கூடங்குளம் அணு உலைகளால் தங்கள் வாழ்விற்கும், வாழ்வாதரங்களுக்கும்,
எதிர்காலத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும், அந்த அணு உலைகளில்
விபத்து ஏற்பட்டால் தங்களைக் காத்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றி பயிற்சி
அளிக்க வேண்டும் என்றும் கோரியே ஓராண்டிற்கு மேலாக அப்பகுதி மக்கள் எந்த
வன்முறையிலும் ஈடுபடாமல் அமைதி வழியில் போராடி வந்தனர்.
ஆனால் அவர்களின் நியாயமான அச்சத்தை போக்கிடும் எந்த நடவடிக்கையையும்
எடுக்காமல் காலம் கடத்தியோடு மட்டுமின்றி, அணு உலைகளை இயக்குவதற்கான
முயற்சிகளில் இந்திய அணு சக்திக் கழகம் ஈடுபட்டது. அதனை எதிர்த்தே
அம்மக்கள் அணு மின் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போதும் கூட, அவர்கள் அணு மின் நிலையத்தில் இருந்து அரை கிலோ மீட்டர்
தூரத்தில் அமர்ந்துதான் போராட்டத்தை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பத்து நிமிடத்தில் கலைந்து
செல்ல வேண்டும் என்று அறிவித்துவிட்டு, அடுத்த நிமிடமே அவர்களைக் கலைக்க
காவல்துறையினர் முரட்டு வழிகளில் ஈடுபட்டதே கலவரம் ஏற்பட காரணமானது.
போராடிய மக்கள் அணு மின் நிலையத்தை நோக்கிச் சென்றார்கள் என்று காவல்
துறையினர் கூறுவது உண்மைக்குப் புறம்பானதாகும். சாத்வீக வழியில் போராடிய
அம்மக்களை ஆயுத பலத்தைக் கொண்டு விரட்ட முற்பட்டதன் எதிர்வினையே கலவரம்
வெடிக்கக் காரணமாகும்.
கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக போராடும் மக்களுக்கு துணையாக நிற்பேன்
என்று தமிழக முதலமைச்சர், சங்கரன்கோயில் இடைத்தேர்தல் பரப்புரையின்
கூறினார். ஆனால் தேர்தல் முடிந்தவுடனேயே, கூடங்குளம் அணு உலைகள் இயங்கும்
என்று அறிவித்தார். போராடும் அந்த மக்கள் முன்வைத்த நியாயமான கோரிக்கைகளை
நிறைவேற்ற தமிழக முதல்வர் மேற்கொண்ட முயற்சி என்ன? என்று கேட்கிறோம்.
அவர்களுடைய கோரிக்கைக்கு பதில் கூறாமல், அந்தப் போராட்டம் சாத்வீக வழியில்
மறியல் போராட்டமாக உருவெடுத்தபோது, அதனை கலைப்பதற்காக அந்த மக்கள் மீது
தடியடி நடத்துவதும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசுவதும்தான் ஜனநாயகமா
என்று கேட்கிறோம்.
காவல் துறையினர் நேற்று நடத்திய அடக்குமுறையின்போது, காயம்பட்ட மக்கள்
தஞ்சமடைந்திருந்த சுனாமி வீடுகள் எல்லாம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை முன்னெடுத்த சுந்தரி உள்ளிட்ட சகோதரிகளை கைது செய்துள்ள காவல்
துறையினர் அவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்ற விவரத்தைக் கூட
வெளியிடவில்லை. அப்பகுதி மக்கள் பயன்படுத்திய வாகனங்கள் பலவற்றை காவல்
துறையினர் கவர்ந்து சென்றுள்ளனர்.
பல வாகனங்களுக்கு தீ வைத்துள்ளனர். இவையெல்லாம் அடிப்படை மனித
உரிமைகளுக்கு எதிரானது அல்லவா? தூத்துக்குடியில் காவல் நிலையத்தை நோக்கி
வந்தவர்களை தடுத்து நிறுத்த காவல் துறையினரால் முடியாதா? எதற்காக
துப்பாக்கிச் சூடு நடத்தி ஒரு மீனவரைக் கொல்ல வேண்டும்?
கூடங்குளத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் இதர பகுதிகளிலும் அணு உலைகளுக்கு
எதிரான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அணு உலைகளை
எதிர்க்கும் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு மத்திய அரசோ அல்லது அணு சக்தி
ஆணையமோ உரிய பதில்களை தர மறுக்கின்றன.
இந்த நாட்டு மக்களின் நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல், அவர்களின்
கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காமல் அடக்குமுறையைக் கையாண்டு போராட்டங்களை
ஒடுக்கிவிடலாம் என்று அரசுகள் நினைப்பது பேராபத்தாக முடியும் என்பதை நாம்
தமிழர் கட்சி விசனத்துடன் தெரிவித்துக்கொள்கிறது.
தமிழக அரசின் தவறான அணுகுமுறையால் ஒரு உயிர் போய்விட்டது. இந்த அளவிலாவது
காவல் துறை நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டு, போராடிய மக்கள் எழுப்பிய
கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு இந்திய அணு சக்தி ஆணையத்திற்கு தமிழக அரசு
நெருக்குதல் தர வேண்டும். அதைச் செய்யாமல் போராட்டத்தை ஒடுக்கும்
முயற்சியைத் தொடர்ந்தால், அது விபரீதமான விளைவுகளையே உருவாக்கும்.
நாம் தமிழர் கட்சிக்காக,
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக