‘அறிமுகமற்ற மனிதரிடமும் நீ எனக்கு சகோதரத்துவம் கொடுத்தாய்!
என்னுள் கருணையின் வளம்
நெருப்புபோல கனன்று எரியச் செய்ய,
நீ எனக்குக் கற்றுக்கொடுத்தாய்...
நீ என்னை இறப்பவற்றவனாக்கி இருக்கிறாய்!
இவ்வாறெனில் இனி நான்
எனக்குள்ளேயே ஒடுங்க மாட்டேன்!’
தன்னை மக்கள் கவிஞனாக மாற்றிய கம்யூனிஸ்ட் கட்சிக்கு, நோபல் பரிசு பெற்ற பாப்லோ நெருடா எழுதிய கவிதையின் வரிகளில் கண்பதிக்கிறார் நல்லகண்ணு. ‘‘இந்தக் கவிதைக்கு, ‘எனது அரசியல் கட்சிக்கு...’ என்று தலைப்பு வைத்தார் பாப்லோ நெருடா. அவரைப்போல எனக்கு நேர்த்தியான வார்த்தைகளால் சொல்லத் தெரியாது. என்னால் முடிந்த அளவு நெருடாவின் வார்த்தைகளை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். மக்கள் நலன் கருதும் ஒரு பொதுவாழ்வை வாழச்செய்த எனது கட்சிக்கும், தோழர்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்...’’ ஒரு குழந்தையைப் போல சிரிக்கிறார் அந்த முதுபெரும் கம்யூனிஸ்ட் தோழர்.
‘‘1925-ஆம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம்தான் நான் பிறந்த ஊர். சாதாரண நடுத்தர விவசாயி என் அப்பா. ‘தானுண்டு தன் வேலையுண்டு’ என்று வாழ்ந்து கொண்டிருந்தவருக்கு, என்னைப் பற்றி வரும் பஞ்சாயத்துகளைத் தீர்ப்பதே வேலையாகிவிட்டது. ‘நாலெழுத்துப் படிச்சு வேலைக்குப் போகாம, போராட்டம், அரசியல்னு கொடி பிடிச்சுக்கிட்டு அலையுறானே...’ என்று அப்பாவின் நண்பர்கள் சொல்லும் புகார்களின் பேரில் என் மீது தினமும் விசாரணை நடக்கும். விலக்கிவிட்டாலும் தாயின் கால்களை ஓடிவந்து கட்டிக்கொள்ளும் குழந்தையைப்போல, மீண்டும் மீண்டும் நான் போராட்டக் களத்தில் போய் நின்றேன்.
தொழிலாளர்களோடுதான் ஆரம்பித்தது என் பொது வாழ்க்கை. தமிழகத்தின் முதல் பஞ்சாலை தூத்துக்குடியில் தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் சுரண்டலை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டம்தான் என்னுடைய முதல் சுவடு. ‘சொல்லக் கொதிக்குடா நெஞ்சம்; வெறும் சோற்றுக்கா வந்ததிந்த பஞ்சம்?’ என்ற பாரதியின் வரிகளைப் படித்துவிட்டு நிமிர்ந்தால் பஞ்சாலை தொழிலாளர்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருந்தனர். பள்ளியில் படிக்கிற எனக்கு இது பெரிய பாதிப்பை உண்டாக்கியது. பனையோலை பெட்டியைத் தலையில் சுமந்தபடி வீடுவீடாக அரிசி சேகரித்தேன். மனநிறைவு என்றால் என்னவென்று உணர்ந்த முதல் நிகழ்வு அது.
தொழிலாளர்களின் வறுமை என்னைப் பாதித்தாலும் நான் காங்கிரஸ் சார்பாளனாகவே இருந்தேன். என் எதிர்ப்பு மனோபாவம், ‘வெள்ளையர்களே வெளியேறுங்கள்’ என இருந்த நேரத்தில், பலவேசன் செட்டியார் என்கிற ஆசிரியர் என் வாழ்வில் வந்து சேர்ந்தார். பொதுவுடைமைக் கொள்கைகளையும், தொழிலாளர்கள் மீதான சுரண்டலையும், சாதிய அடக்குமுறைகளையும் பற்றி மணிக்கணக்காக பேசுவார். இது எனக்குள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. வெள்ளையர் அரசாங்கம் தடைசெய்த புத்தகங்கள் எல்லாம் எனக்குப் படிக்கக் கிடைத்த காலம் அது. எம்.எஸ் சுப்பிரமணி அய்யர் எழுதிய, ‘பகத்சிங்கின் வாழ்க்கை வரலாறு’ புத்தகத்தை வகுப்பில் வைத்து படித்ததற்காக தண்டிக்கப்பட்டேன். வெகு அமைதியானவனான என்னிடம் அந்தப் புத்தகத்தைப் பார்த்த தலைமை ஆசிரியர், ‘மண்பூனை எலி பிடிக்க ஆரம்பிச்சுடுச்சா?’ என்று கேட்டார்.
திரு.வி.கலியாணசுந்தரனாரின் நூல்கள், தேசியமும் பொதுவுடைமையும் கலந்த சிந்தனைக் கருவூலங்களாக இருந்தன. ‘கார்ல் மார்க்ஸ் முனிவர்’ என்ற பெயர் எனக்கு அவர் நூல்கள் மூலமாக அறிமுகமானது. சாதிக் கொடுமையை மிகநேரடியாகப் பார்க்கிற அனுபவமும் கிடைத்தது. கேரளாவில் புழுக்களைவிட மோசமாக கருதப்பட்ட ஈழவ மக்களைப் போலவே தமிழகத்தில் ‘இல்லத்து பிள்ளைமார்’ என்கிற கைத்தறி நெசவு செய்யும் சாதியினர் இருந்தனர். மிகவும் மோசமான நிலையில் ஒதுக்கப்பட்டிருந்தவர்கள், குடும்பம் குடும்பமாக வெளியூர்களுக்குக் கிளம்பிப் போவதைப் பார்த்திருக்கிறேன். சொந்த ஊரில் குறைந்தபட்ச மானத்தோடு வாழ வழியில்லாமல், வேறு ஊர்களில் அடைக்கலமாகப் போனார்கள். இது என்னைக் கடுமையாக பாதித்தது.
திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் படிக்க சேர்வதற்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ஆனேன். சுதந்திர போராட்டம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. ஆங்கிலேயர்களை எதிர்க்கும் போராட்டத்தில் இருந்தபோது, ‘நாட்டு விடுதலைக்கு மட்டும் போராடிப் பயனில்லை; மக்கள் விடுதலைக்கும் போராட வேண்டும்’ என்கிற கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை என்னை வெகுவாக ஈர்த்தது. புத்தகங்களுக்குள் அடங்கிப்போகும் வெறும் தத்துவமாக, கம்யூனிச கொள்கைகள் இல்லை. ஒடுக்கப்படுகிற மக்களின் ஆயுதமாகவும் இருந்தது.
காங்கிரஸ் கட்சியினர் தேசிய விடுதலை என்றால் உயிரையும் தர முன்வந்தனர். ஆனால், சாதிக் கொடுமைகள் பற்றி வாயே திறக்காமல் மௌனமாக இருந்தனர். மக்கள் விடுதலையில் போதிய தெளிவோ, உறுதியோ இல்லாத தன்மையும், பலவேசன் செட்டியாரின் தாக்கமும் என்னை கம்யூனிஸ்ட் ஆக்கியது. அந்த நேரத்தில் கட்சிப் பணியாற்ற முழுநேர ஊழியராக வரமுடியுமா என்று கேட்டதும், கொஞ்சமும் யோசிக்காமல் படிப்பை நிறுத்திவிட்டுக் கிளம்பினேன்.
என் முடிவால் வீட்டில் அதிர்ச்சி அலை வீசியது. அறிவியல் பாடத்தை நன்றாக படிக்கக்கூடிய நான், படித்து உத்யோகத்திற்கு வருவேனென்று நம்பிக் கொண்டிருந்தனர். வீட்டைப் பற்றியெல்லாம் சிந்திக்க நேரமில்லை. நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் தங்கியிருந்து முழுநேரம் பணியாற்ற கட்சியால் பணிக்கப்பட்டேன். அங்கு பேராசிரியர் ந.வானமாமலை இருந்தார். ஆரோக்கியமான விவாதங்களின் மூலம் என்னையும், என் சிந்தனைகளையும் செழுமைப்படுத்தினார். இது போன்ற பெரியவர்களின் தொடர்பும், அவர்கள் தந்த உற்சாகமும் சோர்வில்லாமல் போராட பெரிதும் உதவின.
வெள்ளையர்கள் ஆட்சியில் விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக இருந்தது. ராஜா காலங்களில் நிலத்தில் விளைச்சல் இருந்தால் மட்டுமே வரி கட்டிய விவசாயிகள், பிரிட்டிஷ் ஆட்சியில் விளைச்சல் இருந்தாலும், இல்லாமல் போனாலும் வரி கட்டுவது கட்டாயமானது. மேலும், அப்போது பர்மாவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்பட்டதால் நெல் விலை மோசமாக சரிந்தது. இந்த நிலையில் இரண்டாம் உலகப்போரில் ரங்கூன் மோசமாக தாக்கப்பட்டதால், அரிசி போக்குவரத்து திடீரென்று நின்றுபோனது. அரிசிக்கு கடும் தட்டுப்பாடு. நிலைமையை சமாளிக்க அரசு ரேஷன் முறையை அமலுக்குக் கொண்டு வந்தது.
அப்போது பிரிட்டிஷ் அரசால் ‘உணவுக்குழு’ ஒன்று அமைக்கப்பட்டது. பலகட்சியைச் சேர்ந்தவர்களும், பல சாதியைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருந்தனர். நானும் இளம் வயதிலேயே அதில் உறுப்பினரானேன். உயர்சாதி நிலபிரபுக்கள் நெல்லை பதுக்கிவைத்து, கேரளாவுக்கும், நாட்டின் பிறபகுதிகளுக்கும் கடத்தி கொள்ளை லாபம் சம்பாதித்தனர். உணவுக்குழுவில் இருந்த நான், இதை கடுமையாக எதிர்த்தேன். அரசுக்கு புகார் கடிதம் எழுதினேன். கடத்தல்காரர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டனர். உயிருக்கே ஆபத்தான இத்தகைய முயற்சிகளில் என்னுடைய முரட்டுத் துணிச்சலும், கட்சியின் கொள்கை பலமும் கைகொடுத்தன.
1946-ஆம் ஆண்டில் விவசாயிகளைத் திரட்டி, சைவ ஆதீனங்கள், வைணவ மடங்களுக்கு எதிராகப் போராடினோம். ஏராளமான நிலங்களைத் தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த மத அமைப்புகள், ஏழை விவசாயிகளை மிகக் கேவலமாக நடத்தின. ‘ஓடுங்குடி’ என்று பெயரிடப்பட்டு, உழைக்கும் மக்கள் அவமானப்படுத்தப்பட்டனர். தாங்கள் வேலைபார்க்கும் நிலத்தில் வீடுகட்டக் கூடாது. கூரைமட்டும் போட்டுக்கொள்ளலாம். திண்ணையோ, சுவரோ எழுப்பக்கூடாது என்று கொடுமையாக நடந்துகொண்டனர்.
அதே நேரம் நிலத்தில் உழைக்கிற மக்களுக்கு உரிய கூலியையும் முறையாக வழங்காமல் சுரண்டின மடங்கள். ‘நெல்லும் தானியங்களும் ரொம்ப நாள் தேக்கத்திலிருந்து கெட்டுப்போனாலும் பரவாயில்லை, மக்களுக்குத் தரமாட்டோம்’ என்ற கருத்து யாருக்கும் கோபத்தை உருவாக்கும். அதனால் சில நேரங்களில் வன்முறையில் இறங்குவது தவிர்க்க முடியாதிருந்தது. அடிப்படையில் மென்மையான குண இயல்பைக் கொண்டிருந்த நான், மக்களுடன் போராடும்போது, ‘கொடுக்காவிட்டால், எடுத்துக்கொள்வோம்’ என்று தீவிரமாக இறங்கி செயல்பட்டேன். இன்று நக்ஸலைட்டுகள் செய்வதை அன்று நாங்கள் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். போராட்டத்தில் ஆயுதம் தவிர்க்க முடியாத அம்சமாக இருந்தது.
எங்களை அடிப்பதற்காக அடியாட்கள் வரவழைக்கப்பட்டனர். ஆன்மிகம் வளர்ப்பதாகச் சொல்லும் மடங்களிலும் ஆதீனங்களிலும் அடியாட்களே நிரம்பி வழிந்தனர்.
ஏழைகளைத் தூண்டிவிட்டு கலவரம் செய்வதாக எங்கள்மீது குற்றம் சாட்டப்பட்டது. போராட்டம் என்பது வெறும் கோஷம்போடுகிற செயலோ, சாராயம், பிரியாணி பொட்டலம் வாங்கித்தந்து ஆள் சேர்க்கிற இன்றைய அரசியல் கூட்டமோ அல்ல. உயிருக்கே ஆபத்தான நிலை எந்த நேரத்திலும் வரும்.
கம்யூனிஸ்ட்கள் சொல்கிறார்கள் என்பதற்காக, மக்கள் ஒன்று திரண்டு போராட மாட்டார்கள். அன்றாட வாழ்க்கையில் அவ்வளவு அவமானங்களையும், அவலங்களையும் சந்திப்பவர்களாக மக்கள் இருந்தனர். அதுதான் அவர்களை ஒன்று சேர்த்தது. அதற்கு நாங்கள் ஒரு கருவியாக இருந்தோம். அவர்களுடைய காயங்களுக்குப் போராட்டங்களே மருந்தாக அமைந்தன.
தீவிரமான அரசியல் நடவடிக்கையில் இயங்கிய என்னை 1949-ஆம் ஆண்டு ‘நெல்லை சதி வழக்கில்’ காவல்துறை கைது செய்தது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டேன். ஆறாண்டுகள் சிறைவாசம். உண்மையிலேயே நான் ஓய்வெடுத்த காலம் அதுதான்.
விடுதலையான பிறகும் போராட்டமும் சிறைவாசம் தவிர்க்க முடியாத அம்சமாகவே இருந்தது. இந்திய சுதந்திரத்தின் வயதைவிட என்னுடை அரசியல் வாழ்க்கையின் காலம் அதிகம். ஜீவா, ராமமூர்த்தி, சீனிவாச ராவ் போன்ற கம்யூனிச தலைவர்களோடும், பெரியார், காமராஜர், அண்ணா போன்ற மாற்றுக் கட்சி தலைவர்கள் அரசியலில் இருந்த காலத்தில் நானும் இருந்திருக்கிறேன் என்பதே என்னுடைய பெருமையாகக் கருதுகிறேன்.
அறுபது ஆண்டுகளுக்கு மேல் மக்களோடு இருந்தாலும், ஒரு தேர்தலில்கூட நான் வென்றது இல்லை. இரண்டு முறை சட்டமன்ற தேர்தலிலும், ஒரு முறை நாடாளுமன்ற தேர்தலிலும் கட்சி என்னை வேட்பாளர் ஆக்கியது. மூன்று முறையும் தோல்விதான் பரிசு. ‘வருத்தமாக இல்லையா?’ என்று பலர் கேட்டிருக்கிறார்கள். எதற்காக நான் வருத்தப்பட வேண்டும்?
களத்தில் நின்று போராடிய தருணங்களின் பலனைப் பார்க்கிற வாய்ப்பு பல தலைவர்களுக்குக் கிடைப்பதில்லை. என் போராட்டங்களின் பலன்களைக் கண்முன்னால் பார்க்க முடிந்ததே மனநிறைவாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புக்கு முன்பு சொந்த இழப்புகள் பெரிதாகப் படவில்லை. எனக்கு எதையும் இழந்துவிட்ட உணர்வும் இல்லை. கைசுத்தமான ஒரு பொது வாழ்க்கையை வாழ்ந்துவிட்ட மனநிறைவுக்கு முன்னால் வேறென்ன பெரிதாக இருந்துவிட முடியும்?’’
-கம்பீரமாகக் கேட்கிறார் தோழர் நல்லகண்ணு.
காலம் பலரை கௌரவித்திருக்கிறது. நல்லகண்ணு போன்ற சிலர்தான் காலத்தைக் கௌரவித்து இருக்கிறார்கள்!
unarchitamilan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக