2009 ஆம் ஆண்டு சனவரி முதல் மே வரை இலங்கைப் போரின் இறுதி ஐந்து மாதங்களில் மிகக் கொடூரமான போர்க் குற்றங்களையும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் சிங்கள இராணுவம் புரிந்தது.
ஜெனீவா உடன்பாட்டின்படி தடை செய்யப்பட்ட ஆயுதங்களை சிங்கள இராணுவம் பயன்படுத்தியது. தமிழர் பகுதிகளில் இருந்த குடியிருப்புகள், மருத்துவமனைகள், கோயில்கள் ஆகியவை திட்டமிட்டு அழிக்கப்பட்டன.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மனித உரிமை அமைப்புகளும் சாட்டிய இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு டப்ளின் நகரில் 2010ஆம் ஆண்டு சனவரி 14 முதல் 16வரை கூடி விசாரணை நடத்தி மேலே கண்ட குற்றச்சாட்டுகள் பலவற்றை உறுதி செய்தது.
இதன் விளைவாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் விசாரணைக் குழு ஒன்றை அமைக்க முன்வந்தார். இந்தோனேசியாவின் முன்னாள் தலைமை நீதிபதி மர்சுகி தர்ஸ்மான், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த யாஸ்மின் சூகா, அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டீவன் ராட்னர் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
இந்த விசாரணையைத் திசை திருப்ப இராசபக்சே திட்டமிட்டார். குற்றம் செய்தவர்களை தாங்களே கண்டுபிடித்துத் தண்டிக்கப் போவதாக உலகிற்கு காட்ட நீதி விசாரணை நல்லிணக்க ஆணைக் குழு ஒன்றை அமைத்து நாடகம் ஆடினார். ஆனால் இந்த விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் அளிக்க இலங்கை எதிர்க்கட்சி மறுத்துவிட்டது. இராசபக்சேயின் கைப்பாவைகளாக இயங்கி வரும் சில தமிழ்க் குழுக்கள் மட்டுமே சாட்சியம் அளித்துள்ளன.
விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என ஐ.நா. வை வற்புறுத்தியதிலும், குழு அமைக்கப்பட்ட பிறகு அதற்கு ஆதாரங்களைத் திரட்டித் தருவதிலும் இந்தியாவின் பங்கு அறவே இல்லை.
தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் பங்கும் இதில் அறவே இல்லை. அவர் மனம் வைத்திருந்தால் எவ்வளவோ ஆதாரங்களைத் திரட்டி அளித்திருக்க முடியும். முள்ளி வாய்க்காலில் இருந்து தப்பியோடி வந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்தவர்களின் வாக்கு மூலங்களையும் இதர ஆதாரங்களையும் திரட்டுவதற்கு குழு ஒன்றை அமைத்து செயல்பட்டிருந்தால் எவ்வளவோ உதவியாக இருந்திருக்கும். ஆனால் அவரது காவல்துறை அதற்கு நேர் மாறாக செயல்பட்டது. தமிழகத்தில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களிடமிருந்து ஆதாரங்களை நாங்கள் திரட்டிய போது அவர்களை எல்லாம் காவல்துறை மிரட்டியது. இந்த மிரட்டலுக்கு நடுவேதான் ஆதாரங்களை நாங்கள் திரட்டி டப்ளின் மக்கள் தீர்ப்பாயத்திற்கும் ஐ.நா. விசாரணைக் குழுவிற்கும் அனுப்பி வைத்தோம்.
ஐ.நா. விசாரணைக் குழு அமைக்கப்பட்ட அறிவிப்பு வெளியான உடன் சிங்கள அதிபர் இராசபக்சே ஐ.நா. குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாது என்று கூறினார். அது மட்டுமல்ல அவரது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் விமல் வீரவன்ச என்பவர் 6-7-10 அன்று கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினார். ஐ.நா. அலுவலகத்தைச் சேர்ந்த 120 பேரை பணயக் கைதிகளாகப் பிடிப்பதுதான் தனது நோக்கம் என்றும் அறிவித்தார். பான்-கி-மூனின் கொடும்பாவியும் கொளுத்தப்பட்டது. ஐ.நா. மன்றம் எச்சரித்த பிறகே இவர்களின் போராட்டம் நிறுத்தப்பட்டது.
ஐ.நா. விசாரணைக் குழுவின் செயற்பாட்டை முடக்குவதற்கும் குழுவின் முன் சாட்சியம் அளிக்க முன்வருவோரை மிரட்டுவதற்கும் இலங்கை அரசு செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஐ.நா. விசாரணைக் குழு பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே தனது கடமையைச் செவ்வனே செய்து ஐ.நா. பொதுச் செயலாளரிடம் தனது அறிக்கையை அளித்தது. அந்த அறிக்கையில் சர்வதேச மனித நல சட்டம், மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றை இலங்கை இராணுவம் மீறியுள்ளது. போர்க் குற்றங்கள் வரையறைக்குள் வரும் கொடிய குற்றங்களைப் புரிந்துள்ளது. அரசுக்கு எதிரானவர்களும், அரசை விமர்சித்த ஊடகவியலாளர்களும், சமூக ஆர்வலர்களும் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அரசு அறிவித்த மூன்று பாதுகாப்பு வளையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். படுகாயமடைந்தவர்களுக்கு உதவி செய்ய முன்வந்த செஞ்சிலுவைக் கப்பல் நின்ற கடற்கரைப் பகுதியிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வன்னியில் அனைத்து மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தி ஏராளமான நோயாளிகளையும் மருத்துவர்களையும் உதவியாளர்களையும் கொன்று குவித்தது. போர் முடிந்த பிறகு முகாம்களில் சித்திரவதைகளும் பாலியல் வன்முறைகளும், படுகொலைகளும் தொடர்ந்து நடத்தப் பட்டன என சிங்கள இராணுவம் நிகழ்த்திய போர்க் குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளது.
இந்த அறிக்கையில் கூறப்பட்ட விஷயங்கள் வெளியில் கசிந்தவுடன் இராசபக்சேயின் சகோதரரும் பாதுகாப்புத் துறை செயலாளருமான கோத்தபாய இராசபக்சே "அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் கைப்பொம்மை பான்-கி-மூன் என மிகக் கடுமையாகச் சாடினார்.
அதிபர் இராசபக்சே ஒரு படி மேல் சென்று "போர்க் குற்ற விசாரணைக்கு எதிரான பேரணிகளை நடத்துமாறு சிங்கள மக்களுக்குப் பகிரங்க அழைப்பு விடுத்தார்.
இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் "ஐ.நா. விசாரணைக் குழு பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூனுக்கு வேண்டுகோள் விடுத்தார். அத்துடன் அவர் மேற்கு நாடுகளின் அரசுகளைச் சந்தித்துப் பேச திட்டமிட்டு இலண்டன் சென்றார். ஆனால் பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹக் அவரைச் சந்திக்கவே மறுத்துவிட்டார்.
அமெரிக்கா இலங்கைக்கு எதிரான நிலை எடுத்தது. அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான அரசுச் செயலாளரும் முன்னாள் இலங்கைத் தூதுவருமான இராபர்ட் ஓ பிளாக் என்பவர் அமெரிக்கா காங்கிரஸ் அவையின் வெளியுறவுக்குழுவின் முன் உரையாற்றுகையில் "இலங்கை யில் சில விடயங்கள் மிக மோசமாக மாறி வருவதாகவும் அங்கு சனநாயக அமைப்புகள் பலவீனமடைந்து வருவதாகவும், மனித உரிமை நிலவரங்கள் மிகுந்த கவலைக்குரியவையாகவும் இருப்பதாக கூறினார்.
இதைக் கண்டு ஆத்திரமடைந்த இராசபக்சே தனது நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க மறுத்துள்ளார். ஐ.நா.வை மட்டுமல்ல தனக்கு எதிரான நிலை எடுத்துள்ள மேற்கு நாடுகள் உள்பட அனைத்து நாடுகளையும் எதிர்ப்பதற்கு இராசபக்சே துணிந்திருக்கிறார். அவரது இந்தத் துணிவிற்கு பின்னணியில் சீனாவும், இந்தியாவும் உள்ளன.
ஐ.நா. விசாரணைக் குழு அளித்துள்ள விசாரணை யின் அடிப்படையில் இலங்கை மீது எவ்வித நடவடிக்கை யும் எடுக்கக்கூடாது என சீனா, ரஷ்யா, இந்தியா, போர்ச்சுகல் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் இரத்து அதிகாரம் படைத்த நிலையான உறுப்பினர்களாக சீனாவும், இரஷ்யா வும் உள்ளன அதே குழுவில் சுழற்சி முறையில்
தற்காலிக உறுப்பினர்களாக இந்தியாவும், போர்ச்சுகலும் இடம் பெற்றுள்ளன.
போர்க் குற்ற விவகாரங்களில் ஒரு நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் பெரும்பான்மை இருக்க வேண்டும். ஆனால் அதே வேளையில் குறிப்பிட்ட நாட்டின் மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்க இரத்து அதிகாரம் படைத்த ஒரு நாடு எதிர்ப்புத் தெரிவித்தாலும் அந்த நடவடிக்கை கைவிடப்படும். இந்தச் சூழ்நிலையில் ஐ.நா. என்ன செய்யப் போகிறது என்பதை உலகம் கவனித்துக் கொண்டிருக்கிறது.
1899 மற்றும் 1907 ஆம் ஆண்டுகளில் ஹேக் நகரில் நடைபெற்ற சர்வதேச மாநாடுகளில் போர்க் குற்றங்கள் குறித்த சர்வதேச சட்ட விதிமுறைகள் வகுக்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் நூரம்பர்க் சர்வதேச நீதிமன்றத்தில் நாஜித் தலைவர்கள் மீது நடத்தப்பட்ட போர்க் குற்ற விசாரணை அடிப்படையில் 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி சர்வ தேச நாடுகள் ஒன்று கூடி இலண்டன் பட்டயத்தை வெளியிட்டன.
போர்க் குற்றங்களுடன் அமைதிக்கு எதிரான குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவையும் பிற்காலத்தில் இணைக்கப்பட்டன.
2ஆம் உலகப் போருக்குப் பின் 1946ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி டோக்கியோ போர்க் குற்ற நீதிமன்றம் சப்பானிய தலைவர்கள் மீது விசாரணை நடத்தியது. மூன்று விதமான குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போரில் இழைக்கப்பட்ட அமைதிக்கு எதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டன.
டோக்கியோ நீதி மன்றத்தில் சப்பானிய பிரதமர்களாக இருந்த ஜெனரல் டோஜோ, ஜெனரல் கொய்சோ, ஜப்பானிய இராணுவ தளபதியான யோஷி ஜிரோ உமேசு, போர் அமைச்சராக இருந்த செய்ஷிரோ ஹிட்டஹாக்கி உட்பட பலருக்குத் தண்டனை வழங்கப்பட்டது.
அதைப்போல நூரம்பர்க் விசாரணை மன்றத்தில் ஜெர்மானியப் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த ஹெர்மென் கோயரிங், எஸ்.எஸ். படையின் உயர் தளபதிகளாக இருந்த எர்னஸ்ட் கால்ட்டென் புரூனர், அடால்ப் ஈச்மென் ஆகியோர் உள்பட நாஜி உயர் தலைவர்கள் பலரும் தண்டிக்கப்பட்டனர்.
யூகோஸ்லோவியா குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக் போர்க் குற்றங்கள் புரிந்ததாக சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் வேளையில் சிறையிலேயே மரணமடைந்தார்.
போஸ்னியா முன்னாள் குடியரசுத் தலைவர் கராட்ஜிக் என்பவர் போர்க் குற்றங்களுக்காக 2008ஆம் ஆண்டு சூலை 18ஆம் தேதி கைது செய்யப்பட்டு பெல்கிரேடு போர்க் குற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அதன் பிறகு தற்போது சர்வதேச நீதிமன்றத்தின் பாதுகாப்பில் ஹேக் நகரில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவர் மீது உள்ள விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.
மேலே கண்ட போர்க் குற்றவாளிகளைவிட மிகக் கொடிய போர்க் குற்றவாளி இராசபக்சே ஆவார். உலகம் முழுவதிலுமிருக்கக்கூடிய மனித உரிமை அமைப்புகள், நடுநிலை ஊடகங்கள், டப்ளின் மக்கள் தீர்ப்பாயம், ஐ.நா. விசாரணைக் குழு ஆகியவற்றின் சுட்டுவிரல்கள் போர்க் குற்றவாளி என இராசபக்சேயை நோக்கி நீளுகின்றன.
ஆனால் இந்திய அரசின் மனசாட்சியை இந்தத் தீர்ப்புகள் கொஞ்சமும் உறுத்தவில்லை. இலங்கையில் போர் நடைபெற்ற காலத்திலேயே ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது அதை எதிர்த்துத் தோற்கடிக்க முன் நின்ற நாடு இந்தியா ஆகும். மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இடம் பெறுவதற்கு இலங்கை போட்டியிட்டபோது அதற்கு ஆதரவு அளித்த நாடு இந்தியாவாகும்.
கடந்த காலத்தில் இராசபக்சே நடத்திய தமிழர்களுக்கு எதிரான இனப் படுகொலைகளுக்குத் துணை நின்றும் அந்தப் படுகொலைகளை உலகத்தின் கண் முன் மறைக்க உதவியும் செயல்பட்ட இந்தியா இப்போது ஐ.நா. விசாரணைக் குழுவே இலங்கை போர்க் குற்றம் புரிந்துள்ளது எனத் தெளிவாக தீர்ப்பளித்த பிறகாவது இராசபக்சேயைக் கண்டிப்பதின் மூலமும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் அவரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்துவதின் மூலமும் கடந்த காலத்தில் தான் செய்த மாபெரும் தவறுக்குப் பரிகாரம் காண வேண்டும்.
இரண்டாம் உலகப் போர் மூண்ட போது போர்க் களத்தில் இரு தரப்பினருக்கும் நடுவில் தான் நின்று போரை நிறுத்த வேண்டும் என்று வேண்டிக் கொள்ள விரும்புவதாக காந்தியடிகள் கூறினார். ஆனால் வெள்ளை அரசு அவரைப் பிடித்துச் சிறையிலடைத்தது.
போரில்லாத உலகத்தைக் காண வேண்டும் என்று விரும்பிய காந்தியடிகளைத் தேசத் தந்தையாகக் கொண்டுள்ள இந்திய அரசு போரில் கொடிய குற்றங்களைப் புரிந்தவர்களைப் பாதுகாத்ததையும், அப்பாவி மக்களை கொன்று குவிக்க துணை புரிந்து செயல்பட்டதையும் காண்பதற்கு நல்ல வேளையாக காந்தியடிகள் இன்றைக்கு இல்லை.
- நன்றி : "தினமணி' 4-5-11
unarchitamilan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக