ஒரு காலம் வரை சோறுடைத்த சோழ வள நாடு என்ற பெருமை தாங்கிய தஞ்சாவூர்தான் எனக்குப் பூர்வீகம். நான் பார்த்து வளர்ந்த தஞ்சாவூர், வளமையைத் துறந்து வறுமை பூண்டு இருந்தது. தி.ஜானகிராமனின் எழுத்துக் களில் வாசித்த இயற்கையும், வனப்பும் இல்லாமல் போயிருந்தன. தஞ்சை நகரத்தில்தான் என் கால்கள் தோயத்தோய நடந்து திரிந்தன.
கீழ வாசலுக்குப் போகும் வழியில் நிறைய நாட்டுப்புறக் கலைஞர்களின் வீடுகள் இருக்கும். அந்தந்த வீட்டு முகப்பில் ஒரு பெரிய விளம்பரப் பலகை இருக்கும். அதில் அவர்களுடைய பெயரும் அவர்கள் வைத்திருக்கும் குழுவின் பெயரும் பொறிக்கப்பட்டு இருக்கும். ஒவ்வொரு பலகையிலும் தவறாமல் வானொலி புகழ், சினிமா புகழ் என்றோ அல்லது கலைமாமணி என்றோ எழுதி இருப்பார்கள். கரகாட்டம் தொடங்கி நாட்டுப்புறக் கலைகள் அத்தனைக்கும் தஞ்சாவூர் சிறப்பு வாய்ந்தது. பெரிய கோயிலின் புறத்தே அமைந்துள்ள சிவகங்கை பூங்கா வாயிலில் வீணை செய்துகொண்டு இருப்பார்கள். ஒரு நாளைக்கு எத்தனை வீணை செய்வார்கள் என்று யூகிக்க முடியாதவாறு ஒரு ஆசாரி எப்போதும் மரத்தை இழைத்துக்கொண்டே இருப்பார்.
தஞ்சாவூருக்குக் குறுக்கே ஓடும் வெண்ணாற்றங் கரையில் சமயத்தில் நீரும் வருவது உண்டு. அங்கே போய்க் குளிப்பதும் நீச்சல் அடிப்பதும் தனி சுகம். ஒரு ஊருக்குத் தேவையான அத்தனை அம்சங்களும் குடிகொண்டிருந்தபோதும் எவ்விதப் பரபரப்பும் இல்லாததே தஞ்சாவூருக்கான அடையாளம் எனத் தோன்றுகிறது. தமிழகத்தின் தொல் இயல்களும் தஞ்சையைத் தலைமையாகக் கொண்டவையே. நூலகங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சரஸ்வதி மஹாலும், மராட்டியர் அரண்மனையும், அதைக் காண வரும் சுற்றுலாப் பயணி களும் என தஞ்சாவூரில் பார்த்து வியக்க எத்தனையோ உண்டு.
unarchitamilan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக