மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

சனி, 5 பிப்ரவரி, 2011

கண்ணீர் தேசம்

கண்ணீர் தேசம் - 14
பேய் ஆட்சியும் பிணம் தின்னும் அதிகாரமும் இருக்கும் நாட்டில் என்ன நடக்குமோ அதுவே நடக்கிறது இலங்கையில். மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல், குறுகிய லாபங்களுக்காக ஆட்சியாளர்கள் என்ன செய்வார்களோ அதையே செய்கிறது இந்திய அரசு.

போரின் பெயரில் மக்களைக் கொலை செய்ய 21,232 கோடி ரூபாய் ஆயுதம் வாங்கவும், வெறும் 4,000 கோடி ரூபாயை மக்கள் நலனுக்காகவும் ஒதுக்கியும் தன் குடிமக்களை பேயாட்சி செய்கிறது இலங்கை அரசு. அநீதியான போருக்கு ஆயுதமும் கொடுத்து, பொழுதுபோக்குக்கு கிரிக்கெட் அணியையும் அனுப்பி, ‘எங்களுக்கும் தமிழர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்கிறது இந்திய அரசு. இந்த ஆண்டு தொடங்கிய முதல் மாதத்தில் மட்டும் 439 தமிழர்கள் போரில் கொல்லப்பட்டதாக அரசே அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு சராசரியாக 14 தமிழர்கள் கொலை செய்யப்படுகிறார்கள். ஒரு மாதத்தில் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் தமிழர்கள் எண்ணிக்கை 1772. சராசரியாக ஒரு நாளில் 57 தமிழர்கள் ஊனமுற்றோர்களாக மாறும் அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

இலங்கை அரசின் இரக்கமற்ற கொலைகளை வெளியுலகிற்குச் சொல்லும் பத்திரிகையாளர்களின் படுகொலைகள் மேற்சுட்டிய புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை. இதில் சில மனசாட்சியுள்ள சிங்கள பத்திரிகையாளர்களும் அடக்கம். கடந்த மூன்று மாதங்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பலர், உயிருக்குப் பயந்து இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார்கள். இலங்கை அரசுடன் உடன்படிக்கையின் பேரில் பல ஆண்டுகளாக செய்திச்சேவை நடத்தி வந்த பி.பி.சி. நிறுவனம், ‘இலங்கை அரசு பத்திரிகைச் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது’ என்று சொல்லி, தனது செய்திச்சேவையை நிறுத்தி உடன்படிக்கையை முறித்துக்கொண்டது. மக்களுக்கே சுதந்திரம் இல்லாத ஒரு நாட்டில், பத்திரிகை சுதந்திரத்தை எதிர்பார்ப்பதை பேராசையாகவே கருதுகிறார்கள் இலங்கை ஆட்சியாளர்கள்.   

ஒரு பக்கம் மக்களை கொலை செய்யும் அதே உக்கிரத்தோடு, அந்த செய்திகள் வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது ராஜபக்ஷேவின் அரசு. போரின் அராஜகங்களை தொடர்ந்து எழுதிய இலங்கையின் மனசாட்சி உள்ள ‘சண்டே லீடர்’ ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியர் லசந்தா படுகொலை செய்யப்பட்டார். எந்த நேரமும் தான் கொலை செய்யப்படுவோம் என்பதை உணர்ந்து ராஜபக்ஷேவையும், அவரின் கொலைகார ஆட்சியையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் கடிதத்தை மரண வாக்குமூலமாக அவர் எழுதியிருந்தார்.

‘யூதனுக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.
    ஏனெனில் நான் யூதன் இல்லையே.
கம்யூனிஸ்ட்டுக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.
   ஏனெனில் நான் கம்யூனிஸ்ட் இல்லையே.
தொழிலாளிக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.
   ஏனெனில் நான் தொழிலாளி இல்லையே.
எனக்கு ஆபத்து வந்தது. யாருமே பேசவில்லை.
  ஏனெனில் நான் யாருக்காகவும் பேசவில்லையே!’

இலங்கையின் மனசாட்சியுள்ள ஒரு பத்திரிகையாளர், தான் கொல்லப்படுவோம் என்று தெரிந்து எழுதிய கடிதம், நாஜிக்கள் இனப்படுகொலைகளை நிகழ்த்தியபோது எழுதப்பட்ட மேற்கண்ட ஜெர்மானியக் கவிதையோடு முடிகிறது. இந்தியாவின் சகிக்கமுடியாத மௌனத்தைக் கண்டித்து எழுதப்பட்ட கவிதையாகவே இருக்கிறது அது.  தமிழர்களை அழித்தொழிக்கும் அராஜகத்தை எதிர்த்த அந்த தீர்க்கதரிசன பத்திரிகையாளர், ஒரு நாள் அவர் எதிர்பார்த்தபடியே ‘இனம் தெரியாதவர்களால்’ சுட்டுக் கொல்லப்பட்டார். இத்தனைக்கும் அவர் தமிழர் கிடையாது. நியாயம் பேசிய, அநீதியைத் தட்டிக்கேட்ட சிங்களர். ‘மகிந்த’ என்று இலங்கை அதிபரை உரிமையோடு பெயர் சொல்லி அழைக்கும் நண்பர். அதிகாரத்திற்கு குறுக்கே யார் நின்றாலும் என்ன செய்ய வேண்டுமோ அதையே செய்தது இலங்கை அரசு.

எதற்காக இந்த தமிழ் இன அழிப்பு திட்டமிட்டு நடத்தப்படுகிறது? கொலைகார அரசு என்று குற்றம் சுமத்தும் சிங்களவர்களும் கொலை செய்யப்படுவதன் நோக்கம் என்ன? எதற்காக இந்த போர் விளையாட்டு? அப்பாவிகள் எதற்காக குறிவைக்கப்படுகிறார்கள்? யார் யாருக்கோ கண்ணீர் வரவழைக்கிற தமிழர்களின் கதறல், கொலை செய்கிற அரசுக்கு ஏன் இரக்கத்தை வரவழைக்கவில்லை? எறும்புகளுக்கும் உயிர்ச்சேதம் வரக்கூடாது என்று நடக்கும் பாதையை சுத்தம் செய்து பயணிக்கும் புத்த துறவிகள், ஏன் தன் கால்களுக்கிடையில் தமிழர்களின் பிணங்களைக் காண ஆசைப்படுகிறார்கள்? போர் நடத்தி நாட்டை சூறையாடுகிறவர்கள் ஏன் சிங்கள மக்களால் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?

எல்லா கேள்விகளுக்கும் பின்னாலும் ஆள்பவர்களின் சுயநலங்களும், சிங்கள மக்களின் பயங்களுமே பதிலாகக் கிடைக்கின்றன. ஆள்பவர்களின் சுயநலம் நமக்கே புதிய விஷயம் இல்லை. ‘இலங்கை அரசு அத்துமீறுகிறது’ என்று ஆதாரங்களுடன் உலகமே குறிப்பிடும்போது, ‘பொதுமக்களை அரசு பாதுகாக்கிறது’ என்று சான்றிதழ் வழங்குகிறார் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர். பிரணாப் முகர்ஜி பேசாத வரை இந்தியாவின் மௌனம் சகிக்க முடியாததாக இருந்தது. நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பிறகு, இந்தியாவின் மௌனத்தையே சகித்துக்கொள்ளலாம் என்று ஒரு கணம் தோன்றியது.

சிங்கள மக்களுக்கு ஏன் தமிழர்கள் மீது தீராத கொலைவெறி? இந்தக் கேள்விக்குப் பின்னால் ஒளிந்திருக்கிறது அவர்கள் பயம். ஆறுகோடிக்கும் அதிகமான தொப்புள்கொடி உறவுகளான தமிழர்களும், நூறுகோடிக்கும் அதிகமான இந்தியர்களும் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருப்பதாக நம்புவதே அடிப்படைக் காரணம். நூற்றுக்கணக்கில் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்படும்போதே இந்திய கிரிக்கெட் அணியை விளையாட அனுப்பிய பிறகும், அப்படியே நம்புகிறார்கள் சிங்கள மக்கள். 

தமிழகத் தலைவர்கள் மக்களின் உணர்வைச் சொல்ல மத்திய அரசின் கதவுகளைத் தட்டி திரும்புவதற்குள் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ‘இலங்கை அரசு மக்களைக் கொல்லவில்லை. விடுதலைப்புலிகள்தான் கொல்கிறார்கள்’ என்று திருவாய் மலர்ந்தபோது, இந்திய நாடாளுமன்றமா, இலங்கை நாடாளுமன்றமா என்று கிள்ளிப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. குவியல் குவியலாக தமிழர்களின் பிணங்களைப் பார்த்த பிறகும், ‘போர் தவிர்க்க முடியாதது’ என்று சொல்ல இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் ஐ.பி.எஸ். படித்திருக்கிறார். இந்தியாவின் வெளியுறவுச் செயலர் ஐ.எப்.எஸ். படித்திருக்கிறார். ‘இலங்கை அரசு தமிழர்களை ராணுவத் தாக்குதல் மூலம் கொலை செய்கிறது’ என்று இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகாவே சொன்னபிறகும் அதை நம் பிரணாப் முகர்ஜி, எம்.கே.நாராயணன், சிவசங்கர் மேனன் போன்றோரால் நம்பமுடியவில்லை.

‘’கொலை செய்வதையே இலக்காகக் கொண்ட ஆட்சியாளர்கள் கொடூரத்தனமாக முன்னெடுக்கும் உள்நாட்டு யுத்தத்தின் மத்தியில் நாம் சிக்குண்டிருக்கிறோம். பயங்கரவாத செயல்கள் தினம் இடம்பெறும் சம்பவமாகிவிட்டன. அது நாட்டினது அரசாலோ அல்லது பயங்கரவாதிகளாலோ முன்னெடுக்கப்படுவதாக இருக்கலாம். இன்று பத்திரிகையாளர்கள் கொல்லப்படுகிறார்கள். நாளை நீதியாளர்கள்கூடக் கொல்லப்படலாம்... பயங்கரவாதத்திற்கு எதிரான போர் எனக்கூறிக்கொண்டு அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டதற்கு எதிராக நாம் கிளர்ந்தெழுந்தோம். தங்களது சொந்த மக்கள் மீதே குண்டுகளை வீசி அழிக்கும் ஒரேயொரு நாடு இலங்கைதான் என்பதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை என்பதை நாம் வலியுறுத்தினோம். புலிகளை அழிப்பதெனக் கூறிக்கொண்டு தமிழ் மக்களின் உரிமைகளை முற்றாக மீறும் வகையில் அவர்களைச் சுட்டுக் கொலை செய்வதும், குண்டுகளை வீசி அழிப்பதும், உலகிற்கு தர்மத்தினை போதித்த மதத்தின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் சிங்கள சமூகத்திற்கு இழிபெயரைப் பெற்றுக்கொடுப்பதற்கே வழி செய்யும்...’’ என்று நீளும் சிங்கள பத்திரிகை ஆசிரியர் லசந்தாவின் மரண வாக்குமூலம்கூட சென்றடைய முடியாத அளவு இந்திய ஆட்சியாளர்களை எது கட்டுப்படுத்துகிறது என்பதுதான் புரியவில்லை.

மக்களின் மனநிலையை அவர்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை; இனிமேலும் புரிந்துகொள்ளும் வாய்ப்பில்லை. ஆனால் மக்கள் இவர்களைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.        
                                                                    unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக