இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் போர்க் குற்றம் புரிந்த இராசபக்சே மற்றும் கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களின் விருப்பத்தை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இவற்றுக்கான தீர்மானத்தை இந்திய அரசே முன்மொழிய வேண்டுமென்றும் மாணவர்கள் கடந்த 4 நாள்களுக்கு மேலாக அமைதியான வழியில் போராடி வருகிறார்கள். பல இடங்களில் பட்டினிப் போராட்டம் மாணவர்களால் நடத்தப்படுகிறது.
அமைதியாக தங்கள் கல்லூரி வளாகங்களுக்குள்ளிருந்து போராடும் மாணவர்களின் போராட்ட வேகத்தைத் தணிக்கும் வகையில் கல்லூரிகளும் பள்ளிகளும் திடீரென மூடப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். அறவழியில் மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழக அரசும் அரசியல் கட்சிகளும் நிற்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம்.
மாணவர் போராட்டக் குழுவின் சார்பில் வருகிற 20ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சகல மாவட்டங்களிலும் உள்ள ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒருங்கிணைந்து தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் இந்த தொடர் முழக்கப் போராட்டத்திற்கு ஆதரவாக கட்சி வேறுபாடின்றி அணிதிரண்டு பங்கேற்கும்படியும் அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக