தேர்தல் நேரத்தில் ஆ.ராசா வேண்டாம்! | | | |
|
அப்பாவை நெருக்கும் அண்ணன் - தம்பி
ஸ்பெக்ட்ரம் ஸ்பெஷல்!
மத்திய அமைச்சர் அழகிரியைச் சுற்றி மாநில மந்திரிகள் இரண்டு மூன்று பேர் உட்கார்ந்திருக்க... ஸ்பெக்ட்ரம் விவகாரம் பேச்சாக எழுந்தது. ''இப்படியே போனால் தி.மு.க. எத்தனை ஸீட் ஜெயிக்கும்?'' என்று ஒரு கிடுக்கிப்பிடிக் கேள்வியை அழகிரி எழுப்பினாராம். ஆளாளுக்கு ஓர் எண்ணிக்கையைச் சொல்ல... ''இவ்வளவு ஸீட்டெல்லாம் வரவே வராது. மிகமிக மோசமா சொற்ப இடங்கள்தான் வரும்!'' என்று சொல்லி அவர் சுட்டிக்காட்டிய கணக்கு, வெளியில் சொல்ல முடியாதது!
அழகிரி - ஸ்டாலின் தரப்பு வைக்கும் ஒற்றை வரிக் கோரிக்கை, ''சட்டமன்றத் தேர்தலை தி.மு.க. எதிர்கொள்ளும்போது ஆ.ராசா நம்முடைய கட்சியில் இருக்கக் கூடாது'' என்பதுதான். இந்தத் தகவலை இவர்களது ஆதரவாளர்கள் நாலா பக்கமும் பரப்புகிறார்கள். எல்லா விஷயங்களிலும் தீர்க்கமாக முடிவு களை நினைத்தாலும், அதை வெளிப்படையாக தலைமைக்குச் சொல்ல மாட்டார் ஸ்டாலின். கருணாநிதியே கேட்டால்தான் சொல்வார். ஆனால், அழகிரி அதற்கு நேர் மாறானவர்.
நவம்பர் முதல் வாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த விவகாரம் வெடித்தபோதே முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த அழகிரி, ''ஆ.ராசாவை கொஞ்ச நாளைக்கு மந்திரி பதவியில் இருந்து நீக்குங்க! இந்தப் பிரச்னை அப்படியே அமுங்கிப்போகும்!'' என்று கறாராக தீர்ப்பைச் சொன்னாராம் அழகிரி. இது கனிமொழிக்கு தெரிய... அவர், அழகிரியிடம் பேசி இருக்கிறார். ''பூங்கோதையை விலக்கி வெச்சுட்டு அவர் குற்றமற்ற வர்னு நிரூபிச்ச பிறகு மந்திரி பதவி கொடுத்தோம்ல... அதை மாதிரி சில மாதங்கள் ராசாவும் இருக்கட்டுமே...'' என்று பதில் அளித்திருக்கிறார் அழகிரி. இதற்கு மறுநாள் மதுரைக்கு ஸ்டாலினும், செல்வியும் சென்று அழகிரி மகன் திருமணத்தின் பந்தலைப் பார்வையிடப் போனார்கள்.
அப்போது அழகிரியும் ஸ்டாலினும் மனம்விட்டுப் பேசினார்கள். ஆ.ராசா விஷயம் பற்றி பேச்சு வந்தபோது, ''ஏதாவது பிரச்னை பண்ண வேண்டியது. நம்ம குடும்பத்திலேயே யாரையாவது காக்கா பிடிச்சுக்க வேண்டியது. இதுதான் பாதிப் பேரோட வழக்கமா இருக்கு'' என்று சொன்னார்களாம். அழகிரியும் ஸ்டாலினும் 'ஆ.ராசா மீது நடவ டிக்கை எடுத்தாக வேண்டும்’ என்று சொன்னாலும் அதைச் செய்ய முடியாத அளவுக்குத் தடையாக ராஜாத்தி அம்மாளும் கனிமொழியும் இருந்தனர்.
ஸ்டாலினுடன் அழகிரி அதிகமாக முட்டிக்கொண்டு இருந்தபோதும், தயாநிதி குடும்பத்துடன் மோதல் ஏற்பட்டபோதும், ராஜாத்திஅம்மாள் வீட்டினருடன்தான் அழகிரி அதிக நெருக்கம் காட்டினார். கனிமொழிக்கு எம்.பி. பதவியைக் கொடுத்து, 'இனி நீயே டெல்லியைக் கவனிக்க வேண்டும்’ என்று முதலில் முடுக்கிவிட்டதும் அழகிரிதான். ஆனால், ஆ.ராசா விஷயத்தில்தான் இவர்களுக்குள் மோதல் துளிர்த்தது. இதற்கு இரண்டு விதமான காரணங்களைச் சொல்கிறார்கள்.
''தயாநிதி மாறன் - அழகிரி நெருக்கம் அதிகமானதால், கனிமொழி மெள்ள விலக ஆரம்பித்தார்'' என்று ஒரு தரப்பு சொல்கிறது. இன்னொரு தரப்பினர், ''சமீப காலமாக ராஜாத்தி அம்மாள் தன் மகள் கனிமொழியை தலைவருக்கு அடுத்து அரசியல் வாரிசாகக் கொண்டுவரும் காரியங்களைக் கமுக்கமாகப் பார்த்து வந்தார். சில மாவட்டச் செயலாளர்களை அழைத்துப் பேசி, 'கனியை வெச்சு மீட்டிங் போடுங்க... வேலை வாய்ப்பு முகாம் நடத்துங்க’ என்று கட்டாயப்படுத்தினார். குறிப்பிட்ட சாதிச் சங்கத்தினரைத் தொடர்ச்சியாக அழைத்துப் பேசினார். அவரே காமராஜர் பிறந்த தினத்தன்று, அவரது நினைவகத்துக்குச் சென்று மாலை மரியாதை செலுத்தினார். இவை எதுவும் அழகிரி - ஸ்டாலின் தரப்புக்குப் பிடிக்கவில்லை.
கனிமொழிக்கு எம்.பி. பதவி கேட்கும்போது, 'அவங்களுக்கு ஒரு செக்யூரிட்டி வேணாமா?’ என்று கேட்டார்கள். 'அதன் பிறகு மந்திரி பதவி... அதுவும் கேபினெட் பதவிதான் வேணும்னாங்க. இப்ப தலைமைப் பதவிக்கே அடி போடுறாங்களா...’ என்று கோபப்பட்டதன் விளைவே சி.ஐ.டி. காலனி வீட்டுடனான நட்பை அழகிரி முறித்துக்கொண்டார் என்கிறார்கள்.
ஆ.ராசாவுக்கு அளவுக்கு மீறி பச்சைக் கொடி காட்டுவதும் இந்தக் கோபத்துக்கு கூடுதல் காரணமாகி இருந்த நிலையில்தான்... நீரா ராடியா - அமைச்சர் பூங்கோதையின் டேப் வெளியானது. 'அழகிரியை நம்பவைத்துக் கழுத்தறுக்கும் ரக அரசியல்வாதி’ என்று பூங்கோதை சொன்னதாக வரும் டயலாக் குறித்து அழகிரி கோபம்கொண்டார். ''பூங்கோதை சொன்னது உங்களை அல்ல... பொதுவாக டெல்லி அரசியல்வாதிகளே இப்படிப்பட்டவர்கள்தான் என்ற அர்த்தத்திலே பூங்கோதை சொல்லி இருக்கிறார்'' என்று புலனாய்வு அதிகாரி ஒருவர் சொன்ன சமாதானத்தையும் அழகிரி ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த மாதிரியான விஷயங்கள் தினமும் வெளிவர வெளிவர, அழகிரியும் ஸ்டாலினும் அதிகப்படியான கோபமும் கொண்டார்களாம். ''ஆ.ராசாவைக் கைது செய்த பிறகே கட்சியைவிட்டு நீக்குவோம் என்றால், அதற்குள் கட்சி எல்லாவிதமான அவமானங்களையும் பட்டுவிடும். அதற்குப் பின்னால் பதில் சொல்ல நமக்கு வலிமையே இருக்காது...'' என்று இவர்கள் தரப்பு ஆட்கள் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.
ஆக, கருணாநிதியும் ரொம்பவே குழம்பிப்போய் இருக்கிறார்!
நன்றி ஜுனியர் விகடன் |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக