மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

சனி, 1 டிசம்பர், 2012

புதிய இட்லரின் மகப்பேற்றுத் தாதி காந்திநாடு - பழ. நெடுமாறன்

2012ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில்  ஐ.நா. மனித உரிமைக் கமிசனின்  உலகளாவிய மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை அமைச்சர் மகிந்த சமரசிங்கே தலைமையில் அந்நாட்டின் குழு கலந்துகொண்டது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா மற்றும், நார்வே நாட்டு பிரதிநிதிகள், இராசபக்சே அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்கள். ஐ.நாவிற்கான அமெரிக்கத் தூதர் எலின் சேம்பர்லைன் டொனாஹோ பேசும்போது, ஐ.நா. மனித உரிமைக் குழு செய்த பரிந்துரைகளை இராசபக்சே அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது எனச் சாடினார்.
இராசபக்சே அரசு அமைத்த நீதி விசாரணை நல்லிணக்க ஆணைக்குழு போர்க் குற்றங்களையும் போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடூரங்களையும் அடியோடு மறைப்பதற்கு முயற்சி செய்வதாகவும் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் குற்றம் சாட்டின.
சீனா, ரஷ்யா, கியூபா ஆகியவை ஐ.நா. மனித உரிமை குழுவிற்குள் பிளவு ஏற்படுத்த அமெரிக்காவும் பிற நாடுகளும் முயற்சி செய்வதாகக் கூறின.
இந்தியா, ஸ்பெயின், ஆகியவை இலங்கை அரசின் மீது மென்மையான விமர்சனங்களை வைத்தன. மேலும் இலங்கையில் அனைத்துலக மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டது குறித்து வெளிப்படையாகவும் முழுமையாகவும் விசாரணை நடத்த முன்வருமாறு இலங்கை அரசை வற்புறுத்தின. ஆனால், போரின் போது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளையும் போர்க் குற்றங்களையும் குறித்து இந்தியா வாயைத் திறக்கவேயில்லை.
அதே வேளையில் 1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட உடன்பாட்டின்படி 13வது திருத்தச் சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தும்படி இந்தியா வேண்டிக்கொண்டது. இலங்கையில் உள்ள தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர்களையும் இதன் மூலம் திருப்திப்படுத்தலாம் என இந்தியா கனவு காண்கிறது. ஆனால், இலங்கையில் சிங்கள தீவிரவாத கட்சிகள் 13வது சட்டத் திருத்தத்தை அடியோடு இரத்து செய்யவேண்டுமென்று வற்புறுத்துகின்றன. இக்கட்சிகள் இராசபக்சே அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது இந்தியாவுக்கு தெரியாதா என்ன? கூட்டணிக் கட்சிகளை மீறி இராசபக்சே ஒருபோதும் செயல்படமாட்டார் என்பதும் இந்தியாவுக்குத் தெரியும். உலகத் தமிழர்களை ஏமாற்றுவதற்கு இந்த நாடகத்தை இந்தியா நடத்துகிறது.
சுதந்திரமான அமைப்பும் இந்தியா உட்பட பல நாடுகளின் நீதிபதிகளைக் கொண்டதுமான டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த முற்பட்டபோதும், ஐ.நா. விசாரணை குழு விசாரணை நடத்த முயன்றபோதும் அவைகளை தனது நாட்டிற்குள் நுழையவோ விசாரணை நடத்தவோ அனுமதிக்க இராசபக்சே பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஆனால் மேற்கண்ட இரு அமைப்புகளும் தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில் அப்பட்டமான மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலைகளும்  இழைக்கப்பட்டிருப்பதை உறுதிசெய்தன.
2010ஆம் ஆண்டு டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பிற்குப் பிறகு அணை உடைந்த வெள்ளம் போல ஏராளமான ஆதாரங்கள் அதனிடம்  வந்து குவிந்தன. மிகக்கொடுமையாக நடைபெற்ற அட்டுழியங்கள் மிகப் பெரிய அளவில் நடைபெற்ற இனப்படுகொலைகள் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்தன. இவற்றை விசாரணை செய்ய 2013 ஏப்ரலில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின்  நீதிபதிகள் மீண்டும் கூட இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் சர்வதேச சட்ட நிபுணர்களும் பங்கேற்கிறார்கள்.
போர்க் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அறவே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காகவும் சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி விவாதித்து பல சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளனர். அவற்றை கீழே சுருக்கமாகத் தந்துள்ளோம்.
போரில் இழைக்கப்படுகிற குற்றங்களைத் தடுப்பதற்காக பல சர்வதேச மாநாடுகள் கூடி இதற்கான சர்வதேசச் சட்ட விதிமுறைகளை வகுத்துள்ளனர். 1899, 1907ஆம் ஆண்டுகளில் ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில்  விதிமுறைகள் வகுக்கப்பட்டன. 2ஆம் உலகப்போருக்குப்பின் 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி இலண்டன் பட்டயத்தை வெளியிட்டன. போர்க் குற்றங்களுடன் அமைதிக்கு எதிரான குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவையும் இந்தப் பட்டயத்தில் இணைக்கப்பட்டன.
இந்த சர்வதேச சட்டவிதிமுறைகளின்படி 2ஆம் உலகப்போரில் மேற்கண்ட குற்றங்களை இழைத்த ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள்  படைத்தளபதிகள் ஆகியோர் மீது விசாரணை நடத்த சிறப்புப் போர்க் குற்ற நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டார்கள்.
பிற்காலத்தில் யூகோஸ்லோவியா அதிபரான மிலோசேவிக் தனது நாட்டைச் சேர்ந்த  கொசவோ மக்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்தார் என்பதற்காக அவருக்கு எதிரான நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டது.
1998ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. பாதுகாப்புக் குழு இப்பிரச்சினையில் தலையிட்டு யூகோஸ்லாவியாவின்  இராணுவ நடவடிக்கையைக் கண்டனம் செய்ததோடு அதற்கு எதிராக பொருளாதாரத் தடை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதே ஆண்டு செப்டம்பரில் பாதுகாப்புக் குழு கூடி கொசவோ பகுதியிலிருந்து வெளியேறும்படி செர்பிய இராணுவத்திற்கு ஆணையிட்டது. அது மறுக்கப்பட்ட காரணத்தினால் ஐ.நா.வின் சார்பில் நேட்டோ படைகள் அந்நாட்டிற்குள் புகுந்தன. இதன் விளைவாக செர்பிய இராணுவம் பின்வாங்கியது. கொசவோவிலிருந்து அகதிகளாக வெளியேறிய அல்பேனிய முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினார்கள். கொசவோ தனி நாடானது.
யூகோஸ்லாவிய அதிபர் மிலோசோவிக் நேட்டோ படைகளால் கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டார். போர்க் குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை நடைபெற்றுவரும் வேளையிலேயே சிறையிலேயே அவர் மரணம் அடைந்தார்.
போஸ்னியோ முன்னாள் அதிபர் கராட்ஜிக் என்பவர் போர்க் குற்றங்களுக்காக 2008ஆம் ஆண்டு சூலையில் கைது செய்யப்பட்டு போர் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சர்வதேச நீதிமன்றத்தின் பாதுகாப்பில் சிறை வைக்கப்பட்டார். அவர் மீது விசாரணை தொடர்ந்து நடக்கிறது.
மேலேகண்ட போர்க் குற்றவாளிகளைவிட மிகக்கொடிய போர்க் குற்றவாளி இராசபக்சே ஆவார்.  மனித குலத்திற்கு எதிராக மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றங்களைக் கூச்சமின்றி இழைத்தவர் அவர் ஆவார். ஆனால் அவர் இப்போது ஐ.நா. உட்பட உலக நாடுகளை அவமதிக்கத் துணிந்திருக்கிறார். இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்களும் திட்டமிட்ட இனப்படுகொலைகளும் அப்பட்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என அவர் கருதுகிறார். இந்தியாவும் சீனாவும் தனக்குத்துணையாக இருக்கும்வரை  எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனத் துணிந்திருக்கிறார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல இலங்கையில் சனநாயக, மனித உரிமை ஆகியவற்றுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒழித்துக்கட்டுகிறார். அவர்கள் சிங்களவராக இருந்தாலும் விட்டுவைப்பதில்லை. ஏராளமான சிங்களப் பத்திரிகையாளர்களும் சிங்களக் கட்சித் தலைவர்களும் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டில் சனநாயகத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு சர்வாதிகார நச்சு மரத்தை ஊன்றி நிறுத்தியிருக்கிறார்.
எடுத்துக்காட்டாக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்புத் துறை உட்பட 79 துறைகளைக் வைத்திருக்கிறார்.
அவருடைய சகோதரர்களும் நெருங்கிய உறவினர்களும் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
சிங்கள இராணுவத்தின் வெற்றிக்குக் காரணமான தலைமைத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகா போர் முடிந்த பிறகு என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும். இன்றைக்கும் அவருடைய உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைமையிலும் அங்கிருந்து வெளியே தப்பிச்செல்ல முடியாமலும் தவிக்கிறார்.
அண்மையில் பல வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஷிரானி பண்டாரநாயகா மீது இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானத்தினைக் கொண்டு வந்து அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராசபக்சே கட்சிக்கு உள்ள பெரும்பான்மையின் காரணமாக இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி. அரசு நிர்வாகமும் இராணுவம் ஆகியவற்றை முழுமையாக தனது சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டுவந்த இராசபக்சே இப்போது அந்நாட்டின் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டார்.
மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம், ஊழல் ஒழிப்பு குழு, அரசுப்பணிகளுக்கான தேர்வாயம் ஆகியவற்றின் தலைவர்கள் சுயேச்சையாகச் செயல்பட வழி செய்யும் 17ஆவது சட்டத் திருத்தத்தை அடியோடு திருத்தி இந்த அமைப்புகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரத்தைத் தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் குடியரசுத் தலைவராக யாராக இருந்தாலும் இருமுறைக்கு மேல் வரமுடியாது என்ற அரசியல் சட்டப்பிரிவை திருத்தி எத்தனைமுறை வேண்டுமானாலும் குடியரசுத் தலைவர் பதவியில் தொடரலாம் என்ற நிலையை ஏற்படுத்தி நிரந்தர சர்வாதிகாரியாக உருவாக வழிவகுத்துக்கொண்டுள்ளார்.
அவரது சொந்தக் கட்சியின் தலைவரான சந்திரிகா உள்நாட்டில் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து என அஞ்சி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார். எதிர்க்கட்சிகள் மிரட்டப்பட்டுச் செயலற்றுக் கிடக்கின்றன. மொத்தத்தில் இலங்கையில் ஜனநாயகம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.
மொத்தத்தில் இராசபக்சே தென்னாசியாவின் இட்லருக்கு மேலான இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார்.
ஜெர்மானிய இட்லர் தனது நாட்டிலிருந்த  யூதர்களை முதலில் இனப்படுகொலை செய்தான். இதில் தப்பியவர்கள் நாட்டைவிட்டு வெளியறி ஓடினார்கள். பிறகு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடினான். இறுதியாக தன்னை எதிர்க்க யாரும் இல்லாமல் செய்து அந்நாட்டின் சர்வதிகாரியானான். மனித குலத்திற்கு எதிராக இட்லர் மேற்கொண்ட நடவடிக்கைகளை பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா உட்பட வேடிக்கைப் பார்த்தன. சர்வதேச சங்கம் ஊமை சாட்சியாக நின்றது. இதன் விளைவாக ஐரோப்பாவிலிருந்த மற்ற நாடுகளின்மீது படையெடுத்து ஒவ்வொன்றாக கைப்பற்றினான். வேடிக்கைப் பார்த்த வல்லரசுகள் அதிர்ச்சியடைந்தன. இட்லருக்கு எதிராக அணிசேர்ந்தன. 2ஆம் உலகப்போர் மூண்டது. இதன் விளைவாக ஐரோப்பா சுடுகாடானது. ஐரோப்பிய மக்கள் சொல்லொண்ணாத துயரங்களுக்கு ஆளாயினர்.
வரலாற்றில் அழியாமல் பதிந்துவிட்ட இந்த உண்மையை மறந்து இன்றைக்கு புதிய இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிற இராசபக்சேவுக்கு எல்லாவகையிலும் தோள்கொடுத்து துணை நிற்கும் நாடுகள். தங்கள் தவறை உணரப்போகும் நாள் அதிகதூரத்தில் இல்லை.
ஆனால் காந்தியின் நாடு புதிய இட்லரின் பிறப்புக்கு மகப்பேற்றுத் தாதியாக விளங்குகிறது என்பதுதான் சோகத்திலும் சோகமாகும்.

மாபாரதப் போரில் கண்ணன்! ஈழப்போரில் பழ. நெடுமாறன்!!

தமிழில் "வாள்' என்பது அனைத்துப் படைக்கருவிகளையும் குறிக்கும். "கோல்' என்பது செங்கோல் என்று விரிந்து ஆட்சியைக் குறிக்கும். இந்த இரண்டையுமே தமிழர்க்கு வழங்கி, தமிழர் எழுச்சியின் வடிவமாக வாழ்ந்து காட்டியவர் பிரபாகரன். 
வாராது போல் வந்த மாமணி.
அந்த மாமணியின் ஒளிவீச்சை நாமறியத் தருவதுதான் "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற மாவீரன் பழ.நெடுமாறனின் நூல்.
ஈழ விடுதலைப் போரை இந்திய இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதப் போரோடு ஒப்பிட்டால், மகாபாரதத்தில் கண்ணன் வகித்த பாத்திரத்தை ஈழ விடுதலைப் போரில் ஏற்று புதிய வரலாறு படைத்தவர் பழ. நெடுமாறன் அவர்கள் என்றால் மிகையாகாது.
மகாபாரதப் போரில் கண்ணன் கருவியேந்திக் களத்தில் இறங்கியதில்லை. பார்த்தனுக்குத் தேரோட்டியாக இருந்தே பாண்டவர்களுக்குப் பல வகையிலும் உதவினான். அதுபோல் பழ. நெடுமாறன் அவர்களும் ஆயுதப் போர் நடத்திய புலிகளுக்கு எந்தவிதமான ஆயுதமும் ஏந்தாமல் ஆலோசகராக இருந்தே அனைத்து வகையிலும் உதவினார்.
மகாபாரதத்தில் கெளரவர்கள் பெரும்பான்மையினர். பாண்டவர்கள் சிறுபான்மையினர். ஈழப்போரிலோ சிங்களவர்கள் பெரும்பான்மையினர். ஈழத்தமிழர் சிறுபான்மையினர்.
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் எப்படித் தங்கள் உரிமைப் பங்காக முதலில் ஐந்து நாடுகள், பிறகு ஐந்து ஊர்கள் கேட்டு, அப்புறம் ஐந்து வீடுகளாவது தாருங்கள் என்று கேட்டு, கெளரவர்கள் அதற்கும் உடன்படாததால் போருக்குப் புறப்பட்டார்களோ, அப்படி ஈழத்தமிழர்களும் வெள்ளையர் வெளியேறிய பிறகான இலங்கையில் ஆட்சியை ஆக்கிரமித்துக் கொண்ட சிங்களரிடம், எல்லா உரிமைகளிலும் முதலில் 50க்கும் 50 கேட்டார்கள், அதாவது இணையாட்சி (சமஷ்டி) கேட்டார்கள்.
அடுத்து சுயநிர்ணய உரிமையோடு கூடிய தனித்தமிழ் மாநிலம் கேட்டார்கள். அடுத்து ஒன்றுபட்ட தமிழர் பாரம்பரியத் தாயகம் என்றாவது தமிழ்மக்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்கை ஒப்புக்கொள்ளுங்கள் என்று கேட்டார்கள்.
அதாவது இணையாட்சி கேட்டு, மாகாணசபை கேட்டு, பிரதேசசபை, மாவட்டசபை என்று இறங்கிவந்த பிறகும், தமிழர்களுக்கு எதைக் கொடுக்கவும் சிங்களப்பேரினவாதம் உடன்படாததுதான் காரணமாகவும், வடகிழக்குத் தமிழர் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ஒரு தலைப்பட்சமாகக் கிழித்தெறிந்ததின் காரணமாகவுமே ஈழத்தமிழ் இளைய குமுகாயம் ஆயுதங்களை ஏந்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
அப்படித் தள்ளப்பட்டபோது ஈழத் தமிழ் இளைஞர்களிடையே பல ஆயுதப் போராட்டக் குழுக்கள் எழுந்தன என்றாலும், பாண்டவர்க்குக் கண்ணன் போல் புலிகளுக்கு நெடுமாறன் கிடைத்ததால் தமிழீழ விடுதலைப் புலிகளே நின்றார்கள். நான்கு ஈழப்போர்களில் மூன்றில் வென்றார்கள். தனியாட்சியும் கண்டார்கள்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஈழத் தமிழ்மக்களின் தேசியத் தலைவராகவே உயர்ந்தார். ஒளிர்ந்தார். ஆம், "ரா' போன்ற இந்திய உளவுப்படைகள் போராளிக் குழுக்களை ஒன்றை ஒன்றுடன் மோதவிட்டு அழியுமாறு செய்தபோது, அந்த அழிவுக்கு ஆட்படாமல் நிமிர்ந்து நின்று பிரபாகரன் தலைமையின் கீழ், நெடுமாறன் ஆலோசனையுடன் நடைபோட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே.
இதைத் தெரிந்திருந்தும் புரிந்து கொள்ளாமல் "சகோதரச் சண்டையினால்தான் அவர்கள் வெற்றி பெறுவது தவிர்ந்து போனது'' என்று தப்புக் கருத்துச் சொன்னவர்கள் தமிழ்நாட்டில் பலபேராவர்.
வியட்நாம் போரில் ஓசிமின் போல, பாலத்தீன விடுதலை போரில் யாசிர் அராபத் போல ஈழப்போரில் தம்பி பிரபாகரன் தரணியே வியக்கும் வண்ணம் சாதனை படைத்தார். நெடுமாறனின் நெளிவு சுழிவான ஆலோசனைகளுடன் தோள்கள் புடைத்தார்.
எனினும், நாலாவது ஈழப்போரில் எதிரிகள் வெல்லவும், புலிகளிடம் பூத்திருக்க வேண்டிய வெற்றி நழுவிப்போகவும் காரணம், ஓசிமின்னுக்குச் சீனாவும், சோவியத் ஒன்றியமும் பக்கபலமாக இருந்ததைப் போல, அராபத்துக்கு ஆதரவாக அரபு நாடுகளும், முசுலிம் நாடுகளும் அணிவகுத்து நின்றதைப்போல பிரபாகரனுக்கு எந்த நாடும் பின்புலமாக இருக்க முன்வராததாகும்.
பின்புலமாக எந்த நாடும் இல்லாவிட்டாலும்கூட அவர் தன் பலத்தில் வெற்றி பெற்றிருக்கவே செய்வார். ஆனால் பின்புலமாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டே இந்தியா எதிரிக்கு உதவி, காலை வாரிவிட்டுவிட்டது. அன்றைய தமிழக ஆட்சியும் அதற்குத் துணைபோய்விட்டது.
அதைவிடக் கொடுமை! 1958-ல் இருந்தே "நாங்கள் ஈழத் தமிழருக்கு ஆதரவு, புதிய புறநானூறு படைக்கும் புலிகளுக்கு அரணாக இருப்போம்'' என்று சொல்லிக்கொண்டு, 1986-ல் அனைத்திந்தியத் தலைவர்களையும் கூட்டி வந்து மதுரையில் தமிழீழ ஆதரவாளர்கள் (டெசோ) மாநாட்டை நடத்தியவர்களே, நாலாவது ஈழப்போரின்போது (2008-2009) தமிழ்நாட்டு ஆட்சியில் மட்டுமின்றி, தில்லி நடுவரணசு ஆட்சியிலும் நாட்டாண்மை பண்ணிக் கொண்டிருந்தபோது முதுகில் குத்தியதாகும்.
மகாபாரதம் கதையிலேனும் பாண்டவர்கள் நாடுகேட்க உலகநீதியின்படி எந்த அடிப்படை உரிமையும் இல்லை. ஏனெனில், அத்தினாபுரி மன்னன் சந்தனுவின் வாரிசாக மூத்த தாரத்தின் மகன் வீடுமன் (பீஷ்மன்) முடிசூடிக்கொள்ள மறுக்கவே, இளைய தாரத்தின் மூத்த பேரன் திருதராட்டிரனே முடிசூட்டப்படுகிறான். அவன் குருடனானதால், அவன் தம்பியாகிய பாண்டு அவன் சார்பில்தான் அரசை நடத்தினான். திருதராட்டிரனுக்கு வாரிசு இல்லையென்றால்தான், பாண்டுவின் மக்களுக்கு ஆட்சியில் பங்குகேட்க உரிமையுண்டு. இருப்பினும் திருதராட்டிரனின் வாரிசு துரியோதனன் இந்திரப்பிரத்தத்தைத் தலைநகராகக் கொண்ட நாட்டைப் பாண்டவர்களுக்காக வழங்கவே செய்கிறான்.
பின்னர் சகுனி மூலம் சூதாட்டத்தில் கபடமாக அதைக் கவர்ந்து கொள்கிறான் என்றாலும், இவர்கள் ஏன் சூதாட்டத்திற்கு இணங்க வேண்டும்? கிடைத்த நாட்டை இழக்க வேண்டும்?
இலங்கையைப் பொறுத்தவரை அதன் மூத்தகுடி தமிழினமே. வந்தேறி இனமே சிங்களராகும். அது மட்டுமின்றி, இலங்கையைச் சுதந்திரம் என்ற பெயரில் சிங்களரிடம் ஒப்படைத்த ஆங்கிலேயர்கள், அதற்கான இலங்கையின் இறையாண்மையைப் பெற்றது தமிழரிடமிருந்தேயன்றி, சிங்களரிடமிருந்தல்ல. அந்த உரிமை மாற்று ஆவணம்கூட இன்றும் இருக்கிறது.
னவே, அந்த இறையாண்மையைத் திரும்ப வழங்கியபோது நீதிப்படியும், உலக நியதிப்படியும் தமிழரிடம்தான் வழங்கியிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, இலங்கைக்கு ஆங்கிலேயரிடமிருந்து முதன்முதலில் விடுதலை கேட்டவர்களும் தமிழரேயன்றி சிங்களரல்லர்.
மேலும், ஆங்கிலேயர் உட்பட்ட ஐரோப்பியர் இலங்கையை ஆக்கிரமிக்க வந்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டவர்களும் தமிழ் மன்னர்களேயன்றிச் சிங்கள மன்னர்களல்லர்.
மகாபாரதப் போரின்போது அன்றைய தமிழ்ப் பெருவேந்தனாகிய உதியன் சேரலாதன், கெளரவர்கள் - பாண்டவர்கள் இரு தரப்பாருமே அவன் உதவியைக் கேட்டபோது, ஒரு தரப்புக்குச் சார்பாக அவன் ஓடவில்லை. மாறாக, இரு தரப்புப் படைகளுக்குமே சோறிட்டு நடுநிலைமை காத்தான்.
அப்படி இந்தியா நடுநிலைமை காத்திருந்தால்கூட கண்ணனைப் போல் நெடுமாறனை அறிவுரைஞராகக் கொண்டிருந்த புலிகள், நாலாவது ஈழப்போரிலும் வெற்றிக் கொடி நாட்டியிருப்பார்கள். இராசபக்சேவுக்குப் பிரபாகரன் தமிழன் வீரன் எப்படியென்று காட்டியிருப்பார்.
ஆனால், இந்தியா தமிழ்நாட்டு எட்டப்பர்களின் இரட்டை வேடத்தைப் பயன்படுத்திக்கொண்டு, சிங்களர் வெற்றி முரசு கொட்ட உதவி செய்தது. அதனால்தான் மகாபாரதக் கண்ணனைப் போல் ஈழப்போரில் நெடுமாறனால் வெற்றி ஈட்டிக் கொடுக்க முடியாமல், அது நழுவி விட்டது.
ஆயினும், "பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்'' என்ற இந்த நூலின் மூலம் உலகத் தமிழர்களுக்கெல்லாம் அவரின் ஏற்றம் பற்றி மட்டுமல்ல "கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றல்'' உண்டாகும் விதமாக அருந்தமிழ்ச் சாதனை புரிந்திருக்கிறார் ஐயா நெடுமாறன்.
ஆம். 1200க்கும் மேற்பட்ட பக்கங்களில் அரிய, ஒளிப்படங்களோடு, தெளியாரும் தெளிவடையும் வண்ணம் பிரபாகரன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, ஈழப்போராட்ட வரலாற்றையே வரைந்தளித்துள்ளார்.
புறநானூறு முதலிய சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழன் வீரத்தை, தனது வாழ்க்கையின் மூலம் கண்கூடாகத் தரணிக்கு உணர்த்தியவர் தேசியத் தலைவர் பிரபாகரன் என்றால், அதில் மாசு மருவேது?
"பண்டை நாளில் மூவேந்தரையும் வென்ற பேராற்றல் படைத்த பெருவீரனான வாணனின் பெயரை இளைஞர்கள் தங்கள் மார்புகளில் எழுதிக்கொண்டு பெருமிதம் பொங்கத் திரிந்தனர் எனப் பழம் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. அதைப்போல இலட்சிய வேங்கையான திரு. பிரபாகரன் தீரவாழ்வை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ் இளைஞர்கள் வீறுபெற்று எழ வேண்டும்'' என்கிறார் நெடுமாறன் தன் முன்னுரையில்.
வாணன் வென்றது தமிழ் மூவேந்தர்களை. பிரபாகரன் வெற்றி கொள்ளப் படை நடத்தியதோ அயலவராகிய, தமிழினத்தை அழிக்க எண்ணும் சிங்களப் பேரினவாதிகள் மற்றும் அவர்களுக்கு முட்டுக்கொடுத்த பன்னாட்டு ஏகாதிபத்தியவாதிகளை.
ஆகவே, வாணனிலும் உயர்ந்து நிற்கும் பிரபாகரனை உலகில் உள்ள ஒவ்வொரு தமிழ் இளைஞனும் வீரத்துக்கு முன்னுதாரணமாகக் கொள்வான் என்பதில் ஐயமில்லை.
அவருடைய பெயரை மட்டுமல்ல, படத்தையும் ஏந்தி நிற்கும் பட்டாளமாகத் தமிழ் இளைஞர்கள் உருவாகி வருவதை இப்போதே உலகமெங்கும் கண்கூடாகக் காண்கிறோம்.
இந்த நூல் தமிழ் இளைஞருக்கு மட்டுமல்ல, தமிழ் முதியோருக்கும் ஆண்-பெண் வேறுபாடின்றி ஆற்றலூட்டுகிறது என்றால் மிகையல்ல.
அதேவேளை மொத்த அரபுலகின் ஆதரவும் யாசிர் அராபத்துக்குக் கிட்டியது போல தமிழுலகின் முழு ஆதரவும் பிரபாகரனுக்குக் கிடைக்கவிடாமல் திசை திருப்பல்களைச் செய்த இந்திய தேசியம், திராவிட தேசியங்களின் திருகுதாளங்கள் மறுபடியும் ஈழ ஆதரவில் தொடராமலிருக்க, தமிழ்த்தேசிய அணுகுமுறை ஒன்றுதான் வழி என்பதை தமிழர் தேசிய இயக்கத் தலைவரான நெடுமாறன் அவர்கள் உணர்ந்து, பிரபாகரன் போல் பீடு நடைபோட முன்வரவேண்டும் என்பதே பாரகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறோம்.
வெல்க பிரபாகரன் வெற்றியணி!
வாழ்க ஐயா நெடுமாறன் தமிழர் தேசியப் பணி!
நன்றி : "எழுகதிர்' ஆகத்து 2012

திங்கள், 26 நவம்பர், 2012

இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று மாவீரர் தினத்தில் உறுதியேற்போம்: - நாம் தமிழர் கட்சி

News Service
மானுடத்தின் மூத்த இனம், நாகரீகத்திற்கும், தொன்மைக்கும் சான்றாக உலக வரலாற்றில் அங்கீகரிக்கப்பட்ட பெருமைக்குரிய இனமான தமிழினம், காலனி ஆதிக்கத்தினாலும், அயலவர் ஊடுறுவலினாலும் தனது தனித்தன்மையையும், தன்னாட்சியையும் இழந்து அடிமையுற்ற நிலையில், நம்மினம் வாழ்ந்த நிலப்பகுதிகள் அரசியல் ரீதியாக விடுதலைப் பெற்றும் அடிமை வாழ்வாகவே தொடர்ந்த நிலையில்தான், இலங்கையில் மேலாதிக்கம் பெற்ற சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடூரமான அடக்குமுறைக்கும் ஒடுக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டு இரண்டாந்தரக் குடி நிலைக்கு வீழ்த்தப்பட்டது.
   நம் இனத்திற்கு நேர்ந்த அந்த இழிநிலையை மாற்ற, சிங்களர்களுக்கு இணையான அரசியல் விடுதலையைப் பெற ஜனநாயக ரீதியிலான போராட்டங்கள் ஒடுக்கப்பட்ட நிலையில்தான், நம் மண்ணைக் காக்க, நம்மினத்தின் மானத்தைக் காக்க, நமது இறைமையை மீட்க, தமிழீழத் தேசத்தில் தன்னாட்சியை படைக்க உருவானதே தமிழீழ விடுதலைக்கான ஆயுத வழிப் போராட்டமாகும். உன்னதமான அந்த விடுதலை இலட்சியைத்தை நோக்கிய போராட்டத்தை, அக, புற வலிமையுடனும் உறுதியுடனும் முன்னெடுத்தவர்தான் நவம்பர் 26ஆம் நாளான இன்று பிறந்த நாள் காணும் நமது தலைவர், தமிழ்த் தேசியத்தின் அடையாளமாகத் திகழும் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள்.
தனது பிறந்தநாளுக்கு நமது தலைவர் முக்கியத்துவம் அளித்திடவில்லை. அதற்கு மாறாக, நவம்பர் 27ஆம் நாளையே தமிழ்த் தேசியத்தின் எழுச்சிமிக நாளாக, நம் இனத்தின் விடுதலைக்காக தங்கள் வாழ்வையும், இளமையையும், குடும்ப உறவுகளையும், மானுடம் எல்லாவற்றினும் பெரிதாகக் கருதும் உயிரையே ஆயுதமாக்கிய போராளிகளின் நினைவைப் போற்றும் வகையில் மாவீரர் தினமாக அறிவித்து, அதனை தமிழினம் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கடைபிடித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதனைத்தான் நாம் தாய்த் தமிழ் நிலமான தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கடைபிடித்து வருகின்றோம்.
மாவீரர் தினமென்பது நமது மண்ணின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகை செய்த அந்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளல்ல, மாறாக, அந்த ஈகையின் நோக்கம் இனத்தின் விடுதலையை வென்றெடுக்க நாம் உறுதியேற்பதற்கேயாம். இதனை நமது தலைவர் நிகழ்த்திய மாவீரர் தின உரைகளில் இருந்து நாம் தெளிவாக புரிந்துகொண்டுள்ளோம். நம் இனத்தை அடிமைப்படுத்தி, தமிழீழ தேசத்தை சிங்கள மயமாக்கிடும் நோக்கோடு நம் மீது இன அழிப்புப் போரை நடத்திய சிங்கள பெளத்த இனவாத அரசை எதிர்த்து, நம் இனத்தின் விடுதலைக்காக நமது மாவீரர்கள் நடத்திய ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின் மெளனிக்கப்பட்டது.
விடுதலைக் களத்தில் ஏற்பட்ட அந்த பின்னடைவைப் பயன்படுத்திக்கொண்டு, முடிந்தது தமிழீழ விடுதலைப் போராட்டம் என்று இலங்கை அரசும், தம்மை இனத்தின் தலைவர்கள் என்று பீற்றிக்கொண்டவர்களும் கூச்சமின்றி பேசிய நிலையில்தான், நாம் தமிழர் கட்சி பிறந்தது. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழினத்தை தட்டி எழுப்பியது. இனத்தின் விடுதலை என்கிற அந்த உன்னத இலட்சியத்தை நிறைவேற்ற ஜனநாயக வழியில் தமிழ் மக்களைத் திரட்டி போராடுவது என்று உறுதிபூண்டு, நம்மினத்தில் முளைத்த துரோகிகளின் துணையுடன் இனப் பகைவர்கள் புணைந்த அரசியல் சதியை தொடர்ந்து முறியடித்து, தமிழினத்தின் விடுதலை வேட்கையை அணையாமல் காத்து வருகிறது.
இனத்தின் விடுதலை என்பது மற்றுமொரு பிரச்சனையல்ல, அது அரசியலும் அல்ல, அது எம்மினத்தின் புனிதமான உரிமை. அதனை விட்டுத்தந்துவிட்டால், பிறது நமக்கென்று அரசியல் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை. எனவேதான் மாவீரர் தினத்தை கடைபிடிக்கும் நாம், அந்த நாளில், நமது இனத்தின் விடுதலைக்காக இன்னுயிரைத் தந்த வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் வீரவணக்கம் செலுத்திடும் வேளையில், எப்பாடு பட்டாகினும், இன்னுயிரைத் தந்தாகினும் இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம் என்று உறுதியேற்கிறோம். இந்த உறுதியை தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும் இந்த நாளில் மனப்பூர்வமாக எடுக்க வேண்டும். ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒன்றிணைந்த திரட்சியே இனத்தின் விடுதலை வென்றெடுப்பதற்கான புரட்சியாகும் என்பதை தமிழர் அனைவரும் உணர்ந்திட வேண்டும்.
நம் இனத்தை பூண்டோடு அழித்தொழிக்க சிங்கள பெளத்த இனவாத அரசு தமிழீழ தேசத்தின் மீது தொடுத்த போரில் ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். போரின் கடைசி நாட்களில் மட்டும் முள்ளிவாய்க்கால், வட்டுவாகலில் நாற்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நம் சொந்தங்கள் கொன்று புதைக்கப்பட்டனர். ஆனால் இதனை இன அழிப்பு என்று இதுவரை எந்த ஒரு நாடும் கூறவில்லை.
தமிழினத்திற்கு எதிரான அந்தப் போரில் போர்க் குற்றங்கள்தான் நடந்துள்ளது என்று கூறுகின்றனவே தவிர, உண்மையில் நடந்த இனப் படுகொலையை பேச மறுக்கின்றன. நாம் தமிழர் கட்சியைப் பொறுத்தவரை அங்கு நடந்தது போர்க்குற்றமல்ல, அந்தப் போரே குற்றம் என்றும், அதில் எம்மினத்தின் சொந்தங்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேர் கொல்லப்பட்டனர் என்றும், அது திட்டமிட்ட இன அழித்தலே என்றும் தொடர்ந்து கூறி வருகிறது. அதற்காகவே சுதந்திரமான பன்னாட்டு விசாரணை வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.இப்படிப்பட்ட சர்வதேச சூழலில்தான், தமிழீழ விடுதலையை முன்னெடுக்க முன்னணியில் இன்று உழைத்திடம் நம் இனத்தின் பெருமைமிக்க போராளிகளை, நம் இனத்தில் தோன்றிய துரோகிகளைக் கொண்டே அழித்திடும் வேலையை சிங்கள அரசு செய்து வருகிறது. அதுதான் நம் தலைவரால் பன்னாட்டு அரசியலிற்காக நியமிக்கப்பட்டு, அரும்பணியாற்றிவந்த மதீந்திரன் எனும் பரிதி பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட கொடூர நிகழ்வாகும்.தமிழினத்தின் ஆயுத போராட்டத்தை முடக்கிவிட்டால் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்த நம் இனத்தின் எதிரியாக சிங்களம், அது சர்வதேச அளவில் கொழுந்துவிட்டு எரிவதை சகிக்க முடியாமல் மேற்கொண்ட நடவடிக்கைதான் பரிதியின் கொலையாகும். எனவே நமது இனத்தின் விடுதலையை முறியடிக்க எதையும் செய்த நம் எதிரிகள் முனைப்பாக செயலாற்றிவரும் நிலையில், அதனை முறியடித்து, விடுதலையை வென்றெடுக்க இனத்தின் ஒற்றுமை ஒன்றே ஒரே வழியும் வலிமையுமாகும். இலக்கை நோக்கிய ஒன்றிணைந்த செயல்பாடே அந்த ஒற்றுமையை உண்டாக்கும்.ஒன்றுபடுவோம், இனத்தின் விடுதலையை வென்றெடுப்போம். மாவீரர்கள் நினைவு நாளில் அவர்களின் நினைவு சுமந்து கனவை நோக்கி தொடர்ந்து போராடுவோம் என்று உறுதியேற்போம்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடையவில்லை: எல்லாளன் படையின் அறிக்கை.


News Service
எமது விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்து விட்டதாக சிறிலங்கா அரசு கடந்த 3 வருடங்களாக கூறி வருகின்ற போதும் நாம் தொடர்ந்து சர்வதேசத்திற்கான ஒரு தெளிவான பதிலை வழங்கி வருகின்றோம். இதன் அர்த்தம் எமது நீண்ட விடுதலைப் போராட்டம் முடிந்து விட்டது அன்று. அன்பான எமது உறவுகளே, இலங்கை பேரினவாத அரசு எம்முடன் தனித்து நின்று யுத்தம் புரிந்து இருந்தால் நாம் முழு தமிழீழத்தையும் எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் சம பல நிலையில் இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் இலங்கை பேரினவாத அரசு பல உலக நாடுகளின் துணை கொண்டு எமது விடுதலைப் போரை இவ்வாறான இன்றைய சூழலுக்கு இட்டுச் சென்றுள்ளது.   இருந்தும் எமது மக்களுக்கான நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக சர்வதேச நாடுகளுக்காக எமது ஆயுதங்களை நாம் மௌனிப்பதாக அறிவித்து இருந்தோம். இதன் அர்த்தம் நாம் தோல்வி அடைந்து விட்டோம் என்றோ எமக்கான விடுதலைப் போராட்டம் முடிக்கப்பட்டதென்றோ அர்த்தம் அல்ல.அன்பான எம் உறவுகளே,பல ஆயிரம் மாவீரர்களினதும், பல ஆயிரம் பொது மக்களினதும் தியாகத்தில் இருந்தும், புலம்பெயர் தமிழர்களின் கடும் உழைப்பில் இருந்தும் பெறப்பட்ட போர் ஆயுதங்கள் இலங்கை, தமிழீழப் பகுதி எங்கும் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இருந்தும் இன்றைய சூழ் நிலையில் பல பகுதிகளில் புனரமைப்பு மீள் குடியேற்றம் என்ற போர்வையில் துப்புரவு பணிகள் நடந்து வருவதை நாம் அறிவோம். அத்துடன் எமது போர் தளபாடங்களை காட்டிக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என இலங்கை இராணுவம் கடந்த சில நாட்களாக அறிவித்தல்களை விடுத்து வருகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் எமது போர் ஆயுதங்கள், இயக்க உடைமைகள், ஆவணங்கள் காணப்படும் இடத்து அவற்றை இராணுவத்தினருக்கு தெரியப்படுத்தி காட்டிக் கொடுக்காமல் உரிய முறையில் பேணி பாதுகாத்து காலச் சுழலில் உங்களுக்கான தொடர்புகள் உருவாகின்ற போது உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
தமிழீழ எல்லாளன் படை

மேதகு பிரபாகரன் அவர்களை வணங்கி வாழ்த்துவோம்... எனது பிறந்தநாள் வாழ்த்துகள்...


58 வருடங்களுக்கு முன்னால் தமிழுக்கு விடிவெள்ளியாய், தமிழினத்தின் உன்னத தலைவனாய், தமிழீழ விடுதலை போராட்டத்தின் மருவடிவாய் ஆன எங்கள் தலைவன் மேதகு வே பிரபாகரன் பிறந்தார். இன்று நாங்கள் அனைவருமே அந்த விடுதலை நெருப்பை பங்கு போட்டு கொண்டு மீண்டும் பிறக்கிறோம் இன்னுமோர் பிரபகரனாய்.....
ஆம்!
நானும் ஓர் பிரபாகரன்.

எமக்கு உயிராகவும் ஆற்றலாகவும் எல்லாமுமாகமும் விளங்கும் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களை வணங்கி வாழ்த்துவோம்...
எனது பிறந்தநாள் வாழ்த்துகள்...


ஞாயிறு, 25 நவம்பர், 2012

மாவீரர்தினம் எதற்காக.....

News Service
யார் இந்த மாவீரர்கள்?. எதற்காக களமாடினார்கள் ?. உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த சக்தி எது?. சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்?. விடைகாணமுடியாத வினாக்கள் அல்ல இவை . ஒரு ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பிற்காகப் போராடும்போது இது புரியப்படும். போராடியோர் நினைவினைச் சுமந்து , மீண்டெழும் உணர்வினை ஊட்டும் நாளே மாவீரர்தினம்.
ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்படலாம்..ஆனால் விடுதலைக்கான போராட்டம் நிறுத்தப்படக்கூடாது என்பதனை நினைவுறுத்தும் நாள்தான் இந்த மாவீரர்தினம்.
எமை அழிக்கும் சிங்களமும், போர்க்குற்றத் தடியேந்தும் வல்லரசாளர்களும் ஒன்று சேர்ந்து , சுயநிர்ணய உரிமைக்கோட்பாட்டை கைவிடுங்களென்று வலியுறுத்துவதை, ஏற்கமாட்டோமென உறுதிபூணும் நாளே இம்மாவீரம்தினம்.
மாவீரர்கள் போராடிப்பெற்ற இறைமையை, உலகறியச் செய்வோம் என்பதனை உரத்துச் சொல்லும் நாள் இது.
13 இற்குள் இணைந்து போதல், 19 இற்குள் சரிந்து போதல் சரியென்று வாதிடுவோர் மாவீரர்களை நினைவுகூரத் தேவையில்லை.
77 இல் மக்கள் இட்ட ஆணை, போர்நிறுத்த காலத்தில் அங்கீகரிக்கப்படாத அரசாக பரிணாமம் அடைந்தது. அதன் இறைமையை ,சமாதானம் பேசிய வல்லரசாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இருப்பினும் ,போராடிப்பெற்ற இறைமையை, பேசிக்கொண்டே அழித்தார்கள். 'முழு நாட்டிற்குமான சிங்களத்தின் இறைமை' என்கிற பேரினவாத அரசியல் கருத்தியல், தமது பிராந்திய நலனுக்கு தேவையாக இருப்பதால், தமிழ்தேசிய இனத்தின் இறைமையை சிதைப்பதற்குத் துணை போனார்கள்.
ஆனாலும் அழிக்கப்படவில்லை எம்மினம் போராடிபெற்ற இறைமை. இதன் நீட்சியே தமிழினத்தின் அடுத்தகட்ட போராட்ட நகர்வாக இருக்க வேண்டும்.
அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு என்பன தேசிய இன முரண்நிலையைத் தீர்க்கும் என்போர் , தமிழ் தேசத்தின் இறைமையை மறுப்பவர்களாகவே கருத வேண்டும்.
சிங்களத்தின் இறைமையைப் பகிர்ந்து கொள்வதுதான் அதிகாரப்பகிர்வா?. ஒற்றையாட்சி என்பது , சிங்களத்தின் முழு இலங்கைக்குமான இறைமையை ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்படுவது.
ஆகவே ,'சிங்களத்தின் ஒற்றையாட்சிக்குள் சுயாட்சி' என்பது அடிப்படையில் தவறான அரசியல் கருத்தியல் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமல்ல .
இறைமையுள்ள இரு தேசங்கள் என்பதன் அடிப்படையில் சுயாட்சி பற்றி பேசலாம். ஆனால் அதற்கும் சிங்களம் இணங்காது என்பதைப் புரிந்து கொள்ளாமல் ,இணக்கப்பாட்டு அரசியல் முயற்சிகளில் ஈடுபடும் தமிழர் தரப்புக்கள் ,எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதனை பல ஒப்பந்தக் கிழிப்புகள் எமக்கு உணர்த்துகின்றன.
விலைபோகாத கல்லறைகள் எமக்கு இடித்துரைக்கும் செய்தி இதுதான்.
'போராடினால் பெறுவாய் விடுதலை' என்பது வரலாறு எமக்களித்த வரம். 'சுயநிர்ணய உரிமை கோரும் பயங்கரவாதிகள் ' என்பதே வல்லரசாளர்கள் எமக்கு வழங்கும் கலாநிதி பட்டம்.
ஆகவே கல்லறைச் செய்திகள் சொல்லும் , எளியோரை வலியோராக்கும் சாத்தியங்களைத் தேடுங்கள். மக்கள் சக்தியின் முன்னால் , மாபெரும் சாம்ராஜ்யங்கள் அடிபணிந்து போனதை கவனியுங்கள்.
இயங்காமல் இருப்பது மாற்றத்தைக் கொண்டு வராது. இயங்கு தளத்தினை அழிப்பதுதான் ஒடுக்குமுறையாளனின் நோக்கம். அடிபணிவு அரசியல் முழு இனத்தையும் அழித்துவிடும். எம்மினம் அழியப்போகிறதா ,இல்லையேல் மீண்டும் நிமிரப்போகிறதா என்பதனை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
வீழ்வது தவறல்ல. வீழ்ந்தபின் எழாமல் இருப்பது தவறு. அதைவிடத் தவறு , ஒடுக்குபவனின் தோளைப் பற்றிப் பிடித்து எழுவது.
நம் மாவீரர்கள் பற்றிப்பிடித்தது, ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமையை.
அவர்களின் இலட்சியம் தோற்கடிக்கப்படவில்லை. இலட்சியம் நிறைவேறும்போதுதான் அவர்களை வரலாறு பதிவு செய்யும். அதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்?.
-இதயச்சந்திரன்-