மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 5 ஜனவரி, 2011

கண்ணீர் தேசம்

கண்ணீர் தேசம் - 10
ரோம் நகரம் பற்றி எரிந்தபோது யாரோ ரசித்து பிடில் வாசித்துக் கொண்டிருந்ததாக படித்திருக்கிறோம். ‘ஒரு நாடே பற்றி எரியும்போது ஒருவன் எப்படி பிடில் வாசிக்க முடியும்?’ என்று நம்ப மறுத்தவர்கள் உண்டு. அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படும் ஒரு நாட்டில், இரு நாட்டு அரசுகளின் அனுமதியோடு இரண்டு அணிகள் கிரிக்கெட் விளையாடும்போது பிடில் வாசிப்பது பெரிய விஷயம் இல்லையே? ‘எம்மக்கள் உயிருக்குப் பயந்து காடுகளில் தஞ்சமடைந்திருக்கும் நேரத்தில், இந்தியா இலங்கைக்குச் சென்று கிரிக்கெட் விளையாடக்கூடாது’ என்ற கோரிக்கையை, கோடிகளில் வியாபாரம் நடக்கும் வர்த்தக விளையாட்டு வல்லுநர்களால் எப்படிப் புரிந்து கொள்ளமுடியும்?

போராளிகளின் கை ஓங்கியிருந்த நேரத்தில் ‘ராணுவ வீரர்கள்’ இலங்கைக்குப் புறப்பட்டார்கள். ராணுவத்தின் கை ஓங்கியிருக்கும் தருணத்தில் தமிழர்களின் மரணத்தைக் கொண்டாட ‘கிரிக்கெட் வீரர்கள்’ புறப்பட்டார்கள். இலங்கை மக்களுக்கும், இந்திய மக்களும் தட்டுவதற்கு இரண்டே கைகள் இருந்ததை எண்ணி வருத்தப்படுகிற சூழல் வந்தது. ராணுவ விமானம் ‘கேட்க நாதியற்ற தமிழர்களின்’ மீது குறிபார்த்து குண்டெறிவதற்கு கைதட்டுவதா? கிரிக்கெட் வீரர்கள் நேர்த்தியோடு விளையாடி அடித்த ‘சிக்ஸர்’களுக்கு கைதட்டுவதா என்று குழம்பித்தான் போனார்கள் மக்கள்.

நம் தலைவர்களை தலைகுனிய வைக்கிற கேள்விகளைக் கேட்டு, வெரிதாஸ் வானொலிக்கு கடிதம் எழுதினாள் ஒரு தமிழ்ச் சகோதரி. அமைதிப்படை என்கிற பெயரில் 1987&89 காலப்பகுதியில் இந்திய ராணுவம் ஆடிய கோரத் தாண்டவங்களைப் பட்டியலிடுகிற அந்தக் கடிதத்தின் கேள்விகளுக்கு இந்தியத் தமிழனாக வெட்கப்படுவதைத் தவிர வேறென்ன செய்வது?

ஈழத்தின் பருத்தித்துறை பெண்ணொருத்தியின் கடிதம் இது...

‘இந்த மண்ணில் இந்தியப் படைகளால் நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளின், பாலியல் வல்லுறவுகளின் கணக்கு தெரியுமா உங்களுக்கு? சிதைக்கப்பட்ட பெண்களின் வாழ்வை உங்களால் சீர்படுத்த முடியுமா? இல்லை... இதனால் தற்கொலை செய்துகொண்ட பெண்களின் உயிரை உங்களால் மீட்டுத்தர முடியுமா? இவற்றுக்கெல்லாம் காரணம் யார்? வீட்டுக்கொரு பிள்ளையாக இருந்த எத்தனை இளைஞர்கள் கொன்று குவிக்கப்பட்டு, பெற்றோர்கள் மலடாக்கப்பட்டனரே... ஏன்? அவர்களின் பிரதேச வல்லாண்மையைக் காட்டுவதற்கு சுதந்திரத்திற்காக ஏங்கும் இந்த சிட்டுக்குருவிகளின் சின்ன இறகுகளை ஏன் சிதைத்துக் கொன்றார்கள்? மொழியால் ஒன்றானவர்கள் என்று சொல்லப்படும் அயலகத்துத் தமிழர்களிடம் தார்மீக ஆதரவை வேண்டி நின்றதற்குத் தண்டனையா இது? 

வீதிவலம் வந்த இந்தியப் படைகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் முகமாக, எனது தெருவிலுள்ள ஒவ்வொரு வீட்டிலும் இருந்த ஆண்கள் இழுத்துச் சுடப்பட்ட ஞாபகங்கள் இன்னும் நெஞ்சுக்குள் கனக்கின்றனவே! 15 அப்பாவி இளைஞர்களை அன்று கொன்றுவிட்டு, ‘15 எல்.டி.டி.ஈ. பயங்கரவாதிகள் இன்று பருத்தித்துறையில் கொல்லப்பட்டனர்’ என்று சொன்னதைக் கேட்டு நிறுத்திக்கொண்டோம் இந்திய வானொலிச் செய்தி கேட்பதை!

புரிந்துகொண்டோம், இந்தியப் படைகளுக்கும், ஸ்ரீலங்காவின் படைகளுக்கும் இடையிலான ஒரேயொரு வித்தியாசம் எண்ணிக்கை மட்டுமே என்பதை! இத்தனை நாட்களாக நாம் மனிதனாகப் பிறந்ததற்காகவல்ல, பெண்களாகப் பிறந்துவிட்டோமே என்பதற்காக எமக்குள்ளேயே எம்மை வெறுத்துக் கொண்டிருந்தோம். அந்த அளவு நாம் இம்சைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உங்களுக்கு நாம் எப்படி விளங்கப்படுத்துவது?

தமிழகத்தின் ஆறு கோடித் தமிழர்களை நினைக்கும்போதெல்லாம் ஏற்படும் பயத்தில் சிங்களவர்கள் எம்மைத் தாக்கி அழித்தார்கள்; அழிக்கிறார்கள். அவர்களுக்குப் புரியவில்லை... நாம் என்றுமே சென்னையைவிட கொழும்பு தொலைந்துபோவதை விரும்பாதவர்கள் என்று. சந்தேகம் அவர்களைத் துரத்த, அவர்கள் எம்மைத் துரத்துகிறார்கள். ஆனால், தமிழகத்திலோ எம்மை ஈழத்தமிழர்கள் என்று தெரியுமே ஒழிய, தமிழர்கள் என்று புரிவதில்லை.

இறந்து கிடக்கும் எம்மவர்களின் பெயராலே கேட்கிறேன்... பதிலளியுங்கள். எறும்புகள் கொல்லப்படும்போது சத்தம் எழுப்புவதில்லையாம். அதனால் அவற்றின் அநியாயமான இறப்புகள்கூட அங்கீகரிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால், நாம் தொண்டை கிழியக் கத்துகிறோமே... கேட்கவில்லையா? இல்லை, காதுகளை இறுகப் பொத்திக்கொண்டு விட்டீர்களா?’
பாதிக்கப்பட்ட ஒரு ஈழத் தமிழ்ப் பெண்ணின் நீளும் கேள்விகளின் வெப்பம் பொறுக்க முடியவில்லை. குற்றங்களை அங்கீகரித்த பாவத்திற்கு என்ன பரிகாரம் செய்யப்போகிறோம்? 1990&ம் ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் சிங்கள ராணுவத்தின் புக்காரா விமானங்களின் வெடிகுண்டு தாக்குதலுக்குப் பயந்து 10 அடி அகலமுள்ள சாலையில் 5 லட்சம் தமிழர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நடந்த மனிதகுல அவலத்தைப் பார்த்து அமைதியாகத்தானே இருந்தோம். ஒரே இரவில் அத்தனை மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி, சொந்த நாட்டிலேயே அகதியாகி, அடுத்தவேளை உணவுக்குக் கையேந்திய காட்சியைக் கண்டும் காணாமல்தானே இருந்தோம்.

வயிற்றில் சுமக்க முடிந்த பிஞ்சுகளை கையில் நெடுந்தூரம் சுமக்க முடியாமல் வழுக்கிக்கொண்டு, ஆயிரக்கணக்கானோர் காலடியில் மிதிபட்ட கோரத்தைத் தடுக்க ஏதும் செய்யவில்லையே? வெயிலின் தாகத்தில் நாக்கு வறண்டவர்களின் மீது கருணை கொண்ட மழைதானே தாகம் தீர்க்க தண்ணீர் தந்தது. நமக்கெல்லாம் மழையில் நனையாமல் இருக்கப் பயன்படும் குடைகள் அவர்களுக்கு மழை நீர் பிடிக்கும் குடங்களான சோகத்தை நாம் கண்டுகொள்ளவே இல்லையே? பசித்து மயங்கியவர்களுக்கு அந்த சாலைகளின் நெடுக இருந்த மரங்கள் பழங்களைக் கொடுத்து பசியாற்றின. சின்ன வயதில் வயிற்றிலும், மார்பிலும் சுமந்த பெற்றோரைச் சுமக்க முடியாமல் மருகி நின்ற பிள்ளைகளை, அந்த சாலையில் இருந்தவர்கள் தேற்ற வார்த்தைகளின்றி தடுமாறியது நம் பார்வையில் படவே இல்லையே? ராஜீவ் அப்போது உயிருடன்தான் இருந்தார். அவருடைய மரணத்திற்கு முன்பே நம்மிடம் அலட்சியம் இருந்தது. ராஜீவ் படுகொலைக்குப் பிறகு நம் அலட்சியத்திற்கு ஒரு காரணம் கிடைத்தது.

நார்வே, இலங்கைக்கு அண்டை நாடு இல்லை. கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகம் எதுவும் நடக்கவில்லை. கோடிக்கணக்கான தமிழர்கள் நார்வேயில் பிறக்கவும் இல்லை; வாழவும் இல்லை. தமிழர்களை மனிதர்களாகப் பார்க்கிற அன்பு இருந்தது; அக்கறை இருந்தது. மனிதநேயம் இருந்தது. போர்நிறுத்தம் செய்யச்சொல்லி நார்வே தலைவர்கள் இலங்கை அரசுடன் பேசினார்கள். இது எல்லாமே நமக்கு வெறும் செய்திதான். கட்சித் தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்ததற்கே பஸ் எரித்து, கடைகள் கொளுத்துகிற நாம், பேரினவாதம் ஆடிய பேயாட்டத்திற்கு எதிராக, கொல்ல வரும் கழுகிடம் தம் குஞ்சுகளைக் காக்கும் தாய்க்கோழிகள் காட்டுகிற எதிர்ப்பைக்கூட காட்ட இயலாத துர்பாக்கிய நிலையில் இருந்தவர்களை பயங்கரவாதிகள் என்றோம். மும்பையில் ஒரு பீகாரி அடித்துக் கொல்லப்பட்டதால், ஒட்டுமொத்த பீகார் அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து ராஜ் தாக்கரேவை கைது செய்ய வைத்தார்கள். இறந்துபோன தலைவர்களின் சிலைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று வீதிக்கு வந்து போராடுகிற தலைவர்கள், உயிருக்குப் போராடும் அப்பாவி மக்களைப் பார்த்து ஏன் கண்மூடிக் கொள்கிறார்கள்?

ஐந்து லட்சம் மக்கள் ஒரு குறுகிய சாலையில் வாழ்வு தேடி பயணித்தபோது இந்திய ராணுவத்தை அனுப்பினோம். இப்போது ஐந்து லட்சம் தமிழர்கள் காடுகளில் தஞ்சமடைந்து தவிக்கும்போது கிரிக்கெட் அணியை அனுப்பினோம். இன்னும் போர் நீடித்து, ஒட்டுமொத்த தமிழர்களும் பிணக்குவியலாகும்போது, சகோதரத் தமிழர்களுக்கு வாய்க் கரிசியும், ராஜபக்ஷேவுக்கு வாழ்த்துச் செய்தியும் அனுப்ப நேரிடலாம்.

ஈழத்தமிழர்களின் அழுகை நமக்கு முதலில் கேட்டால் போதும்; பிறகு உலகம் கேட்கும். ரோம் நகரத்தை எரித்தவர்களைவிட, பிடில் வாசித்த ஒருவன்தான் வரலாற்றில் இப்போதும் குற்றவாளி. தமிழ் இனப்படுகொலைகளை வேடிக்கை பார்க்கும் நம் அத்தனைப் பேரையும், அடுத்த தலைமுறை ‘பிடில் வாசித்த’ குற்றவாளிகளாக நிறுத்தக்கூடும்.
 
unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக