என்ன செய்யப் போகிறோம் ஈழத்திற்காக ?
முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நடத்தப்பட்ட தமிழ் இனப் படுகொலைப் பற்றிய நிழற்பட ஆவணங்களின் தொகுப்பு “என்ன செய்யலாம் இதற்காக?” என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. காண்போரின் இதயத்தை உலுக்கும், தூங்கவிடாமல் செய்யும் ஈழத் தமிழர்களின் படுகொலையின், போர் நிகழ்வின் 2000 நிழற்படங்களில் 371 படங்கள் மட்டுமே இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. சாட்சி இல்லா ஓர் இனப் படுகொலையாக ராஜபட்சேவின் இலங்கை அரசால் நடத்தப்பட்ட முள்ளிவாய்க்கால் போரினை பற்றி உலக நாடுகள் அறியும் சாட்சியாக இப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த, ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணமான “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு விழா 9.1.2011 அன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த நூல் குறித்து நூலாசிரியர் ஜெ.பிரபாகரன், “இந்தப் புத்தகத்திற்காக 6மாதங்களுக்கும் மேலாக அலைந்து போராடி படங்கள், தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதற்கு நூலாசிரியர் நான் அல்ல, ஈழ விடுதலைப்போரில் ரத்தம் வெள்ளமாய் ஓட, உடல்கள் சிதற குண்டுகளுக்கு பலியான என் ஈழத் தமிழர் ஒவ்வொருவரும்தான் இந்த புத்தகத்தின் ஆசிரியர்கள். நான் இதற்கு ஆசிரியன் என்பது வெறும் மரபினால் குறிப்பிடப்படுவதே ஆகும்.
உலக மனச்சாட்சியை தட்டி எழுப்பக்கூடிய வகையிலும், ராஜபட்சேவின் கொலைவெறியை உலகம் அறியும் வகையிலும் இந்தப் புத்தகத்தை போரில் உயிர் இழந்த எம் தமிழ் உடன்பிறப்புக்கள் தந்துள்ளனர்.
இந்த நூலில், 371 படுகொலைப் படங்களுக்கு கீழ், அவை எப்போது ?, எங்கு? நிகழ்ந்தன என்ற விவரம் தமிழ் , ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நிழற்படங்கள் மட்டுமல்லாமல், 4 பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன.
1) இலங்கையின் பூர்வீகக்குடி தமிழ்க்குடிதான் என்பதற்கான 2000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதாரச்சான்றுகள் அடங்கிய பட்டியல், 2) 1956 முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலான போர் மற்றும் இனப்படுகொலை பற்றிய விவரப் பட்டியல் 3)இலங்கையில் அமைதியான முறையில் நடந்த அரசியல் போராட்டம் மற்றும் 4) அப்போராட்ட முடிவில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் தோல்வியடைந்ததின் விவரப்பட்டியல் என 4வகையான பட்டியல்கள் தரப்பட்டுள்ளன.
ஆக மொத்தம், இந்நூல் ஈழத் தமிழரின் ஒரு வரலாற்று ஆவணமாக அமைந்துள்ளது. ராஜபட்சேவால் நம் தமிழ் உடன்பிறப்புகள் படுகொலை செய்யப்பட்டதற்கு நாம் என்ன செய்தோம்? என்ற வேதனையான கேள்விதான் இந்தப் புத்தகம் உருவாக காரணமாக அமைந்தது.
ஈழப் படுகொலைக்காக நான் செய்யப்போவது - நடிகர் நாசர்
நான் தமிழனாக அல்ல. இந்தியனாகவும் அல்ல. ஒரு மனித நேயமுள்ளவனாக, ஈழத்தமிழனின் படுகொலைக்கு நான் செய்யப்போவது ஒன்றே ஒன்றுதான். இந்தப் புத்தகத்தை தமிழர்களிடம் கூட காட்டி இதைப் பற்றி விளக்கப்போவதும் இல்லை. நான் எனது தொழில் நிமித்தமாக ஆந்திரா, கேரளா, கர்நாடக மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமானப் பயணத்தின் போது என்னுடன் கூடவே இந்தப் புத்தகத்தையும் எடுத்துச் செல்வேன்.
அப்போது, நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் இது பற்றி பேசப் போகிறேன். நான் சந்திக்கும் மொழியறியாத பல்வேறு நாட்டு மக்களிடம் ராஜபட்சேவின் போர்க்குற்றம் பற்றி விளக்கப்போகிறேன். அப்படிப்பட்ட வேற்று நாட்டு மக்களும் ஈழத் தமிழனின் அவலநிலையை அறியச்செய்யப் முயற்கிக்கப் போகிறேன். இதுதான் ஈழத்திற்காக நான் செய்யப்போகும் ஒரு சிறு பணியாக நினைக்கிறேன். இது என் கடமை.
தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - சீமான்
இந்த நூலில், இவர்களுக்கு கிடைத்த 2000 நிழற்படங்களில் 371 படங்கள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளன. அதுவும் நம்மால் ஓரளவு சகித்துப் பார்க்கக்கூடிய படங்களாகவே உள்ளன. இவற்றை பார்க்கும் போதே நமது மனம் பதைபதைக்கிறது. இவற்றைவிட கொடூரமான படங்கள் நிறைய உள்ளன. அவற்றை எல்லாம் பார்த்தால் உண்மையில் நம் மனநிலை பாதிக்கப்பட்டுவிடும். ஆனால், அதையெல்லாம் 60 வருடங்களாக எம் ஈழத்தமிழன் கண்ணெதிரே கண்டுகொண்டு வாழ்கிறார்கள். அப்படிப்பட்ட கடல் அளவு துயரினில் இந்த உலகம் அறிந்திட ஒரு துளியளவே இந்நூலில் தரப்பட்டுள்ளது. இன்னும் ஆவணப்படுத்தப்படாத, ஆவணப்படுத்த முடியாத எத்தனையோ அவலங்கள் உள்ளன.
பாலூட்டும் போது ஒரு தாய் குண்டு பாய்ந்து இறந்துவிடுகிறாள். இறந்துவிட்ட தாயின் மார்பில் பால்குடித்தபடி இருக்கிறது அந்தக் குழந்தை. இதை எப்படி ஆவணப்படுத்துவது. பெற்றவர்கள் கண்முன்பாகவே மகள், சிங்கள ராணுவத்தினரால் மானபங்கப்படுத்தப்படுவதை எப்படி ஆவணப்படுத்துவது.
ஒருமுறை அங்குள்ள பள்ளிச் சிறுவர்கள் என்னிடம் கூறினார்கள்... அண்ணா, நாங்கள் பெரும்பாலும் பதுங்கு குழிகளுக்குள்தான் பதுங்கி வாழ்வோம். அப்போது நாங்கள் அமர்ந்திருப்பதற்கே இடமிருக்காது. அப்படி இருக்கையில் எப்படி உணவு சமைப்பது. அப்படி உணவு சமைப்பதற்காக பதுங்குக் குழிகளின் மேட்டில் உலைவைப்போம். விறகுத் தீ பற்றி எரிகிறதா?, தண்ணீர் கொதித்துவிட்டதா?, அரிசி வெந்துவிட்டது என்று தலைதூக்கி எட்டி எட்டிப் பார்க்கும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மனித உடல்கள் கைவேறு, கால்வேறாக சிதறுவதைதான் பார்க்க முடியும் என்று அவர்கள் கண்ணீருடன் கூறினார்கள். அவற்றை எல்லாம் எப்படி ஆவணப்படுத்துவது.
இப்படி தம் மக்கள் கொன்று குவிக்கப்படுகிறார்கள் என்பதைக்கூட கூப்பிடும் தூரத்தில் இங்கு இருக்கும் தமிழன் அறிய வழியில்லை. இலங்கையில் ஊடகங்களுக்கு அனுமதி இல்லை. அப்படி ஒரு சூழலிலும் துணிந்து எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகள் அடங்கிய குறுந்தகடுகளை எம் சகோதரர்கள் கொண்டுவந்து தந்தால், அதனை ஒளிபரப்ப இங்கிருக்கும் ஊடகங்களும், பத்திரிகைகளும் முன்வரவில்லை. இது ஊடக பயங்கரவாதம் இல்லையா?
குண்டுவைத்தால் தேசிய பாதுகாப்புச்சட்டம் போடுவது நியாயம். ஆனால் குறுந்தகடு வைத்திருந்தவர்கள் மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டதே.
அமைதியாக போராடிய தமிழர்கள் மீது, இலங்கை அரசு ஆயுதம் ஏந்தி தாக்கியது. தம் மக்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டு பொறுக்கமுடியாமல், ஆயுதத்தால் தாக்குபவர்களுக்கு ஆயுதத்தால்தான் பதில் சொல்ல வேண்டும் என்று நினைத்து பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். பிரபாகரன் ஆயுதம் ஏந்தியது பயங்கரவாதம் என்றால், அந்தப் பயங்கரவாதம் தோன்றக் காரணமாக இருந்த ராஜபட்சேவின் இலங்கை அரசு பயங்கரவாதத்தின் தாய்.
புலிகள் பயங்கரவாதிகள், அதனால்தான் அவர்கள் கொல்லப்பட்டதாக கூறுகிறார்கள். ஆனால், இந்தப் போரில், பச்சிளம் குழந்தைகள் கூட கொடூரமாக கொல்லப்பட்டனரே. அதற்கு என்ன பதில் கூறப்போகிறீர்கள்.
ஐ.நா சபையே ராஜபட்சேவை போர்க்குற்றவாளி என்கிறது. ஆனால் இந்தியா தங்கள் நண்பன் என்கிறது. காமன் வெல்த் விளையாட்டுக்கு விருந்தினராக அழைத்து, ரத்தினக் கம்பளம் விரிக்கிறது. அது ரத்தினக் கம்பளம் அல்ல. அங்கே படுகொலை செய்யப்பட்ட நம் தமிழனின் ‘ரத்தக் கம்பளம்’. 20 மைல்கல் தூரத்தில் இருக்கும் தம் இனம் கொல்லப்பட்டதற்கு, இந்தத் தமிழக திமுக அரசு ராஜபட்சேவிற்கு எதிராக ஒரு அறிக்கைகூட விடவில்லை.
ஈழத்தமிழன் கொல்லப்பட்டதிற்கு நாம் என்ன செய்யலாம்?. நாம் என்ன செய்ய முடியும். உள்ளத்தில் பற்றி எரியும் தீயை, முத்துக்குமாரன் போல் உடலில் ஏற்றி நம்மை சாம்பலாக்கிக்கொள்ளதான் முடியும். இதற்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் தமிழக ஆட்சியில் இருக்கும் கலைஞரும், ஜெயலலிதாவும்தான். ஆனால் அவர்களும் அந்த நேரத்தில் குரல் கொடுக்கவில்லை.
இலங்கையில் புலிகளை ஒடுக்குவதற்காகத்தான் ஆயுத உதவி, போருக்கு பிறகு இலங்கையில் தமிழர்களுக்கு பாதுகாப்பான, அமைதியான வாழ்க்கையை இலங்கை அரசு அமைத்து தர வழிவகைச் செய்வோம் என்று இந்திய அரசு கூறியதே. ஆனால், நடந்தது என்ன? இப்போதும் நடப்பது என்ன?.
போரில் புலிகள் அல்லாத லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே. பெண்களும் குழந்தைகளுமாய் ஏராளமானோர் கொத்துக் குண்டுகளுக்கு பலியானார்களே. போர் முடிந்தும் ஆயிரக் கணக்கானோர் முள்வேலி முகாமிற்குள் இன்றும் வாழ்கிறார்களே. அவர்களுக்கு இலங்கை அரசும் ஏதும் செய்யவில்லை. இந்திய அரசும் ஒன்றும் செய்யவில்லை.
இந்தவேளையில், இந்திய அரசையும், இலங்கை அரசையும், தமிழக அரசையும் ஒன்று கேட்கிறோம். தனி ஈழம் ஒன்றுதான் எங்கள் மக்களுக்கு அமைதியையும் பாதுகாப்பையும் தரும். அதற்கு நாங்கள் இனி யுத்தம் செய்யப்போவதில்லை. இனியும் ரத்தம் சிந்த விரும்பவில்லை. அவையெல்லாம் தேவைக்கு அதிகமாக ஏற்கனவே அளிக்கபட்டுவிட்டது. இப்போது நாங்கள் கோட்பது ஜனநாயக முறையில் இலங்கையில் ஓட்டெடுப்பு நடத்துங்கள் என்பதே.
அப்போது தனி ஈழம்தான் வேண்டும் என்று எம் தமிழ் மக்கள் கேட்பார்கள். அப்படி அவர்கள் கேட்கும் பட்சத்தில் பேசாமல் தனி ஈழம் கொடுத்துவிடுங்கள். இல்லை, சிங்களவர்களுடன் இணைந்து ஒரே இலங்கை தேசமாக வாழ எம் தமிழர்கள் விரும்புவார்களேயானால் நாங்கள் பேசாமல் வாய்மூடி இருந்துவிடுகிறோம். நாங்கள் உங்களை கேட்பது இதுதான், போரினால் பெரும் இழப்பை சந்தித்துவிட்ட எம் தமிழ் சகோதர சகோதரிகள் அமைதியுடன் வாழ ஜனநாயக முறையில் பொது வாக்கெடுப்பு நடத்துங்கள். எம் தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் இதைத்தான் விரும்புவார்கள்.
ராஜபட்சேவை லண்டனில் விரட்டியடித்தார்கள் அங்கு அகதிகளாக குடியேறிய நம் தமிழ்ச் சகோதர சகோதரிகள். அதேபோல், நடக்கவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை கிரிக்கெட் அணி ஆடுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது. இலங்கை அணியை ஆடவிடாமல் ஆறரைக்கோடி தமிழர்களும் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும். நம் இனப் படுகொலைக்கு நாம் இதுவரை என்ன செய்துவிட்டோம்?. இதையாவது செய்ய நாம் ஒன்று படுவோம். இலங்கை கிரிக்கெட் அணியை உலககோப்பையில் ஆடவிடாமல் விரட்டியடிப்போம்.
“கண்ணீரோடு விதைப்பவர்கள், கௌரவத்தோடு அறுவடை செய்வார்கள்” என்று பைபிளில் வாசகம் ஒன்று உள்ளது. நாம் கண்ணீர் மட்டுமல்ல ரத்தமும் சிந்தி விதைத்திருக்கிறோம். நிச்சயம் கௌரவத்தோடு அறுவடை செய்வோம். தனி ஈழத் தமிழ் நாட்டை வென்றெடுப்போம்.
unarchitamilan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக