உலகின் பல நாடுகளில் அடுத்தடுத்து வெடிக்கும் புரட்சிகளுக்கு உணவுப் பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வு ஒரு முக்கியக் காரணம் என்பது ஐ.நா. சபையின் அபாய மணி. ஹைத்தி முதல் எகிப்து வரை ஆட்சி மாற்றம் கேட்டு வெடிக்கும் போராட்டங்களுக்கு, பசித்த வயிறுகள் சுரக்கும் அமிலம்தான் எரிபொருள்.
லாபம் ஒன்றையே குறிக்கோளாகக்கொண்ட வர்த்தகர்களின் விளையாட்டுக் களமாக விவசாயம் மாறத் துவங்கியபோதே... விவசாயிகளின் முதுகெலும்பும் முறியத் துவங்கிவிட்டது. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் தங்கள் நாட்டு விவசாயிகளுக்குத் தாராளமான மானியப் பாதுகாப்பு தருகின்றன. மறுபுறம், 'மானியம் தந்தால், கடன் தர மாட்டோம்' என்று வளரும் நாடுகளுக்குத் தந்திரக் கட்டுப்பாடுகள் விதிக்கின்றன.
விதை நெல் தொடங்கி பாசனம் வரை... தொட்டதற்கெல்லாம் விவசாயிக்குத் ததிங்கிணத்தோம்தான். அதையும் மீறி விளைவித்தாலும், 'லாபம் வந்தால் இடைத் தரகர்களுக்கு... நஷ்டம் என்றால் விவசாயிக்கு' என்ற அக்கிரமக் கூட்டு ஒப்பந்தம்தான் இங்கே அமலில் இருக்கிறது. சட்டம் போட்டுக் காக்க வேண்டிய அரசாங்கமோ, இணையதளம் வரையில் உணவுப் பொருள் சூதாட்டத்தை ஊக்குவிக்கிறது!
இந்தியாவைப் பொறுத்தவரை விவசாயம் ஒரு தற்கொலைத் தொழிலாகப் பார்க்கப்படும் அவல நிலை. நெல் நட்ட வயலில் கல்லை நட்டு மனைகளாகக் கூறு போடும் கொடுமை. ஆள்வோரின் பாராமுகம், சர்வதேசச் சூதாடிகளின் நரித் தந்திரம், பதுக்கல்காரர்களின் கள்ள வியாபாரம்... இத்தனையும் போட்டு அழுத்தியதில் விவசாயத்தை மண் மூடிக்கொண்டு இருக்கிறது. 13-க்கு ஒரு லிட்டர் பாலை உணவு விடுதிக்கு ஊற்றும் விவசாயி, அதே விடுதியில் ஒரு வாய் காபி குடிக்க நினைத்தால் 15 கொடுத்தாக வேண்டிய காலக் கொடுமையை என்னவென்பது!
ஐ.நா. சபையின் எச்சரிக்கையைக் கேட்ட பிறகாவது நமக்கு புத்தி வருமா? பசித்த வயிறுக்கு எகிப்து வேறு... இந்தியா வேறா?
unarchitamilan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக