மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 15 நவம்பர், 2013

ராஜபக்சே அரசிற்கும் ஜெயலலிதா அரசிற்கும் எந்த வேறுபாடும் இல்லை - வைகோ

News Service
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்பினை இடித்ததன் மூலம் ராஜபக்சே அரசின் செயலுக்கும், ஜெயலலிதா அரசின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அண்மைக் காலத்தில் உலகில் எங்கும் நடைபெறாத இனப்படுகொலை இலங்கைத் தீவில் சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசால், தமிழர்கள் மீது நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். பச்சிளம் குழந்தைகள், பாலகர்கள், வயது முதிர்ந்தோர், ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள், தாய்மார்கள் கொலை செய்யப்பட்டனர். எண்ணற்ற தமிழ் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் வதைக்கப்பட்டு அழிக்கப்பட்டனர்.
   தமிழ் ஈழத் தாயகத்தின் சுதந்திரத்தை மீட்பதற்காக உலகம் இதுவரை கண்டும் கேட்டுமிராத வீரம் செறிந்த சமர்களை, தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரனின் விடுதலைப்புலிகள் நிகழ்த்தினர். சிங்களப் படைகளைச் சிதறடித்து வெற்றி கண்டனர். ஆனால், சோனியா காந்தி இயக்குகிற இந்தியாவின் காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, ஈழத்தமிழர்களின் உயிர்க்கவசமான, புலிப்படையை அழிக்கும் குறிக்கோளோடு, சிங்கள அரசுக்கு, முப்படைகளுக்குத் தேவையான ஆயுதங்களைத் தந்து, இந்தியாவின் தளபதிகளை அனுப்பி, யுத்தத்தை பல வழிகளிலும் உதவி இயக்கியது.
இந்தியா செய்த பண உதவியால், மேலும் ஆறு அணு ஆயுத வல்லரசுகளிடம் இருந்து, ராஜபக்சே அரசு, ஆயுதங்களையும், உலகம் தடை செய்த குண்டுகளையும் பெற்று, தமிழர்களை அழிக்கப் பயன்படுத்தியது. இதனால், விடுதலைப் புலிகளுக்குப் போரில் பின்னடைவு ஏற்பட்டது. உலகின் கொடுந் துயரமாக, முள்ளிவாய்க்கால் கடைசி யுத்தத்தில், 1,47,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த யுத்தத்தில், தாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்தியாதான் காரணம் என்று; இந்தியாவுக்காகத்தான் போரை நடத்தினோம் என்றும் மகிந்த ராஜபக்சே திமிரோடு சொன்னான்.
விடுதலைப்புலிகள் கட்டி எழுப்பிய மாவீரர் துயிலகங்கள், போரில் மடிந்த புலிகளின் கல்லறைகள் அனைத்தையும் ராஜபக்சே இடித்துத் தரை மட்டமாக்கினான். நெஞ்சை நடுங்கச் செய்யும் இந்தப் பேரழிவை, உலகத்துக்கு உணர்த்தவும், தாய்த் தமிழகத்தில் தங்கள் உயிர்களை நெருப்புக்குத் தந்த தியாகிகளை நினைவூட்டவும், தஞ்சைக்கு அருகில் விளார் சாலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் முன்னின்று மூன்று ஆண்டு காலம் எண்ணற்ற சிற்பிகள், சித்திரக் கலைஞர்கள், கட்டடக் கலைஞர்கள் அர்ப்பணிப்பு உழைப்பால், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டது. இந்த முற்றத்தை இடித்துத் தகர்க்க வேண்டும் என்று, அ.தி.மு.க. அரசு திட்டமிட்டது. இதனைத் திறக்கக் கூடாது என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. அரசு தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த இடத்தில் பூங்கா அமைப்பதற்கு, நெடுஞ்சாலைத் துறையிடம், 2011 ஆகஸ்ட் மாதம் முற்றத்தின் சார்பில் விண்ணப்பம் தரப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது. முற்றத்தின் வாயிலுக்கு உள்ளே, இரண்டு அழகான கருங்கல் நீரூற்றுகள், பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டன. 2012 ஆம் ஆண்டு, அனுமதியைத் தொடர்ந்து நீட்டிக்கக் கோரியபோது, ஏற்கனவே வழங்கப்பட்ட அனுமதி வழக்கமாக வந்து விடும் என்று அரசுத் தரப்பில் பதில் சொல்லப்பட்டது.
ஆனால், 2013 முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நிகழ்ச்சிகள், நவம்பர் 10 ஆம் நாள் முடிவுற்றபிறகு, மூன்றாம் நாளில், 13 ஆம் தேதி அதிகாலை 4.30மணிக்கு, மூன்று பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு, அந்தப் பூங்காவுக்குள் ஆடு மாடுகள் வர விடாமல் கட்டப்பட்ட சுற்றுச்சுவரை இடித்தனர். கருங்கள் நீரூற்றுகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற அறிவிப்புக் கற்பலகையையும் உடைத்து நொறுக்கினர். பூங்காவில் இருந்த செடிகளையும், முள்ளிவாய்க்கால் முற்றம் முழுமைக்கும், இரவில் பிரகாசமான வெளிச்சத்தைத் தந்த விளக்குக் கம்பத்தையும் பிடுங்கி எறிந்தனர்.
அப்போது முற்றத்தின் குடிலில் படுத்து இருந்த பழ.நெடுமாறன், 'எதற்காக இடிக்கின்றீர்கள்?' என்று காவல்துறையைக் கேட்டபோது, 'வருவாய்த் துறை அதிகாரிகள்தான் இடிக்கிறார்கள், நாங்கள் பாதுகாப்பு கொடுக்கிறோம்' என்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளைக் கேட்டபோது, அவர்கள் எதுவும் சொல்ல மறுத்தனர். தடுக்க முயன்ற தமிழ் உணர்வாளர்களையும், பழ.நெடுமாறன் அவர்களையும், கைது செய்தனர். அங்கே திரண்டு வந்த பொதுமக்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
2011 ஆகஸ்ட் மாதம் பூங்காவுக்குக் கொடுத்த அனுமதியை, அதே ஆண்டு டிசம்பர் மாதம் ரத்துச் செய்துவிட்டதாக, மோசடியாக இப்பொழுது ஒரு கோப்பை அரசு தயாரித்து உள்ளது. அப்படிச் செய்து இருந்தால், அதை பழ. நெடுமாறனுக்குத் தெரிவித்து இருக்க வேண்டும். முற்றத்தின் முகப்பை இடிப்பதற்கு முன்னால், தாக்கீது கொடுத்து இருக்க வேண்டும்.
ஆனால் சட்ட விரோதமாக, நீதிக்குப் புறம்பாக, முற்றத்தை இடித்து, உலகத் தமிழர்களின் நெஞ்சில் ஜெயலலிதா அரசு நெருப்பைக் கொட்டி உள்ளது. இந்த அராஜகத்தைக் கேள்விப்பட்டவுடன், நான் தோழர்களோடு மதுரையில் இருந்து விரைந்தேன். போலீஸ் தடைகளை உடைத்துக்கொண்டு, முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குள் சென்று, 'இது தமிழர்களின் சொத்து; இதை உடைக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை என்று கூறி, பகல் 12 மணி முதல், இரவு 9 மணி வரை அங்கேயே இருந்தேன். பழ.நெடுமாறனையும், உணர்வாளர்களையும், நீதிமன்றக் காவலுக்கு அனுப்புகிறார்கள் என்று அறிந்தபிறகு, அங்கிருந்து புறப்பட்டேன்.
ராஜபக்சே அரசின் செயலுக்கும், ஜெயலலிதா அரசின் செயலுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தமிழக மக்களையும், உலகத் தமிழர்களையும் ஏமாற்றுவதற்காக, முதல் நாள் மாலையில் சட்டசபையில் காமன்வெல்த் மாநாடு குறித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, மறுநாள் அதிகாலையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடிக்கும் அக்கிரமத்தை, அ.தி.மு.க. அரசு செய்து உள்ளது. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. முயலோடும் ஓடிக்கொண்டு, வேட்டை நாயோடும் சேர்ந்து துரத்துவது. Running with hare; hunting with the hound.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் இந்த மோசடிப் பித்தலாட்டத்தை, தமிழ் மக்கள் நன்றாக உணர்ந்து கொண்டார்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தை எப்படியாவது அகற்ற வேண்டும் என்ற, வஞ்சகமான கொடிய நோக்கம், அ.தி.மு.க. அரசுக்கு இருக்கிறது.
எனவே, முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் காக்கின்ற உறுதியோடு, அ.தி.மு.க. அரசின் அராஜகத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், நவம்பர் 16ஆம் தேதி காலை 11 மணி அளவில், அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டுகிறேன். ம.தி.மு.க.வினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருந்திரளாகப் பங்கு ஏற்க அழைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக