மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வியாழன், 13 ஜனவரி, 2011

வந்தவர்களை எல்லாம் வாழவைத்த தமிழினம் சொந்த இனத்தை வாடகைக்கு வைத்துவிட்டதே:

வந்தவர்களை எல்லாம் வாழவைத்த தமிழினம் சொந்த இனத்தை வாடகைக்கு வைத்துவிட்டதே: "திருப்பி அடிப்பேன்" அதிரடி அனல் கனல் (தொடர்... 09)
இனவெறியன் - என் போன்றவர்கள் மீது சுமத்தப்படும் பட்டம் இது. பற்றுக்கும் வெறிக்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிவார்ந்த பெருமக்கள் கொஞ்சம் விளக்கிச் சொல்லுங்களேன்.பெற்ற தாயைப் பத்து தடவை அம்மா என அழைத்தால்... அதுபற்று. நூறு தடவை அழைத்தால் அதுவெறி என்பார்களோ? அன்புக்கும் பற்றுக்கும் அளவுகோல் வைக்கமுடியுமா? தமிழர் நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர் விளையாட்டு, தமிழர் தொன்மம், தமிழர் பெருமை எனத் தனித்த பெருமிதங்களைத் தமிழர்கள் தன்னகத்தே கொண்டுவிடக்கூடாது என்பதற்காகவே, 'திராவிட... திராவிட' எனத் திசையெங்கும் பரப்புகிறார்களே...

என் பாட்டன் ராஜராஜசோழன் கட்டிய பெருவுடையார் கோயிலை தமிழர் கட்டடக் கலை எனச் சொல்லாமல், திராவிடக் கட்டடக் கலை என்று விளிக்கிறார்களே... தமிழனின் தனித்தன்மையைக் குலைத்துவிடத் துடிக்கும் இவர்கள் வெறியர்களா... இல்லை, அதைத் தட்டிக் கேட்பவர்கள் வெறியர்களா?
"நான் தமிழன்" என்பது இனவெறி என்றால் 'நான் திராவிடன்', 'நான் இந்தியன்' என்பதெல்லாம் என்ன வெறிகள்? எங்கள் தமிழனுக்கு இருக்கும் உலகளாவிய அறிவும் அன்பும் இந்தப் பூமியில் வேறு எவருக்கு இருக்கிறது? "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என எங்கள் முப்பாட்டன் கணியன் பூங்குன்றனாரை முந்திக் கொண்டு சமத்துவம் பேசியவர்கள் எவராவது இருக்கிறார்களா? வள்ளுவன், இளங்கோவடிகள், கம்பன்த கணியன் பூங்குன்றன் எனப் பாடிய தமிழ்ப் பெருமகன்கள் எல்லாம் உலகம் உலகம் என்றே உரத்துப் பாடினார்கள்.
'யாதும் ஊரே' என்றதாலேயே தமிழனுக்கு என ஓர் ஊர் இல்லாமல் போய்விட்டது. 'யாவரும் கேளிர்' என்றதாலேயே கைகொடுக்கக்கூடக் கதியற்றுப் போய்விட்டது. கியூபாவில் கரும்பு வெட்டும் தொழிலாளிகளுக்குக் கூலி கிடைக்காததை நினைத்துக் கதறியவன் தமிழன். ஆனால், தமிழனின் கழுத்து வெட்டப்படும் துயரத்துக்குக்கூட இந்த உலகம் துடிக்காமல் போனதுதான் துயரம். மார்க்ஸ், ஏங்கல்ஸ், இங்கர்சால், கார்க்கி, ஸ்டாலின், மாவோ என உலகப் புரட்சியாளர்களை எல்லாம் உள்ளத்தில் ஏற்றிக்கொண்டவன் தமிழன். ஆனால், எங்களின் தோழர்கள் ஜீவானந்தத்தையும், சிங்காரவேலவரையும் ஆத்திகத்தின் தலையில் ஆணியடித்த இராமசாமி ஐயாவையும் கொண்டாட இந்த உலகில் எவரடா இருக்கிறீர்கள்?
சீமான் மலையாளத்தின் ஓணம் பண்டிகைக்கும், ஆந்திரத்தின் யுகாதித் திருநாளுக்கும் தமிழகத்தில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், எங்களின் பொங்கல் திருநாளுக்கு வேறு எந்த மாநிலத்திலாவது விடுமுறை விடுகிறார்களா? குருநானக் பிறந்தநாளை எங்கள் தமிழகம் கொண்டாடுகிறது. ஆனால், உலகத்துக்கே பொதுமறை படைத்த எங்கள் பாட்டன் வள்ளுவனை வேறு எவராவது கொண்டாடுகிறார்களா? இதை உரக்கச் சொன்னால், உள்ளே தள்ளக்கூடிய இன வெறியனாகி விடுகிறான் சீமான்.
இந்திய சுதந்திரத்துக்காகப் போராடிய புரட்சியாளன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இளங்குருத்து வயதில் தூக்குக்குக் கழுத்துக் கொடுத்த பகத்சிங், அகிம்சையால் ஆங்கிலேயனின் அடக்குமுறையையே அடக்கிக்காட்டிய அண்ணல் காந்தி என எத்தனையோ தலைவர்களின் பெயர்களை என் தாய்த் தமிழக உறவுகள் தங்கள் பிள்ளைகளக்குச் சூட்டி இருக்கிறார்கள். ஆனால், எங்கள் மண்ணில் இருந்து சுதந்திரத்திற்காகப் போராடிய வீரநங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டப்பொம்மன், சுந்தரலிங்கம், புலித்தேவன் உள்ளிட்ட சாலச்சிறந்த வீரப் பெருமகன்களின் பெயர்களை வடக்கத்திய மண்ணில் எந்த மனிதருக்காவது சூட்டி இருக்கிறார்களா? நேரு தொடங்கி ராஜீவ் வரை வடக்கத்தியத் தலைவர்களின் பெயர்களைத் தங்கள் வாரிசுகளுக்குச் சூட்டி, "எல்லோரும் நம் நாட்டுத் தலைவர்கள்" எனத் தமிழர்கள் தழுதழுக்கிறார்கள். நேரு, இந்திரா, ராகுல், சோனியா, பிரியங்கா என எங்கள் காங்கிரஸ் அபிமானிகள் தங்களின் தாய் வீட்டுச் சொந்தம் போல் உரிமை கொண்டாடி உறவுகளுக்குப் பெயர் வைக்கிறார்களே... ஒரு வடக்கத்திய காங்கிரஸ்காரனுக்காவது கக்கன் என்றோ, காமராஜர் என்றோ பெயர் வைக்கப்பட்டிருக்கிறதா? எங்கள் தாத்தா ரெட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களின் பெயர்கள் வடக்கத்திய மண்ணில் எங்கேனும் வாழ்கிறதா? எங்களின் தியாகம் கூட உங்களின் பார்வையில் தீண்டத்தகாததாகப் போய்விட்டதே... எங்கள் பாட்டன்களின் பங்களிப்பு இல்லாமலா இந்த மாபெரும் தேசத்துக்கு சுதந்திரம் கிடைத்தது? எங்களின் தாத்தாக்களைத் தள்ளி வைக்கும் உங்களிடம் எப்படி ஐயா எதிர்பார்க்க முடியும் எங்கள் இனத்துக்கான சுதந்திரத்தை?
உச்சந்தலையில் இருப்பதற்காக காஷ்மீரைக் கட்டிக்காக்க இலட்சக்கணக்கான கோடிகளை ஒதுக்குகிறீர்கள்... இராணுவத்தைக் குவிக்கிறீர்கள்... எத்தனை போர் வந்தாலும் காஷ்மீரின் எல்லையைக் கூட தொட்டுவிடக்கூடாது என்பதில் எவ்வளவு உறுதியாக இருக்கிறீர்கள்? ஆனால், எங்களின் மீனவர்கள் வலை உலர்த்தவும், ஓய்வு எடுக்கவும் தக்கதளமாக விளங்கிய கச்சதீவை சிங்கள தேசத்துக்கு வலியப் போய் வழங்கினீர்களே.. தலையில் இருந்தால் தாங்குவீர்கள்... காலுக்கு கீழே இருந்தால் கழற்றி விடுவீர்களா? நீங்கள் கழற்றுவதற்கும் மாட்டுவதற்கும் கச்சதீவு என்ன உங்களின் பழைய செருப்பா?
எங்கள் பாட்டன் ஆண்ட சொத்தை இத்தனை சீக்கிரமா எடுத்துக் கொடுத்தீர்களே... மலையளாச் சேட்டன் வீட்டுச் சொத்தில் ஒரு துளியை எடுத்துக் கொடுக்க முடியுமா உங்களால்?சீமான் எந்த இனத்துக்கும் இல்லாத இந்தப் பரிதாபங்களைப் பட்டியல் போட்டால், இனவெறியன் எனப் பட்டம் கட்டிப் பாய்ச்சுகிறார்கள் சட்டத்தை...
சில மாதங்களுக்கு முன்பு இலங்கையில் இருந்து படகு கட்டித் தப்பி வந்த தமிழர்கள் மலேசியக் கடற்பரப்பில் சுற்றிவளைக்கப்பட்டார்கள். கைகொடுத்து உதவ எந்த நாடும் முன்வரவில்லை. அகதி என்கிற அடிப்படையில் கூட உலகத்தின் பார்வை அந்தப் படகின் பக்கம் படவில்லை. தாகத்துக்குத் தண்ணீர் கூட இல்லாமல், ஒரு மாதத்துக்கும் மேலாக அந்தப் படகில் வந்த தமிழர்கள் மனிதக் கருவாடுகளாக மிதந்த போதும் இந்த உலகம் உற்றுப் பார்க்கவில்லை.
அவர்களின் நிலையையும் அவர்கள் நின்ற நிலப்பரப்பையும் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள் தமிழர்களே...மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பரப்புகளை உள்ளடக்கிய கடாரத்தை எங்களின் சோழப் பெருவளத்தான் கட்டியாண்ட காலம் எல்லாம் நெஞ்சுக்குள் மோதுகிறது தமிழர்களே... முப்பாட்டன் ஆண்ட நிலத்தில், பேரப்பிள்ளைகள் பிச்சை கேட்டு நின்ற நிலையை வேறு எந்த இனமாவது எதிர்கொண்டு இருக்கிறதா? 1000 ஆண்டுகள் இடைவெளி என்பது எங்கள் இனத்தில் இந்த அளவுக்கு விளையாடி விட்டதே... வாழ்ந்து கெட்டவர்களாக எங்கள் தமிழினம் வீழ்ந்து கிடக்கிறதே... அகல நிலப்பரப்பை வென்றபோது எல்லாம் எங்கள் தமிழர்கள் அங்கே கொடி ஏற்றினார்களே தவிர, யாரையும் குடியேற்றவில்லை. இத்தனை துயரங்களும் தமிழனின் பெருந்தன்மையால் நிகழ்ந்த பிழைதானய்யா... வந்தவர்களை எல்லாம் வாழவைத்த தமிழினம் சொந்த இனத்தை இன்று வாடகைக்கு வைத்து விட்டதே... இதைச் சொன்னால் நான் இனவெறியனா?
கருங்கல்பாளையம் பொதுக் கூட்டத்தில் இந்த ஆதங்கத்தைக் கொட்டியதற்காக, இறையாண்மை மீறல் எனச் சொல்லி என்னையும் அண்ணன் கொளத்தூர் மணியையும், பெ.மணியரசன் ஐயாவையும் கோவை சிறையில் அடைத்தார்கள்.
எங்கள் அறைக்குப் பக்கத்து அறையில் தான் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அடைக்கப்பட்டு இருந்ததாகச் சொன்னார்கள். பெ.மணியரசன் ஐயாத "இந்திய தேசிய விடுதலைக்காக நமது பாட்டன் பூட்டப்பட்டுக் கிடந்த அறைக்குப் பக்கத்து அறையில்" தமிழ்த் தேசிய விடுதலைக்காக நாம் பூட்டப்பட்டு இருக்கிறோம். கால இடைவெளிதான் மாறி இருக்கிறதே தவிர, கம்பிகளின் அடக்குமுறை மாறிவில்லை!" என்றார்.
பசி, உறக்கத்தைப் போன்றதுதான் இன உணர்வும்... காக்கை குருவிகளுக்கு, நாய் நரிகளுக்கு இருக்கும் இன உணர்வு சீமானுக்கு இருந்தால் மட்டும் வெறியாகிவிடுகிறதா?
"ஓர் இனத்தைச் சேர்ந்த ஒருவன் செய்கிற அனைத்து நன்மைகளையும் ஆதரிப்பது பற்று... அவன் செய்யும் அனைத்துத் தீமைகளையும் ஆதரித்தால்... அது வெறி!"- பெருமகனார் நபிகளின் வார்த்தைகளையே நானும் சொல்கிறேன். என் வார்த்தைகள் தீமைகளைத் திரும்பிக் கூடப் பார்த்தது இல்லை. நாதியற்ற இனத்தின் நன்மைக்காகவே நா தேயப் பேசுகிறேன் இன்னமும் என்னை இன வெறியன் என்றே நீங்கள் உருவகப்படுத்தினால், அதை நான் மறுக்கப் போவது இல்லை.
பிணவெறியனையும், பணவெறியனையும் தலைவன் எனக் கொண்டாடும் உலகில், இனவெறியன் என நான் இடிந்துரைக்கப்படுவது எல்லாவிதத்திலும் எனக்குப் பெருமையே!===>
unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக