வாழ்நாளில் பெறற்கரிய ஒரு பேற்றினை எனக்கு
வழங்கிய அண்ணன் நெடுமாறன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்
கின்றேன். அவரது அருமை மகளுக்கு - பூங்குழலிக்கு "உன் அன்பு மாமா
பிரபாகரன்' என்று எழுதிய கடிதத்தையும் 1207 பக்கங்களைக் கொண்ட இந்நூலில்
நீங்கள் காணலாம். நான் திரும்பத் திரும்ப இந்த 1207 பக்கங்களையும்
படித்தேன்.
இது
தமிழர்களின் வரலாற்றில் ஏற்பட்ட ஒரு பெரும் குறையைப் போக்குகிறது. மேதினி
மெச்ச வாழ்ந்த தமிழர்களின் செழுமையான வாழ்விற்கு சரியான வரலாற்று ஆவணம்
கிடையாது. பண்டைய சங்க இலக்கியங்கள் உண்டு. காவியங்கள் உண்டு. வீரம்
மணக்கும் புறப்பொருள் வெண்பாமாலையும் புறநானூறும் பத்துப்பாட்டும் உண்டு.
ஆனால் இந்தத் தரணியில் இவர்களுக்கு நிகராகச் சிறந்து எவர்களும்
வாழ்ந்தவர்கள் இல்லை என்பதை நிலைநாட்ட ஆதாரங்களைக் காட்டக்கூடிய வகையில்
ஆவணப்படுத்தவில்லை தமிழன். இந்த நூல் இனி ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்குப்
பின்னால் மேற்கோள் காட்டத் தக்கதாக தமிழர்களின் வீர வரலாற்றைக் காட்டும்
ஆவணமாகி இருக்கிறது.
இந்த
நூலில் பல கேள்விகளுக்கு விடை இருக்கிறது. நம்முடைய மாற்றாருடைய
விமர்சனங்களுக்குப் பதில் இருக்கிறது.பல புதிர்கள்
அவிழ்க்கப்பட்டிருக்கின்றன. 1982ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறைச்சாலையிலே
தான் சந்தித்தபோது இந்த வீர வாலிபன் ஏற்கனவே பேபி சுப்பிரமணியத்தோடு தனது
இல்லத்துக்கு வந்தவர் தானே என்று அவர் உணர்கிறார். அங்கே தொடங்கி இந்த
நூலிலே செய்திகள் வேகமாக வருகின்றன.
நான் மிகுந்த வேகத்தோடு என்ன செய்திகள் இந்த நாளில் இந்த அரங்கத்தில் பதிவாக வேண்டுமோ அவற்றை மாத்திரம் பருந்துப் பார்வையில் பார்த்ததைச் சொல்ல விரும்புகிறேன். 1983 ஜுலையில் கலவரம் நடக்கிறது. இந்திராகாந்தி அம்மையார் இந்த நாட்டின் தலைமை அமைச்சர். இந்திய நாட்டினுடைய நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் ஆகஸ்டு திங்கள் 16ஆம் நாள் 1984ஆம் ஆண்டு இலங்கைத் தீவில் நடப்பது இனப் படுகொலை என்று பதிவு செய்தார்.
தமிழர் தியாகப் பயணம். - தமிழகம் எரிமலையாகக் காட்சியளித்தது.. நேற்று முன்தினம் நிலஅதிர்வு ஏற்பட்டபோது மக்கள் எப்படி பதட்டமடைந்தார்களோ அதைப்போல பூகம்பம் விளைந்ததைப் போல தமிழர் மனங்கள் நடுங்கின. அண்ணன் நெடுமாறன் அவர்கள் இந்த வங்காளக் குடாக் கடலின் அலைகளைக் கடந்து செல்கிறோம்- இராமேசுவரத்திலிருந்து செல்கிறோம் என்று புறப்பட்டு விட்டார். மதுரையிலிருந்து புறப்பட்டுச் செல்கிறார். வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரளுகிறார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களும் சட்டமன்றப் பேரவைத் தலைவர் க. இராசாராம் அவர்களும் அன்றைய முதல்வர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களும் வந்து பயணத்தை நிறுத்தலாமா என்று கேட்கிறார்கள். அதற்கு அவர் இசைவளிக்கவில்லை.
படகுகள் அப்புறப்படுத்தப் படுகின்றன. கடலின் மேல் செல்லும் படகிலிருந்து தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு கரைக்கு கொண்டு வந்து விடுவிக்கப்படுகிறார். இது ஆகஸ்டு மாதம் நடைபெறுகிறது. ஆகஸ்டு திங்கள் 1983ல் நடைபெறுகிறது. நவம்பரிலே சட்டமன்றத்திலே இது விவாதத்திற்கு வருகிறது. நவம்பர் 15 ந் தேதி 1983 ஆம் ஆண்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கடலிலிருந்து படகுகளை அப்புறப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு வருகிறது. அப்பொழுது முதலமைச்சர் சட்டமன்றத்தில் சொல்லுகிறார். இராமேசுவரத்தில் படகுகளையெல்லாம் அப்புறப்படுத்திவிட்டதாக இந்த மன்றத்திலே விமர்சனங்களை வைக்கிறார்கள். நான் கேட்கிறேன். ஒரு நெடுமாறனை இழந்து விட்டால் இன்னொரு நெடுமாறனை நாம் பெறமுடியுமா? அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அவர் மீது குண்டுகள் பாயுமானால் அதைத் தடுப்பதற்கு அவரிடம் துப்பாக்கி இருக்கிறதா? தடுப்புக் கருவி இருக்கிறதா? துணிச்சலுள்ள மனம் மாத்திரம் இருக்கிறது அவருக்கு. அவரைப் பாதுகாக்க வேண்டாமா? அவர் பிரச்சாரம் செய்கிறார். நான் செய்ய முடியாது. நான் செய்ய முடியாததை அவர் பிரச்சாரம் செய்கிறார். மக்கள் திரளுகிறார்கள். பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.
அந்த சட்டமன்றத்தில் அந்த நிகழ்விலேயே நெடுமாறன் அவர்கள் கொண்டு வந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற அதே வேளையில் முதலமைச்சர் தரப்பிலிருந்து இந்தத் தீர்மானம் அளவிற்குத் தீவிரத்தன்மை இல்லாத தீர்மானத்தை அண்ணா தி.மு.க. அரசு கொண்டு வருகிறது. உடனே அண்ணன் நெடுமாறன் அவர்கள் சட்டமன்றத்தில் "என் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். உங்கள் தீர்மானம் மாத்திரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்'' என்றார். "வேண்டாம். உங்கள் தீர்மானமும் இருக்கட்டும். நீங்கள் திரும்பப் பெறவேண்டாம். நீங்கள் அந்தத் தீர்மானத்தின் மீது என்ன பேச விரும்புகிறீர்களோ அதைப் பேசுங்கள்.'' அதை வாக்கெடுப்புக்கு விடவேண்டாம். ஆனால் உங்கள் கருத்துகளை நீங்கள் பதிவு செய்து உங்கள் தீர்மானத்தின் மீது பேசுங்கள் என்று தெரிவித்துவிட்டு அரசு கொண்டு வந்த ஆளும்கட்சி கொண்டு வந்த தீர்மானத்தின் மீது பேசும்போது கூறினார். "இங்கே நெடுமாறன் அவர்கள் பேசியது தான் ஐந்தரைகோடி மக்களின் உணர்வு என்பதை இந்தச் சட்டமன்றத் திலே பதிவு செய்கிறோம்'' என்றார்.
இந்த 83ஆம் ஆண்டு சம்பவங் களுக்குப் பிறகு ஈழத்திலிருந்து வந்த அமைப்புகளுக்கு இந்திய அரசு இராணுவப் பயிற்சி கொடுக்கிறது என்னும்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அந்த பயிற்சி ஏற்பாடு ஆகிறது. சகோதர யுத்தம் என்ற விமர்சனத்தைச் சிலபேர் வைத்தார்கள். ஒருங்கிணைந்து அவர்கள் போராட முடியவில்லையா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.1984ஆம் ஆண்டு டெலோ இயக்கமும் ஈராஸ் இயக்கமும் ஈபி.ஆர்.எல்.எப்பும் சேர்ந்து ஈழ தேசிய விடுதலை முன்னணி அமைக்கிறார்கள். 1985ஆம் ஆண்டு ஈழ தேச விடுதலை முன்னணியினுடைய அந்தஅமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளையும் இடம்பெறச் செய்கிறது.
திம்பு பேச்சு வார்த்தைக்குத் தயாராகிச் செல்லுகிறபோது தான் ரா உளவு அமைப்பின் தலைவரான சக்சேனா நாங்கள் முன்வைப்பதைத் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தித்துச் சொல்லுகிற செய்தி இந்த புத்தகத்தில் வருகிறது. திம்புவிலே பேச்சுவார்த்தை. 1985 ஜுலை 8ஆம் தேதி முதல் 13ம் தேதி வரை முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஆகஸ்டில் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை. ஹெக்டர் ஜெயவர்த்தனா அங்கிருந்து வந்து பங்கேற்கிறார். செயவர்த்தனாவின் சகோதரர். சிறந்த வழக்கறிஞர் என்று அங்கே கருதப்பட்டவர். அந்த பேச்சுவார்த்தையின் போது தமிழர் அமைப்புகள் இந்த நான்கு அமைப்புகளின் பிரதிநிதிகளும் சென்றார்கள். அப்போது தமிழ் இனம் என்பது அங்கே இருக்கக் கூடிய தனித்துவமான ஒரு தேசிய இனம். பூர்வீகத் தமிழர் தாயகம். ஈழம் என்பது தமிழர் தாயகம். எவராலும் மறுக்கப்படமுடியாத சுயநிர்ணய உரிமை. அனைத்து மக்களுக்கும் உரிமைகள். இந்த நான்கு கோட்பாடுகளையும் ஏற்றுக் கொண்டால் தான் பேச்சுவார்த்தை என்றார்கள். அவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். இ,ந்த காலகட்டத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தையும் அண்ணன் நெடுமாறன் அவர்கள் விவரிக்கிறார்.
84 ஆம் ஆண்டு இந்திராகாந்தி அம்மையார் படுகொலை செய்யப் படுகிறார். படுகொலை செய்யப்பட்ட போது அதனால் ஈழ மக்களுக்கு ஏற்பட்ட துயரமும் இந்திராகாந்தி அம்மையாருக்கு நினைவஞ்சலி செலுத்தச் சென்ற இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை கூட இங்கே கவிஞர் அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். இந்தச் சூழுலில்தான் அதற்குப் பிறகு இராசீவ்காந்தி அவர்கள் தலைமை அமைச்சராக வந்தபிறகு சார்க் மாநாட்டிலே பெங்களூரிலே நடைபெற்ற போது கொடுக்கப்பட்ட நிர்ப்பந்தங்கள். அதைப்போல தொலைதொடர்புக் கருவிகள் பறிக்கப்பட்ட சம்பவம். இந்த சம்பவத்திற்குப் பிறகு பெங்களூரிலே பிரபாகரனை அழைத்துப் பேச அன்றைய முதலமைச்சரைப் பயன்படுத்த நினைத்தார்கள். கிழக்கு மாகாணத்தை மூன்று பகுதிகளாகக் கூறுபோட நினைக்கிறார்செயவர்த்தனா. அதற்கு உடன்பட முடியாது. இந்த கருத்துகளை ஏற்க முடியாது என்பதை எம்.ஜிஆ.ர். அவர்களிடம் மிகத் தெளிவாகத் தெரிவிக்கிறார் பிரபாகரன். இந்தக் கட்டத்தில் ஆயுதப் போராட்டமே வழி என்று முடிவு செய்யப்பட்ட பிறகு, தந்தை செல்வா வட்டுக்கோட்டை தீர்மானத்திற்குப் பிறகு தங்கள் தாயக விடுதலைக்காக ஆயுதம் ஏந்துவது ஒன்றுதான் வழி என்று முடிவெடுத்து ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிற காலகட்டத்தில் அவர்களுக்குத் தேவைப்பட்ட நிதியை எம்.ஜி..ஆர் அள்ளித் தந்தார் என்ற செய்தியை பதிவு செய்திருக்கிறார் அண்ணன் நெடுமாறன்.
மதுரையிலே தங்கியிருந்தார். பிரபாகரன் அவர்களும் அங்கே தங்கியிருந்தார். எல்லா செய்திகளும் - அவர் மதுரையிலே இருந்தது - அவர் இல்லத்திலே தங்கி இருந்தது - அத்தனை சம்பவங்களையும் விவரித்துக் கொண்டே போகிறார். அந்த நாட்களுக்குப் பிறகு அவர் இனி ஈழம் சென்று விடுவது என்று முடிவெடுத்து கடலிலே செல்லும் வரை தான் ஆபத்து வரலாம் கரை சேர்ந்து விட்டால் எந்த ஆபத்தும் வராது என்று கூறிவிட்டுப் பிரபாகரன் போகிறார். இனி வருவதில்லை இந்திய மண்ணுக்கு என்று முடிவெடுத்துச் செல்கிறார்.
இந்தக் கட்டத்தில் உங்களையே ஏகப் பிரதிநிதியாக ஏற்றுக் கொள்கிறோம் என்று இந்திய தூதரக அலுவலகத்தில் இருந்த முதன்மைச் செயலாளர் பூரி அங்கே போய் சொல்லி நேரில் பிரபாகரன் அவர்களை அங்கிருந்து டெல்லிக்கு அழைத்துச் சென்ற பிறகு - தில்லிக்கு அழைத்துச் செல்லும் வரையில் நீங்கள் தான் ஈழத் தமிழர்களின் பிரதிநிதி என்று கூறி அழைத்துச் சென்ற பிறகு - அசோகா ஓட்டலிலே எவரும் சந்திக்க முடியாதபடி சிறை வைக்கப்பட்டதைப் போல தனிமைப்படுத்தப்பட்டு அடைக்கப் பட்டபோது தான் அந்த சம்பவத்தைப் பாலசிங்கத்தின் வாயிலாகவே குறிப்பிடுகிறார். இந்த சுங்கானின் புகை அடங்குகிற நேரத்திற்குள்ளாக உங்கள் வீரர்கள் அனைவரையும் ஒழித்துக் கட்டிவிடுவோம் என்று சொன்னார் தீட்சித். இந்த சந்தர்ப்பத்தில் திணிக்கப்பட்ட ஒப்பந்தம், இந்திய இலங்கை ஒப்பந்தம். ஆகவேதான் 29ம் தேதி சூலை மாதம் இராசீவ் காந்தி செயவர்த்தனாவோடு கையொப்பம் போட்டுவிட்டு திரும்பிய போது தாக்கிய விசயமுனி அதே நாட்டில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றான் என்ற செய்தி - இராசீவ் காந்தியின் உயிரைக் குடிக்க முயற்சி செய்தவன் பெற்ற பாராட்டு - மகுடம் சூட்டப்பட்ட செய்தியும் இங்கே வெளியிடப்பட்டு இருக்கிறது. அங்கே செயவர்த்தனா சொல்கிறார். "நான் இந்தியாவோடு ஒப்பந்தம் செய்துவிட்டேன். இந்திய இராணுவத்தை இங்கே பிரவேசிக்க அனுமதித்துவிட்டேன்.இப்படி அனுமதித்ததை என்னுடைய அமைச்சரவையில் சிலரும் வெளியில் பலரும் கடுமையாக விமர்சித்தார்கள். இப்பொழுது ஒரு உண்மை புரிந்து விட்டதா? இப்பொழுது நம்முடைய இராணுவ வீரர்கள் கைப்பந்து விளை யாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்திய இராணுவ வீரர்களும் விடுதலைப் புலிகளும் களத்தில் மோதிக்கொண்டிருக்கிறார்கள். புரிந்ததா சூட்சுமம்... எதற்காக இந்த ஒப்பந்தத்தைச் செய்தேன் என?'' என்று செயவர்த்தனா கூறியதை இங்கே பதிவு செய்திருக்கிறார் அண்ணன் நெடுமாறன் அவர்கள். இப்படி இந்த அளவிலே நடைபெற்ற சம்பவங்களை ஒட்டித்தான் 1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அந்த இரவிலே இந்திய அமைதிப்படைத் தளபதி ஹர்ஹரத்சிங்கிற்குக்குத் தகவல் வருகிறது. தீட்சித் பேசுகிறார். உங்களைச் சந்திக்கப் பிரபாகரன் வருகிறாரா? ஆம். மரியாதை நிமித்தம் சந்திப்பு நடக்கிறது. சுட்டுக் கொன்று விடுங்கள் என்கிறார் தீட்சித். இந்தத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று ஹர்ஹரத்சிங் பதில் செல்கிறார்.
திலீபன் உண்ணாவிரதம் தொடங்குகிறான். நெடுமாறன் செப்டம்பர் 22ஆம் தேதி இங்கிருந்து போகிறார். நெடுந்தீவு போய்ச் சேருகிறார். அன்றைய இரவு பிரபா கரனைச் சந்திக்கிறார். மறுநாள் திலீபனைப் போய்ப் பார்க்கிறார். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இறப்பின் விளிம்பிலே நிற்கிறான் திலீபன். கோடிக்கணக்கான தமிழர்களின் சார்பிலே உங்களுக்கு மரியாதை செலுத்த வந்திருக்கிறேன் என்கிறார். எங்கள் அன்பைச் செலுத்த வந்திருக்கிறேன். அவனோ தலைவரை இறுக்கமாக இருக்கச் சொல்லுங்கள். தலைவர் போராட்டத்தை முன்னெடுத்துச் செல் லட்டும் என்று கூறுகிறான். திலீபனின் உதடுகள் அசைகின்றன. திலீபன் மறைந்தான். இந்த காலகட்டத்தில் - இது செப்டம்பர் 26ஆம் தேதி நடை பெறுகிறது.இந்திய அரசு நினைத் திருந்தால் திலிபனைக் காப்பாற்றி இருக்க முடியும். ஆனால்துளிநீரையும் பருகாமல் - கணைக்கால் இரும்பொறையைப் போல - இவன் இலட்சியத்திற்காகத் தன்னை அழித்துக் கொண்டான். இதற்குப் பிறகு 17 பேர் கொண்ட கடற் படை- கடற்புறா - சிங்களக் கடற்படை யினால் கடலிலே மடக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பலாலி விமான நிலையத்தில் ஒப்பந்தத்திற்கு மாறாக அடைக்கப்படுகிறார்கள்.
ஆகஸ்டு 4ஆம் தேதி சுதுமலை யில் பிரபாகரன் ஆற்றிய உரை - இந்திய ஒப்பந்தம் பற்றி - இந்தியாவில் ஒப்பந்தம் கையெழுத்து ஆகப்போகிறது. ஒப்பந்தத்திற்காக ஈழத்திற்கு போகிறார் இராசீவ்காந்தி. சென்னைக்கு வந்த பிரபாகரன் அவர்கள் முதலமைச்சர் அவர்களைச் சந்திக்கிறார். முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கட்டித் தழுவிக் கொண்டு கண்ணீர் விட்டார் என்று பதிவு உள்ளது. அப்போது தான் சுதுமலையில் பேசும்போது சொன்னார். நமது போராட்ட வரலாற்றில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டு விட்டது. எதிர்பாராத திருப்பம். நம்மை விட வலிமை மிக்க வல்லரசு நம் மீது ஒப்பந்தத்தைத் திணிக்கிறது. தியாகம் செய்து இரத்தம் சிந்தி போராடி நாம் உருவாக்கிய இந்த போராட்ட வடிவமே சிதைக்கப்படுகிறது. நாம் மக்களைக் காப்பதற்காக வைத் திருக்கும் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்லிவிட்டார்கள். நம்மைக் கேட்காமலேயே, இந்த மக்களின் கருத்தைக் கேட்காமல் இந்த ஒப்பந்தம் திணிக்கப்பட்டுள்ளது. நாங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.. இனி இந்த மக்களைக் காக்கின்ற பொறுப்பை இந்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் - இந்திய அரசை எதிர்த்து ஒரு துர்ப் பாக்கியவசமான நிலையை ஏற்படுத்த நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம். இந்திய சிப்பாய்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த நாங்கள் தயாராக இல்லை. சிங்கள இனவாதம் இந்த ஒப்பந்தத்தை முடுக்கி விடும். இதைத் தான் சுதுமலையில் பிரபாகரன் சொன்னார்.உயிருக்கு நிகரான புலிகள் 12 பேர் நச்சுக் குப்பி களைக் குடித்து இறந்து போனார்களே - அதற்குப் பிறகு - உலங்கு வானூர்தி களிலே கமாண்டாக்கள் இறக்கி விடப்பட் டார்களே - நூற்றுக்கணக்கில் கொண்டு வந்து குவிக்கப்பட்டார்கள் - இப்படிக் கொண்டு வந்து குவிக்கப்படுவார்கள் என்று பிரபாகரனுக்குத் தெரியும் - ஆனால் அந்த அதிரடிப் படை வீரர் களை நோக்கி புலிகளின் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தன. ஒருவன் கூட அதில் மிஞ்சவில்லை. அக்டோபர் 12ஆம் தேதி நடந்தது - பதிவு செய்திருக்கிறார். நிலவின் வெளிச்சத்தில் பார்த்தேன் - பிரபாகரன் நெருப் பாற்றிலே மிதந்து கொண்டிருந்தார். சுற்றிலும் போர் நடக்கிறது - போர்க் களத்தில் ஆயுதத்தைத் தாங்கிப் பிரபாகரன் கட்டளையைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார். போர்க்களத்திலே படையை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்தக் காட்சியைப் படித்த போது என்னுடைய நினைவுக்கு வந்ததெல்லாம் மகாபாரதத்தின் போர்க்களத்தில் 13ஆம் சருக்கம் தான். அபிமன்யு வியூகத்தில் நுழைந்தவுடன் நாலாபுறமும் சூழ்ந்து எதிரிகள் தாக்கியதைப் போல பிரபாகரனின் நடவடிக்கையை நான் பார்த்தேன். ஒரே ஒரு வித்தியாசம். அபிமன்யு வியூகத்தை உடைத்துவிட்டு வெளியே வரமுடியாமல் சிக்கிக் கொண்டான். மடிந்தான். ஆனால் பிரபாகரன் எதிரிகளின் வியூகத்தை உடைத்தார். வெளியேறினார்.
அதன் பிறகு அரசு மாறுகிறது. வி.பி.சிங் பொறுப்பேற்கிறார். அங்கே பிரேமதாசா இந்தியப் படைகள் வெளியேற வேண்டும் என்று குரல் கொடுக்கிறார். காய்களை மிகத் திறமையாகப் பிரபாகரன் நகர்த்துகிறார். சூழ்ச்சிதானே - அண்ணன் நல்லகண்ணு சொன்னாரே - சூழ்ச்சி தானே அரசியல். இனத்தைக் காப்பதற்காக - தன்னைக் காப்பதற்காகவோ மகுடத்தைக் காப்பதற் காகவோ தன் குடும்பம் வாழ்வதற் காகவோ அல்ல. தேச விடுதலைக்காகப் பிரபாகரன் போராடினார்.
இதற்குப் பிறகு 90ம் ஆண்டு - எந்த யாழ் கோட்டை 300 ஆண்டு களுக்கு மேலாக டச்சுக்காரர்கள், ஒல்லாந்தர்கள், ஆங்கிலேயர்கள் என்று ஆங்கிலேயர்கள் காலம் வரை மாற்றார், சிங்களர் கையில் இருந்ததோ அந்த யாழ் கோட்டையை எப்படிக் கைப்பற்றி னார்கள் என்று விவரிக்கிறார். அண்ண னிடம் கேட்கிறேன். ரொம்ப ஆச்சரிய மாக இருக்கிறது. யுத்தகள காட்சிகளை நீங்கள் எப்படி எழுதினீர்கள்?
இது வீரகாவியம். இதிகாசம். இந்த வீரகாவியத்தை எடுத்து ஒவ் வொருவரும் எழுதுங்கள். இதிகாசத்தை வைத்து எழுதியிருக்கிறான் ஓமர் எலியட். புத்தகத்தை இதிகாசமாக எழுதியிருக்கிறார்.ட்ராய் நகர் யுத்தத்தை இதிகாசமாகப் படைத்திருக்கிறார். அது புராணம். கிரேக்கப் புராணம். அதைப் போல இந்த நாட்டிலே கோடிக்கணக் கான மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடிய இதிகாசங்கள் அது இராமாயண மாக இருக்கட்டும் - அங்கே நடை பெறும் யுத்தத்தை கம்பன் வர்ணிப்பதாக இருக்கட்டும். அதைப் போல 18 நாள் நடைபெற்ற குருசேத்திரப் போர்க் களத்தை வில்லிபுத்தூரார் அருமையான கவிதைகளிலே தந்திருக்கிறார். - இவையெல்லாம் இதிகாசங்கள். ஆனால் நடைபெற்ற ஒரு போரை வைத்து ஒரு கவிதை எழுதுவது என்பது குலோத்துங்க சோழனது படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான் நடத்திய போரைப் பற்றி கலிங்கத்துப் பரணி பாடியதைப் போல - அதிலே மெல்லிய உணர்வுகளை எழுப்பும் வரிகளும் உண்டு - நான் அங்கு செல்ல விரும்பவில்லை - இருந்தாலும் யுத்த களத்தில் நடந்ததை செயம்கொண்டார் ஒரு பரணியில் பாடியுள்ளார். கலிங்கத்துப் பரணியைப் பாடியுள்ளார்.
இப்படிக் காவியமாக எழுதியிருக் கிறார். அண்ணன் நெடுமாறன் அவர்கள் தீட்டியுள்ள அத்தியாயம் ஒவ்வொன்றை யும் அறிவுமதி போன்றவர்கள் உணர்ச்சியுள்ள கவிஞர்கள் ஒவ்வொரு அத்தியாயத்தையும் காவியமாகத் தீட்ட வேண்டும். இது கற்பனை அல்ல. இதிகாசம் அல்ல. தமிழர்களின் இரத் தத்தால் தீட்டியது. அந்த அடிப்படையில் தான் நீங்கள் அந்த யாழ் கோட்டைப் போரை விவரித்து இருக்கிறீர்கள்.
நீங்கள் இராணுவத்தில் இருந் ததைப் போல, படையில் இருந்ததைப் போல போராடியதைப் போல எப்படி இவ்வளவு நுணுக்கமான செய்திகளைத் தந்தீர்கள் என்று வியந்து நான் கேட்டேன். 1990 ஆம் ஆண்டு சூலைத் திங்களில் யாழ்ப்பாணக் கோட்டையைக் கைப்பற்றப் புலிகள் புறப்படுகிறார்கள். நிலவு ஒளியில் புறப்படுகிறார்கள். யாழ் கோட்டைக்குள்ளே எண்ணற்ற சிங்கள வீரர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆங்காங்கே படையணிகள் இருக் கின்றன. இந்த கோட்டையைத் தகர்த்து விட வேண்டுமென்று கருதி குண்டு களை வீசுகிற போது உள்ளே இருக்கிற அவர்கள் பதிலுக்குக் குண்டுகளை வீசுகிறார்கள். குண்டுகளுக்கு நடுவே செல்லுகிறார்கள். புல்டோசர்களோடு செல்கிறார்கள். பெரும் பாரம்தூக்கிகள் செல்கின்றன. முதல் பாரந்தூக்கி ஒரு பெரும் பள்ளத்திலே விழுந்து செய லற்றுப் போய்விடுகிறது. அதைவிட பிரம்மாண்டமான பாரந்தூக்கி அதை ஒதுக்கிவிட்டு முன்னேறுகிறது. ஏற்கனவே பீரங்கிக் குண்டுவீச்சில் பள்ளமாகிக் கிடந்த பெரும்பள்ளத்தில் அந்த பாரந்தூக்கியும் விழுந்து விடு கிறது. அவர்கள் போட்ட திட்டத்தின்படி பாரந்தூக்கிகளை கோட்டைக்குப் பக்கத்தில் கொண்டு போகமுடிய வில்லை புலிகளால். அன்புக்குரிய வர்களே ஏணிகளைக் கொண்டு போகிறார்கள். நீங்கள் திரைப்படங் களிலே பார்த்திருப்பீர்கள். உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப் பட்ட ஆங்கிலத் திரைப்படங்களிலே கூட நீங்கள் பார்த்திருக்கலாம். ஸ்பெயின் நாட்டுப் போரை வைத்து எடுக்கப்பட்ட ஆஙகிலப் படத்தில் பார்க்கலாம் ஏணிகளை வைத்து அவற்.றின் மேல் புலிகள் ஏறி சுடுகிறார்கள். மேலே இருந்து எதிரி சுடுகிறான். இவர்கள் ஏணியில் ஏறிக்கொண்டே சுடுகிறார்கள். குண்டுகள் பாய்ந்தாலும் ஏறிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு பீரங்கி குண்டு வந்து விழுந்து ஏணி உடைகிறது. உடைந்து விட்ட ஏணியைக் கொண்டு போய் ஒரு அரசமரத்தோடு கட்டுகிறார்கள். மீண்டும் அதன்வழியாக அந்த மதில் சுவர் மீது தாவி ஏற முயற்சி செய்கிறார்கள்.அப்படி ஏறிய அந்த இளைஞர்களைப் பற்றி வர்ணிக்கிறார். டயசு என்னும் ஒரு இளைஞன் சுட்டுக்கொண்டே கண் காணிப்பு கோபுரத்தை நோக்கிப் போய்க் கொண்டே இருக்கிறான். வாயிற் கதவை நோக்கிப் போகிறான். அப்படிப் போகிற போது அவன் மீது குண்டு விழுந்து அவன் அந்த இடத்திலேயே சிதறு கிறான். பக்கத்திலே சீலன். இவனுடைய இயந்திரத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு சீலன் முன்னேறுகிறான். நீங்கள் கேட்டிருப்பீர்களே. மடியப் போகும் நேரத்தில் கூட ஆயுதம் கொடுத்து போராடும்படி கேட்டதாக. சீலன் அப்படித் தான் முன்னேறினான். அடுத்த குண்டு பாய்கிறது. சீலனின் இரண்டு கால்களும் பிய்ந்து போகின்றன. இரண்டு கால்களும் பிய்ந்து இரத்தம் ஆறாகப் போய்க் கொண்டிருக்கும்போது இயந்திரத் துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறான். அவனும் மடிகிறான்.
இந்த கோட்டையின் பிரதான வாயிலை தாங்கள் தான் தாக்க வேண்டும் என்று புறப்பட்ட - உலகத் தில் எந்த விடுதலை இயக்கத்திலும் பெண்கள் படையை இப்படி உருவாக்கிய தில்லை என்று சொல்லுகிறோமே - அந்த படை சங்கீதா என்ற பெண்ணின் தலைமையிலே பிரதானக் கோட்டை வாயிலைத் தாக்குகிறார்கள். ஒரு புறம் புலிகள் தாக்குகிறார்கள். முற்றுகை போடுகிறார்கள். இப்படிப்பட்ட சூழலில் கடற்கரைப் பகுதியில் இருந்து சிங்கள கடற்படை அங்கே தாக்க வருகிறது. அதை எதிர்த்துப் போராடுகிறார்கள். சிங்கள வான்படை வந்து தாக்குகிறது. துப்பாக்கியால் சுட்டு வீழ்த்துகிறார்கள் விமானங்களை. முப்படைகளும் தாக்கு கின்றன. புலிகள் எல்லாம் சிதறி ஓடிவிட்டார்கள் என்று கருதி கோட்டை வாயிலைத் திறந்து கொண்டு திபுதிபு என்று கவசவண்டியில் வெளியில் வருகிறார்கள் சிங்கள படையினர். இடிபாடுகளில் இருந்து எழுந்து புலிகள் சுடுகிறார்கள். கவச வண்டி நாசமாகிறது. சிங்களப் படையினர் சிதறி ஓடுகிறார்கள். தப்பித்துப் பிழைத்தால் போதும் என்று கருதி சிங்களப்படை பின்வழியாக ஓடுகிறது. கோட்டை கைப்பற்றப் படுகிறது. யாழ்க் கோட்டை கைப்பற்றப் பட்டது. அந்தக் கோட்டை கைப்பற்றப் பட்டவுடன் பெர்லின் சுவர் எப்படி உடைக்கப்பட்டதோ அப்படி உடைக்கப் பட்டது. மக்களிடம் கடப்பாறை மண்வெட்டி கொண்டு வாருங்கள். இந்த ஆதிக்கக் கோட்டையை உடைத்து நொறுக்குங்கள் என்று பிரபாகரன் அழைப்பு விடுத்தார்.
சிறைக்குள்ளிருந்து மண்ணை அகற்றி பாதாளச் சுரங்கம் அமைத்து வெளியேறியதாக கேள்விப்பட்டிருக் கிறீர்களா? நடந்தது. இரண்டாம் உலகப் போரின் போது செர்மானியச் சிறையிலிருந்து தப்பிச்சென்ற கதையை ஒரு திரைப்படமாக எடுத்து 1965இல் கிரேட் எசுகேப் என்ற திரைப்படம் குளோப் தியேட்டரில் வந்தது. நான் நான்கைந்து தடவை அந்த திரைப்படத்தைப் பார்த்தேன்.
நம்ம புலிகள் அதைவிட அசகாயச் சூரர்கள். அந்த செர்மன் சிறையில் அகழி கிடையாது. வேலூரில் அகழி உள்ளது. 1995ஆம் வருடம் நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்த ஆகச்டு 15ம் நாளைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் புலிகள் ஆகச்டு 15 ஆம் தேதி வேலூர் சிறையிலிருந்து தப்பிப் போய்விடுகிறார்கள். 43 பேர். 4 பெண்கள் உட்பட. அதை அண்ணன் மிக அழகாகச் சொல்கிறார்கள். எப்படித் தப்பித்தார்கள் என்பதை அழகாகச் சொல்கிறாகள்ர். திப்பு மகால்- ஹைதர் மகால் என்று இருக்கிறது வேலூர் சிறையில் - 1806 புரட்சியின் போது திப்புவின் பிள்ளைகள் அங்குதானே கொண்டு போய் அடைக்கப்பட்டார்கள். படித்திருப்பீர்களே. அங்கே பல அறைகள் சிமிண்டு போட்டு மூடப் பட்டுள்ளன. மாடியில் ஓர் அறை. அதற்கு கீழ் உள்ள அறையில் தளம் உள்ளது. பல அறைகளில் சிமிண்டு போட்டு மூடிவிட்டார்கள். அது எங்களுக்கு வசதியாகப் போய்விட்டது. மாடித் தளத்தில் இவர்களுக்கு அறைகள் கொடுக்கப்பட்டன. உடனே இவர்கள் என்ன செய்கிறார்கள். அந்த அறையின் சுவரைத் தோண்டுகிறார்கள். தளத்தைத் தோண்டி அங்கிருந்து கீழ் உள்ள அறைக்கு வருகிறார்கள். தளத்தைத் தோண்டி கீழ்த்தள அறைக்கு வந்தவுடன் அடுத்த அறை. அடுத்த அறை. மேலும் தரையைத் தோண்டி தளத்தில் 2 அடிக்கு 4 அடி தளத்தைத் தோண்டி 10 அடி ஆழத்திற்கு 3 அடிக்கு 4 அடி சைசில் தோண்டுகிறார்கள் "ட' வடிவில். இதற்கு என்ன பொருள்களை உபயோ கித்தார்கள்? எத்தனை கம்பி? எத்தனை மண்வெட்டி? பொருட்கள் பட்டியலே உள்ளது. இதற்கு மத்தியிலே 4 தடவை 150 போலீசுடன் வந்து சிறை அதி காரிகள் வந்து சோதனை பண்ணு கிறார்கள். எந்த அறையில் மேல் தளத்தில் ஓட்டை போட்டிருக்கிறார்களோ அந்த அறைக்கே வருகிறார்கள். இவர்கள் அங்கே காய்கறி நறுக்கு கிறார்கள். என்னப்பா செய்கிறீர்கள் என்று கேட்கிறார்கள் சோதனைக்கு வந்தவர்கள். நாங்கள் உணவு தயாரிக் கிறோம் என்று பதில் சொல்கிறார்கள். நான்கு தடவை வந்து பார்த்திருக் கிறார்கள். பத்து வாரம் இந்த வேலை நடந்திருக்கிறது. மேல்நாட்டிலே 6 மாதம் முயற்சி செய்து தப்பிய கதை உள்ளது. இங்கே பத்தே வாரத்தில் தப்பிக்கிறார்கள். வெளியே தப்பிப் போகிறபோது மூன்றுபேர் இறந்து போகிறார்கள். இதிலே எழுதாத செய்தி. அண்ணன் மூலம் தெரிந்து கொண்ட செய்தி.
அண்ணன் அவர்கள் பார்க்க ஜெயிலுக்குச் சிலபேரை அனுப்பி வைக்கிறார். பார்க்கப் போனவர்களிடம் தலையணை கேட்கிறார்கள். அவர்கள் உடனே இவருடன் தொடர்பு கொண்டு அண்ணே அவர்கள் தலையணை கேட்கிறார்கள் அண்ணே. சரி நீங்கள் வாங்கிக் கொடுத்து விடுங்கள் என்கிறார் இவர். இரப்பர் தலையணை தான் வேண்டும் என்று கேட்கிறார்கள் அண்ணே. சரி இரப்பர் தலையாணை யையே வாங்கிக் கொடுத்துடுங்க. இரப்பர் தலையாணை வாங்கிக் கொடுத்தாச்சு. இதற்குப் பிறகு பத்திரிகையில் இவர்கள் தப்பிய செய்தி வருகிறது. அதிலே செய்தி வருகிறது. அகழிக்குப் பக்கத்தில் இரப்பர் தலையணைகள் கிடந்தன. அதாவது ஒருசிலருக்கு நீந்தத் தெரியாது என்பதால் அகழிக்குள் போகும் போது நீந்திச் செல்ல இரப்பர் தலையணை தேவைப்பட்டிருக்கிறது. அதனால் தான் இரப்பர் தலையணை கேட்டிருக் கிறார்கள். தோண்டிக் கொண்டே போகும்போது கல் மண்ணை எல்லாம் ஒரு பக்கம் சேமித்து வைக்க வேண்டுமே? அதையெல்லாம் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் நடக்கிற காரியமா? எந்தத் தடையும் அந்த விடுதலைப் போரைத் தடுக்க முடியாது என்பதை இந்த நிகழ்ச்சி சுட்டிக்காட்டுகிறது. இவ்வளவும் நடந்த பிறகு 95ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் கடுமையான தாக்குதலைச் சிங்களவர்கள் நடத்தும் போது ஐந்தரை இலட்சம் தமிழர்கள் வெளியேறட்டும் என்று பிரபாகரன் ஆணையிட்டார். அழைத்துக் கொண்டு போய் வெளியே விட்டார். சிங்களவர்கள் பிரபாகரன் தப்பி ஓடுகிறார் என்று நினைத்தார்கள். ஆனால் அங்கு என்ன நடந்தது? அதற்குப் பிறகுதான் வீர காவியங்கள் தீட்டப்பட்டன. ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் வெற்றி மேல் வெற்றி பெற்றார்கள். வரிசையாக வெற்றிகள். 91ல் யானையிறவை கைப்பற்ற முடிய வில்லை. அதற்குக் காரணங்கள் உண்டு. ஆனால் 2001ம் ஆண்டில் அவர்கள் கைப்பற்றினார்கள்.25000 சிங்களப் படை வீரர்களை முறியடித்துத் தகர்த்தார்கள். யானையிறவைக் கைப்பற்றுகிறபோது மற்ற பகுதியிலிருந்து சிங்களப் படை யணிகள் உதவிக்கு வரமுடியாதபடி எல்லா முனைகளையும் புலிகள் கைப் பற்றிக் கொண்டார்கள். யாரும் நம்ப முடியவில்லை. உலகமே அதிசயித்தது. யாரும் நம்பவே இல்லை. நான் இன்றைக்குச் சொல்லுகிறேன். வாஜ்பாய் என்னிடம் கேட்டார். எப்பொழுது யாழ்ப்பாணம் விழும் என்று? கேட்டார். சீக்கிரத்தில் என்று நான் சொன்னேன்.
மணலாற்றுப் போரிலே வெற்றி. சிலாவத்துறை போரிலே வெற்றி. சிங்களவர்கள் வீழ்ந்தனர். முகமாலை போரிலே வெற்றி. மாங்குளத்திலே வெற்றி ஓயாத அலைகள் ஒன்றிலே வெற்றி ஓயாத அலைகள் இரண்டிலே வெற்றி. அக்கினி அலையிலே வெற்றி. வெற்றி மேல் வெற்றி பெற்று இத்தனை களங்களிலும் வெற்றி பெற்று ஏறத்தாழ தமிழீழம் என்று சொல்லக்கூடிய பகுதி அனைத்தையும் இரத்தம் சிந்தி வெற்றி பெற்று மகத்தான தியாகம் செய்து இவ்வளவையும் செய்தபிறகு மனித நேயம் இருக்கிறது. விதுஷா சொல்லு கிறார் புத்தகத்திலே பதிவு ஆகியுள்ளது. போரின் போது இரவிலே ஓய்வு எடுக்கும்போது ஒரு இருமல் சத்தம் வந்தாலும் மறுநாள் தலைவர் அங்கு வந்துவிடுவார். இருமல் சத்தம் கேட்டதே? யாருக்கு உடல்நலம் இல்லை. சிங்களத் தேசியக் கொடி எரிக்கப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவித்தார் பிரபாகரன். ஒரு சிங்களப் பெண்ணை ஒரு தமிழன் - புலிகள் அமைப்பில் உள்ளவன் அல்ல - தமிழ்ப் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதைக் கண்டு ஆத்திரப் பட்டு ஒரு சிங்களப் பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிவிட்ட செய்தியை அறிந்து அந்த சிங்களப் பெண் பாதுகாப்பாக அந்தப் பகுதியிலிருந்து செல்வதற்கு முன்பு அவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று உத்தரவிட்டவர் பிரபாகரன்.
எங்காவது ஒரு சிங்களப் பெண்ணை பாலியல் பலாத்காரத்திற்கு புலிகள் ஆளாக்கினார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? அவர் எவ்வளவு மென்மையானவர். அவர் உருவாக்கி வளர்த்த இடம் செஞ்சோலை அல்லவா? சின்னஞ்சிறு பிஞ்சுகள் அல்லவா - தாய் தந்தையரை இழந்த குழந்தைகள் தங்கியிருந்த இடமல்லவா அது. நெடுமாறன் அண்ணன் அவர்கள் அழகாகச் சொல்கிறார். அங்கு பிரபாகரன் போகும்போது தின்பண்டங் கள் வாங்கிக் கொண்டு போவார். அத்தனை குழந்தைகளும் அவரை ஆரத் தழுவிக்கொள்ளும். தங்கள் கவலையை எல்லாம் மறந்து கலகல வென்று சிரித்துத் தழுவிக்கொள்ளும். அவர்களோடு அவர் மகிழ்ச்சியுடன் இருப்பார். தாயும் தந்தையும் இல்லை என்ற கவலை அந்த குழந்தைகளிடம் இல்லை. இந்தக் குழந்தைகளை நான் போர்க்களத்திற்கு அனுப்பமாட்டேன். அதைப்போல காந்தரூபன் அறிவுச் சோலையும் அப்படிப்பட்ட இடம் தான். ஒன்றிலே ஆண் பிள்ளைகள். ஒன்றிலே பெண் பிள்ளைகள். போர்க்களத்திலே பிள்ளைகளை இழந்தவர்களுக்கு ஒரு தனி இல்லம். என்ன அருமையான ஏற்பாடு. அவரா பதவிக்கு ஆசைப் பட்டார்? மக்கள் முன்னணி அமைக்க வேண்டும் அரசியல் கட்சி அமைய வேண்டும் என்று ஒரு திட்டத்தைச் சொன்னபோது அதற்கு அதுவரை துணைத்தலைவர் மாத்தையாவை அல்லவா நியமித்தார். அவரைப் பொறுத்தமட்டில் தமிழீழம் அமைந்த பிறகு நான் அதிபராக மாட்டேன். போரிலே உயிரிழந்த குடும்பங்களுக்கு நல்வாழ்வு அமையவேண்டும். புனர் வாழ்வு தரவேண்டும். தாயை தந்தையை இழந்தவர்களுக்குப் புனர்வாழ்வு தரவேண்டும். அந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைத்தார். இப்படி போர்க்களங்களில் இவ்வளவு வெற்றி பெற்று யானையிறவில் வெற்றி பெற்ற பிறகு கட்டுநாயகா விமானதளத்தை இரவோடு இரவாகச் சென்று 2001இல் தகர்த்து 27 விமானங்களைத் தவிடு பொடியாக்கி இனி எழவே முடியாது சிங்கள வான்படை - சிங்கள இராணுவம் என்ற நிலையை உருவாக்கிய பின்பு தானே - யுத்தகளத்திலே இவர்களை வெல்ல முடியாது என்று முடிவெடுத்து போர் நிறுத்தத்தை அவர்கள் கோரி னார்கள். சிங்களர்கள் விக்கிரமசிங்கே காலமாக இருக்கட்டும் - நார்வே நடுநிலை வகித்த நாட்களாக இருக் கட்டும் - பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு - போர்களில் வெற்றி பெற்று இராசதந்திர முறையில் நடந்து வந்த இந்த கட்டத்திற்குப் பிறகு-2004இல் காட்சி மாறியது, ஆட்சி மாறியது காங்கிரசு இங்கே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. சூழ்ச்சி வலை பின்னப் பட்டது. இந்தியா ஆயுதங்களைக் கொடுத்தது. முப்படை உதவியைக் கொடுத்தது. முப்படைத் தளபதிகளும் ஆலோசனை வழங்கினர். தளபதிகளை இலங்கைக்கு அனுப்பித் திட்டங்களை வகுத்துக் கொடுத்தது. வல்லரகள் உதவி புரிந்தன. எத்தனை வல்லரசுகள் பாகிசுதான், சீனா, ரஷ்யா, இசுரேல், இந்தியா, ஈரான். இவ்வளவு பேர் உதவியையும் பலத்தையும் எதிர்த்து நின்றார் பிரபாகரன். இப்படிப்பட்ட வலிமையுள்ள படை எங்கும் இல்லை என்ற நிலையில் இருந்தார் பிரபாகரன். போர்க்களத்திலே ஒருபோதும் பிரபாக ரனை அவர்கள் வென்றிருக்க முடியாது. சாட்டலைட் மூலம் எங்கெங்கே அவர்கள் நகர்ந்தார்கள் என்பதெல்லாம் கண்காணிக்கப்பட்டது. இந்தப் போர் நாலாம் கட்டப் போர் என்று சொல்லப் பட்ட யுத்தம் இந்திய அரசு நடத்திய யுத்தம். இந்திய அரசு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்தது. திட்டங்களை வகுத்துக் கொடுத்தது. இராசராசன் வழிவந்தவர்கள் கரிகாலன் வழி வந்தவர்கள் அல்லவா - எனவே புலிகள் கடற்புலிகள் என்ற அமைப்பை, வான்புலிகள் என்ற அமைப்பை, அமைத்தனர். யார் அமைக்க முடியும் இப்படி. அரசு நடத்துவதற்குத் தேவை யான வேளாண்மைப் பிரிவு, கலால் அமைப்பு, கல்வி அமைப்பு, நீதித்துறை, காவல் துறை நடேசன் தலைமையில். இத்தனைப் பிரிவுகளையும் மிகச் சிறப்பாக அமைத்து ஒரு அரசையே நடத்தி நிர்ணயித்துவிட்டாரே. போர்க் களத்தில் சிங்களவர்கள் ஒருபோதும் எதிர்கொண்டிருக்க முடியாது. இந்திய அரசு வஞ்சகமாகத் திட்டம் வகுத்து ஆள்பலத்தையும் ஆயுதப் பலத்தையும் அள்ளி வழங்கி, நவீன கருவிகளை எல்லாம் வாரி வழங்கி, முப்படைத் தளபதிகளை வைத்து போரை இயக்கி ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக் கானவர்களை கொன்றுகுவிக்க குண்டு களை வாரிவழங்கினார்கள். இதன்மூல மாகத்தான் அவர்களுக்குக் களத்திலே பின்னடைவு ஏற்பட்டது. இந்த செய்தி கள் எல்லாம் இன்னும் ஏராளமான செய்திகள் இந்த நூலிலே சொல்லப் பட்டிருக்கிறது.
அதனால் தான் நான் சொன் னேன். ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு காவியம் ஆக்குங்கள். கவிஞர்களே இது கற்பனை அல்ல. உணர்ச்சியை ஊட்டுவதற்காக அல்ல. உண்மை. இதை அவர் ஒரு வீரகாவியமாக, வரலாற்றுக் காவியமாக, ஆவணமாக ஆக்கி யிருக்கிறார். யாரும் செய்ய முடியாத தைச் செய்திருக்கிறீர்கள். இதற்கு அழிவே கிடையாது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இது நிலைத்து நிற்கும். இது போல நூல்கள் நிறைய வரும். இதை அடிப்படையாக வைத்து வரும். வான்மீகியின் காவியத்தை வைத்து ஒவ்வொருவரும் தங்கள் கற்பனையை வைத்து இராமாயணத்தை எழுதினார்கள். ஆனால் இந்த நூல் உண்மைச் சம்பவங்களைச் சொல்கிறது. இதை வைத்து காவியங்களை உருவாக் கலாம். எதற்காக? நாலாம் கட்டப் போரை முழுமையாகப் பதிவு செய்ய வேண்டும் என்று நான் சொன்னேன். நான்காம் கட்டப் போரைப் பற்றியும் நீங்கள் எழுதுவீர்கள். அந்த நூல் எழுதப்பட்டு வெளியாகும்போது தமிழீழம் மலர்ந் திருக்கும். யாழ்ப்பாணத்திலே அந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற வேண்டும். அதைக் கூட நீங்கள் அங்கே போய் வெளியிட வேண்டும். அந்த நாள் வரும். காலம் வேகமாக மாறி வ்ருகிறது. கணிப்பொறி யுகத்திலே எணணற்ற வீர இளைஞர்கள், வீர நங்கைகள் பங்கு பெறத் துடிக்கிறார்கள். ஈழவிடுதலை யிலே நாட்டம் கொண்டவர்கள் இந்தப் புவியெங்கும் அவர்கள் இருக்கிறார்கள். இந்தத் தகவல் தொடர்பு எப்படிப்பட்ட சாதகத்தை நமக்கு ஏற்படுத்திக் கொடுத் திருக்கிறது. அப்படியானால் அடுத்தது என்ன? இங்கே குறிப்பிட்டார்களே - கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி சிங்கள மயமாக்கப்பட்டுவிட்டது. இதனால் 20000 தமிழ்ப் பெண்கள் தற்கொலை செய்துகொண்டிருக் கிறார்கள். குடியேற்றம் முற்றாகத் தடுக்கப்படவேண்டும். அதுமட்டுமல்ல. குடியேற்றம் செய்யப்பட்ட அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும். 18 கல் தொலைவிலே ஏழரை கோடி பேர் இருக்கிறபோது வருங்காலத் தமிழர்கள் இளைஞர்கள், வாலிபர்கள் வீரமுள்ளவர் களாக மானமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இந்த மாற்றம் வர வேண்டும். இந்திய உதவி முற்றாக அகற்றப்பட வேண்டும். மேலைநாடுகளிலே சூடா னில் நடந்ததைப் போல், கொசாவாவில் நடந்ததைப் போல், தைமூரில் நடந்த தைப் போல் பொது வாக்கெடுப்பு நடத் தப்பட்டதுபோல் இந்தப் புவியெங்கும் வாழக் கூடிய தமிழர்கள் - ஏதிலிகளாகச் சென்றவர்கள் -அவர்கள் எல்லாம் அந்தந்த நாட்டிலே பொது வாக்கெடுப் பிலே பங்கெடுக்கும் வண்ணம் அறிவிக் கப்படவேண்டும். உலகநாட்டு மன்றம் இதைச் செய்ய முன்வரவேண்டும். நடக்கும் . 2009இல் சிங்களவருக்கு ஆதரவாக தீர்மானம் போட்ட ஐநா பொதுச் சபையில்- அதற்கு மாறாக முழுமையாக திருப்திகரமாக இல்லை யென்றால் சிங்களவனை எதிர்த்து வாக்களிக்கும் நிலைக்கு நிலைமை மாறியிருக்கிறதல்லவா? உலக நாடுகள் மனச்சாட்சி விழித்துக் கொள்ள ஆரம்பித்து உள்ளதல்லவா? தமிழர்கள் வாழ்வில் ஒளி தெரிய ஆரம்பித்து இருக்கிறதல்லவா? அப்படியென்றால் தீர்வு எது? தீர்வு சுதந்திரத் தமிழீழம் தான். அது எந்த முறையில்? பொது வாக்கெடுப்பு என்று உலகம் பூராவும் பரவியிருக்கிறதே அந்த முறையிலா? அல்லது புலிகள் இரத்தம் சிந்திய பூமியில் மீண்டும் ஆயுதம் ஏந்தியா? வரலாறுதான் தீர்மானிக்க வேண்டும். உலகம்தான் தீர்மானிக்க வேண்டும். காரணம் ஆயுதப் புரட்சி ஆதரிக்கப் படவில்லை. சீனப்புரட்சியாக இருக் கட்டும். ரஷ்யப் புரட்சியாக இருக்கட்டும். வியட்னாம் புரட்சியாக இருக்கட்டும். ஆயுதம் ஏந்தித் தானே வென்றார்கள்?
மண்ணின் பெருமை காக்க ஆயுதம் ஏந்தினார் பிரபாகரன் . அவன் மீண்டும் அந்த மண்ணில் ஆயுதம் ஏந்த வேண்டுமா இல்லையா என்பதை இந்த உலகம் தான் தீர்மானிக்க வேண்டும். இந்த நூல் பிரபாகரன் அவர்களுக்கு உலாவாக இருக்கும். அன்றைக்கு இராச ராசன் வெற்றியை பாடிய உலா போல் உள்ளது. உலகில் இதுவரை எவனும் சாதிக்க முடியாததைச் சாதித்தவன் எங்கள் பிரபாகரன்.அவருக்கு நிகராக தென்கிழக்காசியாவில் இராணுவ ரீதியான தலைவன் இல்லை என்று அன்றே சொன்னார்கள். ஒழுக்கம் - தனிமனித ஒழுக்கம் இருந்தது அவரிடம். அந்தக் குடும்பமே வீரம் செறிந்த குடும்பம்.
நீ மரணத்தை வேண்டுமானாலும் தழுவிக்கொள். ஆனால் இலட்சியத் தையே உயிராகக் கொள் என்று உபதேசித்த குடும்பம். ஆகவே தான் நான்காம் கட்டப் போரை நீங்கள் ஆய்வு செய்தாக வேண்டும். அதன் வெளியீட்டு விழா சுதந்திரத் தமிழீழம் மலருகிற போது நடக்க வேண்டும். மலரும். இயக்கும் சக்தி பிரபாகரன் தானே. பிரபாகரன் வாழ்கிறார். பிரபாகரன் வாழ்கிறார். அவர் இயக்குவார். மாவீரர்களை புலிகளை நெருப்பு மனிதர்கள் என்று சொன்னாரே பிரபாகரன் அவர்கள். நெஞ்சிலே நஞ்சுக் குப்பியைக் கட்டிக் கொண்டு தன்னை அழித்துக் கொள்ளத் துடித்தவர்கள். அவர்களைப் போன்று வீரகாவியம் எவரும் படைத்ததில்லை. இதை அற்புதமாகக் காவியமாக்கித் தந்திருக்கிறீர்கள். இது தமிழர்களின் வீரகாவியம். இது பிரபாகரன் நூல். பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் என்னும் இந்த நூல் ஒரு வீர காவியம். இது தமிழர்களின் வரலாற்றுக் காவியம்.
அடுத்த கட்டத்திற்குத் தயாரிப் பதற்கு இது ஒரு நல்ல படைக்கருவியாக இருக்கும். நீங்கள் அடுத்த கட்டத்திற்கு ஒரு ஆயுதச் சாலையைத் தந்திருக் கிறீர்கள் என்று. சொன்னார்கள் அதுதான் பிரபாகரன்-தமிழர் எழுச்சியின் வடிவம். நூறாண்டுகளுக்கு மேல் நீங்கள் வாழவேண்டும். நல்ல உடல்நலத்தோடு வாழவேண்டும். இன்னும் பல நூல்களை இந்த உலகத்திற்குத் தரவேண்டும். இதற்காக ஆரோக்கியத்தோடு நீங்கள் வாழ வேண்டும். மாவீரர் நாளில் பங் கேற்றவன் என்ற முறையில் சொல் கிறேன். அந்தப் பெருமையை நிச்சயமாக மலரப் போகிற தமிழீழத்தில் இந்த நூல் எல்லோரிடத்திலும் இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தம்பிகளே, இளைஞர்களே உங்கள் ஒவ்வொருவரிடமும் இந்த நூல் இருக்க வேண்டும். வீட்டிலே வைத்துப் படியுங்கள். இது ஒரு வரலாற்றுக் காவியம். தமிழர்களின் தனிச்சிறப்பை எடுத்துக் கூறிவிட்டீர்கள். தமிழர் உலகம் உங்களுக்கு நன்றிக் கடன் பட்டிருக் கிறது. நீங்கள் பல்லாண்டு வாழ்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக