ஈழச்சாவுகளும் சலனமற்ற எழுத்துக்களும்
காலை,
தாமரை பூக்கும் நேரம் அல்ல,
இரவு,
அல்லி மலரும் நேரம் அல்ல.
ஈழத்தில்,
நாள்களை
சிங்களக்குருவிகளின் அலகுகள்
திறக்கின்றன, மூடுகின்றன.
அவற்றின்
இறுக்கமான இரும்பு நகப்பிடிகள்
நேரங்களை
நிரப்புகின்றன தமிழ்ப்பிணங்கள் கொண்டு
கறுப்புக் கனவுகளின்
பாதை நெடுகிலும் காயப்பசியுள்ள
ஈட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நனவுகளின்
மார்பிலிருந்து இரத்தம்
பவுத்த நெடியோடு பாய்கிறது
குறுக்கும் நெடுக்குமாய்
ஈழத்தில்.
தமிழ்மொழி பதைக்கிறது
தமிழ் இயல், தமிழ் இசை தமிழ்நாடகம்
எல்லாமே-
போராடும் தமிழன் கைகளில்
ஆயுதங்களாயிடத் தவிக்கின்றன.
இங்கோ
தமிழனின் பதைப்பும் தவிப்பும்.
வேவு பார்க்கப்படுகின்றன
விசாரணைக்குக்குள்ளாகின்றன.
அர்த்தங்கள் மாற்றி வைக்கப்பட்டுத்
தடை செய்யப்படுகின்றன.
பூண்டோடு
தமிழினம் வேரறுக்கப்பட்டதாக
அறிவிப்பைத்
தயாரித்து வைத்து வெளியிட
அவசரப்படுகின்றன ஊடகங்கள்.
ஆதிக்க வல்லாண்மைகள்
இரத்த தாகமுள்ள வரலாற்றின்
பக்கங்களில்
உள்நாட்டுப் பிரச்சினை
இதுவென்று
தமிழினப் படுகொலைகளைச்
சலனமற்ற எழுத்துக்களால் முடித்துவிடத்
தீர்மானிக்கின்றன.
கடைசியாகப்
பிறக்கப்போகும் ஈழத் தமிழ் குழந்தை
எதைச் சொல்லி அழும்? எப்படி அழும்?
இறந்துபோன
தமிழினத்தின் இறுதிச் செய்தியாக
எதைப் பெறும்
அந்தக் குழந்தை?
மிஞ்சப்போகும் அந்தக் குழந்தை
தமிழினத்தின் விடுதலையாக இருந்தாலும்
நடந்த மரணங்களை
இழப்புகளின் பட்டியலில் இருந்து
வாழ்க்கைகளாய் விடுவிப்பது எப்படி?
அது,
நம்பிக்கையை உறுதிசெய்தாலும்
புதைந்து போன
நட்சத்திரங்களை மீட்பது எப்படி?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக