வைகோ போட்ட வழக்கும்.. புலிகளால் கிளம்பும் பீதியும்!
[Monday, 2010-12-20 15:01:02] |
'தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீட்டித்தது சரிதான்!' என நவம்பர் 12-ம் தேதி, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்கிரமஜித் சென் தீர்ப்பாயம் உறுதிசெய்தது. அதை எதிர்த்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
|
கடந்த 14-ம் தேதி, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தானே வாதிட்ட வைகோ, "சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 9-வது பிரிவின் கீழ், சிவில் நடைமுறை சட்டப்படி என்னையும் விசாரணையில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தேன்.
ஆனால், சிவில் நடைமுறை சட்டத்தின்படி நான் அனுமதி கேட்டது தவறு என்றும், கிரிமினல் நடைமுறைச் சட்டம் தான் இதில் செல்லுபடியாகும் என்றும் தீர்ப்பாயத்தின் தலைவர் கூறி இருப்பது, சட்டத்தின் அடிப்படையில் முற்றிலும் முரணானது. 1967-ல் கொண்டுவரப்பட்ட சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டமானது, 2004-ம் ஆண்டு திருத்தப் பட்டபோதும், சிவில் நடைமுறைச் சட்டம் கையாளப்படுவதைத் தொடரவே பல பிரிவுகளில் சட்டம் வழிசெய்கிறது" என்று விவரித்தார்.
'நீங்கள் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரா?' என நீதிபதி இக்பால் கேட்க, "நான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர் அல்ல. ஆனால், அதன் தீவிர மான ஆதரவாளன்!" என்று அழுத்தமாகச் சொன்னார் வைகோ.
மத்திய அரசின் சார்பில் வாதாடிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், "தடையை நீக்குவதுபற்றி மத்திய அரசிடம் முறையிட, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் 6-வது பிரிவில் வாய்ப்பு உள்ளது. அதை வாதி பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று கூற, வைகோ சூடாகி, "இந்தத் தடையை விதித்த மத்திய அரசாங்கத்திடமே தடையை நீக்க எப்படி கேட்க முடியும்? அநீதி இழைத்தவர்களிடமே நீதியைக் கேட்க முடியாது. தடை விதித்ததன் மூலம் தமிழர்களுக்கு மத்திய அரசு தீங்கு இழைத்துவிட்டது!" என்று குமுறலுடன் முழங்கினார்.
"அரசுத் தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் கொடுக்க வேண்டும். இதில் மத்திய அரசுக்கு முழுப் பொறுப்பு இருக்கிறது. எனவே, வைகோவின் ரிட் மனு தொடர் பாக மூன்று வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்கவேண்டும்!" என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை வெளியிட்டதும், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் டெல்லியின் சௌத் பிளாக் பகுதியில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த 20 ஆண்டுகளில் புலிகள் மீதான தடை இந்த ஆண்டுதான் இவ்வளவு பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. "இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசு விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யும். இது தொடர்பான தீர்ப்பாயம் இதை விவாதித்து சரியான நடவடிக்கைதான் என்று சொல்லி அறிவிக்கும். ஆனால், இந்த முறைதான் வைகோ, டெல்லி ஆணையத்தில் ஆஜராகி விவாதப் பொருள் ஆக்கினார். ஆனாலும் தடை நீடிக்கப் பட்டது. இந்நிலையில் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு, மத்திய அரசுக்கு மீண்டும் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதிகள் தங்களது தீர்ப்பை எப்படி வேண்டுமானாலும் வழங்கலாம் என்ற அச்சம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது!" என்கிறார்கள் போலீஸ் வட்டாரத்தில்.
இந்த நிலையில்தான், 'விடுதலைப் புலிகளால் பிரதமர் மன்மோகன், முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்பட பல பிரமுகர்களுக்கும் ஆபத்து!' என மத்திய உளவுப் பிரிவு எச்சரிக்கை அனுப்பி உள்ளது. திடீரெனக் கிளம்பி இருக்கும் இந்த எச்சரிக்கையால், இனி, 'தமிழகம் வரும் பிரதமர் உட்பட்ட தலைவர்களுக்கு இதுவரை இல்லாத பாதுகாப்பு செய்யப்படும் என்றும், முதல்வர் கருணாநிதிக்கும் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு பாதுகாப்பு அவ்வப்போது ஆய்வுசெய்யப்பட்டு, பலப்படுத்தப்படும்� என்றும் டி.ஜி.பி. லத்திகாசரண் கூறி இருக்கிறார்.
வைகோவின் வழக்கையும், இந்த திடீர் எச்சரிக்கை யையும் இணைத்துப் பேசும் 'புலி' ஆதரவாளர்களோ,"சென்னை உயர் நீதிமன்றத்தில் கிளம்பியிருக்கும் வழக்கு காரணமாகத்தான் இந்த பீதி கிளப்பப்படுகிறது!" என்கிறார்கள்.
"ஜெயலலிதாவுக்கோ, கருணாநிதிக்கோ போலீஸ் பாதுகாப்பு அதிகம் வேண்டும் என்கிறபோது எல்லாம், புலிகளால் ஆபத்து என்கிற 'எச்சரிக்கை' டெல்லியில் இருந்து வந்துவிடும். 'அதற்கான முகாந்திரம் இருக்கிறதா� இல்லையா?' என்பதெல்லாம் யாரும் கேட்கக் கூடாதது ஆகிவிடும். இதில் குற்றம் சாட்டப்படுபவர்கள் விடுதலைப் புலிகள் என்பதால் குற்றம்சாட்டுபவர்களுக்கு வசதியாகிப் போய்விடுகிறது. புலிகள் இயக்கம் ராணுவ ரீதியாக அழிக்கப்பட்ட பிறகு, அவர்கள் மீதான தடையை நீக்க தமிழகத்தில் எழுந்துள்ள ஆதரவுதான், டெல்லியின் 'புலி பீதி'க்குக் காரணம்!" என்கிறார்கள்.
ஜூனியர் விகடன்.
unarchitamilanmanikandan |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக