தஞ்சை விளார் கிராமத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் முற்றத்தின்
பூங்கா மற்றும் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை தடுத்த பழ.நெடுமாறன் உட்பட 82
பேர் திருச்சி சிறையில் அடைக்கப் பட்டனர். பழ.நெடுமாறன் உட்பட 82 பேர்
இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். உயர்நீதிமன்ற ம்துரை கிளை
அவர்களுக்கு பிணை வழங்கியதை அடுத்து, இன்று திருச்சி
சிறையில் இருந்து அவர்கள் வெளியே வந்தனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுவரை இடித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்கவில்லை என்றால் முதல்வர் ஜெயலலிதா தமிழர்களின் பெருங்கோபத்திற்கு
ஆளாக வேண்டியிருக்கும்" என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
கடந்த 13ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர்
விளார் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின்
முன்பக்கம் இருந்த சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா, நீரூற்று, மரங்களை தஞ்சை
மாவட்ட எஸ்.பி.தர்மராஜன் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர்
பாதுகாப்புடன் நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள்
இடித்து தள்ளினர்.
மேலும், நெடுஞ்சாலைத்துறை சொத்தை சேதப்படுத்திய வழக்கில் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 82 பேரோடு, விருதுநகர் மாவட்டத்தை அண்ணாமலை என்ற 20 வயதுடைய சிறுவனையும் கைது செய்த போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு கடந்த 20ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளை நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் இன்று காலை 9.05 மணியளவில் சிறையில்
இருந்து பழ.நெடுமாறன் உள்பட 83 பேரும் விடுவிக்கப்பட்டார். அவரை
சசிகலாவின் கணவர் எம்.நடராஜன் வரவேற்றார். மேலும், ம.தி.மு.க, நாம் தமிழர்,
மள்ளர் மீட்பு களம் உள்ளிட்ட தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான
தொண்டர்கள் சிறைக்கு முன்பு கூடி நெடுமாறன் வருகைக்காக காத்திருந்தனர்.
சிறையிலிருந்து வெளியே வந்த நெடுமாறனை பார்த்த தொண்டர்கள், மாவீரன் பிரபாகரன் வாழ்க, அய்யா நெடுமாறன் வாழ்க முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்த தமிழக அரசு ஒழிக என கோஷங்கள் எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பழ.நெடுமாறன், நாங்கள் நெடுஞ்சாலைத்துறையிடம் முறைப்படி அனுமதி வாங்கித்தான் பூங்கா கட்டியிருக்கிறோம். அதிகாரிகள் சொல்வதுபோல் நாங்கள் நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமித்துள்ளோம் என்றால் எங்களுக்கு நோட்டீஸ் கொடுத்து எங்களிடம் முறைப்படி பதில் கேட்டிருக்க வேண்டும். அப்படி எதுவும் செய்யாமல், இருட்டு வேளையில் திருட்டுத்தனமாக காவல்துறையும், அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு நாங்கள் அதிக பொருட் செலவில் கட்டிய முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்து தள்ளியிருக்கிறார்கள்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக
நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்லையெனில் இந்த இடிப்புக்கு
பின்னணியில் தமிழக அரசு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அதனால் தமிழ்
மக்களின் பெருங்கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.
எங்களை சட்ட விரோதமாக கைது செய்து சிறையில் அடைத்தார்கள். நாங்கள் நீதிமன்றம் மூலம் வெளியே வந்துள்ளோம். அதேபோல் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவரை இடித்தது சட்டவிரோதமானது. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மீண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுற்றுச்சுவர் கட்டியே தீருவோம். காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொண்ட இங்கிலாந்து பிரதமர் கேமரூன், இலங்கையில் தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதோடு, தமிழ் மக்களின் அவலங்களை வெளிக்கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறார். அவருக்கு எனது பாராட்டுகளும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார். |