மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

திங்கள், 25 பிப்ரவரி, 2013

ஆதாரங்கள் இருந்தும் அசையாமல் நிற்கும் அனைத்துலகம் -இதயச்சந்திரன்


எத்தனையோ இன அழிப்பு ஆதாரங்களை சனல் 4 தொலைகாட்சி முன் வைத்தாலும், இந்த சர்வதேச சமூக ஸ்தாபனங்கள் செவிமடுப்பது போல் தெரியவில்லை. இன அழிப்பிற்கான விசாரணைகளை ,கொலையாளிகளே நடாத்த வேண்டுமென விடாப்பிடியாக இருக்கிறது.
தேசியத் தலைவரின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் முன்பு வெளிவந்த நிலையில், தற்போது அவர் கொல்லப்படுவதற்கு முன்பாக சிங்கள இராணுவத்தின் பிடியில் இருந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.
  இதேபோன்று கேணல் ரமேசின் புகைப்படங்கள், காணொளிக் காட்சிகள் வெளி வந்தன. சரணடைந்த நிலையில் தோழர் க.வே.பாலகுமாரனும் அவர் மகன் தீபனும் ஒன்றாக அமர்ந்திருந்த புகைப்படம் வெளியாகியும், அவர்கள் இருவரும் இப்போது எங்கே இருக்கின்றார்கள் என்கிற கேள்விக்கு பதில் இல்லை.
இவர்களைக் கைது செய்யவில்லையென்று கோத்தபாயா ஊடகங்களுக்குச் செவ்வி வழங்கினாலும், உயிரோடு இருந்த புகைப்படங்களைக் கொண்டு, சுயாதீன சர்வதேச விசாரணை நிகழ்த்தப்பட வேண்டுமென்பதை ஏன் இந்த சர்வதேசம் வலியுறுத்தத் தயங்குகின்றது என்பதுதான் தமிழ் மக்கள் முன்னுள்ள கேள்வி. அதுமட்டுமல்லாது, இறுதிப்போரில் தலைவரின் மனைவி,மகள் மற்றும் பாலச்சந்திரனிற்கு என்ன நடந்தது என்று தனக்குத் தெரியாதென, இன அழிப்பினை வழிநடாத்திய சரத் பொன்செக்கா நழுவிச் செல்லப்பார்க்கிறார் .
இவைதவிர புதுவை இரத்தினதுரை, யோகி, பேபி சுப்ரமணியம், மற்றும் லோரன்ஸ் திலகர் போன்ற விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகர்கள், இராணுவத்தால் பேரூந்து ஒன்றில் ஏற்றிச் செல்லப்பட்டதை நேரில் கண்ணுற்ற சாட்சிகள், நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் அதனைத் தெரிவித்தும், அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை என்று மறுக்கின்றது கோத்தா கும்பல்.
கடந்த வருடம், ஐ.நா.மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த இலங்கை மீதான தீர்மானத்தில், சிங்களம் உருவாக்கிய நல்லிணக்க ஆணைக்குழு வெளியிட்ட பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தப்பட்டது . 'அதனைக் கண்காணிப்பதற்கு நாங்கள் வரமாட்டோம்' என்கிற செய்தியை மறைமுகமாக வெளிப்படுத்தியது.
இருப்பினும் கதவை தட்டாமலே உள்ளே வரக்கூடிய அனுமதியை வழங்கவேண்டுமென்கிற தீர்மானத்தை இம்முறை முன்வைக்கப்போகிறது அமெரிக்கா . இதனை சிங்களம் ஏற்றுக்கொள்வதற்கான கால அவகாசத்தையும் இப்புதிய தீர்மானம் வழங்குமென எதிர்பார்க்கலாம்.
இவர்களைப் பொறுத்தவரை , 2009 மே மாதத்திற்குப் பின்னர் இலங்கையில் இன அழிப்பென்று எதுவுமே நடைபெறவில்லை என்கிற நம்பிக்கையோடு செயல்படுவதை விரும்புகிறார்கள். அதனை தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டு, சிங்களத்தோடு கைகுலுக்கி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றாகள்.
அண்மைக்கால 'மகிந்தரோடு கை குலுக்கும் கதைகள் ' மேற்குலகின் நிகழ்ச்சி நிரலை தெளிவாக உணர்த்துகிறது. 'சாட்சிக்காரனின் காலில் விழுவதைவிட சண்டைக்காரனின் காலில் விழுவதே மேல்' என்கிற இராஜதந்திரத்தை, அழிவின் விளிம்பில் இருக்கும் ஒரு பூர்வீக தேசிய இனம் கடைப்பிடித்தால், அழிவு கடுகதியில் வரும் என்பதை எப்போதுதான் இவர்கள் புரிந்துகொள்ளப்போகிறார்களோ தெரியவில்லை. சிங்கக் கொடி பிடித்தலுக்கும், கை குலுக்குவதற்கும் இடையில் ஆறு வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள் என்றொரு போட்டி வைத்தால் எவருமே வெற்றியடையமாட்டார்கள்.
12 வயதுப் பாலகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட ஆதாரங்களையே போலியானதென உடனடியாக நிராகரித்த சிங்களம் , கை குலுக்கினால் மட்டும் இன அழிப்பினை ஏற்றுக்கொள்ளுமா?.
தமிழினத்தின் மீது சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பினை உலகறியச் செய்ய , பெரும் முயற்சியில் ஈடுபடும் புலம் பெயர் தமிழ் அமைப்புக்களின் செயற்பாட்டினை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் அமைந்துவிடும் இந்தக் கைகுலுக்கும் இராஜதந்திரம்.
சிங்கக் கொடி பிடித்தாலும், என்னைக் கொல்ல புலிகள் திட்டமிட்டார்கள் என்று பொய்யுரைத்தாலும், அவர்களிடம் ஜனநாயகம் இல்லை என்று சாஸ்டாங்கமாக வீழ்ந்தாலும் , கை குலுக்கத்தயார் என்று நேசக்கரம் நீட்டினாலும் , சிங்களப் பேரினவாதம் தனது தமிழின அழிப்பினை நிறுத்தப்போவதில்லை.
மேற்குலகினரை அழைத்து மாநாடு நடாத்துபவர்கள் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று உண்டு.
2012 இல் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு ஒரு தீர்மானம் வந்தது. 2013 இல் அதை கண்காணிக்க மனித உரிமைப் பேரவையின் சிறப்புப் பிரதிநிதிகளை அனுமதிக்க வேண்டும் என்கிற தீர்மானம் வரும்.2014 இல் என்ன தீர்மானம் கொண்டு வரலாம் என்று திரைமறைவில் பேரம்பேசுதல் நிகழும்.
வழமை போன்று, சனல் 4 தொலைக்காட்சி புதிய ஆவணப்படத்தை வெளியிடுவதாக விளம்பரம் செய்தவுடன் , இலங்கைக்கு எதிராக காட்டமான தீர்மானமொன்று வரப்போகிறது என்கிற பரப்புரை கட்டவிழ்த்து விடப்பட்டு, மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பொன்று உருவாக்கப்படுகிறது .
சென்ற வருடமும் இதுதான் நடந்தது. இவ்வகையான கால நீட்சி இழுத்தடிப்புக்கள் மேற்குலகிற்குத் தேவை.
பேரவையில் தீர்மானம் கொண்டுவரும் ஒபாமா நிர்வாகம், இலங்கையை இராஜதந்திர மட்டத்தில் தனிமைப்படுத்தும் வகையில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்குமா என்கிற கேள்வியை மேற்குலகின் அரசியல் நோக்கர் ஒருவர் அண்மையில் குறிப்பிடிருந்தார்.
முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்த இன அழிப்பு , எதிர்பாராமல் நடந்த துன்பியல் சம்பவம் அல்ல என்று குறிப்பிடும் அவர், அமெரிக்காவின் மென்மையான தீர்மானங்கள் எப்போது இறுக்கமான, கடுமையான தீர்மானமாக மாறும் என்பதோடு, அமெரிக்காவின் இலங்கை குறித்தான திட்டம் என்ன என்கிற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார்.
லிபியா, சிரியா மற்றும் மாலி பிரச்சினையில் நேரடியாகத் தலையீடு செய்யாமல் , தனது நேச நாடுகளுக்கு பின்புலத்தில் இருந்து உதவிசெய்யும் அமெரிக்கா , இலங்கை விவகாரத்தில் ஏன் மென் போக்கினை கடைப்பிடிக்கிறது என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்வது நல்லது.
ஏனெனில் சர்வதேச மனித உரிமைச் சங்கங்களின் காட்டமான கருத்துக்களையும் , ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் அறிக்கையினையும் அமெரிக்கா தனது தீர்மானத்தில் உள்வாங்குமா என்பது குறித்த எதிர்ப்பார்ப்போடு இருப்பது தவறு. ஐ.நா.சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு இறைமையுள்ள நாட்டின் மீது , மனித உரிமைப் பேரவை எத்தகைய தீர்மானங்களைக் கொண்டு வந்தாலும், அதனைச் செயல்படுத்தும் வல்லமை அதற்கு இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.
நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமை என்கிற ஐ.நா.சாசன ஆயுதங்களை வைத்தே, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறியவாறு தனது இன அழிப்பு நிகழ்ச்சிநிரலை மிகக் கொடூரமான வகையில் பௌத்த சிங்களப் பேரினவாதம் முன்னெடுக்கிறது.
இதனை எல்லோரும் புரிந்து கொள்கின்றார்கள். ஆனாலும் தத்தமது தேசிய, பூகோள நலனுக்கு ஏற்றவாறு எவ்வாறு இதனைக் கையாள்வது என்பதானது, சில இடங்களில் வன் அழுத்தம், பல இடங்களில் மென் அழுத்தம் என்கிற வகையில் தீர்மானிக்கப்படுகிறது.
தமிழ் பிரதேச சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தின் தலையீடு , திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படும் சிங்களக் குடியேற்றங்களும் முகாம் விரிவாக்கங்களும், அம்பாறையில் பறிக்கப்படும் தமிழ் பேசும் மக்களின் நிலங்கள் போன்ற சிங்கள ஆதிக்கச் செயல்பாடுகள் குறித்து இந்த நல்லிணக்க ஜாம்பவான்கள் அக்கறை கொள்வதில்லை.
இதற்கு எதிராக தமிழ் தேசிய அரசியல் தலைமைகள் மக்களை அணிதிரட்டிப் போராட்டங்களை நடாத்தும் போது , அதனை முறியடிக்க சிங்களம் கட்டவிழ்க்கும் வன்முறை குறித்து எந்தவிதமான அழுத்தங்களையும் பிரயோகிக்காமல் மௌனமாக இருக்கின்றன இந்த வல்லரசுகள்.
சண்டே லீடர் ஊடகவியலாளர் மீதான துப்பாக்கிச் சூடு மற்றும் சிராணி மீது கொண்டுவரப்பட்ட குற்றவியல் பிரேரணை குறித்து பகிரங்கமாக கண்டனங்களைத் தெரிவிக்கும் மேற்குலகம் , தொடரும் நில அபகரிப்பிற்கு எதிராக இதுவரை ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
இருப்பினும்,இலங்கையில் மனித உரிமை மேம்பட வேண்டும், நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும், நீதித்துறையின் சுயாதீனம் பேணப்பட வேண்டும், ஊடக சுதந்திரம் நிலைநாட்டப்பட வேண்டும், என்கின்ற பல வேண்டுகோள்களை மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையார் தனது அறிக்கையில் குறிப்பிட்டாலும், அதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் தளம் இலங்கையில் அறவே இல்லை என்பதை அவர் உணர்வார்.
அதேவேளைஆட்சி மாற்றம் ஒன்றின் ஊடாக , சிங்களத்தின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்கிற நம்பிக்கையை ,பலர் கொண்டிருப்பது போல் தெரிகிறது.
சிங்களத்தின் முழு நாட்டிற்குமான இறைமையை ஏற்றுக்கொண்டிருக்கும் இலங்கையின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அப்பால் நின்று தீர்வு குறித்துப் பேசாவிட்டால், இன நல்லிணக்கமோ அல்லது சமாதானமோ எப்போதும் சாத்தியமில்லை என்பதை இவர்கள் உணர்வார்களா?.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக