சாடும் நெடுமாறன்
ஈழத் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேரை இன வெறி சிங்கள ராணுவம் சோனியாவின் இந்த மாற்றம் உண்மைதானா என, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனை சந்தித்துக் கேட்டோம்.
''தமிழக மீனவர்கள் இனி சுடப்பட மாட்டார்கள் என்பது, மத்திய அமைச்சர்களும் அதிகாரிகளும் அடிக்கடி சொல்லும் வாக்குறுதிதான். இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இதுபோன்ற உறுதிமொழிகளுக்குப் பிறகும் மீனவர் படுகொலைகள் தொடர்வதுதான் யதார்த்தம். இவர்களின் வெற்று வாக்குறுதிகள் மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்கவில்லை என்பதுதான் உண்மை.
மத்திய அமைச்சரவையில் பங்கு வகிக்கும் தி.மு.க., கச்சத் தீவு உள்பட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்னைகளைப்பற்றி அங்கு குரல் எழுப்பாமல், பொதுக் கூட்டத்தில் முன்வைப்பதன் மர்மம் என்ன? காங்கிரஸ் கட்சியை மட்டும் குற்றவாளியாக நிறுத்த கருணாநிதி முயல்கிறாரா என்று தெரியவில்லை.
ஈழத் தமிழர் பிரச்னையைப் பொறுத்தவரை, சோனியா பேசி இருப்பது ஒப்புக்காகத்தான். இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து, டெல்லியில் 3,000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்காக, அமிர்தசரஸ் பொற்கோயிலுக்குச் சென்று சோனியா வருத்தம் தெரிவித்தார். பிரதமர் மன்மோகன் சிங்கும் வருத்தம் தெரிவித்தார். ஆனால், 2008-ம் ஆண்டு முதல் நடந்த நான்காம் ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழ் மக்கள் ஈவிரக்கம் இல்லாமல் சிங்களப் படையால் கொன்று குவிக்கப்பட்டபோது, அதற்கு ராணுவ உதவிகளைச் செய்தது இந்த இந்திய அரசு. போர் நடந்த காலத்திலும், அதன் பிறகும், ஈழத் தமிழர்களைப்பற்றி வாய் திறக்காத சோனியா, தேர்தல் வேளையில் பேசி இருப்பது கடைந்தெடுத்த பித்தலாட்டம்.
சிங்கள ராணுவத்தின் தாக்குதலால் 2.25 லட்சம் ஈழத் தமிழர்களின் வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தன. வாழ்வாதாரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. வீடுகளை இழந்த 11 லட்சம் பேர்களை மறுகுடியமர்த்தவும் உரிய நடவடிக்கை இல்லை. அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே, 'தமிழர்களை மறுகுடியமர்த்தம் செய்யும் திட்டம் எதுவும் ராஜபக்ஷேவிடம் இல்லை. அவர் ஒருபோதும் அதைச் செய்யப்போவதும் இல்லை’ என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
உண்மையில், 1 லட்சம் சிங்கள ராணுவத்தினர் தத்தம் குடும்பத்துடன் வாழ, தமிழர் பகுதிகளில் நிரந்தர வீடுகள் கட்டப்படுகின்றன. ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாகக் குண்டு வீசிக் கொல்லப்பட்ட இடங்களில், உயிரோடு புதைக்கப்பட்ட இடங்களில், ஆயிரக்கணக்கில் சிங்களர்கள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழர்களின் சடலங்களுக்கும் எலும்புக் கூடுகளுக்கும் மேல் சிங்களக் குடியேற்றங்கள் கட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்கள் என்ற அடையாளத்தைத் துடைத்து எறியும் இனவெறி செயல் திட்டத்தை ராஜபக்ஷே தீவிரமாகச் செய்து வருகிறார்.
இன்னொரு புறம், 'தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடையாது; சிங்களவர் நாடு இலங்கை என்பதை ஏற்றுக்கொள்ளும் தமிழர்களுக்கு மட்டுமே இலங்கையில் இடம். இதை ஏற்க முடியாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேறலாம்’ எனப் பகிரங்கமாக அறிவித்தவர் ராஜபக்ஷே. ஏற்கெனவே, ராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தின்படி, இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டன. ஈழத் தமிழர்களுக்குத் தாயகத்தை உண்டாக்கித் தந்ததாகப் பெருமைப்பட்டுக்கொண்டார் ராஜீவ். இலங்கையின் அரசியல் சாசனத்தில் இதற்காக 13-வது திருத்தம் கொண்டுவரப்பட்டு, தமிழர்களுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டதாக தம்பட்டம் அடித்தார் ஜெயவர்த்தனே. அந்த 13-வது திருத்தத்தை ராஜபக்ஷே முற்றிலுமாக ரத்து செய்துவிட்டார். அப்போது வாய் திறக்காத சோனியா, இப்போது ஈழத் தமிழருக்காக அரசியல் சாசனத்தைத் திருத்தச் சொல்வதாகப் பேசுவது, அப்பட்டமான ஏமாற்று வேலை.
தீவுத்திடலில் கருணாநிதியும் சோனியாவும் சொல்லி வைத்துக் கொண்டு நடத்திய நாடகத்தை தமிழ்மக்கள் ஏற்கமாட்டார்கள். மரணித்த ஒவ்வொரு தமிழனின் சொந்தங்கள் வீட்டுக்கும் சென்று காலில் விழுந்தாலும் இவர்கள் இருவருக்கும் மன்னிப்பே கிடையாது!'' கணீர் குரலில் கொந்தளிக்கிறார் நெடுமாறன்!
unarchitamilan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக