இலவசங்கள் என்னும் இழிவும்-கொள்ளையும்!
- பழ. நெடுமாறன்தமிழ்நாட்டில் வறுமைக்கோட் டிற்கு கீழ் உள்ள மக்களின் சதவிகிதம் 40 ஆகும். கல்வியறிவில்லாதவர்களின் சதவிகிதம் 43 ஆகும். இந்தியாவில் மது விற்பனையில் 40 சதவிகிதம் தமிழகத்தில் மட்டும் விற்பனையாகிறது.
வேலையில்லாத் திண்டாட்டத் திலும் அறியாமையிலும் இந்தியா உலகத் தில் முதன்மை வகிக்கிறது. தனிநபர் வருமானத்தில் இந்தியாவைவிட சிறிய நாடுகள் பலமடங்கு அதிகமான வரு மானம் பெறுகின்றன. சப்பானில் 23,800 டாலர், சிங்கப்பூரில் 10,450 டாலர், தைவானில் 8,500 டாலர், மலேசியாவில் 2,160 டாலர் ஆனால் இந்தியாவில் வெறும் 340 டாலர் மட்டுமே. இயற்கை வளத்திலும் மனித எண்ணிக்கையிலும் இந்தியாவைவிட மிகச்சிறிய இந்த நாடுகள் எங்ஙனம் பொருளாதாரத்தில் நம்மைவிட வலிமை வாய்ந்த நாடுகளாக மாறின என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
மக்களின் வறுமையையும் அறியாமையையும் போக்கும் வகையில் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றுகிற பொறுப்பு அரசைச் சார்ந்தது. சனநாயக நாட்டில் அனைவருக்கும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதும் சுய சார்புடன் வாழ்வதற்கு வேண்டிய வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதும் அரசின் முக்கியக் கடமைக ளாகும். கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டிய பெருங்கடமை அரசைச் சார்ந்ததாகும். தனிநபர்களின் வருமானத் தைப் பெருக்குவதற்கான வழிவகை களை அரசு செய்தால் அவரவர்களின் தேவைக்கும் விருப்பத்திற்கும் ஏற்ப பொருட்களை வாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அரசோ இலவசம் என்ற பெய ரில் மக்களைச் சோம்பேறிகளாகவும் பிச் சைக்காரர்களாகவும் மாற்றிக்கொண்டி ருக்கிறது.
இலவசச் சேலை, வேட்டி, இலவசச் சீருடை, இலவசப் பாடப்புத்தகம், இலவச சைக்கிள், எரிவாயு அடுப்பு, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, பெண்களுக்கு திருமண உதவித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவச மருத்துவ வசதி, இலவச வீட்டுமனைத் திட்டம், இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், குடிசைகளைக் கான்கிரீட் வீடு களாக மாற்றும் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என இலவசங்களை வாரி வாரி வழங்குவதில் தமிழக அரசு முனைந்திருக்கிறது. இத்தகைய இலவசங் களால் மக்களுக்குக் கிடைப்பது என்ன? ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதி களுக்கும் இலவசத்தின் பின்னணியில் கிடைக்கும் ஆதாயம் என்ன? - என் பதை ஆராய்வோமானால் திடுக்கிடும் உண்மைகளை நாம் உணர்வோம்.
கல்வி
காமராசர் ஆட்சிக் காலத்தில் 12ஆம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. அடுத்த கட்டமாக கல்லூரிக் கல்வி வரை இதை நீடிக்க வேண்டும் எனத் திட்டமிடப்பட்டது.
ஆனால் இப்போது குற்றப் பின்னணியுள்ள அரசியல்வாதிகளின் சட்டத்திற்குட்பட்ட நூதன கொள்ளைத் தொழிலாக கல்வி மாற்றப்பட்டுவிட்டது. நல்ல குடிமக்களை உருவாக்கும் கல்வி நிலையங்கள் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டன. அரசு நடத்தும் பள்ளிகளில் சுமார் 90 ஆயிரம் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால் பெரும் பாதிப்புக்குள்ளாகி யிருப்பது கிராமப்புற பள்ளிகளே ஆகும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் இன்னமும் நிரப்பப்படா மல் உள்ளன. அரசு நடத்தும் 69 கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி களில் 42 கல்லூரிகளில் முதல்வர்கள் இன்னமும் நியமிக்கப்படவில்லை.
பிறமாநிலங்களில் மெட்ரிக் குலேசன் பள்ளிகள் என்பதே கிடையாது. 1967ஆம் ஆண்டுக்கு முன்பு ஆங்கிலோ-இந்திய குழந்தைகளுக்காக 3 மெட்ரிகுலேசன் பள்ளிகள் மட்டுமே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும். பிறகு 1978ஆம் ஆண்டு வரை இப்பள்ளிகளின் எண்ணிக்கை 34 ஆக மட்டுமே உயர்ந்தன. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் 12 ஆயிரத்திற்கு மேற் பட்ட மெட்ரிகுலேசன் பள்ளிகள் புற்றீசல் போலப் பெருகியுள்ளன.
400க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள் ளன. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மாண வர்கள் இவற்றில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி படிக்கிறார்கள். ஆனால் இந்தக் கல்லூரிகளில் போதுமான கட்ட மைப்புகளோ அல்லது ஆசிரியர்களோ இல்லை.
புற்றீசல் போல தனியார் பள்ளி களும், பொறியியல் மற்றும் கல்லூரி களும் பெருகக் காரணம் என்ன? குறிப் பிட்ட கையூட்டு கிடைத்தால் யாருக்கு வேண்டுமானாலும் இதற்கான அனுமதி அளிக்கப்படுகிறது என்பது ஊரறிந்த இரகசியமாகும். இதன் விளைவாக மத்திய அரசினால் அங்கீகாரம் நீக்கப் பட்ட 44 பல்கலைக் கழகங்களில் 17 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்பது வெட்ககரமான உண்மையாகும்.
அரசுப் பள்ளிகள், கல்லூரிகளில் மட்டுமல்ல, தனியார் பள்ளிகள், கல்லூரி கள் ஆகியவற்றிலும் போதுமான ஆசிரி யர்கள் நியமிக்கப்படாமலும் போதுமான கட்டமைப்புகள் இல்லாமலும், மாணவர் களின் கல்வி சீரழிந்துகொண்டிருக்கிறது. இந்த முக்கியப் பிரச்சினை குறித்து அரசுக்குக் கொஞ்சமும் கவலையில்லை.
விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார்
1972ஆம் ஆண்டில் மின்கட்ட ணத்தில் யூனிட்டுக்கு அரை பைசா குறைக்கும்படி போராடிய விவசாயிகளின் மீது கடும் அடக்குமுறையை கருணாநிதி அரசு ஏவிவிட்டது. 21 விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். அதற்குப் பிறகு கருணாநிதி மீண்டும் பதவிக்கு 1990ஆம் ஆண்டில் வந்தார். வந்தவுடன் விவசாயிகளின் கோபத்தைத் தணிப்பதற் காக அவர்களே கேட்காத சலுகையை அளித்தார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை நடை முறைப்படுத்தினார். 5 ஏக்கருக்கு உட் பட்ட சிறு விவசாயிகளுக்கு மட்டுமல்ல பெரும் விவசாயிகளுக்கும் இந்தச் சலுகை அளிக்கப்பட்டது. இலவச மின் திட்டம் வந்தபிறகு புதிய பம்புசெட்டு களுக்கு மின்இணைப்பு கொடுப்பதையே அரசு நிறுத்திவிட்டது. இதன் விளை வாக விவசாயிகள் பெரும் துன்பத்திற்கு ஆளானார்கள். விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் வழங்குவது தான் உண்மையில் அவர்களுக்கு உதவுவதாகும். ஆனால் ஒரு நாளில் சில மணி நேரங்கள் கூட அவர்களுக்கு மின்சாரம் வழங்கப்படுவதில்லை. இலவச மின்சாரம் என்பதற்கு அர்த்தம் இல்லாமலே போயிற்று. இந்த அழகில் சிறு, குறு விவசாயிகளுக்கு 14 இலட்சத்து 67ஆயிரம் மின்மோட்டார்களை வழங்கப் போவதாகவும் இந்த ஆண்டில் 2 இலட்சம் மின் மோட்டார்கள் வழங்கப் படும் எனவும் தி.மு.க. அரசு அறிவித் துள்ளது.
இலவச மின்மோட்டார்கள் அளித்து என்ன பயன்? அவ்வளவுக்கும் மின்இணைப்பு கொடுக்கும் வகையில் மின்சார உற்பத்தி இல்லை. மின்சாரம் அளிக்காமல் மின் மோட்டார்களை கொடுப்பது ஏமாற்றுவேலையாகும்.
மின்மோட்டார்களை வாங்குவதற் காக அரசு அறிவித்துள்ள டெண்டர் நிபந்தனைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பம்பு மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியுள்ளது. ஒப்பந்தப் புள்ளிகளைப் பகுதிவாரியாகப் பிரித்து 500 பம்புசெட்டு கள் வீதம் டெண்டர் விடவேண்டும். இதன் மூலம் பல உற்பத்தியாளர்கள் டெண்டரில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த மின்மோட்டார்களை வாங்குவதற்கு யாரோ சில உற்பத்தியாளர்களிடம் பேரம்பேசி உரிய கமிசனைப் பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. எனவே இதை பகிர்ந்தளிக்கவேண்டு மென்று உற்பத்தியாளர்கள் சங்கம் வற்புறுத்தியிருக்கிறது.
இலவச தொலைக்காட்சிப்பெட்டித் திட்டம்
தமிழ்நாட்டில் 2 கோடியே 80 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் வீடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இவற்றில் ஒரு கோடியே 40 இலட்சம் தொலைக்காட்சிப்பெட்டிகள் அரசினால் இலவசமாக வழங்கப்பட்டவையாகும். இவ்வளவு பெருந்தொகையான தொலைக்காட்சிப்பெட்டிகள் வாங்கப் பட்டதில் பெறப்பட்ட கமிசன் எவ்வளவு?
சுமார் 2500 ரூபாய் பெறுமான தொலைக்காட்சிப் பெட்டியை மட்டும் கொடுத்தால் பெறுபவர்களுக்கு பய னில்லை. அவர்கள் அதற்கு கேபிள் இணைப்புப் பெற்றால்தான் விரும்பிய வற்றைப் பார்க்க முடியும். அரசு கேபிள் நிறுவனம் மூலம் இலவசமாக இணைப்பு கொடுக்கலாம். ஆனால் அரசு நிறுவனத் தைச் செயல்படவிடாமல் முடக்கி விட்டார்கள்.
ஒரு தொலைக்காட்சிக்கு கேபிள் இணைப்புப் பெற மாதம் ரூ.100 முதல் ரூ.150 வரை கட்டணம் கட்டியாக வேண்டும். அரசு கொடுத்துள்ள இலவசத் தொலைக்காட்சிகளின் மூலம் மாதந்தோறும் சுமார் 250 கோடி ரூபாய் கேபிள் நிறுவனங்களுக்கு வசூலாகிறது. ஆண்டிற்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகிறது. இந்தப் பணம் முதலமைச்சரின் பேரன்கள் நடத்தும் சுமங்கலி, இராயல் கேபிள் நிறுவனங் களுக்கு போகிறது. மக்கள் வரிப் பணத்தில் ரூ.750 கோடிக்கு தொலைக் காட்சிப் பெட்டிகளை வாங்கி இலவச மாகக் கொடுக்கிறோம் என்ற பெயரில் கொடுத்து அதன்மூலம் ஆண்டிற்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு மேல் ஆதாயம் அடைவது முதலமைச்சரின் குடும்ப மாகும். இதைவிடப் பன்படங்கு அதிக மான தொகை விளம்பரத்தின் மூலம் கிடைக்கிறது.
இலவச கேஸ் அடுப்பு
11 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த ஆண்டில் 220 கோடி ரூபாய் செல வில் இலவசக் கேஸ் அடுப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இதற்குரிய கேஸ் சிலிண்டர்கள் போதுமான அளவுக்கு கிடைக்காமல் ஏற்கனவே உள்ள பயனாளிகளும் இதனால் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். திட்டமிடுவதைச் சரியாகச் செய்யாததால் ஏற்பட்ட விளைவு இதுவாகும்.
இலவச மருத்துவக் காப்பீடு
தமிழக அரசின் இந்தத் திட்டத் திற்கு கடந்த ஆண்டு ரூ.501 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் மாவட்டத் தலைநகரங்கள் தோறும் அரசு மருத்து வமனைகள் உள்ளன. இவற்றில் பல மருத்துவமனைகள் மருத்துவக்கல்லூரி களோடு இணைந்த பெரிய மருத்துவ மனைகளாகும். ஆனால் தனிப்பட்ட மருத்துவமனைகளையே மக்கள் பயன் படுத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டார் கள். இந்த தனியார் மருத்துவமனை களுக்கு மட்டும் இந்த ஆண்டு ரூ.415.43 கோடி காப்பீட்டு நிறுவனங்களின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகை அரசு மருத்துவமனைகளுக்கு கிடைத்திருந்தால் அவைகள் மேலும் தங்களின் வசதிகளைப் பெருக்கிக்கொண் டிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய அரசு விரும்பவில்லை. தனியார் மருத்துவமனைகளை இத்திட்டத்திற்கு தேர்ந்தெடுப்பதின் மூலம் அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கும். அரசு மருத்துவமனைகளிலிருந்து அது கிடைக்காது.
கடந்த ஆண்டு 1.53 இலட்சம் பேர் இந்த இலவச மருத்துவக் காப் பீட்டுத் திட்டத்தின் விளைவாக பயன் பெற்றிருக்கிறார்கள். அரசு மருத்துவ மனைகளில் இவர்களுக்குச் சிகிச்சை தர எல்லாவிதமான வசதிகள் இருந்தும். அவைகள் திட்டமிட்டே புறக்கணிக்கப் பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை கையாளும் முறையில் திருப்தியில்லை என மக்களும் கருதுகிறார்கள்.
தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்
ஊரகப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு வகுத்த திட்டம் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டமாகும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100/- ஊதியம் விகிதம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் அளிப் பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
விவசாய வேலைகள் இல்லாத காலத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு பயன் அளிக்கும் வகையில் இத்திட் டத்தை செயல்படுத்த வேண்டும். ஏரி, குளம், தூர் எடுத்தல், வாய்க்கால் புதுப்பித்தல், சாலைகளைச் செப்பனிடுதல் போன்றவற்றை மக்கள் சக்தியைக் கொண்டு செய்வித்து அவர்களுக்கு அடிப்படை உணவுக்காகவாவது ஊதி யம் கிடைக்கச் செய்வதுதான் இத்திட் டத்தின் நோக்கமாகும். ஆனால் விவ சாய வேலைகள் இருக்கும் காலத்திலும் ஏரி, குளம், கால்வாய் ஆகியவற்றைத் தூர் எடுப்பது, சாலைகள் செப்பனிடுவது போன்றவற்றைச் செய்வதுபோன்ற பாவனைகாட்டி இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. வேலை செய்த ஏழை களுக்கு ரூ.60 முதல் 80 வரை கொடுக் கப்படுகிறது. மீதம் ரூபாய் 40 முதல் 20 வரை அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் பங்கிட்டுக்கொள்கிறார்கள். சில இடங்களில் வேலையே செய்யாமல் இந்தப் பணம் பங்கிடப்படுகிறது. இதன் விளைவாக மக்களின் வரிப்பணம் சூறை யாடப்படுவது மட்டுமல்ல. விவசாய வேலைக்கு ஆள்கிடைக்காமல் விவசாயமும் கெட்டுப்போகிறது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்
சிறப்புப் பொருளாதார மண்டலங் கள் என்ற பெயரில் விவசாயம் அல்லாத பணிகளுக்கு விளை நிலங்கள் எடுக்கப் படுகின்றன. 2005ஆம் ஆண்டில் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த மண்டலத்தில் தொடங்கப்படும் தொழில் களுக்கு இறக்குமதி ஏற்றுமதி சுங்கத் தீர்வைகளிலிருந்து விலக்கு, கலால் வரியி லிருந்து விலக்கு, விற்பனைவரியிலிருந்து விலக்கு, ஈட்டும் லாபத்தின் மீது 15 ஆண்டுகளுக்கு வரிகிடையாது என்பது போன்ற சலுகைகள் வாரி வழங்கப்படு கின்றன. தனியார் ரியல் எஸ்டேட் நிறுவ னங்கள் இந்த சிறப்புப் பொருளாதார நிறுவனங்களை அமைத்து அதில் உள்ள இடங்களைத் தொழில் நிறுவனங் களுக்கு விற்கலாம்; குத்தகைக்குக் கொடுக்கலாம், அதுமட்டுமல்ல, இந்த மண்டலத்தில் தொழிற்கூடங்களோடு குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட சிறு நகரங்களை அமைத்துக்கொள்ளலாம்.
விவசாயிகளிடமிருந்து குறைந்த விலையில் அரசினால் பறித்தெடுக்கப் படுகிற விளைநிலங்கள் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. பிற்காலத்தில் அந்த நிலத்தை தனியார் நிறுவனம் விற்பனைசெய்யலாம் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. தனியாரைக் கொழுக்கச் செய்வதற்காக விவசாயி களை வயிற்றில் அடிக்கும் வேலையை அரசு செய்கிறது.
தமிழ்நாட்டில் இதுவரை 53 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் 80 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அனுமதிப்பிற்கான பரிசீலனையில் உள்ளன. இவ்வளவு மண்டலங்களுக்கும் தேவையான பல இலட்சம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த ஆரம் பித்தால் விவசாயம் பெரும் பாதிப்புக்கு ஆளாகும். உணவு உற்பத்தி குறையும், விவசாயிகள் வாழையடி வாழையாக வாழ்ந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப் படுவார்கள்.
தமிழகத்தில் விவசாயம் செய்யப் படும் நிலத்தின் பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறது. தமிழக அரசின் புள்ளிவிவரப்படி 1994-1995ஆம் ஆண்டில் 57.6 இலட்சம் ஹெக்டேராக விளைநிலங்களின் பரப்பளவு தமிழகத் தில் இருந்தது. ஆனால் 10 ஆண்டு களில் அதாவது 2005-2006இல் 50.6 இலட்சம் ஹெக்டேராக குறைந்து விட்டது. 7 இலட்சம் ஹெக்டேர் அதாவது 17.5 இலட்சம் ஏக்கர் பரப்பளவு உள்ள விளை நிலம் விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக மாற்றப் பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சிவகங்கை, இராம நாதபுரம், புதுக்கோட்டை, அரியலூர், தர்மபுரி போன்ற மிகவும் பின்தங்கிய வறண்ட மாவட்டங்களில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத் தால் அந்த மாவட்டங்களும் மக்களும் வளர்ச்சியடைவார்கள். அந்த மாவட்டங் களில் பெரும்பாலும் தரிசு நிலங்கள்தான் அதிகம். ஆனால் தொழிலதிபர்கள் அங்கு தொழில்நடத்த விரும்பவில்லை. சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலும் தங்கள் தொழிற்சாலைகளைத் தொடங்க விரும்பு கிறார்கள். அதற்குத் தமிழக அரசு ஒத்துழைக்கிறது.
எடுத்துக்காட்டாக கடலூரில் இருந்து வேதாரண்யம் வரையில் 8 அனல் மின்நிலையங்களை அமைக்கத் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்துள்ளது. அதற் காக இந்தப் பகுதியில் கடற்கரை யோரத்தில் பல்லாயிரம் ஏக்கர்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அனல் மின்நிலையங்களின் தேவைக்கு அதிக மாக பன்மடங்கு நிலங்கள் விவசாயி களிடமிருந்து பறித்தெடுக்கப்பட்டு தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அனல் மின்நிலையங்கள் அமைக்கப் பட்டதுபோக மீதமுள்ள நிலங்கள் ரியல் எஸ்டேட்டாக மாற்றப்பட்டுத் தனியார் நிறுவனங்கள் பெரும் கொள்ளையடிக்க வழிவகைசெய்யப்பட்டுள்ளது.
மது மயக்கம்
1967ஆம் ஆண்டுக்கு முன் முழு மையான மதுவிலக்கு நடைமுறையில் இருந்த தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி யில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதன் விளைவாக 3 தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகிப்போனார்கள்.
சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வாழும் பதின்வயது மாண வர்களில் 3ல் ஒரு பங்கினர். பள்ளிப் பருவத்திலேயே மதுப்பழக்கத்துக்கு அடிமையாவதாகவும், 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 45 சதவிகிதத்தி னர் மதுகுடிப்பதாகவும் தெரியவந் துள்ளது. ஒவ்வொரு மாணவரும் மதுகுடிப்பதற்காக ஆண்டுக்கு 3,500
லிருந்து 4,500 வரை செலவழிப்பதாகவும் தெரியவந்துள்ளது. மதுப்பழக்கத்திற்கு அடிமையான தங்கள் கணவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மையங் களுக்கு அழைத்துச் சென்ற பெண்கள் இப்போது தங்களுடைய பிள்ளைகளை அழைத்துக்கொண்டு வருகிற கொடுமையும் நடைபெறுகிறது.
கிராமப்பகுதிகளிலும் மதுக்கலாச் சாரம் வேகமாகப் பரவிவருகிறது. விவசாயத் தொழிலாளர்களுக்குக் கூலியுடன் சேர்த்து குவார்ட்டர் கொடுக்கும் பழக்கம் பல பகுதிகளில் உருவாகி யுள்ளது. தமிழக அரசு திறந்துள்ள 6000க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடை களின் மூலம் ஆண்டிற்கு 14,000 கோடி ரூபாய் கிடைக்கிறது. தமிழ்நாட்டில் தனியார் மது உற்பத்திச் சாலைகளின் மூலம் ஆண்டுக்கு 36,000 கோடிலிட்டர் மது உற்பத்திசெய்யப்படுகிறது.
இந்த ஆண்டு தீபாவளியன்று மட்டும் மது விற்பனை ரூ.90 கோடி யாகவும், அந்த வாரத்தில் ரூபாய் 400 கோடி விற்பனையானதாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது.
அரசுக்கு மது விற்பனை மூலம் ஆண்டிற்கு 14 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கலாம். அரசின் மொத்த வருவாயில் இது 25சதவீதம் ஆகவும் இருக்கலாம். இந்தப் பணம் யாரிடமிருந்து கிடைக்கிறது? மக்களின் மடியிலிருந்து இந்தப் பணம் திருடப்படுகிறது. குடிப் பழக்கத்திற்கு ஆளானவர்கள் தங்கள் ஊதியத்தின் பெரும் பகுதியை குடிப்ப தற்காகச் செலவழிக்கிறார்கள். இதன் விளைவாக அவர்களுடைய குடும்பங் கள் பட்டினியாலும் வறுமையாலும் வாடுகின்றன. இன்னும் பலவகைகளிலும் குடிப்பழக்கம் சமூகத்தைச் சீரழிக்கிறது. ஏராளமான தற்கொலைகளுக்கு இதுவே காரணமாக அமைகிறது. எய்ட்ஸ் நோய், காசநோய், மாரடைப்பு ஆகியவற்றுக்கும் மதுவுக்கும் நிறையத் தொடர்புண்டு, சாலை விபத்து சாவுகளுக்கும் மதுவே காரணமாகிறது. குடும்ப சச்சரவுகளுக்கும் சிலவேளைகளில் கொலைகளுக்கும் மதுவே காரணமாகிறது. குடிப்பழக்கத் தால் வேலை இழப்பு, உற்பத்திப் பாதிப்பு, உயிரிழப்பு, பொருள் இழப்பு மூலம் ஏற்படும் நட்டம் அதிகம். மொத்தத்தில் சமூக அமைதியை மது கெடுக்கிறது.
மதுவின் மூலம் கிடைக்கும் வருமானத்தில்தான் இலவசங்களை தமிழக அரசு வாரித் தருகிறது. ஆனால் அதே வேளையில் மக்கள் மடியிலிருக் கிற பணத்தை அரசு சூறையாடுகிறது என்பதுதான் உண்மையாகும்.
சுமங்கலித் திட்டம்
திருமணமாகாத இளம் பெண் களுக்கு உதவி செய்வதற்காக வகுக்கப் பட்ட திட்டம்தான் சுமங்கலித் திட்ட மாகும். தொழிற்சாலைகளில் 3 ஆண்டு கள் இந்தப் பெண்கள் தொடர்ந்து வேலைசெய்யவேண்டும். முடிவில் இவர் களுக்கு ஒரு பெருந்தொகை அளிக்கப் படும். இவர்களின் திருமணத்திற்கு அது உதவும் எனக் கவர்ச்சிகரமான திட்டமாக இது வர்ணிக்கப்பட்டது.
ஆனால் நடைமுறை என்ன? கோவை, திருப்பூர் போன்ற தொழில் நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் இளம்பெண்களுக்கு ஒரு நாளைக்கு 30 அல்லது ரூ.20 ஊதியமாகத் தரப்படும். சாப்பாடு, தங்குமிடம் ஆகியவற்றுக்கு ரூ.10 கழித்துக்கொள்ளப்படும். 3 வருடங்களில் 1 நாள் விடுமுறை எடுத்தால்கூட இவர் கள் கூடுதலாக ஒரு மாதம் உழைக்க வேண்டும். அதுமட்டுமல்ல, 3ஆம் ஆண்டின் முடிவில் பொய்யான குற்றச் சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை அளிக்காமல் விரட்டியடிக்கப்படுகிற கொடுமையும் நடைபெறுகிறது. தொழிற்சாலைகளில் தங்கியிருக்கும் பெண்கள் பாலியல் துன் பங்களுக்கும் ஆளாகிறார்கள். இந்தப் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடு மைகளைக் குறித்து புகார் செய்தாலும் அவர்கள் வேலைபறிபோகும். எனவே கொடுமைகளைச் சகித்துக்கொண்டு வேலைபார்க்க வேண்டிய சூழ்நிலை.
வேளாண் பயிர்க் காப்பீட்டுத் திட்டம்
2002ஆம் ஆண்டு முதல் தேசிய வேளாண்மை பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டுவருகிறது. மழை, வெள்ளம், வறட்சி போன்ற பல்வேறு காரணங்களி னால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயி களுக்கு நட்டஈடு வழங்குவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். இதில் 50 சதவிகிதம் மத்திய அரசு அளிக்கிறது.
ஆனால் நடைமுறையில் இத்திட் டத்தினால் பயன்பெறும் விவசாயிகள் மிகமிகக் குறைவாகும். இத்திட்டம் வட் டம், குறுவட்டம் அளவில் செயல்படுத் தப்படுகிறது. ஒரு வட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இயற்கை உற்பாதத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டாலும் அந்த வட்டத்தில் உள்ள பிற கிராமங்களில் பாதிப்பில்லை என்று சொன்னால் அவருக்கு இழப்பீடு கிடைக்காது. எனவே வட்டம், குறுவட்டம் என்ற அளவில் இத்திட்டம் செயற்படுத்தப் படுவதற்குப் பதில் கிராம அளவில் செயற்படுத்தப்பட்டால் ஒழிய இத்திட் டத்தினால் விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என்பதுதான் உண்மை.
இந்தியாவில் விரைவாக வளர்ச்சி பெற்றுவரும் மாநிலமாக தமிழகத்தை முன்னிறுத்தி தம்பட்டம் அடிக்கும் தி.மு.க. ஆட்சியினர் இலவசங்களை வாரி வழங்கிவருவது பெரும் முரண்பாடு அல்லவா? விரைவாக வளர்ச்சிபெற்று வரும் மாநிலம் என்று சொன்னால் மக்களின் பொருளாதார நிலையும் உயர்ந்துதானே வந்திருக்க வேண்டும். ஆனால் மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்கும் வகையில் இலவசங்களைத் தருவது எதற்காக?
பன்னாட்டு நிறுவனங்கள் தமிழ கத்தில் பல தொழில்களைத் தொடங்கி நமது வளங்களையும் நமது தொழிலாளர் களின் உழைப்பையும் சுரண்டிக் கொழுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. பன்னாட்டு நிறுவனங்களின் வளர்ச்சி யைத் தமிழகத்தின் வளர்ச்சியாக ஆட்சியாளர்கள் சுட்டிக்காட்டுவது - மக்களை மேலும் மேலும் வறியவர்களாக ஆக்கி வருகிறது என்பதுதான் அப்பட்டமான உண்மையாகும்.
இலவசத் திட்டங்களின் விளை வாக மக்கள் சோம்பேறிகளாவதோடு உழைத்து உண்ணவேண்டும் என்கிற எண்ணத்தையே மறக்க ஆரம்பித்தி ருக்கிறார்கள். இதன் விளைவாக பொது ஒழுக்கமும் சமூகக் கட்டுப்பாடும் சீர்குலைந்து வருகின்றன.
கடந்த நான்கரை ஆண்டுகளில் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வ தற்காக இலவசங்களை அள்ளித் தெளித்திருக்கிறது அரசு. இதனால் மக்களில் ஒருபகுதியினர் பயன்பெற்றி ருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் அரசின் நிதிநிலைமை சீர்கேடடைந் திருக்கிறது. வரும் நிதியாண்டில் தமிழக அரசின் கடன் சுமை ரூ.1,00,876 கோடி யாக உயரும் என்று கணிக்கப் பட்டுள்ளது.
தொலைநோக்குத் திட்டங் களுக்கு முன்னுரிமை வழங்கி அதனடிப் படையில் சிலவற்றை இலவசமாக வழங்குவதுதான் சிறப்பானதாகும். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் மக்கள் நல அரசின் நோக்கமாகவும் கடமையாக வும் இருக்க வேண்டும். விலைவாசி உயர்வு, வேலை இல்லாத் திண்டாட்டம் போன்றவற்றால் அரசுக்கு எதிராக மக்களிடையே வளர்ந்து வரும் அதிருப்தியை இலவசங்களின் மூலம் தி.மு.க. அரசு திசைதிருப்பவும் முடக்கவும் முயல்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இலவசங்களைப் பயன்படுத்துவது காலப்போக்கில் நாட்டை மீளமுடியாத படுகுழியில் தள்ளி விடும். மக்களின் வளர்ச்சிக்காக அரசுத் திட்டங்கள் அமையவேண்டுமே தவிர, அரசைக் காப்பாற்றிக்கொள் வதற்காக அமையக்கூடாது. மக்களின் நீண்ட காலத் தேவைகளை பூர்த்தி செய் கிற வகையில் திட்டங்கள் தீட்டப் படுவது இல்லை. மக்களை எப்போதும் வறுமைக் கோட்டிற்கு கீழேயே வைத்திருந்து அவ்வப்போது வாய்க்கரிசி போடுவது போல இலவசங்களை அளிப்பதன் மூலம் மட்டுமே தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள முடியுமென்று தி.மு.க. அரசு கருதுகிறது. தொலை நோக்குப் பார்வையுடன் மக்களின் நீண்ட காலத் தேவைகளை அரசு நிறை வேற்றினால் அவர்கள் சுய சார்பு உள்ளவர்களாக மாறி சிந்தித்துச் செயல்பட ஆரம்பித்துவிட்டால் அது தனக்கு அபாயத்தை விளைவிக்கும் என அரசு கருதுகிறது. விழிப்புணர்வு மிக்க மக்கள் எங்களுக்கு இலவசமே தேவையில்லை எனத் தன்மானத்துடன் கூறிவிடுவார்கள் என அரசு அஞ்சுகிறது.
எதற்கெடுத்தாலும் தன்மானம் பற்றிப் பேசி வருகிற தமிழக முதலமைச் சர் மக்களின் தன்மானம் பற்றி கொஞ்ச மும் கவலைப்படவில்லை. பழைய கால மன்னாதி மன்னனாகத் தன்னைக் கருதிக்கொண்டு மக்களுக்கு இலவசங் களை வாரிக்கொடுப்பதின் மூலம் அவர் களை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத் துக்கொள்ளமுடியும் என நம்புகிறார்.
இலவசம் என்ற பெயரில் வகுக் கப்படும் திட்டங்களுக்கு பின்னணியில் ஆட்சிப் பீடத்தில் உள்ளவர்களுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் இடையில் ஏற்படும் இரகசிய பரிமாற்றங்களின் விளைவாக தரமற்ற பொருட்களை உற் பத்தி செய்து தனியார் நிறுவனங்கள் மக்கள் தலையில் கட்டுகின்றன. எடுத் துக்காட்டாக தொலைக்காட்சிப்பெட்டி, மிதிவண்டி, கேஸ் அடுப்பு, வேட்டி, சேலை போன்றவை என்ன தரத்தில் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே ஆகும்.
இலவசமாகப் பெறும் பொருட்கள் மனித மாண்பை சீர்குலைக்கின்றன. தங்களுடைய உடல் உழைப்பால் சம்பாதித்து முன்னேறவும் சொந்தக் காலில் நிற்கவும் விரும்புபவர்கள்தான் தங்களின் தன்மானத்தை காப்பாற்றிக் கொள்கிறார்கள். மற்றவர்கள் தங்களின் தன்மானத்தை மட்டுமல்ல அடிப்படை மாண்பையே இழந்து விடுகிறார்கள். இலவசத்தால் மக்களுக்கு இத்தகைய இழப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால ஆதாயங்கள் கிடைக்கின்றன.
ஒருவனுக்கு இலவசமாக மீனைக் கொடுப்பதைவிட அவனுக்கு மீன்பிடிக் கக் கற்றுக்கொடுப்பதுதான் சிறந்தது என்ற ஆங்கிலேயப் பழமொழியை பின்பற்றுவதுதான் சிறந்த அரசுக்குரிய இலக்கணமாக இருக்க முடியும்.
நன்றி: தினமணி 8-12-10
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக