
'ஊழல்தான் நம் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் பெரு நோய்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வாய் மலர்ந்து இருக்கிறார். அந்த நோயைத் தீர்க்க எந்த மருந்தும் அவரிடம் இல்லை என்பதுதான் நாடு செய்த பாவம். முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும். வைரத்தை வைரத்தால் அறுக்க வேண்டும். ஊழலை ஊழலால் ஒழிக்க வேண்டும். ஆட்சியாளர்களின் ஊழல் குறித்துச் சிந்திப்பதற்கே நேரம் இல்லாத ஞானச் சித்தர்களாகிவிட்டனர் நம் மக்கள். எய்ட்ஸ் நோயைவிட மிகவும் கொடியது ஊழல் நோய் என்று இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது?
'ஊழல்... ஜனநாயகத்தின் உயிரைப் பறிக்கும்; நேர்மையான ஆட்சி முறையை நிர்மூலமாக்கும்’ என்ற உண்மையை எப்போது நாம் உணரப் போகிறோம்? அடித்த கொள்ளையில் எனக்கும் கொஞ்சம் கொடுத்தால் போதும் என்று நினைக்கும் நிலைக்கு நாம் இழிந்துவிட்டோமே!
ஆப்பிரிக்காவில் உள்ள பல நாடுகள் வறுமையில் வாடுவதற்கு முதற் காரணம், அங்கு உள்ள ஆட்சியாளர்களே. நைஜீரியாவில் மட்டும் மக்களின் வளம் சுரண்டப்பட்டு, 400 பில்லியன் டாலர் சுவிஸ் வங்கிகளில் முடக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே அதிகமான கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைத்திருக்கும் 'பெருமை’ நம் நாட்டுக்குத்தான் வாய்த்திருக்கிறது. 'வறுமையே வெளியேறு’ என்று வாய் கிழிய முழங்குபவர்களும், 'ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண’ முயல்பவர்களும் சொந்த மண்ணில் சுரண்டிய பணத்தை அந்நிய மண்ணில் அடுக்கிவைத்துள்ளனர். உலகக் கறுப்புப் பணத்தில் இந்தியர்களின் பணம் 60 சதவிகிதமாம். 'பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே. போற்றுவோம் இதை எமக்கில்லை ஈடே’!
'மிகவும் சிக்கலான அரசியல், பொருளாதாரப் பிரச்னைகளுக்கு அடுத்து மிகப் பெரிய பிரச்னை காங்கிரஸ்காரர்கள் தார்மீகரீதியாகத் தாழ்ந்துபோய் இருப்பது தான். அரசியல் அதிகாரத்தின் ருசி அவர் களின் தலைக்கேறிவிட்டது. எம்.எல்.ஏ-க்கள், எம்.எல்.சி-க்கள் நடவடிக்கைகளும், மந்திரிகளின் பலவீனங்களும் மக்களிடையே கலக உணர்வை ஊட்டி வருகின்றன. வெள்ளைக்காரர்களின் அரசாங்கமே பரவாயில்லை என்று அவர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்’ என்று வெங்கடப்பய்யா அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். நேரு காலத்தில் உறக்கத்தில் இருந்து கண் விழித்த ஊழல், மன்மோகன் சிங் காலத்தில் ஊழித் தாண்டவம் புரிகிறது!
ஊழலும் உறவுகளுக்குக் காட்டிய சலுகைகளும்தான் ரோமப் பேரரசை வீழ்த்தியது; பிரெஞ்சுப் புரட்சிக்கு வழி வகுத்தது; ருஷ்யப் புரட்சிக்கு வித்தூன்றியது; சீனாவில் சியாங்காய் ஷேக்கின் ஆட்சிக்கு முடிவு கட்டியது என்ற வரலாற்று உண்மைகளை அறிந்துகொள்ளக்கூட நம் அரசியல்வாதிகளுக்கு நேரம் இல்லை.
'சிற்றின்பலோலர்களும், ஆடம்பரப் பிரியர்களும் நம் அரசியல் உலகை ஆக்கிரமித்துக்கொண்டனர்’ என்று சுந்தர ராமசாமி எழுதியது எவ்வளவு பெரிய உண்மை!
'நாம் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூர்ந்து கவனித்துக்கொண்டு இருக்கிறார்கள். எனவே, காரண காரியங்களோடு சமாதானம் கூற முடியாத காரியங்களை நாம் செய்யாமல் இருக்க வேண்டும்’ என்றார் காந்தி. அந்த ஆயிரம் ஆண்கள், பெண்களின் கண்களில் கறுப்புத் துணி கட்டும் துணிவை இந்த அக்கிரமக்காரர்களுக்கு யார் கொடுத்தது? உங்கள் கண்களை 'கறுப்புத் துணி’ மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக