மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

புதன், 5 ஜனவரி, 2011

கண்ணீர் தேசம்

கண்ணீர் தேசம் - 11
ஈழத்தில் கொலைகளும், தமிழகத்தில் தற்கொலைகளும் அரங்கேறும் அவலமான காலகட்டம் இது. கொலைகளைத் தடுக்க முடியாமலும், தற்கொலைகளை நியாயப்படுத்த முடியாமலும் குற்ற உணர்ச்சியோடு தவிக்கிறோம். மக்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளப்படாமல் அலட்சியம் நிலவிய நேரங்களில் சமூகத்தில் மாற்றங்கள் வந்திருக்கின்றன. ‘இந்தி திணிப்பில்’ மக்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மரியாதை தராமல் போனதால்தான், திராவிட இயக்கம் எழுச்சி பெற்றது. மக்களின் உணர்வுகள் நசுக்கப்படும் நேரங்களில் இப்படி சமூகத்தில் புரட்சியே வந்திருக்கிறது.

மகாபாரதத்தில் ஒரு காட்சி... தன் சீடர்களுக்கு வில் வித்தையைக் கற்றுக்கொடுக்கிறார் துரோணாச்சாரியார். எல்லா சீடர்களும் கையில் வில்லேந்தி, மரத்திலிருக்கும் ஒரு கிளியைக் குறிபார்த்து காத்திருக்கிறார்கள். ஒவ்வொருவரிடமும், ‘குறிபார்க்கிற உன் கண்ணுக்கு என்னென்ன தெரிகிறது?’ என்று கேட்கிறார் குரு. ‘எனக்கு மரம் தெரிகிறது’, ‘வானம் தெரிகிறது’, ‘கிளை தெரிகிறது’, ‘இலை தெரிகிறது’, ‘கிளி தெரிகிறது’ என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலைச் சொல்கிறார்கள். வில் வித்தைக்கே இலக்கணமாகப் பிறந்த அர்ஜுனனிடம் துரோணாச்சாரியார் கேட்கிறார். ‘உனக்கு மரம் தெரிகிறதா? வானம் தெரிகிறதா? கிளை தெரிகிறதா? இலை தெரிகிறதா? கிளி தெரிகிறதா?’ அர்ஜுனன் தீர்மானமாக பதில் சொல்கிறான்... ‘என் கண்ணுக்கு இவை எதுவுமே தெரியவில்லை!’ ‘வேறென்ன தெரிகிறது?’ என்று குரு மீண்டும் கேட்க, ‘என் இலக்கான கிளியின் கழுத்துப் பகுதி மட்டுமே தெரிகிறது’ என்கிறான் சீடன்.

காலம் மாறுகிறதே... போருக்கும் விதி வகுத்து நேர்மையாக யுத்தம் செய்த மகாபாரத காலம் இல்லையே இது. சொந்த நாட்டு மக்களை ராணுவம் அனுப்பி சூறையாடுகிற அரசுகளும், அதற்கு நியாயம் கற்பிக்கும் நாடுகளும் இருக்கும் காலம் அல்லவா இது? குருவாக சகுனியும், சீடனாக துரியோதனனும் இருக்கும்போது விதி மீறலும், சதி வகுத்தலும் நிகழ்வது தவிர்க்க முடியாதே! மருத்துவமனைகளும், அங்கெல்லாம் சிகிச்சை பெறும் நோயாளிகளுமே கொடூர போர் விமானங்களுக்கும் ஏவுகணைகளுக்கும் இலக்காகிறார்கள் ஈழத்தில். கை, கால்களை இழந்து, ஏராளமான ரத்தத்தையும் இழந்து, உயிரை மட்டுமே மிச்சம் வைத்துக்கொண்டு, உரிய சிகிச்சை கிடைக்காமல் அரைப்பிணமாக படுக்கையில் கிடக்கும் குழந்தைகளையும் பெண்களையும் குண்டுவீசிக் கொன்று, ‘பயங்கரவாதிகளை அழித்ததாக’ மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கத்தின் காதுகளுக்கு, சர்வதேச சமூகத்தின் பதைபதைப்பான குரல் கேட்கவில்லையே!   

தமிழக மக்கள் தாங்களாகவே போராட்டத்தைக் கையிலெடுத்து விட்டார்கள். வீதியில் இறங்கி போராடுகிறார்கள் மாணவர்கள். சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் குதித்து, சாவதற்கும் தயாராகிவிட்டனர் இளைஞர்கள். வழக்கறிஞர்கள், வணிகர்கள், பெண்கள், அரவாணிகள் என அனைவரும் ‘ஈழத்தில் போர் நிறுத்தப்பட வேண்டும்’ என்று தங்களுடைய உணர்வுகளைப் பதிவு செய்யும்போது, ‘அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட முடியாது’ என்கிறது மத்திய அரசு.

மக்களும் அதையே கேட்கிறார்கள். இன்னொரு நாட்டின் உள்விவகாரத்தில் தலையிட்டு தமிழர்களைக் கொல்ல ஏன் ஆயுதம் அளித்தது இந்தியா? ராணுவ வெற்றியைக் கொண்டாடும் இலங்கை அரசின் கொக்கரிப்புக்குப் பின்னால் இந்தியாவின் ரேடார் கருவி உதவிகள், செயற்கைக்கோள் உளவு வேலைகள் இருப்பதை பகிரங்கமாக மத்திய அரசே ஒப்புக்கொண்டிருக்கிறது. இன்னொரு நாட்டின் உள் விவகாரத்தில் ஏன் இந்தியா தலையிட்டது? இலங்கை அரசின் போர் விளையாட்டில் தமிழர்களின் உயிர் பலியிடப்படுவதற்கு ஏன் துணைபோனது இந்தியா? தன் நாட்டு அரசாங்கம் நிகழ்த்தும் அத்துமீறலை, அராஜகத்தை தாங்களே தனித்து நின்று இத்தனை ஆண்டு காலம் போராடினார்கள் தமிழர்கள். அமைதிப்படை என்கிற பெயரில் இன்னொரு நாட்டுக்குள் ஆள் அனுப்பியும், இப்போது ஆயுதம் அனுப்பியும் வேறொரு நாட்டு உள் விவகாரத்தில் தலையிட்டது ஏன்?

ஒரு தமிழ்ப் படத்தில் ராணுவ வீரனாக வரும் கதாநாயகன், தேசிய கீதம் பாடும்போது ‘சல்யூட் அடித்து விறைப்பாக நின்று’ நாட்டுக்கு மரியாதை செலுத்துகிற காட்சி. அப்போது வில்லன்கள் அவரின் தங்கையை பல ராணுவ வீரர்களுக்கு முன்பாக கற்பழிப்பார்கள். காப்பாற்றும் பலம் இருந்தும், தங்கையாக இல்லாமல் போனாலும், சக மனுஷி என்றாவது காப்பாற்றுவதுதானே தர்மம். ‘சல்யூட் அடிக்கிற’ கடமை உணர்வுக்கு முன்னால் தன் தங்கை கற்பழிக்கப்படுகிற நிகழ்வு மிகச் சாதாரணமானது என்பதை சொல்வதற்காக அப்படி ஒரு அசட்டுக் காட்சியை வைத்திருப்பார்கள்.

இரக்கமற்ற முறையில் ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொலை செய்யப்படுவதை தடுக்க முடியாதபடி ‘சட்டச் சிக்கல்’ இருப்பதாகச் சொல்வதற்கும், சினிமாவில் சொந்த தங்கை சீரழிக்கப்படும்போது ‘சல்யூட் அடித்து; விறைப்பாக நிற்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. சட்டக் கல்லூரியில் ஒரு மாணவனை சிலர் சேர்ந்து காட்டுமிராண்டித்தனமாக அடித்த காட்சியை, ‘அனுமதி இல்லாமல் கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முடியவில்லை’ என்று காரணம் சொல்லி வேடிக்கை பார்த்த காவல் துறையின் செயல்பாட்டிற்கும், நம் மத்திய அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. தனி மனிதர்கள் செய்தால் அராஜகம். அரசாங்கம் செய்தால் அது வெளியுறவுக் கொள்கை. 

‘மக்கள் பின்னால் ஓடுபவர்கள் பிச்சைக்காரர்கள்; மக்களைத் தன் பக்கம் திருப்புகிறவர்கள் புரட்சிக்காரர்கள்’ என்று ஒரு பொன்மொழி உண்டு. தேர்தல் நேரத்தில் மக்களின் பின்னால் ஓடி ஓட்டுகேட்கும் நம் தலைவர்களுக்கு மத்தியில், எல்லா மக்களையும் தன் பக்கம் திருப்பினான் முத்துக்குமார். இறந்துபோகலாம் என்று தெரிந்தே, மும்பையில் தீவிரவாதிகளுக்கு எதிராக மக்களைக் காப்பாற்ற இறங்கிய மத்திய அதிரடிப் படையினரில் சிலர் எதிர்பார்த்தபடி இறந்தே போனார்கள். அவர்கள் மரணம் தியாகம் என்று நாடே மரியாதை செலுத்தியது. உறைக்கும்படி ஈழத்தமிழர்களின் அவலத்தைச் சொல்ல நினைத்த முத்துக்குமார் தனக்குத் தானே தீ வைத்துக்கொண்டு செத்துப்போனான். அவன் மூட்டிய தீயின் வெளிச்சத்தில் தமிழக மக்களின் உணர்வு தெரிந்தது. ஈழத்தில் தமிழர்களின் அவலம் தெரிந்தது. 

தன் தலைவனுக்காக தீக்குளிக்கும் உணர்ச்சிவயப்பட்ட தற்கொலை அல்ல முத்துக்குமாரின் மரணம். காதல் தோல்வி, கடன் தொல்லையால் ஏற்பட்ட விரக்தியல்ல முத்துக்குமாரின் மரணம். நம் அரசியல்வாதிகளின் சுயநல அநாகரிகத்திற்கு எதிரான கோபம். ஆதரிப்பார் யாருமின்றி குண்டு வீச்சில் நாளும் செத்துக்கொண்டிருக்கிற தமிழர்களுக்கு விடிவு வரவேண்டி செய்த தியாகம். சொந்த நாட்டின் ஆட்சியாளர்களே தங்களை அடிமைப்படுத்தி கொடுமைப்படுத்தும் அநீதியை எதிர்த்த ஈழத்தமிழர்களின் சுதந்திரப் போராட்டத்திற்கு தந்த தார்மீக ஆதரவு.

தன் மரணத்தின் மூலம் ‘தியாகம்’ என்கிற சொல்லின் அர்த்தத்தைப் புதுப்பித்திருக்கிறான் முத்துக்குமார். ‘அநீதிகளுக்கு எதிரான போராட்டத்தில் நம் சகோதரர்களும், பிள்ளைகளும் அறிவாயுதம் ஏந்தியிருக்கிறார்கள். நான் உயிராயுதம் ஏந்தியிருக்கிறேன்’ என்று தன் மரணம் வெறும் தற்கொலை இல்லையென வாக்குமூலம் அளித்திருக்கிறான்.

உயிரே ஆயுதமாகிற போராட்டத்தை ஜெயிக்கிற சக்தி எந்த அதிகாரத்திற்கும் இல்லை. யாரும் தியாகிகளாக முடியாமல் போனாலும் பரவாயில்லை; தமிழினத்தை அழிக்கிற வஞ்சகத்தில் பங்கேற்று துரோகிகள் ஆகாமல் இருந்தால் அதுவே போதும்!    
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக