மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

சனி, 1 டிசம்பர், 2012

மாபாரதப் போரில் கண்ணன்! ஈழப்போரில் பழ. நெடுமாறன்!!

தமிழில் "வாள்' என்பது அனைத்துப் படைக்கருவிகளையும் குறிக்கும். "கோல்' என்பது செங்கோல் என்று விரிந்து ஆட்சியைக் குறிக்கும். இந்த இரண்டையுமே தமிழர்க்கு வழங்கி, தமிழர் எழுச்சியின் வடிவமாக வாழ்ந்து காட்டியவர் பிரபாகரன். 
வாராது போல் வந்த மாமணி.
அந்த மாமணியின் ஒளிவீச்சை நாமறியத் தருவதுதான் "பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம்' என்ற மாவீரன் பழ.நெடுமாறனின் நூல்.
ஈழ விடுதலைப் போரை இந்திய இதிகாசங்களில் ஒன்றாகிய மகாபாரதப் போரோடு ஒப்பிட்டால், மகாபாரதத்தில் கண்ணன் வகித்த பாத்திரத்தை ஈழ விடுதலைப் போரில் ஏற்று புதிய வரலாறு படைத்தவர் பழ. நெடுமாறன் அவர்கள் என்றால் மிகையாகாது.
மகாபாரதப் போரில் கண்ணன் கருவியேந்திக் களத்தில் இறங்கியதில்லை. பார்த்தனுக்குத் தேரோட்டியாக இருந்தே பாண்டவர்களுக்குப் பல வகையிலும் உதவினான். அதுபோல் பழ. நெடுமாறன் அவர்களும் ஆயுதப் போர் நடத்திய புலிகளுக்கு எந்தவிதமான ஆயுதமும் ஏந்தாமல் ஆலோசகராக இருந்தே அனைத்து வகையிலும் உதவினார்.
மகாபாரதத்தில் கெளரவர்கள் பெரும்பான்மையினர். பாண்டவர்கள் சிறுபான்மையினர். ஈழப்போரிலோ சிங்களவர்கள் பெரும்பான்மையினர். ஈழத்தமிழர் சிறுபான்மையினர்.
மகாபாரதப் போரில் பாண்டவர்கள் எப்படித் தங்கள் உரிமைப் பங்காக முதலில் ஐந்து நாடுகள், பிறகு ஐந்து ஊர்கள் கேட்டு, அப்புறம் ஐந்து வீடுகளாவது தாருங்கள் என்று கேட்டு, கெளரவர்கள் அதற்கும் உடன்படாததால் போருக்குப் புறப்பட்டார்களோ, அப்படி ஈழத்தமிழர்களும் வெள்ளையர் வெளியேறிய பிறகான இலங்கையில் ஆட்சியை ஆக்கிரமித்துக் கொண்ட சிங்களரிடம், எல்லா உரிமைகளிலும் முதலில் 50க்கும் 50 கேட்டார்கள், அதாவது இணையாட்சி (சமஷ்டி) கேட்டார்கள்.
அடுத்து சுயநிர்ணய உரிமையோடு கூடிய தனித்தமிழ் மாநிலம் கேட்டார்கள். அடுத்து ஒன்றுபட்ட தமிழர் பாரம்பரியத் தாயகம் என்றாவது தமிழ்மக்கள் செறிந்து வாழும் வடக்குக் கிழக்கை ஒப்புக்கொள்ளுங்கள் என்று கேட்டார்கள்.
அதாவது இணையாட்சி கேட்டு, மாகாணசபை கேட்டு, பிரதேசசபை, மாவட்டசபை என்று இறங்கிவந்த பிறகும், தமிழர்களுக்கு எதைக் கொடுக்கவும் சிங்களப்பேரினவாதம் உடன்படாததுதான் காரணமாகவும், வடகிழக்குத் தமிழர் தலைவர்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்களை ஒரு தலைப்பட்சமாகக் கிழித்தெறிந்ததின் காரணமாகவுமே ஈழத்தமிழ் இளைய குமுகாயம் ஆயுதங்களை ஏந்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது.
அப்படித் தள்ளப்பட்டபோது ஈழத் தமிழ் இளைஞர்களிடையே பல ஆயுதப் போராட்டக் குழுக்கள் எழுந்தன என்றாலும், பாண்டவர்க்குக் கண்ணன் போல் புலிகளுக்கு நெடுமாறன் கிடைத்ததால் தமிழீழ விடுதலைப் புலிகளே நின்றார்கள். நான்கு ஈழப்போர்களில் மூன்றில் வென்றார்கள். தனியாட்சியும் கண்டார்கள்.
புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஈழத் தமிழ்மக்களின் தேசியத் தலைவராகவே உயர்ந்தார். ஒளிர்ந்தார். ஆம், "ரா' போன்ற இந்திய உளவுப்படைகள் போராளிக் குழுக்களை ஒன்றை ஒன்றுடன் மோதவிட்டு அழியுமாறு செய்தபோது, அந்த அழிவுக்கு ஆட்படாமல் நிமிர்ந்து நின்று பிரபாகரன் தலைமையின் கீழ், நெடுமாறன் ஆலோசனையுடன் நடைபோட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமே.
இதைத் தெரிந்திருந்தும் புரிந்து கொள்ளாமல் "சகோதரச் சண்டையினால்தான் அவர்கள் வெற்றி பெறுவது தவிர்ந்து போனது'' என்று தப்புக் கருத்துச் சொன்னவர்கள் தமிழ்நாட்டில் பலபேராவர்.
வியட்நாம் போரில் ஓசிமின் போல, பாலத்தீன விடுதலை போரில் யாசிர் அராபத் போல ஈழப்போரில் தம்பி பிரபாகரன் தரணியே வியக்கும் வண்ணம் சாதனை படைத்தார். நெடுமாறனின் நெளிவு சுழிவான ஆலோசனைகளுடன் தோள்கள் புடைத்தார்.
எனினும், நாலாவது ஈழப்போரில் எதிரிகள் வெல்லவும், புலிகளிடம் பூத்திருக்க வேண்டிய வெற்றி நழுவிப்போகவும் காரணம், ஓசிமின்னுக்குச் சீனாவும், சோவியத் ஒன்றியமும் பக்கபலமாக இருந்ததைப் போல, அராபத்துக்கு ஆதரவாக அரபு நாடுகளும், முசுலிம் நாடுகளும் அணிவகுத்து நின்றதைப்போல பிரபாகரனுக்கு எந்த நாடும் பின்புலமாக இருக்க முன்வராததாகும்.
பின்புலமாக எந்த நாடும் இல்லாவிட்டாலும்கூட அவர் தன் பலத்தில் வெற்றி பெற்றிருக்கவே செய்வார். ஆனால் பின்புலமாக இருப்பதைப்போல் காட்டிக்கொண்டே இந்தியா எதிரிக்கு உதவி, காலை வாரிவிட்டுவிட்டது. அன்றைய தமிழக ஆட்சியும் அதற்குத் துணைபோய்விட்டது.
அதைவிடக் கொடுமை! 1958-ல் இருந்தே "நாங்கள் ஈழத் தமிழருக்கு ஆதரவு, புதிய புறநானூறு படைக்கும் புலிகளுக்கு அரணாக இருப்போம்'' என்று சொல்லிக்கொண்டு, 1986-ல் அனைத்திந்தியத் தலைவர்களையும் கூட்டி வந்து மதுரையில் தமிழீழ ஆதரவாளர்கள் (டெசோ) மாநாட்டை நடத்தியவர்களே, நாலாவது ஈழப்போரின்போது (2008-2009) தமிழ்நாட்டு ஆட்சியில் மட்டுமின்றி, தில்லி நடுவரணசு ஆட்சியிலும் நாட்டாண்மை பண்ணிக் கொண்டிருந்தபோது முதுகில் குத்தியதாகும்.
மகாபாரதம் கதையிலேனும் பாண்டவர்கள் நாடுகேட்க உலகநீதியின்படி எந்த அடிப்படை உரிமையும் இல்லை. ஏனெனில், அத்தினாபுரி மன்னன் சந்தனுவின் வாரிசாக மூத்த தாரத்தின் மகன் வீடுமன் (பீஷ்மன்) முடிசூடிக்கொள்ள மறுக்கவே, இளைய தாரத்தின் மூத்த பேரன் திருதராட்டிரனே முடிசூட்டப்படுகிறான். அவன் குருடனானதால், அவன் தம்பியாகிய பாண்டு அவன் சார்பில்தான் அரசை நடத்தினான். திருதராட்டிரனுக்கு வாரிசு இல்லையென்றால்தான், பாண்டுவின் மக்களுக்கு ஆட்சியில் பங்குகேட்க உரிமையுண்டு. இருப்பினும் திருதராட்டிரனின் வாரிசு துரியோதனன் இந்திரப்பிரத்தத்தைத் தலைநகராகக் கொண்ட நாட்டைப் பாண்டவர்களுக்காக வழங்கவே செய்கிறான்.
பின்னர் சகுனி மூலம் சூதாட்டத்தில் கபடமாக அதைக் கவர்ந்து கொள்கிறான் என்றாலும், இவர்கள் ஏன் சூதாட்டத்திற்கு இணங்க வேண்டும்? கிடைத்த நாட்டை இழக்க வேண்டும்?
இலங்கையைப் பொறுத்தவரை அதன் மூத்தகுடி தமிழினமே. வந்தேறி இனமே சிங்களராகும். அது மட்டுமின்றி, இலங்கையைச் சுதந்திரம் என்ற பெயரில் சிங்களரிடம் ஒப்படைத்த ஆங்கிலேயர்கள், அதற்கான இலங்கையின் இறையாண்மையைப் பெற்றது தமிழரிடமிருந்தேயன்றி, சிங்களரிடமிருந்தல்ல. அந்த உரிமை மாற்று ஆவணம்கூட இன்றும் இருக்கிறது.
னவே, அந்த இறையாண்மையைத் திரும்ப வழங்கியபோது நீதிப்படியும், உலக நியதிப்படியும் தமிழரிடம்தான் வழங்கியிருக்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, இலங்கைக்கு ஆங்கிலேயரிடமிருந்து முதன்முதலில் விடுதலை கேட்டவர்களும் தமிழரேயன்றி சிங்களரல்லர்.
மேலும், ஆங்கிலேயர் உட்பட்ட ஐரோப்பியர் இலங்கையை ஆக்கிரமிக்க வந்தபோது, அதை எதிர்த்துப் போரிட்டவர்களும் தமிழ் மன்னர்களேயன்றிச் சிங்கள மன்னர்களல்லர்.
மகாபாரதப் போரின்போது அன்றைய தமிழ்ப் பெருவேந்தனாகிய உதியன் சேரலாதன், கெளரவர்கள் - பாண்டவர்கள் இரு தரப்பாருமே அவன் உதவியைக் கேட்டபோது, ஒரு தரப்புக்குச் சார்பாக அவன் ஓடவில்லை. மாறாக, இரு தரப்புப் படைகளுக்குமே சோறிட்டு நடுநிலைமை காத்தான்.
அப்படி இந்தியா நடுநிலைமை காத்திருந்தால்கூட கண்ணனைப் போல் நெடுமாறனை அறிவுரைஞராகக் கொண்டிருந்த புலிகள், நாலாவது ஈழப்போரிலும் வெற்றிக் கொடி நாட்டியிருப்பார்கள். இராசபக்சேவுக்குப் பிரபாகரன் தமிழன் வீரன் எப்படியென்று காட்டியிருப்பார்.
ஆனால், இந்தியா தமிழ்நாட்டு எட்டப்பர்களின் இரட்டை வேடத்தைப் பயன்படுத்திக்கொண்டு, சிங்களர் வெற்றி முரசு கொட்ட உதவி செய்தது. அதனால்தான் மகாபாரதக் கண்ணனைப் போல் ஈழப்போரில் நெடுமாறனால் வெற்றி ஈட்டிக் கொடுக்க முடியாமல், அது நழுவி விட்டது.
ஆயினும், "பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்'' என்ற இந்த நூலின் மூலம் உலகத் தமிழர்களுக்கெல்லாம் அவரின் ஏற்றம் பற்றி மட்டுமல்ல "கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும் ஆற்றல்'' உண்டாகும் விதமாக அருந்தமிழ்ச் சாதனை புரிந்திருக்கிறார் ஐயா நெடுமாறன்.
ஆம். 1200க்கும் மேற்பட்ட பக்கங்களில் அரிய, ஒளிப்படங்களோடு, தெளியாரும் தெளிவடையும் வண்ணம் பிரபாகரன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, ஈழப்போராட்ட வரலாற்றையே வரைந்தளித்துள்ளார்.
புறநானூறு முதலிய சங்க இலக்கியங்கள் காட்டும் தமிழன் வீரத்தை, தனது வாழ்க்கையின் மூலம் கண்கூடாகத் தரணிக்கு உணர்த்தியவர் தேசியத் தலைவர் பிரபாகரன் என்றால், அதில் மாசு மருவேது?
"பண்டை நாளில் மூவேந்தரையும் வென்ற பேராற்றல் படைத்த பெருவீரனான வாணனின் பெயரை இளைஞர்கள் தங்கள் மார்புகளில் எழுதிக்கொண்டு பெருமிதம் பொங்கத் திரிந்தனர் எனப் பழம் பாடல் ஒன்று தெரிவிக்கிறது. அதைப்போல இலட்சிய வேங்கையான திரு. பிரபாகரன் தீரவாழ்வை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ் இளைஞர்கள் வீறுபெற்று எழ வேண்டும்'' என்கிறார் நெடுமாறன் தன் முன்னுரையில்.
வாணன் வென்றது தமிழ் மூவேந்தர்களை. பிரபாகரன் வெற்றி கொள்ளப் படை நடத்தியதோ அயலவராகிய, தமிழினத்தை அழிக்க எண்ணும் சிங்களப் பேரினவாதிகள் மற்றும் அவர்களுக்கு முட்டுக்கொடுத்த பன்னாட்டு ஏகாதிபத்தியவாதிகளை.
ஆகவே, வாணனிலும் உயர்ந்து நிற்கும் பிரபாகரனை உலகில் உள்ள ஒவ்வொரு தமிழ் இளைஞனும் வீரத்துக்கு முன்னுதாரணமாகக் கொள்வான் என்பதில் ஐயமில்லை.
அவருடைய பெயரை மட்டுமல்ல, படத்தையும் ஏந்தி நிற்கும் பட்டாளமாகத் தமிழ் இளைஞர்கள் உருவாகி வருவதை இப்போதே உலகமெங்கும் கண்கூடாகக் காண்கிறோம்.
இந்த நூல் தமிழ் இளைஞருக்கு மட்டுமல்ல, தமிழ் முதியோருக்கும் ஆண்-பெண் வேறுபாடின்றி ஆற்றலூட்டுகிறது என்றால் மிகையல்ல.
அதேவேளை மொத்த அரபுலகின் ஆதரவும் யாசிர் அராபத்துக்குக் கிட்டியது போல தமிழுலகின் முழு ஆதரவும் பிரபாகரனுக்குக் கிடைக்கவிடாமல் திசை திருப்பல்களைச் செய்த இந்திய தேசியம், திராவிட தேசியங்களின் திருகுதாளங்கள் மறுபடியும் ஈழ ஆதரவில் தொடராமலிருக்க, தமிழ்த்தேசிய அணுகுமுறை ஒன்றுதான் வழி என்பதை தமிழர் தேசிய இயக்கத் தலைவரான நெடுமாறன் அவர்கள் உணர்ந்து, பிரபாகரன் போல் பீடு நடைபோட முன்வரவேண்டும் என்பதே பாரகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்பதையும் சொல்லி வைக்க விரும்புகிறோம்.
வெல்க பிரபாகரன் வெற்றியணி!
வாழ்க ஐயா நெடுமாறன் தமிழர் தேசியப் பணி!
நன்றி : "எழுகதிர்' ஆகத்து 2012

1 கருத்து:

  1. கதிரவன்:

    கண்ணன் மாபரதப் போரில் வெற்றி தேடித்தந்தான். பழ.நெடுமாறன் ஈழப்போரில் தோல்வியைப் பெற்றுத்தந்துள்ளார். சர்வதேசிய அரசியலின் கைப்பாவையாக இருந்து வழிக்காட்டியவர் இன்னொருவர் அவர் ஜெகத் கஸ்பர். இவர்கள் எல்லோரும் அமெரிக்காவினை நம்பியே கெட்டவர்கள். அல்லது அமெரிக்காவிற்காக ஊழியம் செய்பவர்கள். சீனாவினை எதிரியாக காட்டி அமெரிக்காவினை கூவிகூவி அழைப்பவர்கள். ஆனால் அங்கு அமெரிக்காவின் மேலாதிக்கம்தான் மேலதிகமாக இருக்கிறது என்பதனை மூடி மறைப்பவர்கள். வைகோ, சீமான், பழ.நெடுமாறன் என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டேதான் போகிறது. இவர்களுக்கு அரசியல் குருக்கள் அமெரிக்காவே. அமெரிக்காவினைப் போன்ற எந்த ஆதிக்க நாடுகளை நம்பியும் விடுதலைப் பெறமுடியாது. அவர்கள் இன்றும் இராஜபட்சேவை இனபடுகொலையாளன் என்று அறிவிக்க மறுக்கிறது. இதைப் பயன்படுத்தித்தான் இராஜபட்சேவை பணியவைத்து தனக்கான சேவையாளனாக மாற்றத் துடிக்கிறது. இந்தப் பக்கமும் சீனா ரஷ்யா, இந்தியா என்று எல்லோரும் இதைப் பயன்படுத்தி பேரம் மட்டுமே நடக்கிறது. இவையெல்லாவற்றையும் எதிர்க்காமல் ஈழமக்களுக்கு எந்தவொரு எதிர்க்காலமும் இல்லை. ஏசுநாதரோ, பெருமாளோ மீண்டுவருவார் என்பது போல் பிரபாகரன் மீண்டும் வருவார் என்பதல்ல, வரலாறு பலநூறு பிரபாகரன்களை உருவாக்கும். அதற்கு நாம் செய்யவேண்டியது நேர்மையாக யாருக்கும் இரையாகாமல் ஆதிக்கத்தினை எதிர்த்துப் போராடுவதுதான் வழி.

    பதிலளிநீக்கு