மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 19 டிசம்பர், 2010

கஸ்பரைச் சுற்றிய 'கனிமொழி' கேள்விகள்!

கஸ்பரைச் சுற்றிய 'கனிமொழி' கேள்விகள்! PDF அச்சிடுக மின்-அஞ்சல்

ஞாயிற்றுக்கிழமை, 19 டிசம்பர் 2010 12:41
 ''ஆ.ராசாவை வேட்டை நாய்கள்போல ஊடகங்கள் வேட்டையாடுகின்றன. விபசாரிக்குக்கூட நியாயம் வேண்டும் என்றார் ஏசு பிரான். ஆனால், ஆ.ராசாவின் தரப்பு நியாயத்தைக் கேட்காமலேயே அவரை சிலுவையில் அறைகிறார்கள்!''   - ஊடகப் பேரவை என்ற பெயரில் கடந்த நவம்பர் 24-ம் தேதி நடத்தப்பட்ட கருத்தரங்கில் இப்படி முழங்கினார் ஜெகத் கஸ்பர். ஆனால், சி.பி.ஐ. திடீரெனத் தன்னையே வேட்டையாடும் என்று ஜெகத் எதிர்பார்க்கவில்லை!
மயிலாப்பூர் லஸ் சர்ச் ரோட்டில் இருக்கும் சாந்தோம் கலை தொடர்பு மையத்தின் கட்டடத்தில்தான் ஜெகத் கஸ்பரின், 'தமிழ் மையம்’ அலுவலகம் இயங்குகிறது. அதிரடியாக சி.பி.ஐ. அதிகாரிகள் உள்ளே புகுந்த கொஞ்ச நேரத்திலேயே... மொத்த மீடியாவும் குவிந்தது. அலுவலகத்தில் பணியாற்றிய மூன்று பெண்கள் உட்பட யாரையும் வெளியே விடவில்லை.  உள்ளே சி.பி.ஐ. நடத்திய விசாரணைகளை எல்லாம் அங்கே இருந்த ஷோகேஸ் கண்ணாடியின் வழியாக வெளியிலிருந்து 'லைவ்’வாகப் பார்க்க முடிந்தது.
சொற்களைக் கோத்து மேடைகளில் வார்த்தைகளில் விளையாடும் ஆற்றல்கொண்ட ஜெகத் கஸ்பரை கேள்விகளால் சி.பி.ஐ-யினர் துளைத்தபோது, அவருடைய பேச்சில் சுரத்தே இல்லை. ஏதோ ஒரு டாக்குமென்ட்டைக் கேட்டு சி.பி.ஐ. அவரைக் குடைந்தபோது, 'அது வெளியே வேறு ஒருவரிடம் இருக்கிறது’ என்றார் கஸ்பர். 'அவர் பெயரைச் சொல்லுங்கள்’ என்றதும், தயங்கியபடியே நிற்க... சி.பி.ஐ. அதிகாரிகள் ஒருவர் பெயரைச் சொல்லி 'இவரிடம்தானே இருக்கிறது’ என்றபோது... வெளியே இருந்தபடி காதைத் தீட்டிக் கேட்டுக்கொண்டு இருந்த மீடியா ஆட்களே ஆச்சர்யப்பட்டுப் போனார்கள்.
உடனே, அந்த நபருக்கு போன் போடச் சொன்னார்கள் அதிகாரிகள். மறு பேச்சு சொல்லாமல் போன்போட்டார் கஸ்பர். '2008-ம் ஆண்டில் இருந்து எந்தெந்த வெளிநாடுகளுக்கு எல்லாம் போனீர்கள்?’ என்று  கேட்டனர் அதிகாரிகள். சில நாடுகளின் பெயர்களைச் சொன்னார். 'அங்கே யார் யாரை சந்தித்தீர்கள்? எதற்காகப் போனீர்கள்?’ என்று 'ஷூட்' பண்ணிக்கொண்டே இருந்தார்கள்!
'இவரைத் தெரியுமா? அவரை சந்தித்தது உண்டா? இங்கே உங்களுக்கு கணக்கு இருக்கிறதா?’ என்று வரிசையாக அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாமே, முன்கூட்டித் தயாராகத் திரட்டிவைத்துவிட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான்!
''முறைகேடு நடந்து இத்தனை காலம் கழித்து ரெய்டு நடத்தினால், என்ன கிடைக்கும்? இது கண் துடைப்பு நாடகம்!'' என்று வரும் விமர்சனங்கள் குறித்து பிறகு நம்மிடம் பேசிய சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், ''நாங்கள் ஆவணங்களைத் தேடிப் போனோம் என்று யார் சொன்னது? திரட்டிவைத்த ஆவணங்களை சரிபார்க்கவும், அதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலை வாங்கவும்தான் இந்த சர்ப்ரைஸ் ரெய்டு!'' என்று விளக்கம் அளித்தார்!
அப்படித்தான் ஜெகத் கஸ்பரிடம் பல செல் நம்பர்களையும் வாசித்தார்களாம் அதிகாரிகள். 'இந்த போன் நம்பர்கள் யாருடையவை? இதுபோக, இவை உங்களுடைய மற்ற போன் நம்பர்கள். இந்த நம்பர்களில் இருந்துதான் நீங்கள் பலரைத் தொடர்பு கொண்டு இருக்கிறீர்கள். அதற்கான ஆவணங்கள் இவைதான்...’ என்று, தங்கள் வசம் உள்ள டெலிபோன் டேப்களுக்கான ஆதாரங்களை வலுப்படுத்திக்கொண்டதாகவும் கூறப்படுகிறது!
தமிழ் மையம் தொடர்பான ஆவணங்கள், வங்கிக் கணக்குகள், முதலீடுகள் தொடர்பான ஆவணங்கள் மீதுதான் ஏராளமாக விசாரித்தது சி.பி.ஐ. தமிழ் மையத்தின் முக்கியப் பொறுப்பில் கனிமொழி இருப்பதால், அவருடைய பங்கு பற்றியும் கேள்விகளைக் கேட்டனர். இந்த விசாரணை நடந்தபோது தமிழ் மையத்துக்கு தினமும் வந்து கூரியர்களை வாங்கிச் செல்லும் ஒருவர் வந்தார். என்ன நடக்கிறது என்பதை அறியாமலேயே, ''சார் கூரியர் கொடுங்க... கேட்டைத் திறங்க..'' என்று கேட்டார்.
''நாளைக்கு வா...'' என்று உள்ளே இருந்து குரல் வர, தொடர்ந்து கூரியர் பையன் நேரம் காலம் புரியாமல் நச்சரித்தார். உள்ளே இருந்து வந்த ஒரு நபர் அவரிடம் ஏதோ சொல்லி, பணம் கொடுத்து அனுப்பிவைத்தார். அலுவலகத்தில் இருந்து யார் வந்தாலும், உள்ளே யார் போனாலும் ஒருவரையும்விடாமல் படம் எடுத்துத் தள்ளியது மீடியா வட்டாரம். ஒரு சமயத்தில் ரிலாக்ஸாக வெளியே வந்த சி.பி.ஐ. அதிகாரியை மொத்த மீடியாவும் ஃப்ளாஷ் அடிக்க.. அவர் வெளியே சில 100 மீட்டர்கள் லஸ் சர்ச் ரோட்டில் நடந்தே போக... மீடியாவும் துரத்தியது. 'என்னவோ ஏதோ..!’ என்று பொதுமக்களும் ஆச்சர்யப்பட்டனர். ஆனால், அந்த அதிகாரி எதற்கும் அசராமல் சாலையில் போய்க்கொண்டே இருந்தார். அவரை ஒரு 'தம்’ அடிக்கக்கூட விடவில்லை மீடியா!
முக்கியமான மூன்று கவர்களை சீல் வைத்தது சி.பி.ஐ.! அதோடு, கஸ்பரிடம் இருந்த லேப்டாப்பையும், ஒரு சின்ன அட்டைப் பெட்டியில் பெரிய ஃபைல்களையும், டாக்குமென்ட்களையும் அள்ளிப் போட்டுக்கொண்டார்கள். மறக்காமல் லேப்டாப் பாஸ்வேர்டையும் கேட்டு வாங்கினர். உள்ளே நிறைய பேப்பர் டேப்புகள் கிழிக்கப்படும் ஓசை வெளியே கேட்டது. எல்லாம் சீல் வைப்பதற்காக கிழிபட்டவைதான்.  இரவு 7 மணிக்கு சோதனைகள் முடித்து அதிகாரிகள் கிளம்பிப் போகும்போது, ''எங்க வேலை முடிந்துவிட்டது. நீங்க வீட்டுக்குக் கிளம்பலாம்...'' என்று அவர்கள் சொல்ல... ''வெளியே மீடியா ஆட்கள் நிற்கிறார்கள். அப்புறம் கிளம்புறேன்...'' என்று சொன்னார் கஸ்பர். அதிகாரிகள் கிளம்பிய பிறகும் வெகுநேரம் வரை அவர் வெளியே வரவில்லை. அலுவலகத்தின் விளக்குகள் அணைக்கப்பட்டே இருந்தன.
மீடியா வெளிச்சத்தை ரொம்பவே ரசிக்கும் கஸ்பருக்கு, அன்று அப்படி இல்லை! ஒரு மணி நேரம் கழித்து மாடிப் படி வழியாக விறுவிறு என இறங்கினார். ஓட்டமும் நடையுமாக வேகமாக வந்தவரை மீடியா வளைத்துப் பேட்டி கேட்டது. ''எனக்கான அரசியல் தொடர்புகளின் காரணமாகவே என் மீது இந்த ரெய்டு...'' என்று சில வார்த்தைகளை மட்டும் உதிர்த்துவிட்டு காரில் வேகமாக கிளம்பிப் போனார்.
அந்த அலுவலக வாசலில் ஒரு பேனர் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த மாரத்தான் போட்டிக்காக வைக்கப்பட்ட அந்த பேனரில்... run make a difference என்று எழுதப்பட்டிருக்க, அந்த பேனரில் கனிமொழி சிரித்துக்கொண்டு இருந்தார்!
பத்திரிகையாளர் காமராஜ் வீடு, பெசன்ட் நகரில் இருக்கும் ஈஸ்வரி அப்பார்ட்மென்ட்டில் முதல் மாடியில் இருக்கிறது. காலை 6.45 மணிக்கே அவர் வீட்டின் கதவைத் தட்டினர் சி.பி.ஐ. அதிகாரிகள். வட இந்திய சேனல்களின் ஓ.பி. வேன்கள் தெருவை அடைத்துக்கொண்டு நின்றன. மதியம் சுமார் 2 மணி அளவில் சோதனைகள் முடிந்து வெளியே வந்தார்கள் அதிகாரிகள். உங்களுக்கும் ஆ.ராசாவுக்கும் எத்தனை வருடங்களாக நட்பு? இதுவரை எத்தனை முறை வெளிநாடு சென்றுள்ளீர்கள்? என்பது மாதிரியான கேள்விகள் காமராஜிடம் கேட்டனராம் அதிகாரிகள். அதன்பிறகு அவரை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள வங்கிக்கு அழைத்துச் சென்று அவரது கணக்கை சோதித்தனர்.  அவரது வீட்டில் எடுக்கப்பட்ட டாக்குமென்ட்களை  புத்தம் புது காடா துணியில் சேர்த்துக் கட்டி மூட்டையாகக் கொண்டுபோனார்கள்.அவரது பாஸ்போட்டை எடுத்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவரது வீட்டில் இருந்த சோபாவை எல்லாம் புரட்டிப் போட்டு சோதனை செய்தார்களாம் அதிகாரிகள். டாக்குமென்ட்களை எடுத்துப் போவதற்காக காடா துணி, அதை வெட்டுவதற்கு கத்தி என்று தயாராகவே வந்திருந்தார்களாம் அதிகாரிகள். ''ஆ.ராசாவுக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களில்  காமராஜும் ஒருவர். இரண்டு பேரும் பெரம்பலூர் மாவட்டத்துக்காரர்கள். அதனால் காமராஜ் வீட்டில் ரெய்டு நடந்திருக்கலாம்!'' என்கிறார்கள் அவரது நண்பர்கள்!

சி.பி.ஐ. லிஸ்ட் பெருசு!

ஸ்பெக்ட்ரம் டெண்டர், ஆ.ராசாவின் நட்பு என சி.பி.ஐ. வளையத்தில் சிக்கி இருக்கும் சென்னை மனிதர்கள் மற்றும் இடங்களிலும் புலனாய்வுக் கண்கள் பதிக்கப்பட்டுள்ளன. கோடம்பாக்கம் அகமது ஷகீர், சேத்துப்பட்டு முகமது ஹசன், அண்ணா நகர் வளவன், ராசாவின் முன்னாள் உதவியாளர் அகிலன் ராமநாதன், தேனாம்பேட்டை செல்வராஜ், ஏ.ஜி.எம். இன்வெஸ்
மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் (கோடம்பாக்கம்), வெல்கம் கம்யூனிகேஷன்ஸ், சாலி ரோடு சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் (செனடாப் ரோடு), ஜீனஸ் வென்சர்ஸ் (மயிலாப்பூர்), சாலி தெர்மா பிளாஸ்டிக்ஸ் (ஈக்காட்டுத்தாங்கல்), சாலி தெர்மல் (ஸ்ரீபெரும்புதூர்), ஜே.ஜி.எக்ஸ்போர்ட்ஸ் (கீழ்ப்பாக்கம், சௌகார் பேட்டை)... இப்படி ஒரு மைல் நீளப் பட்டியல் சி.பி.ஐ. கையில் இருக்கிறதாம்!
'கிரீன் ஹவுஸ் நிறுவனம் நிதி கொடுத்துள்ளது!’
சி.பி.ஐ. விசாரணை நடந்ததற்கு மறுநாள் 'தமிழ்மையம்’ அலுவலகத்தில் ஜெகத் கஸ்பர், ஊடகங்களுக்குவிளக்கம் அளித்தார்.
''2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்ததாகக் கூறப்படும் ஊழல் பணம் தமிழ் மையத்துக்கு வந்ததா என்பதை அறியவே, சி.பி.ஐ. தேடுதல் என்று எங்களுக்கு சொல்லப்பட்டது. 2ஜி அலைக்கற்றை சர்ச்சைகளுக்கும் தமிழ் மையத்துக்கும் அதன் நிர்வாக அறங்காவலரான எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
தமிழ் மையமானது அரசியல் ஆளுமைகளோடு இணைந்து செயல்படும் ஒரே காரணத்துக்காக ஐயப்பாடுகள் சுமத்துவது அநீதியானது.
தி.மு.க. ஆட்சிக்கு வரும் முன்பே தமிழ் மையத்துடன் கனிமொழி இணைந்து செயல்பட்டு வருகிறார். நல்ல காரியங்களுக்காக அவருடன் சேர்ந்து செயல்படுவதை மதிக்கிறோம். அவர் தனிப்பட்ட வகையில் தமிழ் மையத்துக்கு எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை. அதேபோல, மக்களவை உறுப்பினர் ஆ.ராசாவும் தனியாக எந்த நிதியும் அளிக்கவில்லை. கிரீன் ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது!'' என்று சொன்னார் கஸ்பர்.

நன்றி ஜுனியர் விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக