கண்களில் விளக்கெண்ணை ஊற்றிக்கொண்டு தேர்தல் ஆணையம் கண்காணித்து வந்தாலும், அரசியல் கட்சிகள் தங்களின் தில்லுமுல்லு தகிடுதத்தத் தில்லாலங்கடி
மதுரை மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட விளாங்குடியில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதற்காக, தி.மு.க-வினர் பக்காவாக 'பிளான்’ வைத்திருந்தனர். ஒவ்வொரு தெருவிலும் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள்? அவர்களுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்? அவற்றை சப்ளை செய்ய வேண்டிய நபர் யார்? என்று பட்டியல் தயாரித்து கவர்களில் பணத்தைப் பிரித்துவைத்து இருந்தார்கள். ஒவ்வொரு கவரிலும் அந்த விவரத்தையும் தெள்ளத் தெளிவாக எழுதி இருந்தார்கள்.
கூடல் நகர் பகுதியில் தி.மு.க-வினர் பணப் பட்டுவாடா செய்யத் தொடங்க, தே.மு.தி.க. இளைஞர்கள் கூட்டமாகப் போய், அவர்களை விரட்டியடித்து 19 லட்சத்து 32 ஆயிரத்தைக் கைப்பற்றினார்கள். அந்தப் பணத்தை அப்படியே அள்ளிக்கொண்டு தே.மு.தி.க-வினர் ஓட, தி.மு.க-வினர் விரட்ட, ஒரு வழியாக கலெக்டர் சகாயத்திடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.
பணத்தை பிடித்துக் கொடுத்தவர்களைப் பாதுகாப்போடு அனுப்பிவைத்ததுடன், அவர்களின் வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போட்டார் எஸ்.பி. ஆஸ்ரா கர்க். பணத்தைப் பிடித்துக் கொடுத்த இளைஞர்களுக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக, போலீஸாரே அதனைப் பிடித்ததுபோல் வழக்குப் பதிவு செய்து தி.மு.க-வினர் இரண்டு பேரைக் கைது செய்தார்கள்.
திருமங்கலம் ஆறுமுகம் தெருவில் உள்ள ஒரு தி.மு.க. பிரமுகர் வீட்டில், கவர்களில் பணம் பிரித்துப் போடும் வேலை மும்முரமாக நடப்பதாகத் தகவல் கிடைக்கவே, போலீஸார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கே, 1 லட்சத்து 29 ஆயிரத்து 500 சிக்கியது.
திருமங்கலம் தொகுதியில் தி.மு.க-வினர் பலரது வீடுகளிலும் இதே ஸ்டைலில் பணம் பிரிக்கும் வேலை நடந்துகொண்டு இருக்க... அத்தனை பேரையுமே சத்தமில்லாமல் அமுக்கியது போலீஸ்.
ஆம்னி பஸ்ஸில் ஐந்து கோடி..!
திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் அலுவலரான ஆர்.டி.ஓ. சங்கீதாவின் செல்போன் கடந்த ஐந்தாம் தேதி அதிகாலை 2 மணிக்கு அலறியது. ''பொன்னகர் பகுதியில் தியேட்டரின் பின்புறம் உள்ள ரோட்டில் ஆம்னி பஸ் ஒன்று நிற்கிறது. அதில் கோடிக்கணக்கான பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறது!'' என்று கரகரத்த குரல் ஒன்று தகவல் சொன்னது. உடனே சங்கீதா, உதவிக்கு ஒரு போலீஸ்காரரை மட்டும் அழைத்துக்கொண்டு ஜீப்பில் ஸ்பாட்டுக்கு விரைந்தார். எம்.ஜே.டி. என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த ஆம்னி பஸ் ரோட்டோரமாக நிறுத்தப்பட்டு இருக்க... மேலே தார்ப் பாய் போட்டு மூடி இருந்தது. வண்டியின் உள்ளே பணம் இல்லை. உடன் வந்த போலீஸ்காரரிடம், மேலே சென்று சோதனையிடுமாறு சொல்லி இருக்கிறார். தார்ப்பாயைப் பிரித்துப் பார்த்தால், ஐந்து டிராவல் பேக்குகள். அதன் உள்ளே கட்டுக்கட்டாகப் பணம்!
உடனடியாக போலீஸ், தேர்தல் கமிஷன் அப்சர்வர்களுக்குத் தகவல்கள் பறக்க... அனைவரும் ஸ்பாட்டுக்கு விரைந்து வந்தார்கள். கைப்பற்றப்பட்ட பணம் மொத்தமும் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு எண்ணப்பட்டது. மொத்தம் 5 கோடியே 11 லட்சத்து 27 ஆயிரம் இருப்பது தெரியவந்தது.
ஆம்னி பஸ் நின்ற இடத்துக்குப் பக்கத்தில்தான் பஸ்ஸின் உரிமையாளர் உதயகுமாரின் வீடு. அந்த வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டாலும், பணம் சிக்கவில்லை. பஸ்ஸில் பணம் எப்படி வந்தது? அது யாருக்குச் சொந்தமானது என்று குடைந்த அதிகாரிகள், அவரை வருமான வரித் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
உதயகுமார், ரெட்டியார் சமூகத்தைச் சேர்ந்தவர். போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்குத் தூரத்து சொந்தம். நேருவின் உறவினர்கள் இதில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள். இதை எல்லாம் வைத்து, ''இந்தப் பணம் நேருவின் சகோதரர்களான ராமஜெயம் மற்றும் ரவி மூலமாக சென்னையில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டது. கடைசிக் கட்டத்தில் வாக்காளர்களுக்கு சப்ளை செய்வதற்காகக் கொண்டுவரப்பட்டது!'' என்று திகுதிகு தகவல் நகரமெங்கும் பரவியது.
இந்தச் செய்தி அ.தி.மு.க-வுக்கு ஆதரவான டி.வி. மூலம் சொல்லப்பட, தமிழகமே ஆச்சர்யமாகப் பார்த்தது. உடனே அமைச்சர் நேரு, 'ஒரு தனியார் டி.வி. உள்ளிட்ட சில ஊடகங்களின் செய்திகளில் இன்று அதிகாலை தேர்தல் கமிஷனால் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பணம் என்னுடைய உறவினர்கள் சம்பந்தப்பட்டது என்று தவறாகத் திட்டமிட்டு செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றனது. கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எனது உறவினர்களுக்கும் எவ்விதமான சம்பந்தமும் இல்லை!’ என்று அறிக்கை வெளியிட்டார்.
இதைத் தூக்கிச் சாப்பிடும்படி நடந்ததுதான் அதிரடி க்ளைமாக்ஸ். வருமான வரித் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ''அது முழுக்க முழுக்க என்னுடைய சொந்தப் பணம். ரியல் எஸ்டேட் பிசினஸில் முதலீடு செய்வதற்காகக் கொண்டுவரப்பட்ட பணம். அனைத்துக்கும் முறையான ஆதாரங்கள் இருக்கின்றன!'' என்று சொல்லி இருக்கும் உதயகுமார், எந்த வங்கியில் இருந்து பணம் எடுக்கப்பட்டது, யாரிடம் இருந்து நிலம் வாங்கப் பணம் கொண்டுசெல்லப்பட்டது, நிலம் வாங்குவதற்காகப் போடப்பட்ட ஒப்பந்தம் என்ன என்பதை விசாரணை அதிகாரிகளிடம் கொடுத்து இருக்கிறாராம்.!
கட்டைப் பையில் பணம்..!
திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பேரூராட்சி தலைவர் முருகையன். தி.மு.க-வைச் சேர்ந்த இவரது வீட்டில்தான் கீழ்பெண்ணத்தூர் தொகுதிக்கு சப்ளை செய்யப் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறது என்று பறக்கும் படைக்கு யாரோ தகவல் சொல்லி இருக்கிறார்கள். உடனடியாக முருகையன் வீட்டை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது பறக்கும் படை. அவரது வீட்டில் இருந்த 16 லட்சத்து 64 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது.
கைப்பற்றப்பட்ட பணம் பற்றி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான ராஜேந்திரனிடம் கேட்டபோது, ''வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காக வேட்டவலம் பேரூராட்சி தலைவர் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த பணத்தைத்தான் பறிமுதல் செய்து இருக்கிறோம். பணத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு, அந்த கவருக்குள் எந்த வார்டுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும், யாரிடம் கொடுக்க வேண்டும் என்று செல்போன் நம்பர் உட்படத் தெளிவாக எழுதி 14 கட்டைப் பைகளில் அடுக்கிவைத்து இருந்தார். அதனால், அவர் இந்த விவகாரத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லை. உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு பண்ணச் சொல்லிவிட்டேன்!'' என்று சொன்னார்.
இட்லிப் பாத்திரத்தில் பணம்!
''தி.மு.க-காரர்கள் ஓட்டுக்குப் பணம் கொடுக்க வருவார்கள். அப்படி வருபவர்களை அடித்து விரட்டுங்கள். எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை. எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை. நான் என் சொத்தை விற்றாவது உங்களை வெளியில் எடுக்கிறேன். பணம் கொடுக்கப் போனால், அ.தி.மு.க-காரன் அடிப்பான் என்ற பயம் தி.மு.க-காரனுக்கு வர வேண்டும். அப்போதுதான் நாம் ஜெயிக்க முடியும்!'' இப்படி பேசியது வேறு யாரும் அல்ல. கடந்த எம்.பி. தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திதான். அவரது பேச்சைக் கேட்டு பணம் கொடுக்க வந்த தி.மு.க-வினர் மீது தாக்குதல் நடத்தியதாக சத்தியமூர்த்தியின் சகோதரர் உள்ளிட்டோர் மீது அப்போது புகாரானது. அதே சத்தியமூர்த்தி இப்போது தி.மு.க-வின் முதுகுளத்தூர் தொகுதி வேட்பாளர். அவர் போட்டியிடும் தொகுதிக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த தி.மு.க-வினரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதுதான் காலம் செய்த கோலம்!
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதி பெருநாழி. இங்கு இட்லிக் கடை நடத்தி வருபவர் பாண்டி. இவரது வீட்டில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்கான பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. சோதனையிட்டதில், இட்லிப் பாத்திரத்தில் மறைத்துவைக்கப்பட்டு இருந்த 40 லட்சத்தைப் பறிமுதல் செய்தார்கள். இட்லிக் கடைக்காரர் உட்பட தி.மு.க-வைச் சேர்ந்த ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்துக் கைது செய்தது போலீஸ்.
இப்போதே இவ்வளவு என்றால், தேர்தல் நெருக்கத்தில் எவ்வளவு பணம் வெளியே புறப்பட்டு வருமோ என்ற அச்சத்தில் தேர்தல் கமிஷன் திணறிக்கொண்டு இருக்கிறது.
தேர்தல் கமிஷனுக்கு மர்ம டெலிபோன் அழைப்புகள் அதிகமாக வருகின்றன. அந்த இடத்தை நோக்கிப் போவதற்குள், பணம் மறைக்கப்பட்டுவிடுகிறதாம். எனவே, முழுமையாகத் தடுக்க முடியவில்லை என்ற வருத்தம் அரசு அதிகாரிகளுக்கே இருக்கிறது. ஜன நாயகம் பண நாயகமாக ஆகிவிட்டது என்பதைப் பட்டவர்த்தனமாக உணர்த்துவதாகவே அமைந்துவிட்டது இந்தத் தேர்தல்!
- ஜூ.வி. டீம், படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்
சொந்தக் கட்சிக்கே சூன்யம்!
தேர்தல் அதிகாரிகள் கத்தை கத்தையாகப் பணத்தை கைப்பற்றத் தொடங்கியுள்ள சூழலில், 'இந்த விவரங்களை கமிஷனின் காதில் போட்டுக் கொடுப்பவர்கள் யார்?’ என முக்கிய கட்சிகள் அனைத்தும் சிண்டைப் பிய்த்துக் கொள்கின்றன. வேறு கோஷ்டியைச் சேர்ந்தவர்களும் ஸீட் கிடைக்காத அதிருப்தியாளர்களும்தான் சொந்தக் கட்சிக்கு எதிராகவே தயவுதாட்சண்யம் பார்க்காமல் குழி வெட்டுகிறார்கள் என்பது தெரியவர... எல்லா தலைகளும் அதிர்ந்து நிற்கின்றன. திருச்சியில் தனியார் பேருந்தின் பெயரையும், பஸ்சின் மேல் கூரையில் பணம் வைக்கப்பட்டுள்ள விவகாரத்தையும் விலாசத்துடன் போட்டுக் கொடுத்தது ஏரியா புள்ளிக்கு எதிர்கோஷ்டிதானாம். உறவினர்கள் என்றாலும் இருவருக்கும் இடையில் நீறு பூத்த நெருப்பாக மோதல் இருந்த காரணத்தால்தான் மாட்டி விட்டாராம். மதுரையில் அழகிரியின் நட்பு வட்டத்தில் இருக்கும் சில அதிருப்தியாளர்கள்தான், கமுக்கமாக போன் போட்டு, வேட்பாளர்களை மாட்டி விடுகிறார்களாம்.
அ.தி.மு.க. முகாமிலும் இதே கூத்து நடக்கிறது. ஒரு அ.தி.மு.க. பிரமுகர் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் எடுத்துச் செல்வதாக தகவல் சொல்லியுள்ளார் ஒருவர். இதை நம்பத் தயங்கிய அதிகாரிகள், ''உங்க பேர் என்ன? அட்ரஸ் எது?'' என்று கேட்டு இருக்கிறார்கள். உடனே பயந்துபோன ஆசாமி, ''உண்மையைச் சொல்றேங்க. நான் பக்கத்து மாவட்ட அ.தி.மு.க. வேட்பாளர். இவர் தோத்தாத்தான் எனக்கு அமைச்சர் பதவி கிடைக்கும், அதான்...'' என்று உளறிக் கொட்டினாராம். thanks
unarchitamilan
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக