மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 18 ஜூலை, 2012

தஞ்சையில் உருவாகும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்! புகைபடங்கள்

- முள்ளிவாய்க்கால் - ஊரின் பெயரல்ல.

- உலகத் தமிழர்களின் கொதிப்புணர்வின் குறியீடு முள்ளிவாய்க்கால்.

- நமது சகோதரத் தமிழர்களைப் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்து சிங்கள இனவெறியர்கள் நடத்திய வெறியாட்டத்தின் இரத்த சாட்சியம் - முள்ளிவாய்க்கால்.

- தமிழர் நெஞ்சங்களில் என்றென்றும் பதிந்திட்ட சொல் - முள்ளிவாய்க்கால்.

பழமையும் பெருமையும், பெருமிதமும் மிக்க தமிழர் வரலாற்றில் படிந்துவிட்ட இந்தத் துயரக் கறையைத் தமது உயிர்களைச் சிந்திக் கழுவ முன்வந்தனர் முத்துக்குமார் உட்பட 18 ஈக மறவர்கள்.

முள்ளிவாய்க்கால் மக்களையும், அவர்களுக்காகத் தீயில் கருகி தங்களின் இன்னுயிர்களை ஈகம் செய்த தீந்தமிழ் மறவர்களையும் என்றென்றும் மறவாமல் நினைவுத்தூண்கள் எழுப்புவதற்கான அடிக்கற்கள் நாட்டும் விழா கடந்த 2-6-10 அன்று தஞ்சையில் நடைபெற்றது.


 இராசராசசோழன் தஞ்சையில் மாபெரும் கற்கோயிலை எழுப்பினான். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அது கம்பீரமாகக் காட்சி தருகிறது. தமிழர்களின் சிற்பத் திறனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. அதே தஞ்சையில் முள்ளிவாய்க்காலில் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவாக மற்றொரு கற்கோயில் எழுப்பப்பட்டு வருகிறது.

இராசராசன் எழுப்பிய தஞ்சைக் கற்கோயிலுக்குப் பயன்படுத்திய அதே ரக கற்கள் கண்டறியப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெரும் பொருட் செலவில் தஞ்சைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

50 தொன்னிற்கு மேலான எடையும் 40 அடி நீளமும் 10 அடி உயரமும் 3 அடி கனமும் கொண்ட பெரும் கற்களில் நூற்றுக்கு மேற்பட்ட சிற்பிகள் இரவு பகலாக அற்புதமான சிற்பங்களைச் செதுக்கி வருகிறார்கள்.

முள்ளிவாய்க்காலில் படுகொலையாகி வீழ்ந்து கிடக்கும் மக்களின் அவலக் காட்சியும், முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுப் புலம்பும் மக்களின் துயரக் காட்சியும், முத்துக்குமார் உட்பட தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் உயிர்த் தியாகம் செய்த ஈகிகளின் சிலைகளும் செதுக்கப்பட்டு வருகின்றன.

ஓவிய மண்டபம் ஒன்றும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்ச்சிகள் ஓவியங்களாக வரையப்பட்டு இங்கு வைக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை இத்தகைய சிற்ப நினைவகம் அமைக்கப்பட்டதில்லை என்று சொல்லுமளவிற்கு இது உருவாக்கப்பட்டு வருகிறது. அழியாமல் நின்று ஆயிரமாயிரம் மக்களின் துயரத்தைத் தமிழர்களுக்குத் தலைமுறை தலைமுறையாக நினைவூட்டும் வகையில் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த மாபெரும் பணியில் உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு விரும்புகிறது. வேண்டுகிறது.கருணாநிதியின் இரட்டை வேடத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். - பழ.நெடுமாறன் -


இலங்கைப் பிரச்னையில் திமுக தலைவர் கருணாநிதி இரட்டை வேடம் போடுவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழீழம் உருவாவதை விரைவில் காண வேண்டும் என்று கருணாநிதி அறிவித்திருந்தார். இதற்காகத்தான் டெசோ மாநாடு நடத்தப்படுவதாகத் தெரிவித்திருந்தார். ஆனால் கருணாநிதி அறிவித்து 40 நாள்கள் ஆவதற்குள் அவர் பேச்சில் பொங்கி வந்த கோபம் மறைந்துவிட்டது. டெசோ மாநாட்டில் தனி ஈழம் கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்படாது என்று இப்போது கூறியுள்ளார்.
மத்திய அரசின் ஓர் அங்கமாக விளங்கும் திமுக செய்ய வேண்டியதைச் செய்து ஈழத் தமிழர்களின் துயரைத் துடைக்காமல் இப்போது முச்சந்தியில் மாநாடு நடத்தி துயரைத் துடைக்கப் போவதாகக் கூறுவது பித்தலாட்டம். கருணாநிதியின் இரட்டை வேடத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
5 முறை முதல்வராக இருந்த கருணாநிதி தமது பதவிக் காலத்தில் ஈழம் மலர வேண்டும் என்று உளப்பூர்வமாக ஒருபோதும் சிந்தித்தது இல்லை. இப்போதும் உலகத் தமிழர்களின் வெறுப்புப் பார்வை மட்டும்தான் கருணாநிதிக்கு எஞ்சியுள்ளது. மீண்டும் தெளிவற்ற அறிக்கைகள் மூலம் மிகச் சிறந்த குழப்பவாதி என்பதை கருணாநிதி நிரூபித்துள்ளார் என்று தமிழருவி மணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

செவ்வாய், 17 ஜூலை, 2012

தமிழகத்தினாலேயே இந்தியாவின் மௌனத்தை கலைக்க முடியும் : அனலை நிதிஸ் ச. குமாரன்


தமிழகத்தின் அனைத்து அமைப்புக்களும் தமது அட்டவணைகளுக்கு ஏற்றவாறே காய்களை நகர்த்துகிறார்கள். தமிழின முன்னேற்றத்திற்காக இவ் அமைப்புக்கள் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்லை. சில அரசியல் கட்சிகளின் வேண்டுகோளுக்கு இணங்க சினிமாத்துறையினர் உட்பட பல்வேறு பொது அமைப்புக்கள் போராட்டங்களில் இறங்குவார்கள்.

பின்னர் அனைத்தும் மறைக்கப்படும் நிகழ்வுகளே அதிகமாக இருக்கிறது. சுய காரணங்களுக்காக தமிழகத்தில் இயங்கும் அமைப்புக்கள் தமிழின அழிவுக்கு வழிவகுத்துக் கொடுத்தால் நிச்சயம் தமிழினத்தை யாரினாலும் காப்பாற்ற முடியாது என்பதனை இனியாவது தமிழகத் தமிழர்கள் உணர்வார்களா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த சில வருடங்களாக கலைஞரின் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்து வரும் தோல்விகளிலிருந்து மீள வேண்டுமாயின் மக்களை சென்றடையக் கூடிய போராட்டங்களை நடத்த வேண்டும் என்பதனை நன்றாகவே தெரிந்து வைத்துள்ளார் கலைஞர்.
ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வீராப்புப் பேசிய ஜெயலலிதா தற்போது ஆழ்ந்த மௌனம் காக்கிறார். முன் எப்போதும் இல்லாதவாறு ஈழத் தமிழர்கள் இப்போது பல்வேறுபட்ட அடக்குமுறைகளைச் சந்தித்து நிற்கிறார்கள். விடுதலைப்புலிகள் ஆயுதமுனையில் பலம்பெற்று இருந்த வேளையில் தமிழர்களைக் கண்டாலே பயந்து ஒதுங்கிய தமிழினப் பகைவர்கள் தற்போது தமிழர்களை வதைப்படுத்துகிறார்கள். தமிழர் காணிகளில் தங்கியிருந்தே தமிழினத்தை அழிக்கும் செயற்பாடுகளை செய்கிறது சிங்களம். சமீபத்தில் சிறிலங்கா சென்று திரும்பிய இந்தியக் குழுவினர் கூட ஈழத் தமிழர்கள் இராணுவ அடக்குமுறைக்குள்ளையே வாழ்கிறார்கள் என்பதனை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
தொலைநோக்கு சிந்தனை அவசியம்:
தமிழினம் அழியும்போது அவர்களைக் காப்பாற்ற எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது இந்திய அரசு. அதற்கான அவசியமும் இந்திய மத்திய அரசுக்கு இல்லை. அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் ஒரு காலத்தில் தமிழர்களே அதிகமாக வாழ்ந்துள்ளார்கள் என்பதற்கு தகுந்த சான்றுகள் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் படிப்படியாக தமிழர்களின் இருப்பை எப்படியேனும் குறைக்க வேண்டுமென்கிற வகையில் பல்வேறுபட்ட காரியங்களை மறைமுகமாக இந்திய அரசுகள் செய்தன.
திராவிடருக்கு பதிலாக ஆரியரை குடியேற்றுவதே இந்தியாவுக்கு சிறந்ததென நன்கே உணர்ந்து செயற்பட்டது இந்திய அரசு. இத்தீவுகள் தமிழ்நாட்டுக்கும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. தமிழர்கள் அதிகளவில் இத்தீவுகளில் வாழ்ந்தால் ஒரு காலத்தில் தமிழ் நாட்டுடன் பிரச்சினைகள் ஏதாவது வந்தால் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்திய கடற்படையினரின் செல்வாக்கு பாதிக்கும் என்கிற பயம் இந்திய அரசுக்கு இருக்கிறது. இதன் காரணத்தினாலேயே தனக்கு விசுவாசமான வங்காளிகளை அதிகளவில் குடியேற்றி உள்ளது இந்தியா.
மேற்கு பாகிஸ்தானுடன் சண்டையிட்டு கிழக்கு பாகிஸ்தானை 1970-களில் பிரித்து பங்களாதேஷ் என்கிற நாட்டை அமைத்துக் கொடுத்தது இந்திய அரசு. பங்களாதேஷ் எப்போதும் இந்தியாவுக்கு ஒத்தாசையாக இருக்கும் என்பது இந்தியாவின் கருத்து. வங்காளிகள் தமது இனத்தை சேர்ந்தவர்கள் ஆகவே அவர்களுடன் தோழமை கொள்வது இந்தியாவின் நலனுக்கே நல்லது என்கிற கருத்தையே இந்திய அரசு வைத்துள்ளது. ஒரு நேரம் சாப்பாடு இருந்தால் போதும், சினிமாப் படங்கள் தினமும் வெளிவந்தால் போதும், தூங்க ஒரு குடிசை இருந்தால் போதும், தானும் தன்னைச் சார்ந்தவர்களும் வாழ்ந்தால் மட்டும் போதும் என்கிற நிலைப்பாட்டையே வைத்துள்ளார்கள் பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள்.
இனம் அழியும்போது மௌனம் வேண்டாம்:
தமிழகத்தின் குரல் சற்று ஒலிக்கத் தொடங்கியவுடன் சிறிலங்கா அரசுடன் பேசுவதும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சில செயற்பாடுகளை செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளது இந்திய அரசு. தமிழக மக்கள் சற்று கொதித்தெழுந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலையை ஜெனிவாவில் எடுக்க வேண்டுமென்றவுடன், இந்திய அரசு தமிழருக்கு ஆதரவான நிலைப்பாட்டை அன்று எடுத்தது. இந்நிலைப்பாட்டினால் சிறிலங்கா அரசின் பகையை சம்பாதிக்க வேண்டி வந்தது.
சிறிலங்காவை எப்படியேனும் அமைதிப்படுத்த வேண்டுமென்கிற காரணத்தினால் பல காரியங்களை அன்றிலிருந்து இன்றுவரை இந்திய அரசு செய்து வருகிறது. இந்திய வெளிவிவகார அமைச்சர், முன்னாள் குடியரசுத் தலைவர் உட்பட பல முன்னணி இராஜதந்திரிகளை சிறிலங்காவுக்கு அனுப்பி மகிந்தாவை சமாதானப்படுத்த முயன்றது இந்தியா. இந்தியாவினால் தெரிவிக்கப்பட்ட காரணங்களை ஏற்றுக்கொள்ளாத சிறிலங்கா அரசு சீனாவுடன் அதி நெருங்கிய உறவுகளைப் பேண ஆரம்பித்தது. இவைகளை சரிசெய்யவே சிறிலங்காவுக்கு ஆதரவான இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் போன்றவர்களை பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுத்துகிறது இந்திய அரசு.
இனமொன்று சிறிலங்காவில் அழியும் போது தொப்புள்கொடி உறவான தமிழகம் வெறும் வாய்மூடி மௌனியாக இருப்பது தாய் தமிழகத்துக்கும் நல்லதில்லை. உலகம் பூராகவும் பரந்துவிரிந்து வாழும் தமிழர்களுக்கும் நல்லதில்லை. குறைந்தது ஒரு மாநில அதிகார உரிமையையாவது வைத்துள்ள தமிழகம் இந்திய அரசை வற்புறுத்தி தன் இனம் சார்ந்த நலன்களுக்கு ஏற்றவாறான வேலைகளை செய்வதே சிறந்தது. அதைவிடுத்து மௌனம் காத்தால் நிச்சயம் தமிழரை காப்பாற்ற யாராலும் முடியாமல் போய்விடும்.
அதிகாரத்தில் இல்லாத போது ஏதாவது ஒன்றைக் கூறுவது பின்னர் அதிகாரத்துக்கு வந்தவுடன் மௌனம் காப்பது எந்தவிதத்திலும் நல்லது அல்ல. கலைஞர் அதிகாரத்தில் இருந்தபோது ஈழத் தமிழினம் அழிவதைக்கண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். ஆட்சியில் இல்லாத போது தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்கிற பாணியில் இப்போது பேசிவருகிறார். அதைப்போலவே ஜெயலலிதாவும் ஆட்சியில் இல்லாதபோது ஈழத் தமிழருக்கு இன்னல் நேர்ந்தால் தரணியே தாங்காது என்கிற பாணியில் பேசினார். தற்போது ஆட்சியில் இருக்கும்போது சொல்லொணாத் துயரை அனுபவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு எவ்வகையிலும் உதவியாக இல்லை.
தமிழக சிறைகளில் ஏராளமான ஈழத் தமிழ் இளைஞர் யுவதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளர்கள். பல்லாயிரம் ஈழத் தமிழ் மக்கள் அகதி முகாம்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களை விடுதலை செய்ய முடியாத நிலையில் இருக்கும் ஜெயலலிதா போன்றவர்களினால் எவ்வாறு தமிழீழத்தைப் பெற்றுத்தர உதவியாக இருப்பார்கள் என்கிற கேள்வியே மேலோங்கியுள்ளது.
தமிழகம் கிளந்தெழுந்து தமது தொப்புள்கொடி உறவுகளுக்கு ஆதரவான நிலைப்பாடை எப்போது ஒட்டுமொத்தமாக எடுக்க முன்வருகிறார்களோ அதுவரை தமிழனுக்கு விடிவே இல்லை. தமிழகம் கிளந்தெழுந்து போராடினால் அடுத்த கணமே இந்திய அரசினால் தமிழீழத்தைப் பெற்றுத்தர முடியும். கள நிலைமைகள் தமிழ் நாட்டு மக்களின் எழுச்சிக்கு ஆதரவாக இருக்கும் போது அவர்கள் மௌனம் காப்பது தமிழினம் செய்த சாபக்கேடே.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

புலிகள் மீது தடையை நீட்டித்து தமிழீழ விடுதலையை முடக்கிட முடியாது: நாம் தமிழர் கட்சி


இலங்கை சிங்கள பெளத்த இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு எல்லா வகையிலும் உதவி, தமிழனைக் கொன்று குவித்த குருதிக் கரைபடிந்த இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, தமிழீழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் தர்மேந்திர சர்மா கையெழுத்திட்டு விடுத்துள்ள அந்த அறிவிக்கையில், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்துவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தால், இந்திய குடிமக்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகவும், எனவே புலிகள் இயக்கத்தை சடடத்திற்குப் புறம்பான இயக்கமாக அறிவிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த வாதம் எந்த சான்றும் அற்ற, திட்டமிட்ட திசை திருப்பல் ஆகும். இலங்கையில் தமிழருக்கு எதிரான போரை நடத்த ராஜபக்சவுக்கு முழுமையாக உதவி, ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழிக்க இந்திய மத்திய காங்கிரஸ் அரசு உதவியது என்பதை உலகே அறியும். ஆனால் அந்த அளவிற்கு உதவியும், ராஜபக்ச அரசு இந்தியாவோடு நிற்காமல், முழுமையாக சீனாவின் நட்பு நாடாக மாறிவிட்டது.
அம்மன்தோட்டா துறைமுகத்தில் இருந்து, இலங்கையில் பல திட்டங்களை செயல்படுத்துவது மூலம் அந்நாட்டிற்குள் சீனா வலிமையாக கால் பதித்து விட்டது. தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவில் சீனா தனது கடைப்படை தளத்தை அமைக்க முயற்சித்து வருவதை தமிழ்நாட்டின் மீனவர்களுக்குக் கூட தெரிந்து இரகசியமாகும். இலங்கை பிரச்சனையில் தமிழினத்திற்கு எதிராக இந்திய மத்திய காங்கிரஸ் அரசு கடைபிடித்த அயலுறவுக் கொள்கை, அதன் எதிரி நாடான சீனா இலங்கையில் வலிமையாக கால் பதிக்க உதவிவிட்டது.
இப்போது சீனத்தின் அச்சுறுத்தல் வளையத்திற்குள் இந்தியாவின் தென்பகுதி சிக்கியுள்ளது என்பதே இராணுவ ரீதியான உண்மையாகும். சீனாவிற்கு ஆதரவாக ராஜபக்ச அரசு செயல்பட்டுவருவதன் எதிரொலியே அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றாக நின்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை தீர்மானத்திற்கு வாக்களித்தன.
ஆயினும் சீன நட்பை உதரித்தள்ள ராஜபக்ச இணங்கவில்லை. இலங்கையின் வட பகுதியில் உள்ள பலாலி விமான தளத்தை விரிவுபடுத்தும் இந்தியாவின் திட்டத்தை ராஜபக்ச அரசு நிராகரித்துவிட்டது அதற்கு அத்தாட்சியாகும். எனவே விடுதலைப் புலிகளால் இந்தியாவின் குடிமக்களுக்கு அச்சுறுத்தல் என்று உள்துறை அமைச்சகம் கூறுவது சீனத்தால் ஏற்பட்டுள்ள அச்சறுத்தலை மறைக்கும் மோசடியாகும்.
விடுதலைப் புலிகளின் தோல்விக்கு இந்திய அரசின் தலைவர்களும், அதிகாரிகளும்தான் காரணம் என்று புலம் பெயர்ந்த தமிழர்கள் இணையத் தளங்களில் பரப்புரை செய்து வருகின்றனர் என்று குற்றம் சாற்றுகிறது உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை. அதில் என்ன பிழை உள்ளது என்று தெரியவில்லை. தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க, அவர்களோடு நின்ற ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழிக்க இந்திய மத்திய காங்கிரஸ் அரசு உதவியதா இல்லையா? எம் இனத்தை அழித்தொழித்த அரசுக்கு எதிராக பரப்புரை செய்வதில் என்ன தவறு?
போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகும் ஈழ விடுதலை எனும் கருத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கைவிடவில்லை என்றும், ஈழ விடுதலைக்காக இன்றளவும் அது இரகசியமாக செயல்ப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ள உள்துறை அமைச்சக அறிக்கை, தமிழீழம் எனும் தமிழர்களுக்காண தனி நாடு என்ற கோரிக்கை இந்தியாவின் ஒற்றுமைக்கு இறையாண்மைக்கும் அச்சறுத்தல் என்றும் அது இந்தியாவை பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளது.
தமிழீழ விடுதலை என்பது அரை நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் அரசியல் விடுதலைப் போராட்டம். தங்களுடைய இனத்தை திட்டமிட்டு அழித்துவரும் சிங்கள பெளத்த இனவாத அரசின் பிடியில் இருந்து விடுபட்டு தனிநாடு காண்பது மட்டுமே, ஈழத் தமிழினத்தை அழிவின் பிடியில் இருந்து காத்துக்கொள்வதற்கான ஒரே வழி என்பதில் உறுதியுடன் இருந்து எம் சொந்தங்கள் நடத்திவரும் போராட்டமாகும். அதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பிறந்தது.
எனவே, அந்த இலக்கை புலிகள் இயக்கம் மட்டுமல்ல, தமிழினம் ஒருபோதும் விட்டுத்தராது. அதனால்தான் தமிழர்களின் பெரும் தாயாகமான தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைக்கு பெரும் ஆதரவு நிலவுகிறது. அதன் எதிரொலியே தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் � திமுக கூட்டணிக்கு விழுந்த மரண அடி என்பதை இந்திய மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.
தங்களது இயக்கம் இந்தியாவின் ஒற்றுமைக்கோ, அதன் இறையாண்மைக்கோ அல்லது அதன் பூகோள நலன்களுக்கு ஒருபோது எதிரானதல்ல என்பதை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன், சுதுமலை பொதுக்கூட்டத்தில் இருந்து தான் ஆற்றிய பல மாவீரர் தின உரைகளில் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே இலங்கையில் தமிழர்கென்று தனி நாடு என்பது அங்கு வாழும் இஸ்லாமிய தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆனதே என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அழுத்தம் திருத்தமாக பல முறை கூறியுள்ளனர்.
அதனை நன்றாக அறிந்திருந்தும், அவர்களின் இலக்கு இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கு எதிரானது என்று ஒவ்வொரு முறையும் இந்திய மத்திய அரசு கூறுவது, அப்படிக் கூறினால்தான் அந்த இயக்கத்தை தடை செய்ய முடியும் என்பதற்காகவும், தமிழீழ விடுதலைக்கு தமிழ்நாட்டு மக்கள் உதவிடாமல் தடுத்திட முடியும் என்பதற்காகவுமே என்பதை விவரமறிந்த அனைவரும் புரிந்தே உள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள் நலனில் அக்கறை உள்ளதாகக் கூறி தமிழினத்தை ஏமாற்றிவருகிறது மத்திய காங்கிரஸ் அரசு. போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், அவர்களுக்கு ஒரு நேர்மையாக அரசியல் தீர்வை பெற்றுத் தர யோக்கியதை அற்ற இந்திய அரசு, இலங்கை அரசுடன் இணைந்து தான் நடத்திய தமிழினப் படுகொலையை மறைக்க, ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய ஒரு தியாக இயக்கத்தை சட்டத்திற்கு எதிரான இயக்கம் என்று கூறி தடை செய்வவது, அது தனது குற்ற முகத்தை மூடிக்கொள்ளும் முயற்சியே தவிர, அதனால் தமிழீழ விடுதலையை தடுத்து நிறுத்திட முடியாது.
இந்தியாவின் பூகோள நலனும், பாதுகாப்பும் உறுதியாக வேண்டுமெனில் இலங்கையில் தமிழர்கென்று ஒரு நாடு பிறந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதையும், தெற்காசியப் பகுதியில் மாபெரும் இராஜதந்திர தோல்வியை சந்தித்துள்ள இந்திய மத்திய அரசு, தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் காலக்கட்டாயம் ஏற்படும் என்பதையும் நாம் தமிழர் கட்சி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக்கொள்கிறது.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்.

திங்கள், 16 ஜூலை, 2012

மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5-ம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும்! - நெடுமாறன்


விடுதலைப்புலிகள் பிரபாகரனின் வீரம் செழிந்த விடுதலைப் போராட்ட வரலாற்றை தற்கால இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்- பிரபாகரன் தமிழர் எழுச்சி வடிவம்- நூல் எழுதப்பட்டது என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
சிதம்பரம் கீழவீதி சரவணா திருமண மண்டபத்தில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சி வடிவம் என்ற நூலின் அறிமுக விழா இன்று நடைபெற்றது. விழாவில் மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் பங்கேற்று பேசியது:
உலகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் விடுதலைப் போராட்டத்தை ஒப்பிட முடியாது. ஏனென்றால் பிரபாகரன் போராட்டத்திற்கு எந்த நாடுகளின் உதவி கிடைக்கவில்லை. 20 நாடுகள் அணி திரண்டு ஒழிக்க முயற்சித்தது. உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் நிதியை திரட்டி ஆயுதங்களை பெற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் போரை நடத்தியவர் பிரபாகரன். இன்று போரில் பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். மீண்டும் பிரபாகரன் தலைமையில் 5-ம் கட்ட விடுதலைப் போர் நிச்சயம் தொடரும்.
பிரபாகரன் வீரம் செறிந்த வரலாறு கொண்ட இந்நூல் தமிழக இளைஞர்களுக்கு அளித்த ஆயுதமாகும். ஒரு கருவியாகும். இந்நூலை படிக்கும் இளைஞர்கள் பிரபாகரனின் அடுத்த கட்ட போராட்டத்திற்கு துணை நிற்க வேண்டும். தோள் கொடுக்க வேண்டும். எப்படியாவது பதவி பெற்று, அதனை வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்களிடையே இன்றைய அரசியல் கட்சிகள் உருவாக்கியுள்ளது. இந்த மாயையை மாற்றுவதற்கு இப்படி பட்ட நூல் எழுதப்பட்டது. தமிழர்கள் நிலை அழிவின் விளிம்பில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். நாளை மலேசிய தமிழர்களுக்கு இந்நிலை ஏற்படலாம். ஏன் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கே இந்நிலை ஏற்படலாம். எனவே நாம் இந்த காலக்கட்டத்தில் விழிப்புணர்வுடன் ஒன்று சேர்ந்து அனைத்துவித தியாகத்திற்கு தயாராகி போராட துணிய வேண்டும். தமிழர்களின் முதலாவது, இறுதியான எதிரி இந்தியா. இலங்கை தமிழர் படுகொலையில் ராஜபக்சே மட்டும் குற்றவாளி அல்ல. மன்மோகன்சிங்கும் குற்றவாளி, அதற்கு துணையாக நின்றி கருணாநிதியும் குற்றவாளி என பழ.நெடுமாறன் தெரிவித்தார்.

திங்கள், 2 ஜூலை, 2012

தமிழர்கள் ஒன்றுபட்டால் ஈழம் மலருவதை எவராலும் தடுக்க முடியாது. - தமிழருவி மணியன்

"தேசியத் தலைவர் பிரபாகரன் போன்ற தலைவரை தமிழர்களின் வரலாற்றில் கண்டதே இல்லை. தமிழர்கள் ஒற்றுமையாகச் செயற்பட்டால் ஈழம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நான் எனது வாழ் நாளில் நிச்சயமாக ஈழம் மலர்வதைக் காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது" என சிட்னி தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது தமிழருவி மணியன் தெரிவித்தார்.
பெரும்பாலான தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தமிழீழம் உருவாவதற்கு தமிழர்கள் என்ன செய்யவேண்டும் என்ற கருப்பொருளில் உரையாற்றினார். அவரது உரையின் சாராம்சம் வருமாறு:
"இனிப்பாகப் பேசினால் அதில் உண்மை இருக்காது. உண்மையைப் பேசினால் அது இனிப்பாக இருக்காது. உண்மையென்னவென்றால் ஈழத் தமிழர்களாக இருந்தாலும் சரி, தமிழகத் தமிழர்களாக இருந்தாலும் சரி தமிழர்கள் நாம் ஒற்றுமையாக இல்லை. தமிழர்களுக்கு ஓர் நாடு அமைய நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும்.
ஈழத்தில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரையில் ஈழத்தில் ராஜபக்சவின் கொடுங்கோல் அரசு அவர்கள் மீது இன்று முழுமையான ஒரு வன்முறையைப் பிரயோகித்துக் கொண்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரும் அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
ஈழத்தில் வாழும் தமிழர்களால் இப்போராட்டத்தை முன்னெடுக்க முடியுமா எனக் கேட்டால் இன்றைய சூழலில் இல்லை என்பதே உண்மையான யதார்த்தம். தமிழர் பகுதிகளில் ஏழு தமிழர்களுக்கு ஒரு இராணுவம் என்ற ரீதியில் நிறுத்தி வைத்துள்ளது சிறிலங்கா அரசு. அங்குள்ள மக்களுக்கு பேச்சுச் சுதந்திரம் கூட மறுக்கப்பட்டு அடக்கு முறைக்குள் வாழ்கிறார்கள்.
தமிழக அரசும் தமிழகத் தலைவர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஒரு விடுதலையைப் பெற்றுத்தருவார்களா என்று கேட்டால் வெளிப்படையான உண்மை அதற்கான சாத்தியப்பாடு இல்லை என்பதே. தமிழகத் தலைவர்களைப் பொறுத்தவரையில் தங்கள் கட்சி சார்ந்த நலன்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களுக்காக வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் இதய சுத்தியுடன் செயற்பட்டாலும் அவர்களின் பின்னால் மக்கள் பலம் பெரிதாக இல்லை.
இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரையில் அவர்களின் கொள்கை வகுப்பென்பது இந்திய நலன்சார்ந்திருக்குமே தவிர அது வேறு எதையும் கருத்திற்கொள்ளாது. அந்த வகையில் இந்துமா கடலில் சீனாவின் ஆதிக்கத்தை தடுத்து தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் கோட்பாட்டுடன் சிங்கள அரசின் பக்கம் நிற்குமே தவிர அது ஈழத் தமிழ் நலன்சார்ந்து இருக்காது.
புலம்பெயர்ந்த தமிழர்களின் கைகளிலேயே முள்ளிவாய்க்காலின் பி்ன்னரான போராட்டம் முழுமையாகத் தங்கியுள்ளது. இதை புலம்பெயர்வாழ் ஒவ்வொரு தமிழர்களும் உணர்ந்து அவரவர் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் இருக்கின்ற அரசாங்கங்களின் கவனத்திற்கு சிறிலங்கா அரசு நடத்தி முடித்தது ஒரு இனப்படுகொலையே என்பதை கொண்டு சென்று சர்வதேச விசாரணைக்கு வலியுறுத்துவதோடு சர்வதேச அரசுகளின் ஆதரவை தமிழர்கள் பக்கம் திருப்பவேண்டும்.
தமிழர்களின் விடுதலைப்போரில் சனல் 4 ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. அதையும் ஆதாரமாகக்கொண்டு சர்வதேச அரசுகளின் ஆதரவையும் கவனத்தையும் எங்கள் பக்கம் திருப்பவேண்டும்.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் நாங்கள் தொடர்ச்சியான கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கின்றோம். தமிழகச் சஞ்சிகைகளில் ஈழத் தமிழர்களின் நிலைகுறித்து நான் தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருக்கின்றேன். 2014 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அரசு ஆட்சி இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் வலுவாக இருப்பதனாலும் இன்று உலகத்தின் கவனம் ஈழத் தமிழர்களின் பிரச்சினையில் கரிசனை கொண்டிருப்பதாலும் இந்தியாவில் அமைய இருக்கும் புதிய அரசாங்கத்தை ஈழத் தமிழர்களின் விடுதலைக்குத் தடைபோடாத வகையில் அவர்களது ஆதரவைப் பெற்று எமது விடுதலையைப் பெற்றெடுக்கக் கூடிய சூழ்நிலைகள் நிச்சமாக உருவாகும். இவற்றைப் புலம்பெயர்ந்த தமிழர்கள் உணர்ந்து ஒற்றுமையாகச் செயற்பட்டால் ஈழம் அமைவதை யாராலும் தடுக்க முடியாது. நான் எனது வாழ் நாளில் நிச்சயமாக ஈழத்தை காண்பேன் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.

ஞாயிறு, 1 ஜூலை, 2012

பிரணாப் முகர்ஜி ஜனாதிபதியானால் ராஜபக்க்ஷவுக்குத் தான் மகிழ்ச்சி! - நெடுமாறன்


பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரானால் ராஜபக்க்ஷவுக்குத் தான் மகிழ்ச்சி என தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் இன்று கன்னியாகுமரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பிரணாப் முகர்ஜி இந்திய குடியரசுத் தலைவரானால் அதில் அதிகமாக மகிழ்ச்சியடைவது இலங்கை அதிபர் ராஜபட்ஷே தான். கடந்த 2009-ம் ஆண்டில் பிரணாப் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போது முள்ளிவாய்க்கால் பகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அதை தடுத்து நிறுத்த எதுவும் செய்யாதவர் பிரணாப் முகர்ஜி. மேலும் தற்போது தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக ராஜபட்ஷேவுடன் சேர்ந்து போர் நிறுத்தம் செய்வதற்கு ஏற்பாடு செய்ததாக சொல்லி மக்களை திசை திருப்புகிறார்.
ஆகவே தமிழ்நாட்டைச் சார்ந்த எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் பிரணாப் முகர்ஜிக்கு வாக்களிப்பதற்கு முன்னால் நன்கு யோசிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் டெசோ இயக்கத்தை நானும், கி.வீரமணியும், மு.கருணாநிதியும் சேர்ந்து தான் தொடங்கினோம். ஆனால் திடீரென இனி டெசோ இயக்கம் செயல்படாது என அறிவித்து விட்டு கருணாநிதி ஒதுங்கிக் கொண்டார். அவ்வாறு அவர் செய்ததற்கு முதலில் மக்களிடம் மன்னிப்பு கேட்பதோடு ஏன் அவ்வாறு செய்தார் என்ற விளக்கமும் சொல்ல வேண்டும். அதை செய்யாமல் மீண்டும் டெசோ செயல்படும் என்ற அவரின் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயலாகும்.
ஈழப்போர் உச்சகட்டமாக நடைபெற்ற போது அந்த மக்களை காப்பாற்ற எதுவும் செய்யாத கருணாநிதி மீது உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தற்போது அதை மாற்றுவதற்காக இப்போது டெசோ மாநாடு நடத்த முற்பட்டிருக்கிறார் அவர்.
தமிழர்களை சிங்கள கடற்படையினர் தொடர்ந்து 30 ஆண்டுகளாக வேட்டையாடி வருகின்றனர். இதனை மத்திய அரசோ, இந்திய கடற்படையோ வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருக்கிறது. கேரள மாநிலத்தைப் பொருத்தவரை அந்த மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அங்குள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு மத்திய அரசுக்கு எதிராக போராடுகிறது. ஆனால் இத்தகைய ஒற்றுமை தமிழக கட்சிகளிடம் இல்லை என்பது வேதனையளிப்பதாகும்.
தற்போது சிறை நிரப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. முன் கூட்டியே யாரும் கைது செய்யக்கூடாது என சொல்லியிருக்கிறார். இன்றைக்கு கைது செய்யப்படுவதற்கும், சிறை செல்வதற்கும் திமுக தொண்டர்கள் யாரும் தயாரில்லை என்பதை மறைப்பதற்காகவே இவ்வாறு அவர் சொல்லி வருகிறார். என்றார் அவர்.