மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 29 டிசம்பர், 2010

விடைபெறுகிறது ஊழல்களின் ஆண்டு

விடைபெறுகிறது ஊழல்களின் ஆண்டு!
புத்தாண்டு அன்று ‘தினத்தந்தி’ வெளியிடும் முதல்பக்க கருத்துப்படத்தை கடந்துவராத தமிழர்கள் இருக்கமுடியாது. முடிந்துபோன ஆண்டை அடையாளப்படுத்தும்விதமாக, நீளமாக தாடி வளர்த்த கிழவர் ஒருவர் விடைபெறுவார். இளமைத் தோற்றத்தோடு புத்தாண்டு வரும். ‘புத்தாண்டு பிறந்தது’ என்று அந்தக் கருத்துப்படம் அறிவிக்கும்.

2010ம் ஆண்டு என்ற கிழவரை நினைத்துப் பார்க்கையில் சராசரி இந்தியன் மனதில் ஆவேசம் பொங்கக்கூடும். இந்த ஆண்டில் ஊழல்களைத் தவிர வேறு எதுவும் இந்தியாவில் நிகழவில்லையோ எனும் அளவுக்கு ஏகப்பட்ட ஊழல் செய்திகள். அதைவிட வேதனையான விஷயம்... இந்த ஊழல்கள் நியாயப்படுத்தப்பட்ட விதம்!

காமன்வெல்த் ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தபோது சுரேஷ் கல்மாடி, சத்தியவந்தன் போல ஆவேசமாகப் பேசினார். 10 ரூபாய் மதிப்புள்ள பொருளை விலைகொடுத்து வாங்காமல், 25 ரூபாய் வாடகைக்கு எடுக்கும் கொடூரமான ஊழல் இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகும். ஊழல் நிகழ்ந்து பல மாதங்கள் கழித்து, எல்லா ரெக்கார்டுகளையும் எங்காவது பாதுகாப்பாக ஒளித்துவைக்கும் அளவுக்கு அவருக்கு கால அவகாசம் கொடுத்துவிட்டு, சி.பி.ஐ. இப்போது அவர் வீட்டில் ரெய்டு நடத்துவதும், எங்கும் நடக்காத கேலிக்கூத்து!
  
கர்நாடகாவில் எடியூரப்பா மீது நில ஒதுக்கீடு ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. தன் மகன்களுக்கும் உறவினர்களுக்கும் அரசு நிலத்தை குறைந்த விலைக்கு ஒதுக்கீடு செய்ததாக புகார் எழுந்தபோது எடியூரப்பா கூனிக் குறுகி நிற்கவில்லை. ‘வேறு யாரும் செய்யாத தவறையா நான் செய்துவிட்டேன்?’ என்று கேட்டார். காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என எல்லாக் கட்சிகளின் முதல்வர்களும் இப்படிச் செய்தது வரிசையாக வெளியில் வந்தது. எடியூரப்பாவை பதவிநீக்கம் செய்ய பி.ஜே.பி. மேலிடம் முயற்சி செய்தபோது, தனது ஜாதி செல்வாக்கைப் பயன்படுத்தி கட்சியையே உடைக்கப்போவதாக அவர் மிரட்டினார். வேறு வழியின்றி மேலிடம் அவரிடம் மண்டியிட்டு, அவரைப் பதவியில் தொடர அனுமதித்தது நடந்தது. ரெட்டி சகோதரர்களின் சுரங்க ஊழலை ஒழிக்கப் போவதாகக் கிளம்பிய எடியூரப்பா என்ற ‘மிஸ்டர் க்ளீன்’ மனிதர் இப்படி ஊழல் கறையோடு அம்பலமானது இந்த ஆண்டில்தான்!

இதேபோன்ற ஒரு நில ஒதுக்கீட்டு ஊழலில் தமிழக அரசும் சிக்கியது. ஸ்பெக்ட்ரம் பூதாகரத்தில் இந்தச் சின்ன ஊழல் அமுங்கிவிட்டது. அமைச்சர்களின் உறவினர்கள், ‘நக்கீரன்’ காமராஜ் போன்ற பத்திரிகையாளர்கள், ஜாஃபர் சேட் போன்ற உயர் போலீஸ் அதிகாரிகள், முதல்வரின் பாதுகாப்பு அதிகாரி முதல் வீட்டு வேலை செய்பவர்கள் வரை பலருக்கும் வீட்டுவசதி வாரிய மனைகள், மிகக்குறைந்த விலைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த விவகாரம் வெடித்துக் கிளம்பியபோது முதல்வர் சொன்னார்... ‘தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் என்பது ரியல் எஸ்டேட் நிறுவனம் அல்ல; வெறும் லாபத்தை மட்டுமே பார்ப்பதற்கு!’

மும்பையில் ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் கார்கில் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தருவதற்காக கட்டப்பட்ட வீடுகளை ராணுவ உயர் அதிகாரிகளும் அமைச்சர்களும் தங்கள் உறவினர்களுக்கு ஒதுக்கிக்கொண்ட விவகாரம் வெடித்தது. குற்றவாளிக் கூண்டில் நின்ற முதல்வர் அசோக் சவான், அம்பலப்பட்டு நின்றபோதும் கூசாமல் சொன்னார்... ‘நான் குற்றமற்றவன் என்பதை நிரூபித்து வெளியில் வருவேன்!’ காங்கிரஸ் ரொம்பவே கூச்சப்பட்டு அவரை பதவியிலிருந்து நீக்கியது.

இதையடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழல் மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தது. கார்ப்பொரேட் தரகர் நீரா ராடியாவின் டேப் பேச்சுகள் அம்பலமானதும் பல தலைவர்கள் சந்திக்கு வந்தார்கள். நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது. மத்திய அமைச்சர் ஆ.ராசாவை நோக்கி எல்லா விரல்களும் நீண்டதும் அவர் ராஜினாமா செய்தார். ‘நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும்’ என எதிர்க்கட்சிகள் கேட்க, ‘பொதுக் கணக்குக்குழு விசாரணைக்குத் தயார்’ என பிரதமர் பிடிவாதம் பிடித்தார். ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி விவகாரத்தால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுசாக நடக்கவில்லை. காங்கிரஸ் பேரவைக் கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக சோனியா கூச்சமற்றுப் பேசியது தலைப்புச் செய்தியானது. ‘நாடாளுமன்ற ஜனநாயகத்தை எதிர்க்கட்சிகள் கேலிக்கூத்தாக்குவதாக’ பிரதமரால் எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் பேசமுடிகிறது.

இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் ஏழைகளுக்குக் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் வழங்கும் விவகாரத்தில் எல்லாக் கட்சிகளின் ஆட்சியாளர்களுமாகச் சேர்ந்து சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்ததாக ஒரு விவகாரம் எழுந்து, ஸ்பெக்ட்ரம் அலையில் அது காணாமலே போய்விட்டது.


மொத்தமாக இந்த ஆண்டு வெளியான ஊழல்களில் புழங்கிய பணம் மொத்தமும் முறையான கணக்குக்கு வந்து, அவை முறையாகவும் செலவிடப்பட்டால், இந்தியாவை விட சொர்க்க பூமி உலகத்தில் வேறெதுவும் இருக்க முடியாது என்பது நிச்சயம். கடந்த 87ம் ஆண்டு போபர்ஸ் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது, 64 கோடி ரூபாய் ஊழல் என்பது இந்தியாவையே பதற வைத்தது. நாடாளுமன்றம் 45 நாட்கள் ஸ்தம்பித்தபிறகு கூட்டுக்குழு விசாரணைக்கு ஒப்புக்கொண்டார் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி. அதோடு ஒப்பிடும்போது இப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் 23 நாட்கள்தான் நாடாளுமன்றம் ஸ்தம்பித்தது. ‘இன்னும் பட்ஜெட் கூட்டத்தொடரில் மிச்சம் இருக்கிறது’ என்கின்றன எதிர்க்கட்சிகள்.

போபர்ஸ் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தபோது இந்தியாவே கொந்தளித்தது. ராஜீவ் காந்தி கிட்டத்தட்ட ஒரு திருடர் போல சித்தரிக்கப்பட்டார். எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக கொந்தளித்தபோது நாடே அவர்கள் பின்னால் நின்றது. ஊழல் கறை படிந்த ராஜீவ் காந்தியின் காங்கிரஸை வி.பி.சிங் என்ற அப்பழுக்கற்ற தலைவர் தேர்தலில் தோற்கடிக்க முடிந்தது. இப்போதும் எதிர்க்கட்சிகள் இருக்கின்றன; ஏராளமான தலைவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஊழலை எதிர்த்துப் பேசும்போது நமக்கெல்லாம் எந்த உணர்வுமே தோன்றுவதில்லை. காரணம், இவர்களில் யாரையும் அப்பழுக்கற்றவராக நம்மால் பார்க்க முடிவதில்லை. ஒரு தலைமுறை காலத்துக்குள்ளாகவே, அரசியல் என்பது சேவைக்கான துறையாக இல்லாமல் பணம் பண்ணுவதற்கான தொழிலாக மாறிப்போன அவலம் நிகழ்ந்திருக்கிறது. இப்போதைய அரசியலில் இரண்டுவிதமான தலைவர்கள் மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது. ஊழல் செய்பவர்கள் ஒரு ரகம்; அதிகாரப் பதவிகள் கிடைக்காததால் ஊழல் செய்யமுடியாது போனவர்கள் இன்னொரு ரகம். இதனால்தான் யாராவது அடுத்தவரை நோக்கி விரலைச் சுட்டி ஊழல் குற்றச்சாட்டு கிளப்பினால், மீதி நான்கு விரல்கள் அவரையே சுட்டுவதைப் பார்க்க மட்டுமே தோன்றுகிறது.

64 கோடி ரூபாயே பெரிதாகத் தெரிந்த இந்தியாவில், 23 ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் வளர்ச்சி கண்டிருக்கிறது. வளர்ச்சி என்பதே காலமாற்றங்களின் நியதி என்பதால், புத்தாண்டில் எந்த அளவுக்கு ஊழல் வளர்ச்சி பெறுமோ என்கிற பயம் இயற்கையாக எழுகிறது.

ஏழை & பணக்காரன் என்பதைத் தாண்டி இன்றைய அரசியலும், அதில் நிலவும் ஊழல்களும் வேறுவிதமான வர்க்கப் பிரிவினையை தவிர்க்க முடியாமல் இந்திய சமூகத்தில் நுழைத்திருக்கிறது. அது, எல்லா சட்டங்களையும் விதிகளையும் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப வளைக்கும் அதிகார வர்க்கம்; சட்டத்தின் சிக்கலான விதிகளில் நசுங்கி வாழ்க்கையைத் தொலைக்கும் எளிய வர்க்கம்.

வீட்டு வசதி வாரியம் தனக்கு ஒதுக்கிய வீட்டை இடித்து மாற்றிக் கட்டிய அரக்கோணம் எம்.எல்.ஏ. பூவை மூர்த்தியை அந்த வாரியம் எதுவும் செய்யவில்லை; திருட்டு நடந்துவிடுமோ என்ற பயத்தில் ஓட்டைக் கதவுக்கு எக்ஸ்ட்ரா பாதுகாப்பு செய்தவருக்கு ‘வீட்டை காலி செய்யுமாறு’ நோட்டீஸ் வருகிறது. 50 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரியை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கையும் களவுமாகப் பிடிக்கிறார்கள். பத்திரிகையில் போட்டோ போட்டு உறவுகள், நட்பு வட்டாரத்தில் அந்தக் குடும்பத்தை கூனிக் குறுகச் செய்கிறார்கள். வேலை போகிறது. மரியாதை போகிறது. பூஜ்ஜியங்களை எண்ணிப் பார்த்தாலே மயக்கம் வருகிற அளவுக்கு ஊழலில் திளைக்கும் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்யக்கூட யோசிக்கிறார்கள்; துளியும் குற்ற உணர்வு இல்லாமல் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள்; விசாரணை என்ற ஆயுதம்கூட அவர்கள் முன்னால் மண்டியிடுகிறது. அடுத்த தேர்தலில் நின்று அவர்களால் ஜெயிக்கவும் முடிவது இன்னும் வேதனை! பஸ்ஸில் கூட்ட நெரிசலில் செயின் திருடும் ஆசாமி கையும் களவுமாக மாட்டினால், அவன் திருடிய நகைகளை போலீஸ் ஸ்டேஷன் டேபிளில் வரிசையாகப் பரப்பி, அத்தனை அதிகாரிகளும் அவன்னோடு நின்று பெருமையாக போஸ் கொடுக்கிறார்கள். ஊழல் செய்த எந்த அரசியல் தலைவருக்காவது இப்படி நேர்ந்திருக்கிறதா?

ஊழலை விட ஆபத்தானது, அதைப் பற்றிய எந்த சொரணையும் யாருக்கும் இல்லாமல் போவது! தப்பானவர்களே ஊழலைப் பற்றிப் பேசுவதும், அதை ஒரு சமூகக் கொடுமையாகப் பார்க்காமல் சாதாரண செய்தியாகவே இன்றைய ஊடகங்கள் சித்தரிப்பதும்தான் ஆபத்தான விஷயங்கள். டெண்டுல்கர் ஐம்பதாவது டெஸ்ட் செஞ்சுரி அடித்ததையும், உ.பி.யி. நிகழ்ந்த 2 லட்சம் கோடி ரூபாய் ரேஷன் ஊழலையும் ஒரேமாதிரி பார்ப்பதற்கு நாம் மீடியாக்களால் பழக்கப்படுத்தப்பட்டு விட்டோம்.

இந்த மனநிலையை துடைத்து அழித்துவிட்டு புத்தாண்டை எதிர்கொள்வோம். இந்தப் புதிய ஆண்டாவது ஊழல்களற்ற ஆண்டாக இந்தியாவுக்கு இருக்க வேண்டுவோம்.   
unarchitamilan manikandan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக