மகாத்மா
காந்தி, முகமது அலிஜின்னா, மவுன்ட் பேட்டன், மன்மோகன் சிங்…
பத்திரிகையாளர் குல்தீப் நய்யாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்லாத
தலைவர்களே இல்லை. இந்தியாவின் மிக மூத்த
பத்திரிகையாளர். நேருவின் காதல் கடிதங்கள், லால்பகதூர் சாஸ்திரியின் மர்ம
மரணம், இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ரகசியங்கள்… இந்தியாவைப்
பரபரக்கவைத்த குல்தீப் நய்யாரின் சாம்பிள் ‘ஸ்கூப்’கள் இவை.
”91
வயதில் 14 மொழிகளில் கிட்டத்தட்ட 80 பத்திரிகைகளில் இடைவிடாமல் கட்டுரைகள்
எழுதுகிறீர்கள். இன்றும் ‘விஷயம் அறிந்த’ பத்திரிகையாளராகவே இருப்பதன்
ரகசியம் என்ன?”
”என்னுடைய ஜன்னல்கள் எப்போதும் திறந்தே
இருக்கின்றன. தொடர்புகளையும் நட்பையும் பெரிதும் மதித்துக் கொண்டாடுகிறேன்.
பகலில் இரண்டு மணி நேரமும் இரவில் மூன்று மணி நேரமும் மட்டுமே
தூங்குகிறேன். நாளன்றுக்குச் சாதாரணமாக 27 செய்தித்தாள்கள் படிக்கிறேன்.
வார இதழ்களும் இன்ன பிற புத்தகங்களும் கணக்கில் வராதவை. முதுமை சுமை
குறைக்க வாரத்தில் மூன்று நாட்கள் ஆயில் மசாஜ். மீதி நாட்கள் யோகா.
முடிந்தவரை என் துன்பங்களையும் சோகங்களையும் சிந்திக்க மறுக்கிறேன். இதன்
பெயர் ரகசியமா? தெரியவில்லை.”
”70 ஆண்டு ஊடகத் துறைப் பணியில் உங்களை மிக அதிகமாகப் பாதித்த அசைன்மென்ட் எது?”
”மகாத்மா காந்தியின் படுகொலை. ‘காந்தி
சுட்டுக் கொல்லப்பட்டார்’ என்ற டிரங்கால் தகவல் கேட்டு ‘பிர்லா’ ஹவுஸ்
நோக்கி ஓடினேன். பிர்லா ஹவுஸில் கூடியிருந்த மக்களின் அழுகை ஓலங் களையும்
கண்ணீரையும் ஆங்காங்கே ஈரம்கூடக் காயாமல் சிதறிக்கிடந்த பாபுஜியின்
ரத்தத்தையும் எந்தக் காலத்திலும் மறக்க முடியாது.”
”உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார்?”
”ரஷ்யாவின் புரட்சி எழுத்தாளர் டால்ஸ்டாய். அவருடைய ‘வார் அண்ட் பீஸ்’ எனக்கு மிகப் பிடித்த நாவல்.”
”இந்தியாவின்
அனைத்துப் பிரதமர்களோடும் பழகியவர் என்ற முறையில் சொல்லுங்கள்…
இதுவரையிலான இந்தியப் பிரதமர்களில் சிறந்தவர் யார்… மோசமானவர் யார்?”
”சிறந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு. மோசமான
பிரதமர் அவருடைய மகள் இந்திரா காந்தி. தன் வளர்ச்சிக்கு உதவிய லால்பகதூர்
சாஸ்திரி, காமராஜர் போன்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களைக்கூட அவர் ஒழுங்காக
நடத்தவில்லை. எமர்ஜென்ஸி காலத்தில் இந்திரா காந்தி செய்த அட்டூழியங்களை
எவராலும் மறக்க முடியாது!”
”காமராஜருடன் உங்களுக்கு நல்ல நெருக்கம் இருந்தது அல்லவா?”
”ஆமாம். காமராஜர் எனக்கு மிகவும்
நெருக்கமானவர். பிரதமர் பதவி பல முறை அவரைத் தேடி வந்தபோதும் மறுத்தவர்
அவர். எத்தனை பெரிய தியாகம்? லால்பகதூர் சாஸ்திரி மறைவுக்குப் பிறகு,
காங்கிரஸின் மூத்த தலைவர்களுடன் பேசி இந்திரா காந்தியைப் பிரதமர்ஆக்கியவர்
காமராஜர். ஆனால், இந்திரா பிறப்பித்த ‘எமர்ஜென்ஸி’ காமராஜரை வெகுவாகப்
பாதித்தது. நான் எமர்ஜென்ஸி காலத்தில் சிறையில் இருந்துவிட்டு காமராஜரைச்
சந்திக்க சென்னைக்கு வந்தேன். அப்போது இந்திரா காந்தியைப் பிரதமர்
பதவிக்குத் தேர்ந்தெடுத்த தவறான முடிவுக்காக மிகவும் வருத்தப்பட்டு என்
எதிரிலேயே நான்கு முறை தலையில் அடித்துக்கொண்டார். அந்தக் குற்ற உணர்வுதான்
அவர் உயிரைச் சீக்கிரமே பறித்துக்கொண்டது.”
”
‘இந்தியா ஜனநாயகரீதியாகத் தோல்வி அடைந்துவிட்டது!’, ‘ஜனநாயகம் என்பது
மெஜாரிட்டியின் சர்வாதிகாரம்’ – சமீப காலமாக மிக அதிகமாக அடிபடும்
வாதங்கள் இவை. பிரிட்டிஷ் இந்தியாவில் வாழ்ந்தவர் என்ற முறையில், இந்த
வாதங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
(நீண்ட மௌனத்துக்குப் பிறகு…)
”இந்தியாவில் சமீபமாக அரங்கேறும் அத்துமீறல்கள், ஊழல், வன்முறை, மக்கள்
விரோத அரசியல் ஆகியவையே அந்த வாதங்களின் பிறப்பிடம். இவற்றை எல்லாம் பொய்
என மறுக்க முடியாது. இரோம் ஷர்மிளாவின் 12 ஆண்டு அஹிம்சைப் போராட்டம்,
கவனத்தில்கொள்ள மறுக்கப்படும் கிழக்கு இந்தியாவின் ஓலம், காஷ்மீரில்
அரங்கேறும் கண்மூடித்தனமான வன்முறை, தெலுங்கானா, ஜெய்தாப்பூர், இப்போது
கூடங்குளம் என ஆங்காங்கே வெடிக்கும் மக்கள் போராட்டம், 65 ஆண்டுகளாக
இன்னமும் முன்னேற்றம் காணாத தலித்துகளின் வாழ்க்கைத் தரம், பழங்குடியின
மக்களின் விசும்பல்… இவை எல்லாமே இந்திய ஜனநாயகத்தின் காலரைப்
பிடிப்பவைதான். பிரிட்டிஷ் இந்தியா, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்
காலகட்டம், தற்போதைய இந்தியா ஆகிய மூன்று காலகட்டத்திலும் வாழ்ந்தவன் என்ற
முறையில் சொல்கிறேன்… எனக்கு இன்னமும் இந்திய ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை
இருக்கிறது. இன்றைய தலைமுறை தலையெடுக்கும் காலத்தில் இந்த நிலை மாறலாம்!”
”இந்திய ஜனநாயகத்துக்குச் சவாலான விஷயம் என எதைச் சொல்வீர்கள்?”
”பசி. இன்றைய இந்தியாவில் அரங்கேறும்
அத்தனை பயங்கரங்களுக்கும் பின்னணியில் பட்டினியோடு தூங்கப்போகிறவனின்
பழிக்குப் பழி குணம் இருக்கிறது. அதேபோல சாதி, மதம், மொழி, இனம் உள்ளிட்ட
வற்றின் பெயரால் எழும் எண்ணற்ற பிரிவினைவாதங்கள் இந்தியா முழுக்கத்
தலைவிரித்தாடுகின்றன. இது இந்தியாவைக் கண்டந்துண்டமாக வெட்டிப்
போட்டுவிடும். இன்னொரு முக்கியக் காரணம், இந்து தாலிபான் செயல்பாடுகள்.
அதுதான் மகாத்மா காந்தியையே பழிவாங்கியது. திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட
பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனக் கலவரம் ஆகியவை இந்து தாலிபான்களால்
உருவாக் கப்பட்டவைதானே. சமீப காலமாகத் திரைக்குப் பின்னால் தென்படும் இந்து
தாலிபான் அரசியல் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைத்துவிடும்!”
”ஊடகங்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?’
”மோசமாக… மிக மோசமாக… மிகமிக மோசமாக
இருக்கிறது. உண்மை, நேர்மை, நடுநிலைமை என்பதெல்லாம் கேள்விக்குறி
ஆகிவிட்டது. விளம்பரம் கொடுப்பவர்களுக்கு ஆதரவாகச் செய்தி வெளியிடுவது,
பணம் வாங்கிக்கொண்டு தவறான செய்திகளைப் பிரசுரிப்பது என மோசமான திசையில்
ஊடகங்கள் பயணிக்கின்றன. அதுவும் அரசியல்வாதிகளும் கட்சிகளும் பன்னாட்டு
நிறுவனங்களும் சொந்தமாக மீடியா ஹவுஸ் வைத்திருப்பதால், அவர்கள் என்ன
நினைக்கிறார்களோ அல்லது தங்களைப் பற்றிய என்ன பிம்பம் பரவ வேண்டும் என்று
நினைக்கிறார் களோ… அவற்றை எல்லாம் செய்தி ஆக்குகிறார்கள். அதுவும்
மின்னணுச் சாதனங்களின் வருகை… ஊடக உலகுக்கு ஏற்பட்ட சோதனை என்றே சொல்லலாம்.
பரபரப்புக்காகத் தவறான செய்திகளையும் திட்டமிட்டுத் திரிக்கப்பட்ட செய்தி
களையும் வெளியிடுகிறார்கள். அதில் துளியும் உண்மை இருக்காது. மொத்தத்தில்
இன்றைய மீடியா, மக்கள் வெறுக்கும் ஒன்றாக மாறி வருகிறது.”
”இப்போதைய இந்திய முதல்வர்களில் உங்கள் பார்வையில் சிறந்தவர் யார்?”
”பீகார் முதல்வர் நித்திஷ் குமார்.
மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த பீகாரைக் கல்வியிலும்
பொருளாதாரத்திலும் மெள்ள மெள்ள முன்னேற்றி வருகிறார். சாதிய அரசியல்,
மோசமான நிர்வாகம், ஊழல், மதப் பிரச்னை போன்ற சமூக விரோதச் சாயல்கள் அவரிடம்
இல்லை. அதனால் ஓட்டு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டும் நித்திஷ்
வளர்ந்துவருகிறார்.”
”ராகுல் காந்தி – நரேந்திர மோடி… இந்தியப் பிரதமர் போட்டி இவர்களிடையேதான் இருக்குமா?”
”இருவருமே மோசம். சோனியா காந்தியின் மகன்
என்பதாலேயே, ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறார்.
மற்றபடி அவருக்கு பிரதமர் ஆவதற்கான எந்தத் தகுதியும் இல்லை. இந்து –
முஸ்லிம் கலவரத்தால் என் பிறந்த ஊரான சியால்கோட்டை (தற்போது பாகிஸ்தானில்
இருக்கிறது)விட்டு வெளியேறியபோது ‘இனி இந்தியாவில் மதத்தின் பெயரால் எந்த
உயிரும் போகக் கூடாது’ என வேண்டிக்கொண்டே இந்தியாவுக்குள் நுழைந்தேன்.
ஆனால், நரேந்திர மோடி குஜராத்தில் அரங்கேற்றிய கொடூரத்தைப் பார்த்துவிட்டு
என் கண்களில் ரத்தக் கண்ணீர் வடிந்தது. தூக்கம் வராமல் மூன்று மாதங்கள்
தூக்க மாத்திரை போட்டுத் தூங்கினேன். அவரா இந்தியத் திருநாட்டின் பிரதமர்?
நெவர்!”
”நேரு குடும்பம் சரியான திசையில்தான் பயணிக்கிறதா?”
”ஆம். மிகச் சரியாகவே அழிவின் பாதையில் பயணிக்கிறது. அதை சோனியா நன்றாக வழிநடத்திச் செல்கிறார்.”
”தமிழக அரசியலைக் கவனிக்கிறீர்களா? கருணாநிதி, ஜெயலலிதா யார் உங்கள் சாய்ஸ்?”
”இருவருமே இல்லை. தமிழகத்தில் கடந்த 20
ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் இருவர் மட்டுமே ஆட்சி செய்கிறார்கள்.
மூன்றாம் சக்தி இல்லாததால் மக்களும் வேறு வழியின்றி மாற்றி மாற்றி
வாக்களிக்கிறார்கள். இப்போதைக்கு என் சாய்ஸ் தமிழகத்தின் மூன்றாம்
நபருக்கு. அதனை தேசிய அரசியல் அறிந்த வைகோ போன்றவர்கள் முன்னெடுக்க லாம்.”
”கூடங்குளம் அணு மின் நிலையத்தை எதிர்த்து நடக்கும் மக்கள் போராட்டத் தைக் கவனிக்கிறீர்களா?”
”கூடங்குளம் மக்களின் போராட்டம்
மெய்சிலிர்க்கவைக்கிறது. இதில் இடதுசாரிகளின் நிலைப்பாடு ஆச்சர்யமாக
இருக்கிறது. உலகின் பல நாடுகள் எதிர்க்கும் அணு உலையை அடம்பிடித்து இந்தியா
அமைப்பது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயம். அணு உலைகுறித்த
அச்சத்தினால் மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய
அச்சத்தைக் களைய வேண்டிய மத்திய, மாநில அரசுகள், அரச பயங்கரவாதத்தை
ஏற்படுத்தப் பார்க்கின்றன. தனிப்பட்ட முறையில் அணு உலை மீது எனக்குத்
துளியும் நம்பிக்கை இல்லை. சூரிய சக்தியையும் காற்றாலையையும் முறையாகப்
பயன்படுத்தினாலே, போதிய மின்சாரம் கிடைக்கும்.”
”2009-ம்
ஆண்டு மே மாதம் இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள்
கொல்லப்பட்டபோது, இந்திய அரசும் வட இந்திய ஊடகங்களும் மௌனித்தது சரிதானா?”
” ‘இலங்கைப் போர் இந்த நூற்றாண்டின்
மாபெரும் சோகம் என்று இங்கிலாந்து சேனல்கள் சொல்கின்றன. ஆனால், பக்கத்து
நாடான இந்திய மீடியாக்கள் மௌனித்தது ஏன்?’ என ‘சேனல் 4’ என்னிடம் கேட்ட
கேள்விக்கு, இன்றுவரை என்னால் சரியான பதிலைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
‘நம்முடைய மௌனமும் மறுதலிப்பும்தான் லட்சக்கணக்கான அப்பாவி மக்களை,
கர்ப்பிணிப் பெண்களை, பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்றிருக்கிறது’ என்ற குற்ற
உணர்வு மனசாட்சிகொண்ட ஒவ்வொரு பத்திரிகை ஆசிரியனையும் ஆட்சியாளனையும் காலம்
முழுக்க உறுத்திக்கொண்டே இருக்கும். போரின்போது தமிழர்களிடையே எழுந்த
எழுச்சியை இந்தியா முழுக்கப் பரப்ப தமிழக அரசியல்வாதிகள் தவறிவிட்டதாகவே
நினைக்கிறேன். பாகிஸ்தான், சீனா, ரஷ்யா போன்ற பல நாடுகளின் உதவியோடு
ஒட்டுமொத்தத் தமிழினத்தையே கூண்டோடு அழித்தொழித்தது ராஜபக்ஷே அரசு. இதைத்
தட்டிக்கேட்க வேண்டிய இந்தியா, ‘இலங்கை எங்கள் நட்பு நாடு’ என மார்தட்டித்
திரிந்தது ஒரு வரலாற்றுப் பிழை. இது போதாது என இப்போது இலங்கை ராணுவ
வீரர்களுக்குப் பயிற்சியும் அளித்துவருகிறது. சீனாவையும் பாகிஸ்தானையும்
பேலன்ஸ் செய்ய இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடிக்கும்
இந்தியாவின் நிலைப்பாடு, மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும்.
இலங்கையின் குடிமக்களாகிய தமிழர்களுக்கு
அந்த நாட்டில் சுய மரியாதையுடன் வாழும் உரிமையும் சுதந்திரமும்
மறுக்கப்படுகிறது. அதைத் தமிழர்கள் கேட்கும்போது காலங்காலமாக
காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் விடுதலைப்
புலி கள் ஆயுதம் ஏந்திப் போராடி னார்கள். மண்ணுக்காகவும் மக்களுக்காவும்
உண்மையிலே பல்வேறு தியாகங்களைச் செய்த புலிகள் தோற்றுப்போனதில் தனிப்பட்ட
முறையில் எனக்கும் வருத்தம்தான். (குரல் கம்முகிறது) ஏனென்றால், அவர்கள்
நம் மக்கள்