மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் ஆ.ராசா கம்பீரமாக இருந்த காலத்திலேயே, அவரது துறை அலுவலகத் துக்குள் சி.பி.ஐ. நுழைந்தது. கடந்த ஆண்டு (2009) நவம்பர் மாதம் இது நடந்தது. சில ஆவணங்களை அள்ளிச் சென்றது.
கடந்த மாதத்தில், அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆ.ராசாவின் டெல்லி வீட்டுக்குள் சி.பி.ஐ. புகுந்து ரெய்டு நடத்தியது. அவரது உடன்பிறப்புகள் முதல் நேரடி, மறைமுக நண்பர்கள் வரை அனைவரும் சி.பி.ஐ-யின் ரெய்டுப் பிடியில் சிக்கினார்கள். டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு நேரில் வந்து ஆஜராகும்படி ஆ.ராசாவுக்கு அழைப்பு வந்தது. கடந்த வெள்ளிக் கிழமை அவரும் ஆஜரானார். அதையடுத்து, சனிக்கிழமையும் அவரை வரவழைத்து கேள்விக் கணைகளால் துளைத்தனர் சி.பி.ஐ. அதிகாரிகள்!
இந்த விசாரணைகள் எதுவும் அவர் எதிர்பார்க்காமல் நடப்பவை அல்ல. தெரிந்து, அறிவித்துவிட்டுத்தான் சி.பி.ஐ. பூதம் அவரை மெள்ள மெள்ள தன் பிடிக்குள் இழுத்துக்கொண்டு இருக்கிறது. கூட்டணிக் கட்சி மத்தியில் ஆட்சியில் இருக்கும்போதே, தன் கட்சியின் முக்கிய தளகர்த்தர் ஒருவரை நாள் முழுவதும் விசாரணைக் கைதி போல உள்ளே உட்கார வைக்கும் நிலைமையை தி.மு.க. இதற்குமுன் ஒருபோதும் சந்தித்து இராது! மத்திய உளவுத் துறை அதிகாரி ஒருவர் டெல்லியில் நம்மிடம், ''ஸ்பெக்ட்ரம் விவகாரம் சாதாரண ஊழல் வழக்கு மட்டும் அல்ல. ஏதோ சில விதிமுறைகளை மீறி சிலருக்கு சலுகைகள் காட்டி ஆதாயங்களை அடைந்த விவகாரமாக மட்டும் இதைப் பார்க்க முடியாது. 2-ஜி டெண்டர் எடுத்த கம்பெனிகள் எவை, அதன் பின்னணியில் இருக்கும் முதலாளிகள் யார், அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள், அவர்களது வெளிநாட்டுத் தொடர்புகள் என்னென்ன என்பது குறித்த விரிவான தகவல்களை இன்னமும் முழுமையாக அறிய முடியவில்லை. 'ஆ.ராசாவை விசாரிக்கிறார்கள்... அவரை எப்போது கைது செய்வார்கள்? தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி முறியுமா? இதைவைத்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா?’ என்று மேலோட்டமான அரசியல் விவகாரமாகவே பலரும் இதைப் பார்க்கிறார்கள். அதை எல்லாம் தாண்டிய சர்வதேச சதிகள் இதற்குள் இருக்கின்றதா என்பதுதான் எங்கள் விசாரணை. ஆ.ராசாவை விசாரிப்பதோ, தேவைப்பட்டால் கைது செய்வதோ தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதியை மட்டும் கோபப்படுத்தும் அரசியல் சமாசாரம் அல்ல. வெளிநாட்டு கம்பெனிகள், முதலாளிகளின் ரியாக்ஷன்களை முக்கியமானதாகக் கவனித்து வருகிறோம். இந்த உஷார்த்தனம் எங்களைவிட ஆ.ராசாவுக்கு அதிகமாகவே இருக்கிறது...'' என்றார். அவரே தொடர்ந்தார் -
''சி.பி.ஐ. அதிகாரிகளின் முன்பு ஆஜராவதற்காக டிசம்பர் 24-ம் தேதி வந்த ஆ.ராசா, அந்த அலுவலகத்தில் தரப்பட்ட காபி, டீயைக்கூட முதலில் குடிக்க மறுத்துவிட்டார். 'நீங்கள் என்ன மாதிரியான உணவை விரும்பிச் சாப்பிடுவீர்கள்? அதை வரவழைக்கிறோம்’ என்று அதிகாரிகள் கேட்டபோதும் ஆ.ராசா மறுத்தார். 'என் வீட்டில் எனக்கான உணவு தயாராக இருக்கும். அதை எடுத்து வர நீங்கள் அனுமதி தந்தால் மட்டும் போதும்!’ என்று சொன்னார்.
அதன் பிறகு, அவர் வீட்டிலிருந்து ஹாட் பேக்கில் மதிய உணவு கொண்டு வரப்பட்டது.
ஆ.ராசாவின் நம்பிக்கைக்குரிய உதவியாளர்களின் கண்காணிப்பிலேயே அந்த உணவு வந்து சேர்ந்தது. மாலை நேரத்தில் மறுபடியும் டீ குடிக்கலாம் என்று விரும்பியபோது, அதற்கும் ஓர் ஆளை வீட்டுக்கு அனுப்பிவைக்க முடியாது என்பதால், 'இங்கேயே டீ சாப்பிடலாமே...’ என்று அதிகாரிகள் சொன்னார்கள். மிகுந்த தயக்கத்துக்குப் பிறகுதான் அதை வாங்கிக் குடித்தார். ஆ.ராசாவின் இந்த சுதந்திரத்தை சி.பி.ஐ-யும் அதிகமாகத் தடுக்கவில்லை. இதுவரை, உறவாக இருந்தவர்களும் பகையாக மாறக்கூடிய வாய்ப்புதான் எல்லா வழக்குகளிலும் நடக்கும். அதை நினைத்துக்கூட ஆ.ராசா ஜாக்கிரதையாக இருக்கலாம்...'' என்றார் அந்த அதிகாரி.
''மத்திய காங்கிரஸ் ஆட்சி மேலிடத்தில் நெருக்கமான சில மனிதர்கள், 2-ஜி டெண்டர் எடுத்த கம்பெனிகளுடன் நெருக்க மாக இருந்தார்களாம். அவர்கள் இந்த வழக்கு விசாரணையைத் தடுப்பதற்கான மறைமுகக் காரியங் களைப் பார்த்து வருகிறார்கள். டெண்டர் எடுத்த இரண்டு கம்பெனிகளில் நீரா ராடியாவுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. எனவே, அவருக்கு வேண்டியவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். ராடியாவை இந்த வழக்கு விசாரணையிலிருந்து எப்படியாவது மீட்டுவிட பெரிய முதலாளிகள் இரண்டு பேர் துடியாய்த் துடிக்கிறார்கள். இந்நிலையில்தான், ஆ.ராசாவின் பாதுகாப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது!'' என்றும் சொல்கிறார்கள்.
சி.பி.ஐ. வசம் சிக்கியவர்கள் அனைவரும் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள, மற்றவர்கள் மீது பழி போடுவது அதிகமாக நடக்கிறதாம். ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர்கள் இரண்டு பேரும், தொலைத் தொடர்புத் துறையின் முன்னாள் செயலாளர்கள் இருவரும் அப்ரூவர்களாக மாறி வருவதாகச் சொல்கிறார்கள். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சமயத்தில், கூடுதல் தனிச் செயலாளர்கள் இரண்டு பேர் இருந்தனர். இதில் ஒருவர் ஆர்.கே.சந்தோலியா. இவரை தாமதப்படுத்தாமல் அப்ரூவராக கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட வேண்டும் என்று சி.பி.ஐ. துடிப்பதாகத் தகவல்.
ஆ.ராசா சி.பி.ஐ-யின் விசாரணையின்போது, இந்த இரண்டு நாட்களும் எப்படி நடந்துகொண்டார் என்று விசாரித்தோம். ''ஆ.ராசா ஒரு வழக்கறிஞராக வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பதால், தனது தரப்பு வாதங்களை பதற்றமில்லாமல் முன்வைத்தார். தான் எடுத்த முடிவுகள் புதியவை அல்ல என்றும் அவை ஏற்கெனவே பின்பற்றப்பட்ட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டவை என்றும் அசராமல் வாதங்களை அடுக்கினார். 'என் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் ரீதியானவை’ என்பதை திரும்பத் திரும்பச் சொன்னார். விதிமுறை மீறல் என்ற கோணத்திலேயே போய்க் கொண்டிருந்தால், இப்படி விவாதம்தான் வளர்ந்துகொண்டு போகும் என்பதால், ரிவர்ஸில் வரும் முடிவில் இருக்கிறது சி.பி.ஐ.! அதாவது, விதிமுறைகள் மீறப்பட்டு, அதன்மூலம் மிதமிஞ்சிய ஆதாயம் அடைந்தவர்கள் அந்த ஆதாயத்தை எப்படியெல்லாம் கைமாற்றினார்கள் என்பதற்கான ஆதாரங்களைத் திரட்டி முடித்துவிடும் மூடில் சி.பி.ஐ. இருக்கிறது!
இதற்கு, 'ஜெயின் சகோதரர்கள் மூலமாகத்தான் பல தகவல்கள் கிடைக்கும்’ என்று சி.பி.ஐ. எதிர்பார்க்கிறது. ஸ்பெக்ட்ரம் பணப் போக்குவரத்தைத் தீர்மானித்தவர்கள், இந்த ஜெயின் சகோதரர்களே. டெல்லியில் இருந்திருக்கிறார் மகேஷ் ஜெயின். சென்னையில் இருந்திருக்கிறார் அவரது சகோதரர் தவுலத் ஜெயின். இன்னொரு சகோதரரான ராஜேஷ் ஜெயின் ஹாங்காங்கில் இருக்கிறார். ராஜேஷ் தனது இருப்பிடமாக துபாயைச் சொன்னாலும் கணக்கு வழக்குகள் பெரும்பாலும் ஹாங்காங்கில்தான் இருக்கின்றன. ஸ்பெக்ட்ரம் பணப் பரிவர்த்தனைகள் இவர்கள் மூலமாக நடந்துள்ளதாக சி.பி.ஐ. நம்புகிறது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறு செய்தவர்களை முழுமையாக வளைக்க வேண்டுமானால், மகேஷ் ஜெயினை விசாரித்து முடித்தாக வேண்டும். ராஜேஷ் ஜெயினை இந்தியாவுக்கு அழைத்து வருவதற் கான வேலைகளும் தொடங்கிவிட்டன.
இந்த சகோதரர்களை வளைப்பது சாதாரண விஷயமும் அல்ல. இவர்கள் இதைப்போல எத்தனையோ பெரிய பண முதலைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்களைப் பிடித்தால்... இன்னும் வேறு பூதங்களும் கிளம்பலாம்!'' என்கிறார்கள். அதிலும், சென்னையில் இருக்கும் ஜெயின் சகோதரர் இன்று நேற்றைக்கு அரசியலோடு தொடர்பு கொண்டவர் அல்ல... மத்தியில் பி.ஜே.பி. ஆண்ட காலம்தொட்டே இவர் மூலமாக தமிழக பெருந்தலைகள் பணத்தை நாடு கடத்தியதாக சி.பி.ஐ-வசம் தகவல் சிக்கியிருக்கிறதாம். எனவே, இந்த சென்னை ஜெயினை சி.பி.ஐ. நெருங்க நெருங்க... தமிழ்நாட்டின் வேறு பல தலைகளுக்கும் ஜுரம் காணத் தொடங்கிவிட்டதாகத் தகவல்!
மொத்தத்தில், ஹவாலா மனிதர்களின் சர்வ தேசத் தொடர்புகளையும் வைத்துப் பார்த்தால், ஆ.ராசாவும், சி.பி.ஐ. அதிகாரிகளும் பயப்படுவதில் நியாயம் இருக்கவே செய்கிறது!
சி.பி.ஐ-யின் கேள்வி பதில் செஷனுக்கு வந்தபோது, மறக்காமல் தனது டாக்டர் ஒருவரை ஆ.ராசா அழைத்து வந்ததை சில அதிகாரிகள் காட்டுகிறார்கள். உள்ளே சி.பி.ஐ-யின் கிரில்லிங் நடந்துகொண்டிருந்த சமயம், இந்த டாக்டருடன் நாம் பேச முயன்றோம். 'என் பெயர் குமார். நான் சென்னையில் இருந்து வந்திருக்கிறேன்’ என்று மட்டுமே சொன்னார்.
சி.பி.ஐ. அலுவலகத்தின் முதல் தளத்தில்தான் ஆ.ராசா மீதான விசாரணை நடந்தது. அருகில் இருந்த இன்னோர் அறையில் இந்த டாக்டர் இருந்தார். சில மணி நேரம் கழித்து, அதிகாரிகள் என்ன நினைத்தார்களோ... அந்த டாக்டரை வெளியில் போய் காத்திருக்கச் சொன்னார்கள். மேலும், தனது வக்கீலாக ராஜேந்திரன் என்பவரையும் பெரம்பலூரில் இருந்து ஆ.ராசா அழைத்து வந்திருந்தார். அவரும் டாக்டருடன் காத்திருந்தார். பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் துரைசாமி, அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவசங்கர், எம்.எல்.ஏ-வான ராஜ்குமார் என்று பெரம்பலூர் வட்டாரத்தில் இருந்து பலரும் குவிந்து, சி.பி.ஐ. அலுவலகத்தின் முன்பாகத் திரண்டிருந்தனர். ''ஆ.ராசாவின் பாதுகாப்புக்காக வந்திருக்கோம்...'' என்று அதில் ஒருவர் பத்திரிகையாளர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்!
நன்றி ஜுனியர் விகடன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக