மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு,அவர்களது கஸ்டங்களைப்
போக்குதற்குத் திட்டமிட்டுச் செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை .

அரிசி ஆழாக்கானாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்,அருமையற்ற வீட்டில் எருமையும் குடியிருக்காது,அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை,அறச் செட்டு முழு நட்டம் ,அறப்படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்,அறமுறுக்கினால் அற்றும் போகும்.# "இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி." # 'நான் பேச்சுக்கு எப்பொழுதுமே குறைந்த முக்கியத்துவத்தையே தருகிறேன். நாம் செயல் மூலம் வளர்ந்து வந்த பின்தான் பேச ஆரம்பிக்கவேண்டும்.' # "ஒரு தவறு நடந்தாற் பிழைகளை உங்களில் இருந்து தேடுங்கள். மற்றவர்களில் இருந்து தேடாதீர்கள்." # "உண்மையானவராக இருந்தால் அவர் இலட்சியத்திற்காக செத்திருக்க வேண்டும். அல்லது இலட்சியத்தை அடைந்திருக்க வேண்டும். இப்படிப் பார்த்தால் எங்களில் மாவீரர்கள்தான் உண்மையானவர்கள் - உயர்ந்தவர்கள் - என்பார். -நானும் உண்மையானவனல்லன்." என்று தன்னையும் பற்றியுங் கூறுவார். # "வெற்றிகளைப் போராளிகளுக்கு கொடுங்கள். தோல்விகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்." # "எதோ ஒருவன் பிறந்தான், வளர்ந்தான், சண்டை பிடித்தான், மடிந்தான் என்றுதான் நாங்கள் வீரச்சாவடையும் போரளிகளைப் பார்க்கிறோம். இந்தநிலை மாறவேண்டும். இவர்கள் நாம் வணங்கும் தெய்வங்களாக போற்றப்படவேண்டும்." # "செய் அல்லது செத்துமடி." !

வெள்ளி, 11 மார்ச், 2011

மடைமாற்றப்படும் மக்கள் பணம்:பழ. நெடுமாறன்

தமிழ்நாட்டின் இயற்கை வளங்களும் மக்களின் வரிப்பணமும் மடைமாற்றப்பட்டு ஆள்பவர்களின் குடும்பக் கருவூலங்களில் நிறைந்து கொண்டிருக்கின்றன.தமிழ்நாட்டில் இயற்கை வளம் குவிந்து கிடக்கிறது. பழுப்பு நிலக்கரி, இரும்புத் தாது, கிராபைட், ஜிப்சம், சுண்ணாம்புச் சிப்பி, சுண்ணாம்புக் கல், உயர்ரக களிமண், மாங்கனசைட், சிலிக்கான் மணல், பெட்ரோல், இயற்கை வாயு போன்றவை தாராளமாகக் கிடைக்கின்றன.
இவற்றைப் பயன்படுத்தி மக்களின் நிலையை உயர்த்துவதற்குப் பதில் இந்த வளங்களை அந்நியர்களும், தனிப்பட்டவர்களும் சுரண்டிக் கொழுப்பதற்கு வழிவகுத்துவிட்டு அவர்கள் அள்ளித்தரும் கையூட்டைத் தங்கள் கருவூலங்களில் நிரப்பிக்கொண்டு மகிழும் ஆட்சியாளர்கள் உள்ளனர்.தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் இந்நிலைதான் தொடர்கிறது.
மத்திய அரசின் சுரங்கத் துறை தரும் புள்ளிவிவரப்படி இந்தியாவில் 86 வகை கனிமங்கள் கிடைக்கின்றன. பாக்சைட் உற்பத்தியில் உலக அளவில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இரும்புத் தாது உற்பத்தியில் 4-வது இடத்திலும், மாங்கனீஸ் உற்பத்தியில் 5-ம் இடத்திலும் உள்ளது.இரும்பு, செம்பு, தங்கம், வைரம் போன்ற 13 வகை கனிமங்களை வெட்டி எடுக்கும் உரிமம் அரசுக்கு மட்டுமே இருந்தது. ஆனால், 1993-ம் ஆண்டிலிருந்து இத்தொழிலில் நுழைய தனியார்களும் அனுமதிக்கப்பட்டனர்.அகில இந்திய அளவில் சட்டரீதியாக உரிமம் பெற்ற 8,700 சுரங்கங்கள் இயங்குகின்றன.
உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக சுமார் 15,000 சுரங்கங்கள் செயல்படுகின்றன. உரிமம் பெற்ற சுரங்க நிறுவனம், உரிமக்காலம் முடிந்த பிறகும் கனிமங்களை வெட்டி எடுப்பது சர்வசாதாரணமாக நிகழ்கிறது. மேற்கண்ட வகைகளில் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி ரூபாய் தனிநபர்களாலும் ஆள்பவர்களாலும் கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டில் உயர்ந்த ரக கருங்கல் (கிரானைட்) கிடைக்கிறது. ஜப்பானுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால், உரிமம் பெறாமலேயே தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்கள் இவற்றைக் கொள்ளையடிக்கின்றன. ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்களுக்கு இக்கொள்ளையில் ஒருபகுதி வழங்கப்படுகிறது.
அதன் காரணமாக கண்ட இடங்களில் எல்லாம் குறிப்பாக விவசாய ஏரிகள், நஞ்சை நிலங்கள் போன்றவை அழிக்கப்பட்டு கிரானைட் கற்கள் தாறுமாறாக வெட்டி எடுக்கப்பட்டு சூறையாடப்படுகின்றன. இதில் கிடைக்கும் கொள்ளைப் பணத்தில் ஒரு சிறுபகுதி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மடைமாற்றம் செய்யப்படுகிறது. இச்சிறு தொகைக்காக மக்களுக்குச் சொந்தமான விலைமதிக்க முடியாத இயற்கை வளங்களைத் தனியார் சூறையாடுவதற்கு அனுமதிக்கப்படுகிறது.
1996-ம் ஆண்டு முதல் தமிழக ஆறுகளில் மணல் கொள்ளை வரைமுறையில்லாமல் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, இந்த மணல் கொள்ளையை நடத்திக்கொள்ள ஒரு குறிப்பிட்ட நபர் அனுமதிக்கப்பட்டார். மணலை விற்று இவர் அடித்த பெரும் கொள்ளையில் ஒரு சிறு பகுதியை ஆட்சியிலிருப்பவர்களுக்கு மடைமாற்றம் செய்கிறார். ஆட்சிகள் மாறினாலும் இந்த நபர் மாற்றப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.அண்டை மாநிலங்களான கர்நாடகம், கேரளம் போன்றவற்றில் ஆறுகளில் மணல் எடுக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக ஆற்று மணல் இம்மாநிலங்களுக்கு லாரிலாரியாக கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து அரபு நாடுகளுக்கு ஏற்றுமதியும் ஆகிறது. மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற அரசு அலுவலர்களையும், மக்கள் தொண்டர்களையும் மணல் கொள்ளைக் கும்பல் படுகொலை செய்யத் தயங்கவில்லை. ஆளும் குடும்பத்துக்கும், அமைச்சர்களுக்கும் முதலீடு இல்லாத வருவாய் ஈட்டித்தரும் தொழிலாக மணல் விளங்குவதால் இந்தக் கொள்ளையைத் தடுக்க அதிகாரிகள் எதுவும் செய்வதில்லை.
உயர் நீதிமன்றம் தலையிட்டு பிறப்பித்த பல ஆணைகளையும் அதிகாரிகள் மதிப்பதில்லை. மணல் கொள்ளையில் ஈடுபடும் ஒருவரைக்கூட குண்டர் சட்டத்தில் கைது செய்வதில்லை. ஆனால், மணல் கொள்ளையைத் தடுத்த அப்பாவி மக்களை, சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று கூறி கைது செய்கிற கொடுமையும் நடைபெறுகிறது.திரைப்படத்துறை ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 400 கோடி ரூபாயாக வசூலிக்கப்பட்ட கேளிக்கை வரி, 2009-2010-ம் ஆண்டில் 10 கோடியே 60 லட்சம் ரூபாயாகச் சரிந்திருக்கிறது. ஆனால், திரைப்படத் துறை மிகப்பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
அந்த அளவுக்கு கேளிக்கை வரி வசூல் ரூ.1,000 கோடிக்கு மேல் உயர்ந்திருக்க வேண்டும். ஆனால், படுமோசமாகச் சரிந்திருக்கிறது.இதற்குக் காரணம் தமிழக அரசின் கருவூலத்துக்கு வரவேண்டிய சுமார் 1,000 கோடி ரூபாய் அளவுக்கான கேளிக்கை வரி மடைமாற்றப்பட்டுள்ளது. இதற்கு 2006-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி தமிழக அரசு வெளியிட்ட ஓர் ஆணையே காரணமாகும்.அதாவது திரைப்படங்களின் பெயர் தமிழில் இருந்தால் அவற்றுக்கு முழுமையாகக் கேளிக்கை வரி ரத்து என்ற ஆணையை முதலமைச்சர் கருணாநிதி பிறப்பித்தார். இதன் விளைவாக, 800 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வரவேண்டிய கேளிக்கை வரி, 10 கோடி ரூபாய் அளவுக்குச் சரிந்துவிட்டது.
இதில் கொடுமை என்னவென்றால் பல படங்களின் பெயர்கள் தமிழே அல்ல. படங்களிலும் தமிழர்களின் பண்பாடு, கலை, இசை ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையிலும் அமையவில்லை. ஆனாலும் இந்தப் படங்களுக்குக் கேளிக்கை வரி முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக திரைப்படத் திமிங்கலங்களும், பெரு நடிகர்கள் மட்டுமே ஆதாயம் அடைந்தனர்.2001-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டுவரை கேளிக்கை வரி விதிப்பிலிருந்து விலக்குப்பெற்ற படங்களின் எண்ணிக்கை 1,225 ஆகும். இந்தப் படங்களில் பெரும்பாலானவற்றை முதலமைச்சரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே திரையிடும் உரிமையைப் பெற்றிருந்தனர் என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.
இதன் விளைவாக கேளிக்கை வரியாக அரசு கருவூலத்துக்கு வரவேண்டிய சுமார் 1,000 கோடி ரூபாயில் பெரும்பகுதி முதலமைச்சரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுவிட்டது.தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் பெரும்பகுதி முதலமைச்சரின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, அவர்கள் திரைப்படக் கொட்டகைகளில் அனுமதிச் சீட்டுக் கட்டணமாக ரூ.100-வரை வசூலிக்கிறார்கள். இந்த அக்கிரமமான கட்டணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்துவதில்லை.2006-ம் ஆண்டு கருணாநிதி முதல்வர் ஆவதற்கு முன்புவரை தமிழ்நாட்டில் 6 மது உற்பத்தி நிறுவனங்கள்தான் இருந்தன. ஆனால், இப்போது அவைகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்திருக்கிறது.
முன்பு பீர் தயாரிக்கும் நிறுவனங்கள் 4 மட்டுமே இருந்தன. இப்போது அவற்றின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. ஆக, இந்த 19 மது உற்பத்தி ஆலைகளை நடத்தும் உரிமம் பெற்றவர்கள் யார் என்பதை ஆராய்ந்தால் இவற்றில் பல ஆலைகள் தி.மு.க.வின் முன்னாள், இன்னாள் அமைச்சர்களின் குடும்பங்களுக்கு உரிமையானவை அல்லது இக்குடும்பங்களுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும். இந்த ஆண்டு மது விற்பனை மூலம் தமிழக அரசுக்கு ரூ.14,500 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
அதாவது, அரசை நடத்துபவர்களுக்கும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் சொந்தமான மது ஆலைகளில் உற்பத்தியாகும் மதுவை அரசே விற்றுக்கொடுக்கிறது. அதாவது மக்களின் மடியிலிருந்து உருவப்படும் இந்தப் பணம் இறுதியில் மடைமாற்றம் செய்யப்பட்டு அதிகாரத்தில் இருப்பவர்களின் சொந்தக் கருவூலங்களை நிரப்புகிறது.தமிழ்நாட்டில் இதுவரை 53 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 80 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அனுமதிக்காக பரிசீலனையில் உள்ளன. இவற்றுக்கான நிலங்கள் எவ்வாறு பெறப்படுகின்றன என்பதை ஆராய்ந்தால் அதிர்ச்சி அடைவோம்.அதாவது தரிசு நிலங்கள் அல்லது அரசு புறம்போக்கு நிலங்கள் இவற்றுக்கு ஒதுக்கப்படுவதில்லை.
மாறாக, விவசாயிகளுக்குச் சொந்தமான நல்ல விளைநிலங்கள் கட்டாயமாகப் பறிமுதல் செய்யப்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதுதான் அந்த அதிர்ச்சிகரமான உண்மையாகும். ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்கு 1,000 ஏக்கர் நிலம் தேவைப்பட்டால், 10,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துகிறார்கள்.ஆயிரம் ஏக்கரில் தொழிற்சாலையை அமைத்துவிட்டு, மீதமுள்ள நிலத்தை பல மடங்கு அதிகமான விலையில் விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்கள் என்பதுதான் உண்மையாகும். இந்தக் கொள்ளையிலும் மடைமாற்றம் நடைபெறுகிறது.2005-ம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கான புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு இறக்குமதி, ஏற்றுமதி சுங்கத் தீர்வைகளிலிருந்து விலக்கு, கலால் வரியிலிருந்து விலக்கு, விற்பனை வரியிலிருந்து விலக்கு, ஈடுகட்டும் லாபத்துக்கு 15 ஆண்டுகளுக்கு வரி கிடையாது என்பதுபோன்ற சலுகைகள் வாரி வழங்கப்பட்டன. இதைத்தவிர, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அதில் உள்ள இடங்களை தொழில் நிறுவனங்களுக்கு விற்கலாம், குத்தகைக்குக் கொடுக்கலாம். இந்த மண்டலத்தில் தொழிற்கூடங்களோடு குடியிருப்புகள், பள்ளிகள் உள்ளிட்ட சகல வசதிகளும்கொண்ட நகரங்களையும் அமைத்துக் கொள்ளலாம்.
இந்தச் சலுகைகளின் விளைவாக, தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்படுகின்றன. விவசாயிகளை வஞ்சித்தும் மிரட்டியும் நிலத்தைப் பறித்துக் கொடுப்பதற்குக் கையூட்டாகப் பெரும்பணம் மடைமாற்றம் செய்யப்படுகிறது.கடலூரில் இருந்து வேதாரண்யம் வரையில் எட்டு அனல் மின்நிலையங்களைத் தனியார் நிறுவனங்கள் அமைக்க உள்ளன. அதற்காகப் பல்லாயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, கடற்கரை முழுவதும் தனியார்வசம் ஆகப்போகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப்போல இதற்கும் தேவைக்கு அதிகமாக பன்மடங்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் மிகப்பெரிய அளவுக்கு ரியல் எஸ்டேட் கொள்ளை நடப்பதாகக் குற்றம்சாட்டி, அந்தப்பகுதி மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.கல்வி நீரோடையை அனைவருக்கும் இலவசமாக்கி ஏழை எளிய பாமர மக்களின் கல்விக்கண்களைத் திறந்த காமராஜ் வாழ்ந்த தமிழகத்தில், இன்றைக்கு கல்வி, கொள்ளைத் தொழிலாக மாற்றப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்பதே கிடையாது. ஆனால், தமிழ்நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகள் என்ற பெயரில் தனியார் வணிகம் நடத்தி வருகிறார்கள். 400-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
இந்தப் பள்ளிகளிலோ அல்லது கல்லூரிகளிலோ போதுமான கட்டமைப்பு வசதிகளோ, ஆசிரியர்களோ இல்லை. புற்றீசல்போல தனியார் பள்ளிகளும், பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளும் பெருகக் காரணம் குறிப்பிட்ட அளவு கையூட்டு வழங்குவதுதான் என்பது ஊரறிந்த ரகசியமாகும்.தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு எத்தனை கல்விக்கூடங்கள் சொந்தமாக உள்ளன என்பது பகிரங்கப்படுத்தப்பட்டால் நாடே அதிரும். இந்தக் கல்வி நிலையங்கள் கொள்ளை நிலையங்களாகக் காட்சி தருகின்றன. இதன் விளைவாக, மத்திய அரசால் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட 44 பல்கலைக்கழகங்களில் 17 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை என்ற உண்மை கல்வித்துறை எவ்வளவு புரையோடிப் போயிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும்.
கல்வி நிலையங்களில் அடிக்கும் கொள்ளையில் ஒருபகுதி மடைமாற்றம் செய்யப்பட்டு ஆளும் குடும்பங்களுக்குப் போய்ச் சேருகிறது.நாட்டின் இயற்கை வளத்தையும் மக்கள் அளிக்கும் வரிப்பணத்தையும் பல்வகைகளிலும் சூறையாடித் தங்கள் சொந்தக் கருவூலத்தில் நிரப்பிக் கொள்பவர்களைவிட நாட்டுக்கும் மக்களுக்கும் துரோகம் செய்பவர்கள் வேறு யாராகவும் இருக்க முடியாது.



unarchitamilan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக