மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

ஞாயிறு, 25 நவம்பர், 2012

மாவீரர்தினம் எதற்காக.....

News Service
யார் இந்த மாவீரர்கள்?. எதற்காக களமாடினார்கள் ?. உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த சக்தி எது?. சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்?. விடைகாணமுடியாத வினாக்கள் அல்ல இவை . ஒரு ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பிற்காகப் போராடும்போது இது புரியப்படும். போராடியோர் நினைவினைச் சுமந்து , மீண்டெழும் உணர்வினை ஊட்டும் நாளே மாவீரர்தினம்.
ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்படலாம்..ஆனால் விடுதலைக்கான போராட்டம் நிறுத்தப்படக்கூடாது என்பதனை நினைவுறுத்தும் நாள்தான் இந்த மாவீரர்தினம்.
எமை அழிக்கும் சிங்களமும், போர்க்குற்றத் தடியேந்தும் வல்லரசாளர்களும் ஒன்று சேர்ந்து , சுயநிர்ணய உரிமைக்கோட்பாட்டை கைவிடுங்களென்று வலியுறுத்துவதை, ஏற்கமாட்டோமென உறுதிபூணும் நாளே இம்மாவீரம்தினம்.
மாவீரர்கள் போராடிப்பெற்ற இறைமையை, உலகறியச் செய்வோம் என்பதனை உரத்துச் சொல்லும் நாள் இது.
13 இற்குள் இணைந்து போதல், 19 இற்குள் சரிந்து போதல் சரியென்று வாதிடுவோர் மாவீரர்களை நினைவுகூரத் தேவையில்லை.
77 இல் மக்கள் இட்ட ஆணை, போர்நிறுத்த காலத்தில் அங்கீகரிக்கப்படாத அரசாக பரிணாமம் அடைந்தது. அதன் இறைமையை ,சமாதானம் பேசிய வல்லரசாளர்களும் ஏற்றுக்கொண்டனர்.
இருப்பினும் ,போராடிப்பெற்ற இறைமையை, பேசிக்கொண்டே அழித்தார்கள். 'முழு நாட்டிற்குமான சிங்களத்தின் இறைமை' என்கிற பேரினவாத அரசியல் கருத்தியல், தமது பிராந்திய நலனுக்கு தேவையாக இருப்பதால், தமிழ்தேசிய இனத்தின் இறைமையை சிதைப்பதற்குத் துணை போனார்கள்.
ஆனாலும் அழிக்கப்படவில்லை எம்மினம் போராடிபெற்ற இறைமை. இதன் நீட்சியே தமிழினத்தின் அடுத்தகட்ட போராட்ட நகர்வாக இருக்க வேண்டும்.
அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு என்பன தேசிய இன முரண்நிலையைத் தீர்க்கும் என்போர் , தமிழ் தேசத்தின் இறைமையை மறுப்பவர்களாகவே கருத வேண்டும்.
சிங்களத்தின் இறைமையைப் பகிர்ந்து கொள்வதுதான் அதிகாரப்பகிர்வா?. ஒற்றையாட்சி என்பது , சிங்களத்தின் முழு இலங்கைக்குமான இறைமையை ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்படுவது.
ஆகவே ,'சிங்களத்தின் ஒற்றையாட்சிக்குள் சுயாட்சி' என்பது அடிப்படையில் தவறான அரசியல் கருத்தியல் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமல்ல .
இறைமையுள்ள இரு தேசங்கள் என்பதன் அடிப்படையில் சுயாட்சி பற்றி பேசலாம். ஆனால் அதற்கும் சிங்களம் இணங்காது என்பதைப் புரிந்து கொள்ளாமல் ,இணக்கப்பாட்டு அரசியல் முயற்சிகளில் ஈடுபடும் தமிழர் தரப்புக்கள் ,எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதனை பல ஒப்பந்தக் கிழிப்புகள் எமக்கு உணர்த்துகின்றன.
விலைபோகாத கல்லறைகள் எமக்கு இடித்துரைக்கும் செய்தி இதுதான்.
'போராடினால் பெறுவாய் விடுதலை' என்பது வரலாறு எமக்களித்த வரம். 'சுயநிர்ணய உரிமை கோரும் பயங்கரவாதிகள் ' என்பதே வல்லரசாளர்கள் எமக்கு வழங்கும் கலாநிதி பட்டம்.
ஆகவே கல்லறைச் செய்திகள் சொல்லும் , எளியோரை வலியோராக்கும் சாத்தியங்களைத் தேடுங்கள். மக்கள் சக்தியின் முன்னால் , மாபெரும் சாம்ராஜ்யங்கள் அடிபணிந்து போனதை கவனியுங்கள்.
இயங்காமல் இருப்பது மாற்றத்தைக் கொண்டு வராது. இயங்கு தளத்தினை அழிப்பதுதான் ஒடுக்குமுறையாளனின் நோக்கம். அடிபணிவு அரசியல் முழு இனத்தையும் அழித்துவிடும். எம்மினம் அழியப்போகிறதா ,இல்லையேல் மீண்டும் நிமிரப்போகிறதா என்பதனை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
வீழ்வது தவறல்ல. வீழ்ந்தபின் எழாமல் இருப்பது தவறு. அதைவிடத் தவறு , ஒடுக்குபவனின் தோளைப் பற்றிப் பிடித்து எழுவது.
நம் மாவீரர்கள் பற்றிப்பிடித்தது, ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமையை.
அவர்களின் இலட்சியம் தோற்கடிக்கப்படவில்லை. இலட்சியம் நிறைவேறும்போதுதான் அவர்களை வரலாறு பதிவு செய்யும். அதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம்?.
-இதயச்சந்திரன்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக