறைய மாற்றங்களுக்கு உங்களை முதலில் பக்குவப்படுத்திக்​கொள்ள வேண்டும். இன்றுள்ள நிலையில் எந்த வகையிலும் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக உங்கள் அணுகுமுறை அமையவில்லை. கலைஞரின் குடும்பத்தைக் கூர்மையாக விமர்சிக்கும் நீங்கள், உங்கள் குடும்பம் புடைசூழவே அரசியலில் அடியெடுத்துவைத்தீர்கள். உங்கள் மனைவியும், மைத்துனரும் இல்லாமல் நீங்கள் காட்சி தருவதே இல்லை. இன்று அரசியல் கட்சிகளைப் பிடித்திருக்கும் புற்றுநோய்தான் குடும்ப அரசியல். நீங்கள் விதிவிலக்​காக இருக்க வேண்டாமா? ஆக்டேவியஸ் சீஸர், ஆண்டனி, லெபிடஸ் ஆகிய மூவரின் ஆளுகையில் பழைய ரோமப் பேரரசு இருந்ததுபோல், விஜயகாந்த, பிரேமலதா, சுதீஷ் பிடியில் தே.மு.தி.க.வும் இருப்பது சரியா?குடும்ப அரசியல் நடப்பதே கூட்டாக அதிகாரத்தைச் சுவைக்கவும், பொதுச் சொத்தைக் கொள்ளை அடித்து ஊழலை வளர்க்கவும்தானே! 'ஊழலை என்னால் சகிக்க முடியாது’ என்று முழங்குகிறீர்கள். ஆனால், ஊழல் கறை படிந்த பொன்னுசாமிக்கும், கு.ப.கிருஷ்ணனுக்கும் கட்சியில் இடம் அளித்தது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா கேப்டன்? 'தி.மு.க. ஊழல் மலிந்த கூடாரம். அங்கே இருந்து யாராவது அ.தி.மு.க-வுக்கு வரவிரும்பினால், நான் நியமிக்கும் ஓய்வுபெற்ற நீதிபதியின் முன் நின்று, நிரபராதி என்று நிரூபித்த பின்பே அனுமதிக்கப்படுவார்கள்’ என்று அறிவித்தவர் எம்.ஜி.ஆர். ஆனால், தி.மு.க-வில் இருந்து இடம் பெயர்ந்த ஒருவருக்கும், 'அக்னிப் பிரவேசம்’ நடந்ததாகத் தகவலே இல்லை. அந்த விதத்திலும் கறுப்பு எம்.ஜி.ஆராகவே காட்சியளிக்க விரும்புகிறீர்களா?ஆளும் கட்சியை வன்மையாக விமர்சிப்பது மட்டுமே ஒரு வளரும் கட்சியின் வேலைத் திட்டமாக இருக்கவியலாது. உங்கள் கட்சியின் அடிப்படைக் கொள்கைகளை, தீட்டி வைத்திருக்கும் ஆக்கபூர்வமான திட்டங்களை மக்கள் முன் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும். மின்வெட்டில் இன்று சிக்கித் தவிக்கிறது தமிழகம். 'நான் ஆட்சியில் அமர்ந்தால், ஐந்தே மாதங்​களில் மின் பற்றாக்குறையைத் தீர்த்துவிடுவேன்’ என்று நீங்கள் மேடையில் முழங்குகிறீர்கள். உங்களிடம் இருக்கும் அந்த அலாவுதீன் அற்புத விளக்கை இப்​போதே எங்களுக்காகக் கொஞ்சம் காட்டினால் நல்லது. 'ரேஷன் பொருள்களை வீட்டுக்குக் கொண்டுவந்து விநியோகிப்பேன்’ என்பதற்கு மேல் இது வரை எந்தப் 'புரட்சிகரமான’ திட்டத்தையும் நீங்கள் வெளிப்படுத்தி​விடவில்லை.
ஒவ்வொரு துறையிலும் உங்கள் கட்சிக்குத் தீர்க்கமான சமூக, பொருளியல் பார்வை உண்டா? ஊழலற்ற நேரிய நல்லரசு வழங்குவதில் உண்மையான நாட்டம் உங்களுக்கு உண்டா? ராஜாஜி, கட்சிக்கும் ஆட்சிக்கும் இடையில் வைத்த இலக்குவன் கோட்டை உங்களால் போடக் கூடுமா? ஓமந்தூர் ராமசாமி, குமாரசாமி ராஜா, காமராஜர் போன்று சலனங்களும், சபலங்களும் அற்ற அரசியல் முனிவராக நீங்கள் ஆட்சி நடத்தக்கூடுமா?
இரண்டு திராவிடக் கட்சிகளைப்போல் நீங்களும் ஆடம்பர, ஆரவார அரசியலைத்தானே நடத்துகிறீர்கள்? எளிமை சார்ந்த நடவடிக்கைகள் உங்களிடம் இல்லையே? கொடிகளும், தோரணங்களும், ஃப்ளெக்ஸ் விளம்பரங்களும் உங்கள் வருகையின்போது விழிகளைக் கூசச் செய்கின்றனவே. கலைஞரைப்போலவே நீங்களும் காங்கிரஸ் தயவுக்காகக் காத்திருந்து, ஈழத் தமிழர் ரத்தம் சிந்தியபோது மௌனப் பார்வையாளராக வேடிக்கை பார்த்தீர்களே... 'கேப்டன் பிரபாகரன்’ வெறும் தோற்றம்தானா? பா.ம.க-வின் கோட்டையான விருத்தாசலத்தில் மக்கள் வாக்களித்து உங்களைச் சட்டமன்றத்துக்கு அனுப்பியது சரித்திரம் இல்லையா! சட்டமன்றம் கூடிய காலங்களில் நாள் தவறாமல் விவாதங்களில் பங்கேற்று, உங்கள் கருத்துகளை அழுத்தமாகப் பதிவு செய்ய முயன்றீர்களா? எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா போன்று நீங்களும் முதல்வரானால்தான் ஒழுங்காக சட்டமன்றப் பணிகளில் ஈடுபடுவீர்களா? தோழர் ஜீவா 1952-57-ல் தனி மனிதராய் நிகழ்த்திய சட்டமன்றப் பொழிவுகளின் தொகுப்பைத் தேடிப் படியுங்கள். சமுதாய நலன் சார்ந்து ஓர் உறுப்பினர் சட்டமன்றத்தில் எப்படி இயங்குவது என்பதை அப்போது அறிவீர்கள்.தமிழக மக்களுக்கு இன்றைய அவசரத் தேவை, பொது சொத்தில் சுகம் தேடாத பொறுப்புள்ள பொது நலத் தொண்டர்கள். உங்கள் கட்சியில் அப்படிப்பட்ட மனிதர்கள் இல்லை என்றால், உங்களால் ஒரு மாற்று அரசியலை உருவாக்க இயலாது என்றால், புதிதாக எதற்கு இன்னொரு கட்சியும், குடும்பத் தலைவரும்?
'சினிமா ஒரு கலை. அதிலே நடிப்பது ஒரு வேலை. அப்படி இருக்க, சினிமாக்காரர்களுக்கு மக்கள் ஏன் அளவுக்கு மீறிய மரியாதை கொடுக்க வேண்டும்? சினிமாக் கூட்டம் ஒரு வியாபாரக் கூட்டம். அதற்கு ஏன் இவ்வளவு பெரிய மரியாதை?’ என்று சினிமா உலகில் சீர்திருத்தக்காரராக வலம் வந்த நடிகவேள் எம்.ஆர்.ராதா கேட்ட கேள்வியைத் தமிழினம் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் சிந்திக்கும் நேரம் வரும்; வர வேண்டும்!
இப்படிக்கு,
களங்கமற்ற ஒரு நல்ல அரசியல்வாதியாய் உங்களால் உருவாக முடியும் என்ற நம்பிக்கையுடன்
- தமிழருவி மணியன்
unarchitamilan


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக