மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 19 ஜனவரி, 2011

கண்ணீர் தேசம் - 13

கண்ணீர் தேசம் - 13
பத்திரிகைகளில் பிரசுரமாகும் யுத்தம் குறித்த புகைப்படங்களை நேர்கொண்டு காணும் சக்தியற்றவர்களாக இருக்கிறோம். இரண்டு கால்களையும் இழந்தும், சிரித்தபடி இருந்த ஒரு சிறுமி நம் கன்னங்களில் புன்னகையால் அறைந்தாள். முப்பதாண்டுகளுக்கும் மேலாக தன் இணையாகவும், துணையாகவும் இருந்த இல்லக்கிழத்தியை ஒரு குண்டு கிழித்து எறிந்தபோது இயலாமையில் கதறிய ஒரு பெரியவரின் காதல், செவிடாக்கும் குண்டுகளின் இரைச்சலை மீறி வெளிப்பட்டதாம். கொட்டிய ரத்தத்தை நிறுத்தத் தெரிந்த மருத்துவர்களுக்கு, இமைகளின் நுனியில் எப்போதும் வழிந்தோடிக்கொண்டிருக்கும் கண்ணீரை நிறுத்த முடியவில்லை. புகைப்படத்தில் தெரியும் அவரின் சோகம் நம் மீதும் படர்கிறது.

‘மக்கள் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. பயங்கரவாதிகள் மீதே தாக்குதல் நடத்தினோம்’ என்று கூசாமல் சொல்கிறார் இலங்கை அதிபர். தலைமுழுவதும் ரத்தக் காயங்களோடு மயங்கிய நிலையில் இருக்கிற கைக்

குழந்தையை ஏந்தியபடி ஒரு தகப்பன் நிற்கிற காட்சியைக் காணும்போது உள்ளம் பதறி உடல் நடுங்குகிறது. ராட்சத ராணுவ டாங்கிகளும், ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களும் இருக்கிற இன்னொரு புகைப்படத்தைப் பார்க்கும்போது பகீரென்று இதயம் படபடக்கிறது. இன்னும் எத்தனை கைக்குழந்தைகளை பயங்கரவாதிகளாக ராணுவம் கண்டெடுக்கப் போகிறதோ? மற்றொரு புகைப்படத்தில் மருத்துவர்கள் போட்ட கட்டுகளை மீறி, ஒரு இளைஞனின் வயிற்றுப் பகுதியிலிருந்து வெளிப்படுகிற ரத்தம் நமக்கெல்லாம் எதையோ சொல்ல வருவதைப்போலவே இருக்கிறது. பச்சிளங் குழந்தையின் கதறலையே கண்டுகொள்ளாத உலகம், கட்டு மீறி பீறிடும் ரத்தம் சொல்லும் அர்த்தங்களையா கண்டடையப்போகிறது?

‘எங்கள் நாட்டில் எதுவுமே நடக்கவில்லையே’ என்பதுபோல எப்போதும் சிரித்தபடியே எல்லா புகைப்படங்களிலும் தெரிகிற இலங்கை அதிபர் ராஜபக்ஷே மீது அதீத பயம் ஏற்படுகிறது. நடுக்கம் இல்லாமல் செய்யப்படுகிற குற்றங்கள், குற்றவுணர்ச்சியே இல்லாமல் நிகழ்த்தப்படும் போர்கள், தனக்கு வராதவரையில் எதையும் கண்டுங்காணாமல் இருக்கிற உலகத்தின் மௌனம்... இவையெல்லாம் இதயம் இருப்பவர்களுக்கு அதீத பயத்தை ஏற்படுத்துகின்றன. ஹிட்லரைப் போல ஆட்சியாளர்கள் இனத்தை அழிக்க முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக தினம் தினம் செத்தழிகிறது தமிழ் இனம். அப்பாவி மக்களைக் கொன்றழித்துவிட்டு பெருமை கொண்ட ஹிட்லரின் கருப்பு&வெள்ளை புகைப்படங்களை, இப்போது கலர் படங்களாக்கி இருக்கிறது இலங்கை யுத்தம். 

சமீபத்தில் அப்படி அதீத பயம் ஏற்படுத்தியது ஒரு புகைப்படம். இலங்கை ராணுவ வீரர் அடைக்கலம் நாடி ‘அரசு நலன்புரி நிலையம்’ வந்த தமிழர்களின் பிள்ளைகளுக்கு பிஸ்கெட் வழங்கிய காட்சியைப் புகைப்படம் எடுத்து, அரசே எல்லா பத்திரிகைகளுக்கும் கொடுத்தனுப்பியது. இலங்கையில் தமிழர் பகுதிகளில் அரசால் அமைக்கப்பட்டிருக்கும் ‘நலன்புரி நிலையங்களை’ வேறு வார்த்தையில் சொல்வதென்றால், அவை உள்நாட்டு அகதி முகாம்கள்.

பட்டிகளில் அடைக்கப்பட்ட ஆடுகளைவிட மோசமாக நடத்தப்படும் மக்கள், சுகாதார வசதிக் குறைவால் காலரா, மலேரியா, விஷக்காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு எளிதாக இலக்காகிறார்கள். ஆயுதங்கள் வாங்கவே காசு இல்லாமல் அயல்நாடுகளிடம் கையேந்தும் அரசாங்கம், தமிழர்களைக் காப்பாற்ற மருந்து வாங்க பணத்திற்கு எங்கே போகும்? சுனாமி போன்ற இயற்கைப் பேரழிவுகளில் சிக்கி வாழ்விழந்தவர்களின் வளர்ச்சிக்கு உலக நாடுகள் கொடுத்த பணத்தில், மிச்சமிருக்கிற தமிழர்களையும் கொல்ல ஆயுதம் வாங்கியவர்கள், எப்படி மருந்து வாங்குவார்கள்?

தலைமுறைக்கும் ஆபத்து ஏற்படுத்தக்கூடிய ரசாயன ஆயுதங்களை அரசு பயன்படுத்துவதாக மனித உரிமை ஆர்வலர்களே குற்றம் சுமத்துகிறார்கள். தங்களிடம் என்னென்ன வகையான ஆயுதங்கள், விமானங்கள், கப்பல்கள், டாங்கிகள், துப்பாக்கிகள், போர்த் தளவாடங்கள் இருக்கின்றன என்று பட்டியலிட்டு பெருமைப்பட்டுக் கொள்கிறது இலங்கை அரசு. சொந்த நாட்டு மக்களைக் கொல்ல இவ்வளவையும் பயன்படுத்துகிறோம் என்கிற வெட்க உணர்வே இல்லாமல் பெருமைப்படுகிறவர்கள் இன்னொரு நூதன ஆயுதத்தைக் கையிலெடுக்கிறார்கள்... அது பசி!

‘உயிர் பிழைத்தால் போதும்’ என்று அடைக்கலம் நாடி வந்தவர்களுக்கு போதிய உணவு வழங்காமல் பசியால் கொடுமைப்படுத்துவதும், நோய்கள் எளிதாகத் தாக்கும் சூழல்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியற்றவர்களாக மக்களை மாற்றுவதும், மருந்துப் பற்றாக்குறையால் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்வதும் இப்போதும் நடைமுறையாக இருக்கிறது. 

இந்தியாவுக்கு வெளியே காந்தஹாருக்கு, இந்தியர்கள் இருக்கும் விமானத்தைக் கடத்தினர் தீவிரவாதிகள். நாட்டையே அச்சுறுத்தும் தீவிரவாதிகளை விடுவிக்கச் சொன்னதும், அவர்களை விடுவித்து குடிமக்களைக் காப்பாற்றியது இந்திய அரசு. இலங்கையில் குடிமக்களையே பயங்கரவாதிகளாக்கி, விமானம் அனுப்பி, அதில் குண்டுகள் நிரப்பி அவர்களைக் கொன்று குவித்து, ‘போரில் வெற்றி கிடைத்துவருவதாக’ பெருமைப்படு
கிறார்கள் பெரிய மனிதர்கள்.

தமிழர்களின் உரிமைக்கான சில கோரிக்கைகளை முன்வைத்து கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்தினான் வீரப்பன். இது நியாயமற்றது என்றும், அவரை விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாகக் குரல் கொடுத்தனர். மனித உரிமை ஆர்வலர்கள் வீரப்பனிடம் தூது சென்று, மக்களின் உணர்வை எடுத்துச்சொல்லி, நடிகர் ராஜ்குமாரை மீட்டு பத்திரமாக கர்நாடகாவிற்கு அனுப்பி வைத்தனர். சாதாரண மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று குற்றவாளியாகக் கருதப்பட்ட வீரப்பனுக்கு தெரிந்த நியாயம், இலங்கையை ஆளும் தலைவர்களுக்குத் தெரியவில்லை. அதனால் மக்கள் பயங்கரவாதிகளாகவும், கொலைகாரர்கள் ஆட்சியாளர்களாகவும் மாறும் சோகம் அரங்கேறுகிறது.

இலங்கைப் போரின் அக்கிரமத்தை எதிர்க்கும் அடையாளமாக ‘அரை பெடலில்’ சைக்கிள் ஓட்டி, அதில் விறகு கட்டி விற்றுக்கொண்டிருக்கிறார்கள் பல தமிழ்ச் சிறுவர்கள். மக்கள் வாழும் பகுதிகளைத் தேடித்தேடி வேட்டை நாயைப்போல் விமானங்கள் குண்டெறிந்து அப்பாவிகளின் உயிரைக் கொல்வது ஒருபுறமும், இன்னொரு புறம் சிறுவர்களுக்கு பிஸ்கெட் வழங்கி அதைப் புகைப்படம் எடுத்து பத்திரிகைகளுக்குக் கொடுப்பதையும் பார்க்கிறார்கள் சிறுவர்கள். தந்தையைக் கொன்றவர்கள், தாயைக் கொன்றவர்கள், சகோதரர்களைக் கொன்றவர்கள், உறவுகளைக் கொன்றவர்கள் தருகிற உணவுப்பொட்டலங்களை நம்பி இல்லாமல், சுடும் வெயிலில் வெறுங்காலோடு சுள்ளி விறகுகளைப் பொறுக்கி சைக்கிளில் சென்று விற்கும் சிறுவர்களின் சுயமரியாதை, உலகத்தின் மனசாட்சியை உலுக்கவே செய்கிறது. 

ராணுவத்தின் கொலையில் தப்பி, சித்ரவதைகளில் சிக்காமல் மீண்டு, விமான குண்டுவீச்சில் தப்பித்து, காடுகளில் பாம்புகளின் விஷப்பல் படாமல், பூச்சிகளின் கடிகளில் தப்பி, பசிக்கொலையில் உயிர்த்தெழுந்து, மருந்து தட்டுப்பாட்டின்போது தாய்ப்பாலில் சேகரித்த நோய் எதிர்ப்பு சக்தியால் பிழைத்து, ‘போரில் வென்று வருகிறோம்’ என்கிற வெற்றிச் சிரிப்பின் கோரத்தில் தப்பி, உணவுப் பொட்டலங்களுக்குக் கையேந்தாமல், சுயமரியாதையோடு விறகு பொறுக்கும் சிறுவர்களைக் கொலை செய்யும் திட்டம்கூட அரசாங்கத்திடமும் ராணுவத்திடமும் இருக்கலாம். அதுகுறித்த புகைப்படங்களையும் நாம் காண நேரிடலாம். போரில் வெற்றி பெற்றதாக இலங்கையின் ஆட்சியாளர்கள் இனிப்பு வழங்கும் புகைப்படங்களையும் காணநேரிடலாம்.

அப்போது நம்முடைய மனசாட்சி நம்மை நிச்சயம் உலுக்கி கேட்கும்... குழந்தைகள் கொல்லப்படுவதை வெறும் புகைப்படங்களாகப் பார்ப்பதற்கு மட்டுமேவா நமக்கு இரண்டு கண்கள்?              
  unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக