"காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும், கலந்துகொள்வது தமிழர்களுக்கு செய்யும் துரோகம்" என்றெல்லாம் வீராவேசம் காட்டிய ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம் அச்சாகும் வேளையில்� ஜெயா தமது இன்னொரு முகத்தை காட்ட ஆரம்பித்திருந்தார். ஜெயலலிதாநேற்று இரவு ஒரு மணியளவிலேயே தஞ்சை சுற்றுவட்டார போலீசாருக்கு முற்றத்துக்கு வரும்படி தகவல் தரப்பட்டிருக்கிறது. காலை ஐந்து மணியளவில் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்களும் சாலைப் பணியாளர்களும் முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்கள். அதற்கு முன்னதாகவே விளார் சாலையை நோக்கி செல்லும் சாதாரண ஆட்கள்கூட விசாரித்து அனுப்பப்பட்டனர்.
கதவு உட்பட வேலியிடுவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் முன்பே அரசு செய்திருக்கிறது.
ஆக நேற்றைய காமன்வெல்த் நாடகம் சட்டமன்றத்தில் நடந்த வேளையிலேயே முள்ளிவாய்க்கால் முற்றத்தை சிதைப்பதற்கான முன்னேற்பாடுகளும் ஒத்திகையும் நடந்திருக்கின்றன என்பதை சுலபமாக அவதானிக்க முடியும். ஜெயாவுக்கு அணிவிக்கப்பட்ட ஈழத்தாய் முகமூடியை அவரால் சில மணி நேரம் கூட அணிந்திருக்க இயலவில்லை.
காலை ஏழு மணியளவில் முற்றம் இடிக்கப்படுவதாக தகவல் வந்தது. விளார் சாலை சென்றபோது மணி ஏழரை. முற்றத்துக்கான எல்லா பாதைகளும் போலீசாரால் அடைக்கப்பட்டிருந்தன. போலீஸ் காவலைத்தாண்டி நிகழ்விடத்தை அடைய ஒன்றரை மணி நேரம் ஆனது. சற்றேறக்குறைய ஐந்நூறு போலீசார் இப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இடிக்க எதிர்ப்பு தெரிவித்த சிலர் போலீசரால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அங்கிருந்த சில தலைவர்கள் டி.எஸ்.பி இளம்பரிதியிடம் கண்டனம் தெரிவித்த பிறகு தாக்குதல் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதன்பிறகு போலீஸாரை அங்கே தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மக்கள் மோசமாக திட்டியும் அவர்கள் சும்மாயிருந்தார்கள். காரணம் வரவிருக்கும் தேர்தலாக இருக்கலாம் அல்லது இடிப்பு வேலைக்கு இடையூறு நேர்ந்து விடாதிருப்பதற்காக இருக்கலாம்.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பழ.நெடுமாறன் நினைவிட வளாகத்தில்தான் தங்கியிருக்கிறார். கடந்த எட்டாம்தேதி கூட்டத்தில் அவர், �உங்களால் இடிக்க முடியுமா� என பெயர் குறிப்பிடாமல் சவால் விட்டார். அதற்கான பதிலை இரண்டே நாட்களில் சொல்லிவிட்டார் ஜெயா. ஏறத்தாழ 25,000 சதுர அடி நிலத்தை அரசு வேலியிட்டு மூடியிருக்கிறது. அரசின் திட்டம் முற்றத்துக்கான நுழைவுப் பாதையையும் மூடுவதுதான். நெடுமாறன் அங்கேயே இருப்பதாலும் பெரும் எண்ணிக்கையில் கூடிய மக்களின் எதிர்ப்பாலும் பாதைக்கான இடம் மட்டும் விட்டு வைக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா தனது வன்மத்தை தீர்த்துக் கொள்வதற்கு போதுமான சிதைவுகள் அங்கே முழுமையாக செய்யப்பட்டு இருக்கின்றன.
நெடுஞ்சாலைத் துறையின் வேலி சிற்ப வேலைப்பாடுகளுக்கு மிக அண்மையில் நடப்பட்டிருக்கிறது. அங்கே அமைக்கப்பட்டிருக்கும் கல் நீரூற்று இடித்து நிரவப்பட்டிருக்கிறது. யாதும் ஊரே எனும் வார்த்தைகளோடு உள்ள இலச்சினையும் சுவரும் இடிக்கப்பட்டிருக்கின்றன. விளக்குத் தூண் சாய்க்கப்பட்டிருக்கிறது.
அந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டதால் இடிக்கப்பட்டதாக அரசும் ஊடகங்களும் சொல்கின்றன. அதிமுகவின் ஆவடி குமார், �ரத்த தானம் செய்வது மேன்மையான நடவடிக்கையாக இருந்தாலும், திருட்டு ரயிலில் போவது சட்டப்படி குற்றம்தானே� என்று தந்தி டிவியில் விளக்கம் சொல்கிறார். ஆனால் அந்த இடம் நெடுஞ்சாலைத் துறையிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்டிருக்கிறது. குத்தகையை புதுப்பிக்கவில்லை என்பது அரசின் குற்றச்சாட்டு, திடீரென குத்தகை ரத்து செய்யப்பட்டிருப்பதாக சொல்கிறார் நினைவிடத்துப் பொறியாளர்.
75% சதவிகிதம் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழகத்தில், நிலஅபகரிப்பு ஒரு தனித் தொழிலாகவே நிலைபெற்றுவிட்ட தமிழகத்தில், மணற்கொள்ளையும் தாதுமணல் அபகரிப்பும் 24 மணி நேர பணியாகிவிட்ட தமிழகத்தில் குத்தகையை புதுப்பிக்காதது ஒரு கிரிமினல் குற்றமில்லையா? சட்டப்படியான நடவடிக்கை எடுப்பதற்கு ஐம்பது ஆண்டுகள் இழுக்க, இதென்ன காவிரிப் பிரச்சனையா?
இது ஜெயாவிடம் திடீரென்று ஏற்பட்ட மாற்றமல்ல. ஈழ ஆதரவாளர்கள் மீதான மிக மோசமான ஒடுக்கு முறையை கையாண்டது ஜெயலலிதாதான். இதற்கு முன்னால் ஒரு சட்டமன்ற தீர்மானம் இயற்றப்பட்ட வேளையில்தான் செந்தூரன் உள்ளிட்ட அகதிகளை நாடுகடத்தும் வேலையை ஆரம்பித்தது ஜெயா அரசு. மூன்று பேருக்கான தூக்கை ரத்து செய்யக் கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே சமயத்தில்தான் அவர்கள் மூவரது தூக்கை ரத்து செய்ய தொடுக்கப்பட்ட வழக்கில் அதனை எதிர்த்தது தமிழக அரசு.
ஈழ எதிர்ப்பு என்பது அரசின் கொள்கை என்பதைத் தாண்டி அதுதான் ஜெயலலிதாவின் இயல்பு. ஒருவேளை தன்மீது சுமத்தப்படும் ஈழ ஆதரவாளர் எனும் அடையாளத்தை வெறுத்து அதனைத் துறப்பதற்கு அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையாகவும் இது இருக்கலாம். �நீங்கள் என் வேலைக்கார ர்கள்தான், உறவுக்காரர்கள் அல்ல� என்று தமிழ்த் தேசிய இயக்கங்களை எச்சரிப்பதற்கான நடவடிக்கையாகவும் இருக்கலாம். அல்லது இது இந்தியாவின் வருங்கால பிரதமர் வேட்பாளர், வருங்கால காமன்வெல்த் தலைவர் ராஜபக்சேவுக்கு கொடுக்கும் அன்புப் பரிசாகவும் இருக்கலாம்.
கருணாநிதியும், ஜெயாவும், காங்கிரசும் , பாஜகவும் , இடது வலது கம்யூனிஸ்டுகளும் ஈழத்துக்கு எதிரிதான் என்பது தொடர்ந்து அம்பலப்பட்டாலும் இவர்களில் யாரையேனும் நம்பிச் செய்யப்படுவதாகவே தமிழ்தேசிய அரசியல் இருந்து வருகிறது. புதிய துரோகியை எதிர்கொள்ளும் பொருட்டு பழைய துரோகிக்கு பாவமன்னிப்பு தரும் தமிழ்தேசிய போர்தந்திரத்தையும் தந்திரோபாயப் பின்நகர்வுகளையும் செருப்பாலடித்து தோற்கடித்திருக்கிறார் ஜெயலலிதா.
முற்றத்துக்கு அருகாமையில் இருந்த மக்களில் பலர் ஜெயலலிதாவை கடுமையாக வசை பாடிக் கொண்டிருக்க, அங்கே என்னுடன் உரையாடிய ஒரு மூத்த தமிழறிஞர் �இது ஜெயாவின் அகில இந்திய அரசியலுக்கான நகர்வு� என குறிப்பிட்டார். அதாவது ஒரு முகாமின் அழுத்தத்துக்கு கட்டுப்படுவது அனைத்திந்திய அரசியலுக்குச் செல்லும் பிரதமர் வேட்பாளருக்கு நல்லதல்ல என அவரது ஆலோசகர்கள் சொன்னதால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்பது அவரது கருத்து. இந்த நிலையிலும் ஈழ எதிர்ப்பை ஜெயலலிதாவின் இயல்பு என்று அவரால் நம்ப முடியவில்லை. இது பிரதமர் பதவிக்கு செல்லும் பொருட்டு மேற்கொள்ளப்படும் நகர்வாம்! "லாயல் தேன் த கிங்" என்பது இதுதான்.
சோறுபோட்டு செருப்பாலடிப்பதை ஒரு பிச்சைக்காரன்கூட ஏற்கமாட்டான். ஆனால் தமிழ்தேசிய அரசியலின் அனேக நடவடிக்கைகள் ஒரு பிச்சைக்காரனுக்கு உரிய சுயமரியாதைகூட இல்லாதவையாக இருக்கின்றன.
நெடுஞ்சாலைத்துறை வேலியை நிறுவிவிட்டு சென்றபின்னர், காலை பத்து மணி அளவில் அந்த வேலிகளை உடைத்து வீசினார்கள் மக்கள். மீண்டும் அங்கே போலீசு குவிக்கப்பட்டிருக்கிறது. சாமானிய மக்களின் ஆவேசத்தில் இருந்தாவது இவர்கள் சுயமரியாதையைக் கற்றுக் கொள்வார்களா பார்ப்போம்.
-வினவு-
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக