2012ஆம் ஆண்டு நவம்பர் முதல் நாளில் ஐ.நா. மனித உரிமைக் கமிசனின்
உலகளாவிய மறுஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலங்கை அமைச்சர்
மகிந்த சமரசிங்கே தலைமையில் அந்நாட்டின் குழு கலந்துகொண்டது. இக்கூட்டத்தில்
கலந்துகொண்ட அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, கனடா மற்றும், நார்வே நாட்டு
பிரதிநிதிகள், இராசபக்சே அரசின் மனித உரிமை மீறல்கள் குறித்து மிகக்
கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தார்கள். ஐ.நாவிற்கான அமெரிக்கத் தூதர் எலின்
சேம்பர்லைன் டொனாஹோ பேசும்போது, ஐ.நா. மனித உரிமைக் குழு செய்த
பரிந்துரைகளை இராசபக்சே அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது எனச் சாடினார்.
இராசபக்சே
அரசு அமைத்த நீதி விசாரணை நல்லிணக்க ஆணைக்குழு போர்க் குற்றங்களையும்
போரின் இறுதிக் கட்டத்தில் அப்பாவி மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட
கொடூரங்களையும் அடியோடு மறைப்பதற்கு முயற்சி செய்வதாகவும் அமெரிக்காவும்
மேற்கு நாடுகளும் குற்றம் சாட்டின.
சீனா, ரஷ்யா, கியூபா ஆகியவை ஐ.நா. மனித உரிமை குழுவிற்குள் பிளவு ஏற்படுத்த அமெரிக்காவும் பிற நாடுகளும் முயற்சி செய்வதாகக் கூறின.
இந்தியா,
ஸ்பெயின், ஆகியவை இலங்கை அரசின் மீது மென்மையான விமர்சனங்களை வைத்தன.
மேலும் இலங்கையில் அனைத்துலக மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டது குறித்து
வெளிப்படையாகவும் முழுமையாகவும் விசாரணை நடத்த முன்வருமாறு இலங்கை அரசை
வற்புறுத்தின. ஆனால், போரின் போது இழைக்கப்பட்ட இனப்படுகொலைகளையும் போர்க்
குற்றங்களையும் குறித்து இந்தியா வாயைத் திறக்கவேயில்லை.
அதே
வேளையில் 1987ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் செய்துகொண்ட
உடன்பாட்டின்படி 13வது திருத்தச் சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்தும்படி
இந்தியா வேண்டிக்கொண்டது. இலங்கையில் உள்ள தமிழர்களையும் தமிழ்நாட்டுத்
தமிழர்களையும் இதன் மூலம் திருப்திப்படுத்தலாம் என இந்தியா கனவு காண்கிறது.
ஆனால், இலங்கையில் சிங்கள தீவிரவாத கட்சிகள் 13வது சட்டத் திருத்தத்தை
அடியோடு இரத்து செய்யவேண்டுமென்று வற்புறுத்துகின்றன. இக்கட்சிகள்
இராசபக்சே அரசின் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என்பது இந்தியாவுக்கு
தெரியாதா என்ன? கூட்டணிக் கட்சிகளை மீறி இராசபக்சே ஒருபோதும்
செயல்படமாட்டார் என்பதும் இந்தியாவுக்குத் தெரியும். உலகத் தமிழர்களை
ஏமாற்றுவதற்கு இந்த நாடகத்தை இந்தியா நடத்துகிறது.
சுதந்திரமான
அமைப்பும் இந்தியா உட்பட பல நாடுகளின் நீதிபதிகளைக் கொண்டதுமான டப்ளின்
மக்கள் தீர்ப்பாயம் இலங்கை அரசின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை
நடத்த முற்பட்டபோதும், ஐ.நா. விசாரணை குழு விசாரணை நடத்த முயன்றபோதும்
அவைகளை தனது நாட்டிற்குள் நுழையவோ விசாரணை நடத்தவோ அனுமதிக்க இராசபக்சே
பிடிவாதமாக மறுத்துவிட்டார். ஆனால் மேற்கண்ட இரு அமைப்புகளும் தங்களுக்குக்
கிடைத்த ஆதாரங்களையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு இலங்கையில்
அப்பட்டமான மனித உரிமை மீறல்களும் இனப்படுகொலைகளும் இழைக்கப்பட்டிருப்பதை
உறுதிசெய்தன.
2010ஆம் ஆண்டு டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின்
தீர்ப்பிற்குப் பிறகு அணை உடைந்த வெள்ளம் போல ஏராளமான ஆதாரங்கள் அதனிடம்
வந்து குவிந்தன. மிகக்கொடுமையாக நடைபெற்ற அட்டுழியங்கள் மிகப் பெரிய
அளவில் நடைபெற்ற இனப்படுகொலைகள் ஆகியவை வெளிச்சத்திற்கு வந்தன. இவற்றை
விசாரணை செய்ய 2013 ஏப்ரலில் டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்தின் நீதிபதிகள்
மீண்டும் கூட இருக்கிறார்கள். இக்கூட்டத்தில் சர்வதேச சட்ட நிபுணர்களும்
பங்கேற்கிறார்கள்.
போர்க் குற்றங்களையும் மனித உரிமை
மீறல்களையும் அறவே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காகவும்
சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி விவாதித்து பல சட்டங்களையும் விதிமுறைகளையும்
உருவாக்கியுள்ளனர். அவற்றை கீழே சுருக்கமாகத் தந்துள்ளோம்.
போரில்
இழைக்கப்படுகிற குற்றங்களைத் தடுப்பதற்காக பல சர்வதேச மாநாடுகள் கூடி
இதற்கான சர்வதேசச் சட்ட விதிமுறைகளை வகுத்துள்ளனர். 1899, 1907ஆம்
ஆண்டுகளில் ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் விதிமுறைகள்
வகுக்கப்பட்டன. 2ஆம் உலகப்போருக்குப்பின் 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ஆம் தேதி
சர்வதேச நாடுகள் ஒன்றுகூடி இலண்டன் பட்டயத்தை வெளியிட்டன. போர்க்
குற்றங்களுடன் அமைதிக்கு எதிரான குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான
குற்றங்கள் ஆகியவையும் இந்தப் பட்டயத்தில் இணைக்கப்பட்டன.
இந்த
சர்வதேச சட்டவிதிமுறைகளின்படி 2ஆம் உலகப்போரில் மேற்கண்ட குற்றங்களை இழைத்த
ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகளின் தலைவர்கள் படைத்தளபதிகள் ஆகியோர் மீது
விசாரணை நடத்த சிறப்புப் போர்க் குற்ற நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு அவர்கள்
தண்டிக்கப்பட்டார்கள்.
பிற்காலத்தில் யூகோஸ்லோவியா அதிபரான
மிலோசேவிக் தனது நாட்டைச் சேர்ந்த கொசவோ மக்களை திட்டமிட்டு இனப்படுகொலை
செய்தார் என்பதற்காக அவருக்கு எதிரான நடவடிக்கைகளை ஐ.நா. மேற்கொண்டது.
1998ஆம்
ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. பாதுகாப்புக் குழு இப்பிரச்சினையில் தலையிட்டு
யூகோஸ்லாவியாவின் இராணுவ நடவடிக்கையைக் கண்டனம் செய்ததோடு அதற்கு எதிராக
பொருளாதாரத் தடை நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. அதே ஆண்டு செப்டம்பரில்
பாதுகாப்புக் குழு கூடி கொசவோ பகுதியிலிருந்து வெளியேறும்படி செர்பிய
இராணுவத்திற்கு ஆணையிட்டது. அது மறுக்கப்பட்ட காரணத்தினால் ஐ.நா.வின்
சார்பில் நேட்டோ படைகள் அந்நாட்டிற்குள் புகுந்தன. இதன் விளைவாக செர்பிய
இராணுவம் பின்வாங்கியது. கொசவோவிலிருந்து அகதிகளாக வெளியேறிய அல்பேனிய
முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் நாட்டிற்குத் திரும்பத் தொடங்கினார்கள். கொசவோ
தனி நாடானது.
யூகோஸ்லாவிய அதிபர் மிலோசோவிக் நேட்டோ படைகளால்
கைது செய்யப்பட்டு சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டார். போர்க்
குற்றங்களுக்காக அவர் மீது விசாரணை நடைபெற்றுவரும் வேளையிலேயே சிறையிலேயே
அவர் மரணம் அடைந்தார்.
போஸ்னியோ முன்னாள் அதிபர் கராட்ஜிக்
என்பவர் போர்க் குற்றங்களுக்காக 2008ஆம் ஆண்டு சூலையில் கைது செய்யப்பட்டு
போர் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் சர்வதேச
நீதிமன்றத்தின் பாதுகாப்பில் சிறை வைக்கப்பட்டார். அவர் மீது விசாரணை
தொடர்ந்து நடக்கிறது.
மேலேகண்ட போர்க் குற்றவாளிகளைவிட
மிகக்கொடிய போர்க் குற்றவாளி இராசபக்சே ஆவார். மனித குலத்திற்கு எதிராக
மன்னிக்கமுடியாத மாபெரும் குற்றங்களைக் கூச்சமின்றி இழைத்தவர் அவர் ஆவார்.
ஆனால் அவர் இப்போது ஐ.நா. உட்பட உலக நாடுகளை அவமதிக்கத்
துணிந்திருக்கிறார். இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்களும் திட்டமிட்ட
இனப்படுகொலைகளும் அப்பட்டமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தன்னை யாரும்
எதுவும் செய்ய முடியாது என அவர் கருதுகிறார். இந்தியாவும் சீனாவும்
தனக்குத்துணையாக இருக்கும்வரை எதை வேண்டுமானாலும் செய்யலாம் எனத்
துணிந்திருக்கிறார்.
ஈழத் தமிழர்களுக்கு எதிராக மட்டுமல்ல
இலங்கையில் சனநாயக, மனித உரிமை ஆகியவற்றுக்காகக் குரல் கொடுப்பவர்கள் யாராக
இருந்தாலும் ஒழித்துக்கட்டுகிறார். அவர்கள் சிங்களவராக இருந்தாலும்
விட்டுவைப்பதில்லை. ஏராளமான சிங்களப் பத்திரிகையாளர்களும் சிங்களக் கட்சித்
தலைவர்களும் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். உள்நாட்டில்
சனநாயகத்தை வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டு சர்வாதிகார நச்சு மரத்தை ஊன்றி
நிறுத்தியிருக்கிறார்.
எடுத்துக்காட்டாக தனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் பாதுகாப்புத் துறை உட்பட 79 துறைகளைக் வைத்திருக்கிறார்.
அவருடைய சகோதரர்களும் நெருங்கிய உறவினர்களும் முக்கியப் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள்.
சிங்கள
இராணுவத்தின் வெற்றிக்குக் காரணமான தலைமைத் தளபதியாக இருந்த சரத்பொன்சேகா
போர் முடிந்த பிறகு என்ன ஆனார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையாகும்.
இன்றைக்கும் அவருடைய உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலைமையிலும் அங்கிருந்து
வெளியே தப்பிச்செல்ல முடியாமலும் தவிக்கிறார்.
அண்மையில் பல
வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றத்தின் தலைமை
நீதிபதி ஷிரானி பண்டாரநாயகா மீது இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனத்
தீர்மானத்தினைக் கொண்டு வந்து அவரைப் பதவி நீக்கம் செய்வதற்கான முயற்சி
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராசபக்சே கட்சிக்கு உள்ள பெரும்பான்மையின் காரணமாக
இத்தீர்மானம் நிறைவேற்றப்படுவது உறுதி. அரசு நிர்வாகமும் இராணுவம்
ஆகியவற்றை முழுமையாக தனது சர்வாதிகாரப் பிடிக்குள் கொண்டுவந்த இராசபக்சே
இப்போது அந்நாட்டின் நீதித்துறையையும் தனது கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவந்துவிட்டார்.
மனித உரிமை ஆணையம், தேர்தல் ஆணையம், ஊழல்
ஒழிப்பு குழு, அரசுப்பணிகளுக்கான தேர்வாயம் ஆகியவற்றின் தலைவர்கள்
சுயேச்சையாகச் செயல்பட வழி செய்யும் 17ஆவது சட்டத் திருத்தத்தை அடியோடு
திருத்தி இந்த அமைப்புகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரத்தைத்
தன்னிடமே வைத்துக்கொண்டிருக்கிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக
நாட்டின் குடியரசுத் தலைவராக யாராக இருந்தாலும் இருமுறைக்கு மேல்
வரமுடியாது என்ற அரசியல் சட்டப்பிரிவை திருத்தி எத்தனைமுறை வேண்டுமானாலும்
குடியரசுத் தலைவர் பதவியில் தொடரலாம் என்ற நிலையை ஏற்படுத்தி நிரந்தர
சர்வாதிகாரியாக உருவாக வழிவகுத்துக்கொண்டுள்ளார்.
அவரது சொந்தக்
கட்சியின் தலைவரான சந்திரிகா உள்நாட்டில் இருந்தால் தனது உயிருக்கு ஆபத்து
என அஞ்சி வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார். எதிர்க்கட்சிகள்
மிரட்டப்பட்டுச் செயலற்றுக் கிடக்கின்றன. மொத்தத்தில் இலங்கையில் ஜனநாயகம்
குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது.
மொத்தத்தில் இராசபக்சே தென்னாசியாவின் இட்லருக்கு மேலான இட்லராக உருவாகிக்கொண்டிருக்கிறார்.
ஜெர்மானிய
இட்லர் தனது நாட்டிலிருந்த யூதர்களை முதலில் இனப்படுகொலை செய்தான். இதில்
தப்பியவர்கள் நாட்டைவிட்டு வெளியறி ஓடினார்கள். பிறகு கம்யூனிஸ்டுகளை
வேட்டையாடினான். இறுதியாக தன்னை எதிர்க்க யாரும் இல்லாமல் செய்து
அந்நாட்டின் சர்வதிகாரியானான். மனித குலத்திற்கு எதிராக இட்லர் மேற்கொண்ட
நடவடிக்கைகளை பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா உட்பட வேடிக்கைப் பார்த்தன.
சர்வதேச சங்கம் ஊமை சாட்சியாக நின்றது. இதன் விளைவாக ஐரோப்பாவிலிருந்த மற்ற
நாடுகளின்மீது படையெடுத்து ஒவ்வொன்றாக கைப்பற்றினான். வேடிக்கைப் பார்த்த
வல்லரசுகள் அதிர்ச்சியடைந்தன. இட்லருக்கு எதிராக அணிசேர்ந்தன. 2ஆம்
உலகப்போர் மூண்டது. இதன் விளைவாக ஐரோப்பா சுடுகாடானது. ஐரோப்பிய மக்கள்
சொல்லொண்ணாத துயரங்களுக்கு ஆளாயினர்.
வரலாற்றில் அழியாமல்
பதிந்துவிட்ட இந்த உண்மையை மறந்து இன்றைக்கு புதிய இட்லராக
உருவாகிக்கொண்டிருக்கிற இராசபக்சேவுக்கு எல்லாவகையிலும் தோள்கொடுத்து துணை
நிற்கும் நாடுகள். தங்கள் தவறை உணரப்போகும் நாள் அதிகதூரத்தில் இல்லை.
ஆனால் காந்தியின் நாடு புதிய இட்லரின் பிறப்புக்கு மகப்பேற்றுத் தாதியாக விளங்குகிறது என்பதுதான் சோகத்திலும் சோகமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக