சமஸ்
படம் : பொன்.செந்தில்குமார்
ஃபக்கீர்
அன்னா ஹஸாரே... ஊழலுக்கு எதிரான இந்தியாவின் புதிய அடையாளம்!
ஊழல் புகார் என்றால், பிரதமரே ஆனாலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டும். வழக்குப் பதிய உத்தரவு இட வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், உச்சபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும். இப்படி ஓர் அதிகாரம்கொண்ட தன்னாட்சி அமைப்பாக 'லோக் பால்’ உருவானால் எப்படி இருக்கும்? அப்போதுகூடவா ஊழலை ஒழிக்க முடியாது? - அன்னா திரும்பத் திரும்பக் கேட்கும் கேள்வி இது. 'லோக் பால்’ மசோதாவுக்கான மாதிரியாக, அவருடைய குழுவினர் தயாரித்த 'ஜன் லோக் பால்’ மசோதா இவற்றையெல்லாம்தான் பரிந்துரைக்கிறது. ஆனால், அன்னாவின் கனவு சாத்தியமாவது அத்தனை எளிது அல்ல என்பது சுடும் நிதர்சனம்!
இந்திய அரசியல் வர்க்கம் 43 வருடங்களாக முடக்கிப்போட்டு இருக்கும் அந்த மசோதா, 1968-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வப்போது அது அறிமுகப்படுத்தப்படுவதும், மேம்படுத்த ஒரு குழு அமைக்கப்படுவதும், அதன் பரிந்துரைகளோடு தாக்கல் செய்யப்படுவதற்குள் காலாவதி ஆகிவிடுவது மாக இதுவரை 10 முறை தாக்கல் செய்யப் பட்டு இருக்கிறது அந்த மசோதா. ஆனால், எந்த அரசும் அந்த மசோதாவை நிறைவேற்ற விரும்ப வில்லை!
பெயர் அளவிலான இப்படி ஓர் அமைப்பை உருவாக்கவே நம்முடைய அரசியல்வாதிகள் தயாராக இல்லை. இப்போது அன்னா கேட்பதோ, முழு அதிகாரம் மிக்க ஓர் அமைப்பு. எப்படி ஒப்புக்கொள்வார்கள்? அதுவும் இந்த மசோதாவைத் தயாரிக்கும் குழுவில், மக்கள் தரப்பில் நேர்மையாளர்களுக்குச் சரிபாதி இடம் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார் அன்னா.
பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அன்னா பேசினார். 'ஜன் லோக் பால்’ மாதிரி மசோதாவை அவருடைய 'ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த சகாக்கள் அரசிடம் ஒப்படைத்தார்கள். அன்னாவுக்கு நம்பிக்கை தருவதுபோலவே எல்லாமும் நடந்தன. ஆனால், வழக்கம்போல கபட நாடகம் ஆடியது இந்திய அரசு. மசோதாவைத் தயாரிக்கும் குழுவில், மக்கள் தரப்புப் பிரதிநிதிகளுக்கு இடம் அளிக்க வில்லை. வெறுமனே கோரிக்கைகள் மட்டும் பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித் தது. நொறுங்கிப்போனார் அன்னா!
உண்ணாவிரத முடிவோடு ராஜ்காட்டில் உள்ள காந்தி சமாதிக்குச் சென்றபோது அவர் கேட்டார், ''பிரதமருக்கு பிரஷாந்த் பூஷனோ, சந்தோஷ் ஹெக்டேவோ நேர்மையாளர் களாகத் தெரியவில்லை. மகாராஷ்டிரத்திலேயே அதிகமாக நிலம் வைத்திருக்கும் சரத் பவார்தான் பொருத்தமானவராகத் தெரிகிறார். சரத் பவார் தலைமையில் ஊழலுக்கு எதிராக ஒரு குழு. இந்தக் குழு தயாரிக்கும் மசோதா எப்படி இருக்கும்?''
அரசு முதலில் இந்த உண்ணாவிரதத்துக்குப் பெரிய முக்கியத்துவம் தரவில்லை. பிரதமர் அலுவலகம் அதிருப்தி தெரிவித்தது. காங்கிரஸ் கட்சி, ''அன்னாவுக்கு ஏன் இவ்வளவு அவசரம்?'' என்று கேள்வி கேட்டது. ஆனால், நாடெங்கும் பல்கிப் பெருகிய மக்கள் ஆதரவு, நிலைமையைத் தலை கீழ் ஆக்கியது. குழுவின் தலைவர் பதவியில் இருந்து சரத் பவார் விலகினார். தொடர் போராட்டத்தின் விளைவாக அன்னாவின் அத்தனை கோரிக்கைகளையும் பரிசீலிப்பதாகக் கூறி, குழுவில் சரிபாதி இடங்களை மக்கள் பிரதிநிதிகளுக்குக் கொடுத்து அறிவிப்பாணையை வெளியிட்டு இருக்கிறது மத்திய அரசு.
ஒருபுறம் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கி இருக்கும் அதே வேளையில், இன்னொருபுறம் கடுமையான விமர் சனங்களையும் எதிர்கொள்கிறது. 'இதெல்லாம் ஒரு போராட்டமா?’ என்பதில் தொடங்கி... இந்த ஒரு மசோதா, இந்தியாவை ஊழல் அற்ற நாடாக மாற்றி விடுமா என்பது வரை!
எந்த ஒரு சமூக மாற்றமும் மக்களிடத்தில் இருந்துதான் உருவாக வேண்டும். ஒரு குடிமைச் சமூகத்தில் எல்லா வகையினருக்கும் இடம் உண்டு. ஏ.சி அறையில் பர்கர் கொரித்துக்கொண்டு 'ஃபேஸ்புக்’கில் கமென்ட் அடிப்பவர்கள் என்ன செய்துவிடுவார்கள் என்பதற்கான பதில்கள், மத்தியக் கிழக்கு நாடுகளில் பிரதிபலிக்கின்றன.
மக்கள், அன்னா ஹஸாரே போல உண்ணாவிரதம் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஊழலுக்கு எதிரான அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்த இந்தப் போராட்டம் ஒரு வாசலைத் திறந்து இருக்கிறது.
இந்த மசோதா அப்படியே நிறைவேறுமா, நேர்மையான ஓர் அதிகாரம் மிக்க அமைப்பு உருவாகுமா, அது அரசியல்வாதிகளைத் தண்டிக்குமா, நம் சமூகத்தில் மாற்றங்களை உருவாக்குமா... எல்லாமே கேள்விகள்தான். ஆனால், அப்படி ஓர் அமைப்பு உருவாகுமானால், வெளிப்படையான நிர்வாக அமைப்புக்கு நிச்சயம் அது முக்கியமான பங்கு அளிக்கும்.
அன்னா தன் சொந்தக் கிராமமான ராலேகான் சித்தியைத் தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றியபோது சொன்னார், ''இதுதான் முடிவென்றோ, தீர்வென்றோ நான் நினைக்கவில்லை. பிரச்னை இருக்கிறது. தீர்க்கப்பட வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. அதற்கான தொடக்கப் புள்ளி நான். அவ்வளவுதான். சரி, நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?''
- தொடர்வோம்...
யார் இந்த அன்னா ஹஸாரே?
வங்கதேசப் போரின்போது, பாகிஸ்தான் விமானப் படையின் தாக்குதலில் இவருடன் வந்தவர்கள் சிதைந்துபோக, அதிர்ஷ்டவசமாக ஹஸாரே மட்டும் தப்பினார். வாழ்வைத் திருத்தி அமைக்கும் கேள்விகள் ஹஸாரேயின் மனசாட்சியைப் புரட்டியது இந்தக் காலகட்டத்தில்தான்.
மகாத்மா காந்தி, சுவாமி விவேகானந்தர், வினோபாபா பாவே ஆகியோரின் புத்தகங்கள் அவருடைய மன எழுச்சிக்கு வழிகாட்டுதலாக அமைந்தன. ராணுவத்தில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று, சொந்த ஊர் திரும்பினார் ஹஸாரே.
வறண்ட பூமியான ராலேகான் சித்தியை, மக்கள் பங்கேற்புடன் பாசனக் கட்டமைப்புகளை உருவாக்கி, தன்னிறைவு பெற்ற கிராமமாக மாற்றினார். மழை நீர் சேகரிப்பு, சிறு அணைத் திட்டங்கள், சுய முன்னேற்றத் திட்டங்கள் என்று நாட்டின் முன்மாதிரி கிராமமாக ராலேகான் சித்தி உருவெடுத்தது. ஒரு சாதாரண மனிதன் வரலாற்று நாயகனாக உருவெடுத்த தருணம் அது!
ஏன் நமக்கு 'லோக் பால்' வேண்டும்?
சுதந்திரத்துக்குப் பிந்தைய 60 ஆண்டுகளில் ''அதிகாரம் அற்ற அமைப்பில் இருப்பதில் பிரயோஜனம் இல்லை!'' என்று கூறி பதவியில் இருந்தே விலக முடிவெடுத்தார் 'லோக் ஆயுக்தா’ நீதிபதி சந்தோஷ் ஹெக்டே.
இவை அவ்வளவுக்கும் காரணம், ஊழலை ஒழிக்க இந்தியாவில் சுய அதிகாரம் மிக்க அமைப்பு இல்லை!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக