ரவுடிகள் செய்தால் கொலை; ராணுவம் செய்தால் போர்!
‘கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த இனம்’ என்று மேடைகளில் மட்டுமே பெருமை பேசும் ஒவ்வொருவரையும், அதை கைதட்டி ரசிக்கிற ஒவ்வொருவரையும் தனது துர்ப்பாக்கிய மரணத்தால் ஓங்கி அறைந்தாள் கிருஷாந்தி. பாவப்பட்ட ஈழத்தின் சாவகச்சேரி பள்ளி மாணவி. 18 வயது சிறுமி. சபிக்கப்பட்ட வாழ்வின் சாட்சி. போரில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களில் குண்டுகளைவிட கொடூரமான வக்கிரங்களுக்குப் பலியான சின்னப் பெண். ராணுவச் சீருடை அணிந்த கனவான்கள் சீரழித்த அத்துமீறலின் அவலப்பதிவு. ஈழத்து தமிழ்ப்பெண்களின் துயரங்களைக் கண்டும் காணாமலிருக்கும் நம்மையும், தமிழர்களை மனிதர்களாகவேனும் கருதத் தவறிய உலகத்தையும் ஒருசேர நிற்க வைத்து அறைந்தவள். மரத்துப்போன மனித குலத்திற்கு தங்கள் இன அவலங்களை தன் மரணத்தின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தாள் கிருஷாந்தி.
வரலாற்றின் அவமானமான காலகட்டத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் ‘போரை’ப் போலவும், குழந்தைகளைக் கொன்று குவிக்கும் போர், ‘விளையாட்டாகவும்’ நடத்தப்படுகிற காலகட்டம் வரலாற்றின் அவமானமா, இல்லையா? மனம் மரத்துப்போன மனிதர்களாக உயிர்க் கொலைகளையும், உணர்வுக் கொலைகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிற காலகட்டம் அவலமானதா, இல்லையா?
தன் மரணத்தின் மூலம் இந்தக் கேள்விகளை உலகத்து மனிதர்களை உலுக்கிக்கேட்டாள் கிருஷாந்தி. ஆதிக்கம் நிலைநாட்டுகிற சண்டையில், அதிகாரத் திமிரில், யார் கேட்டுவிடப்போகிறார்கள் என்கிற ஆணவத்தில் சிங்கள ராணுவ ‘வீரர்கள்’ கசக்கி எறிந்த தமிழ்ப் பெண். பள்ளியிலிருந்து வீட்டுக்குத் திரும்பிய தருணத்தில், நாட்டைப் ‘பாதுகாக்கும்’ பணியிலிருந்த ராணுவத்திடம் சிக்கிய சின்னப் பெண். போர் நடக்கும் பூமியில், எந்த நாட்டை, எந்த மொழியை, எந்த இனத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் நடக்கிற அக்கிரமம் கிருஷாந்திக்கும் நிகழ்ந்தது. கைகளில் ஆயுதமும், கண்களில் காமமும் இருக்கிறவர்கள் என்ன செய்வார்களோ அதையே செய்தார்கள் சிங்கள ராணுவ வீரர்கள்.
போர் நடக்கும் நிலத்தில் பெண்ணைப் பெற்றவர்களின் நிலையை எந்த வார்த்தைகளில் எழுதுவது? கடந்த முப்பது ஆண்டுகளில் ஈழ மண்ணில் பெண்ணைப் பெற்றெடுத்த ஒவ்வொரு தாய்க்கும் இரட்டைப் பிரசவம்தான். ஒவ்வொரு பெண் குழந்தையோடு, குலை நடுங்கும் பயமும் சேர்ந்தே பிறக்கிறது. குழந்தை வளரும்போது பயமும் சேர்ந்தே வளர்கிறது. வெளியில் பெண் பிள்ளையை அனுப்பினால் கிருஷாந்தியின் துயரம் நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில் படிப்பை நிறுத்திய பெண்கள் எவ்வளவு பேர்? வீடே பாதுகாப்பில்லை என்றான நிலத்தில், வீட்டை விட்டு வெளியேறினால் என்னாகுமோ என்கிற பயத்தில் வீடே உலகமாகி முடமான பெண்கள் எவ்வளவு பேர்? மனிதர்களாக மதிக்காத ஒரு நாட்டில் ஏன் பிறந்தோம் என்று பயத்தில் தினம் தினம் மருகும் பெண்கள் எவ்வளவு பேர்? யாருக்குத் தெரியும் கணக்கு? யாருக்குத் தெரியும் இழப்பு? யார் உணர்வார்கள் அவர்களின் பயம்?
வீடு திரும்பாத பெண்ணின் கதியறிய விசாரணை முகாமுக்கு ஓடியிருக்கிறாள் கிருஷாந்தியின் தாய். உயிர்ப் பிச்சையின் கதறலையே காது கொடுத்துக் கேட்காதவர்கள், ஒப்பாரியின் கதறலையா கண்டுகொள்வார்கள்? எல்லாத் திசைகளிலும் தன் பெண்ணையும், அவள் மானத்தையும், அவளின் உயிரையும் தேடித்தேடி அலைந்தாள் அந்தத் தாய். தாய்மைக்குச் சோர்வு தெரியாதே! கயமை புரியாதே! போரின் கொடூரத்திற்குப் பயப்படாதே! தனக்கும் ஆபத்து வந்துவிடும் என யோசிக்காமல் நிலம் அதிர அதிர ஒவ்வொரு திசையிலும் ஓடினாள். மகளைத் தேடி அலைந்தவளே தேடப்படும் நிலைக்கு ஆளானாள். ராணுவத்திடம் நவீன ஆயுதம் இருந்தது. ராணுவத்திடம் கொலை செய்யும் அதிகாரம் இருந்தது. ராணுவத்திடம் யார் கேட்டுவிடமுடியும் என்கிற ஆணவம் இருந்தது. மகளைத் தேடியலைந்த தாயிடம் மிச்சமாய் உயிர் மட்டும்தானே இருந்தது. தாய்மைக்கு இருந்த எதிர்ப்பு சக்தி, தனி மனுஷியான அவளிடம் இல்லை. அவளுக்கும் தயாராய் புதைகுழி இருந்தது. மகளைப் புதைத்தவர்கள் தாயையும் புதைத்தார்கள். துணைக்குப்போன இன்னொரு தமிழனையும் சேர்த்துப் புதைத்தார்கள்.
தமிழ் மண்ணைத் தோண்டி ஆழப்புதைகுழியில் போடப்பட்ட கிருஷாந்தி, ராணுவ அசிங்கத்தின் உண்மைகளைத் தோண்டி எடுத்துப்போட்டுத் தலைகுனியச்செய்வாள் என்று அவர்களுக்கு அப்போது தெரியவில்லை. சீருடை இருந்த தைரியத்தில் அரங்கேற்றிய அயோக்கியத்தனத்தை ஒரு தமிழ்ப் பெண் அம்மணமாக்குவாள் என்று அவர்கள் உணரவில்லை. தப்பித்தவறி எப்போதாவது படுகிற நீதியின் வெளிச்சத்தில் கிருஷாந்திக்கு நேர்ந்த மனிதகுலத்திற்கு எதிரான அத்துமீறல் அகோரமாய் பல் இளித்தது. ராணுவ வீரர்களின் கற்பழிப்பு, கொலைக் குற்றம் நீதியின் வாசலுக்கு வந்தபோது, வாய் திறந்தான் கார்ப்பரல் சோமரத்னே என்கிற ராணுவ வீரன்.
‘‘ஏதோ ஒரு தமிழ்ப் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்த குற்றத்திற்காக நீதிமன்றம் என்னை தண்டிக்குமானால், ஒவ்வொரு சிங்கள சிப்பாயையும் நீங்கள் தண்டிக்க நேரிடும். சர்வ சாதாரணமாக சிங்கள ராணுவம் செய்கிற காரியத்தையே நானும் செய்தேன். ராணுவம் செய்த கொலையில், கூட்டம் கூட்டமாகச் செத்தவர்களை செம்மணி என்கிற இடத்தில், புதைகுழி தோண்டி மொத்தமாகப் புதைத்திருக்கிறோம். வேண்டுமென்றால் தோண்டிப் பாருங்கள்’’ என்று ராணுவ வீரன் மரணத்தின் விளிம்பில் வாக்குமூலத்தை வாந்தியாக்கியபோது, உலக அரங்கில், தமிழர் இனப்படுகொலை மீது கவனம் திரும்பியது. செம்மணி புதை
குழியைத் தோண்டிப் பார்த்தபோது நாறிக்கிடந்தது ராணுவத்தின் அதிகாரம். ஒரே குழியில் 300க்கும் அதிகமான எலும்புக்கூடுகளாக வெளியே வந்தன ராணுவக் கொலைகளின் துயரம். மனித உரிமை அமைப்புகளின் ஆதரவுக் குரலில் உலகம் விழித்துக்கொண்டது. அப்போதும் தமிழர்கள் தூங்கிப்போனார்கள்.
இத்தனை ஆண்டுகள் ஆனபிறகும் இன்னும் தமிழினத்தின் தூக்கம் கலையவில்லை. ஈழத்தமிழர்களின் துக்கம் தீரவில்லை. வெளிச்சத்திற்கு வந்த கிருஷாந்தியின் கோர மரணமும் அவர்களை எழுப்பவில்லை எனில், நீதியின் வெளிச்சம் படாத மரணங்கள் எப்படி எழுப்பும்? இஸ்ரேலின் அத்துமீறலைக் கண்டிப்போம் என்று கர்ஜிக்கிறவர்கள், இலங்கையின் அத்துமீறலின்போது கண் மூடிக்கொள்ளும் காரணம் மட்டும் புரியவில்லை. யாழ்ப்பாணத்தை ராணுவம் வீழ்த்தியது, பூநகரியை ராணுவம் வீழ்த்தியது, கிளிநொச்சியை ராணுவம் வீழ்த்தியது என்ற செய்திகளின் இரைச்சலில், வெற்றிக் கொண்டாட்டங்களின் வெளிச்சத்தில் வீழ்த்தப்பட்ட அப்பாவி மக்களின் வாழ்வு ஏன் நம் கவனத்திற்கு வருவதே இல்லை?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக